Home / அகீதா (ஏனையவைகள்) / அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்

_அஸ்கி இப்னு ஷம்சிலாபிதீன்

முன்னுரை

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. அவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை. அவனுடைய பண்புகளை எமக்கு எத்திவைத்த எம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னுடைய இறைவன், நபி, மார்க்கம் ஆகியவைகளைப்பற்றித் தெரிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வைப்பற்றித் தெரிந்து கொள்ளும்போது கட்டாயம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அத்தாரியாத்: 56)

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது மூன்று விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.

1. அவனை வணங்குவதில் அவனை ஒருமைப்படுத்தல்

2. அவனுடைய செயல்களில் அவனை ஒருமைப்படுத்தல்

3. அவனுடைய பெயர்களிலும் பண்புகளிலும் ஒருமைப்படுத்தல்

உங்கள் கைகளில் தவள்ந்து கொண்டிருக்கும் இந்நூல் மூன்றாவது விடயத்தையே பேசுகின்றது. இந்த விடயத்தில் இஸ்லாத்தின் பெயரில் உள்ள அதிகமான பிரிவுகள் வழிகெட்டுள்ளார்கள். ஆகவே, முன் சென்ற இமாம்கள் இப்பிரிவுகளுக்கெதிராக மறுப்பளிக்கும் வகையில் பல நூட்களைத் தொகுத்துள்ளார்கள். மேலும், அந்த நூட்களில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்த கொள்கைகளைத் தெளிவுபடுத்தியுமுள்ளார்கள்.

ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழ் மொழியில் இது குறித்து அதிகமான நூட்கள் எழுதப்படவில்லை. அல்லாஹ்வோடு சம்பந்தப்பட்ட இந்த அறிவை சிலர் சில்லறைப் பிரச்சினையாகக் கருதியுள்ளனர். இதனால் ஒரு சில பொதுமக்கள் இது விடயத்தில் வழிகெட்டுப் போயுள்ளார்கள்.

ஆகவே, நான் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்து ஒரு நூலை எழுத ஆசைப்பட்டேன். அதற்கு அல்லாஹ் எனக்கு அருள்புரிந்தான். யாவரும் இலகுவில் வாசித்து முடிக்க கேள்வி பதிலாகவே அனைத்து விடயங்களையும் தொகுத்துள்ளேன்.

அல்லாஹ்வின் பொருத்தம் நாடப்பட்டு எழுதப்பட்ட ஒரு நூலாக அல்லாஹ் இதனை ஆக்கி வைப்பானாக! வாசிப்பவர்களுக்கு இதன் மூலம் பயனும் அடையச் செய்வானாக!

1. நாம் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் குறித்து ஏன் கவனமெடுக்க வேண்டும்?

விடை: தவ்ஹீத் என்றால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அவனை ஒருமைப்படுத்துவது மூன்று வகைப்படும்.

1. இபாதத் செய்வதில் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். அதாவது நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் யாவற்றையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அல்லாஹ்வுடன் எந்த ஒன்றையும் இணைவைக்கக்கூடாது.

2. அல்லாஹ்வுடைய செயல்களில் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். அதாவது படைத்தல், பரிபாலித்தல், ரிஸ்க் அளித்தல், மழை பொழியச் செய்தல் இது போன்ற விடயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும். இந்த செயல்களை அல்லாஹ் மாத்திரமே செய்கிறான் என்ற விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளில் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். இம்மூன்றாவது விடயத்தைக் குறித்தே இந்த நூல் பேசுகின்றது. ஆகவே, தவ்ஹீத் என்ற வணக்கத்துடன் இத்தலைப்பு சம்பந்தப்படுவதாலே இதனை நாம் கவனமெடுக்க வேண்டும். அதேபோல், இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக் கூறுவது சிலவேளை குப்ரின் பாலும் இட்டுச் செல்லும்.

2. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் குறித்து எமது கொள்கை எப்படியிருக்க வேண்டும்?

விடை: அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்து எமது கொள்கை எப்படியிருக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்துள்ளார்கள். அல்லாஹ் தன்னை எதன் மூலம் வர்ணித்தானோ மேலும் ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதன் மூலம் அல்லாஹ்வை வர்ணித்தார்களோ அதைக்கொண்டே நாமும் வர்ணிக்க வேண்டும். அப்பெயர்களையும் பண்புகளையும் திரிவுபடுத்தல், வியாக்கியானம் செய்தல், முறைகற்பித்தல், ஒப்பாக்கிக்கூறல், இல்லாமல் செய்தல் போன்ற காரியங்களை உட்புகுத்தக்கூடாது.

3. அல்லாஹ்வின் பெயர்கள் அழகானவை என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன. எனவே, நீங்கள் அவைகளைக் கொண்டு அவனை அழையுங்கள். (அல்அஃராப்: 18)

4. அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அழகானவை என்பதின் விளக்கம் என்ன?

விடை: அதாவது அழகிலும், சிறப்பிலும் மிக உச்சகட்டத்திலே அவைகள் அமைந்துள்ளன. அவைகளில் எந்தக் குறையுமில்லை.

5. உதாரணத்துடன் அதை எவ்வாறு தெளிவுபடுத்தலாம்?

விடை: உதாரணமாக அல்ஹய்யு என்ற பெயர் அல்லாஹ்வுக்கு உண்டு. அதன் கருத்து உயிரோடுள்ளவன் என்பதாகும். இந்தப்பெயர் அழகிலும், சிறப்பிலும் உச்சகட்டத்தில் உள்ளது. நாமும் உயிருள்ளவர்களாகத்தான் இருக்கிறோம். அல்லாஹ்வும் உயிருள்ளவனாக இருக்கின்றான். ஆனால், நாங்கள் உயிர்வாழ்வதில் குறையுண்டு. அது என்னவென்றால், நாம் இல்லாமையிலிருந்து உருவாகியுள்ளோம். சிறிது காலத்தில் மரணிக்க இருக்கின்றோம். ஆனால், அல்லாஹ் உயிர்வாழ்வதைப் பொருத்தவரையில் அவனுக்கு இல்லாமை என்பது இல்லை. மேலும், அழிவும் அவனுக்கு இல்லை. இதுவே உயிரோடுள்ளவன் என்ற பெயரின் அழகையும் சிறப்பையும் அது மிக உச்சகட்டத்திலே உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

6. எனவே, நீங்கள் அவைகளைக்கொண்டு அவனை அழையுங்கள் என்ற வசனத்தின் விளக்கம் என்ன?

விடை: அதாவது, நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க நாடினால் உடனடியாக அதைத்தந்துவிடு, இதைத்தந்துவிடு, பாவங்களை மன்னித்துவிடு, சுவனத்தில் நுழைத்துவிடு எனப்பிரார்த்திப்பது உகந்ததல்ல. எமது தேவைகளுக்கேற்ப அவனை அவனுடைய பெயர்களால் புகழ்ந்து பிரார்த்திக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் பாவமன்னிப்புத்தேட நாடினால் அத்தவ்வாப் (தவ்பா அளிப்பவன்), அல்கபூர் (பாவமன்னிப்புச் செய்பவன்) போன்ற அல்லாஹ்வின் பெயர்களை முன்வைத்து பிரார்த்திக்க வேண்டும். அதன்படி பின்வருமாறு துஆச்செய்யலாம். யா அல்லாஹ் நீயே பாவங்களை மன்னிப்பவன், தவ்பா அளிப்பவன், இரக்கமானவன் ஆகவே என் மீது இரக்கம்காட்டி என்னை மன்னிப்பாயாக!

7. அல்லாஹ்வின் பெயர்கள் அவனுடைய பண்புகளாக இருக்குமா?

விடை: அல்லாஹ்வின் பெயர்கள் அல்லாஹ்வை குறித்துக்காட்டும் விதத்தில் பெயர்களாக அமையும். ஆனால், அந்தப்பெயர்கள் அறிவிக்கக்கூடிய கருத்தை அடிப்படையாக வைத்து அவைகள் பண்புகளாக இருக்கும்.

உதாரணமாக, அல்லாஹ்வுக்கு உயிரோடுள்ளவன், மிக்க அறிந்தவன், சக்திவாய்ந்தவன், செவிமடுப்பவன், பார்க்கக்கூடியவன், இரக்கமானவன், தீர்ப்பளிப்பவன் என பல பெயர்கள் உள்ளன. பெயர்கள் பலதாக உள்ளதால் பல இறைவன்கள் உள்ளதாகக் கூறமுடியாது. மேற்குறிப்பிடப்பட்;ட பெயர்கள் பலதாக இருந்தாலும் அல்லாஹ் ஒருவனுக்கே அவைகள் சாரும். ஆனால் அவைகள் ஒவ்வொன்றினதும் கருத்து வித்தியாசமானதாகும்.

8. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விடயத்தில் வழிகெட்ட பிரிவினர்கள் யாவர்? அவர்களின் கொள்கை என்ன?

விடை:

1. கராமிதா மற்றும் தத்துவவியலாளர்கள்: அல்லாஹ் என்ற ஒருவன் இல்லை, அவனுக்குப்பெயரும், பண்பும் இல்லை என்பது இவர்களின் கொள்கையாகும்.

2. ஜஹ்மிய்யாக்கள்: அல்லாஹ் உண்டு. ஆனால் அவனுக்குப் பெயரோ பண்போ இல்லை என்பது இவர்களின் கொள்கையாகும்.

3. முஃதஸிலாக்கள்: அல்லாஹ்வுக்குப் பெயர்கள் மாத்திரமே உள்ளன. பண்புகள் அவனுக்கு இல்லை என்பது இவர்களின் கொள்ளையாகும்.

4. அஷ்அரிய்யாக்கள்: அல்லாஹ்வின் பண்புகளில் ஏழு பண்புகளை மாத்திரம் உறுதிப்படுத்துகின்றனர். உயிரோடுள்ளவன், நாடுபவன், சக்தியுள்ளவன், அறிவுள்ளவன், செவிமடுக்கக்கூடியவன், பார்க்கக்கூடியவன், பேசக்கூடியவன் ஆகிய பெயர்களே இவர்கள் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தும் பெயர்களாகும்.

5. மாத்துரூதீய்யாக்கள்: இவர்களும் அஷ்அரிய்யாக்களைப்போல் ஏழு பண்புகளோடு ஒரு பண்பை மாத்திரம் அதிகப்படுத்தினர். அது உருவாக்குதல் என்ற பண்பாகும்.

6. முமஸ்ஸிலாக்கள்: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் வரம்புமீறியவர்களே இவர்கள். ஏனென்றால், அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்கினார்கள்.

7. முபவ்விதாக்கள்: அல்லாஹ்வின் பண்புகளை அறிவிக்கக்கூடிய பெயர்களை இவர்கள் உறுதிப்படுத்தினர். அதன் கருத்து அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும் என இவர்கள் கூறினார்கள்.

9. அல்லாஹ்வுக்கு பண்புகள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன? விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. (அந்நஹ்;ல்: 60)

10. அல்லாஹ்வின் பண்புகள் எத்தனை வகைப்படும்?

விடை: அல்லாஹ்வின் பண்புகள் 3 வகைப்படும்.

1. தாதிய்யத்தான பண்புகள்: அதாவது அல்லாஹ்வோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கக்கூடிய பண்புகள். உதாரணம்: அறிவுள்ளவன், சக்தியுள்ளவன்.

2. செயல்ரீதியான பண்புகள்: அதாவது அல்லாஹ் நாடினால் ஏற்படக்கூடிய பண்புகள். உதாரணம்: மழை பொழிவித்தல், கோபப்படல், வெறுத்தல். இப்பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும். அல்லாஹ் நாடினாலே நடைபெறும்.

3. செய்தி ரீதியான பண்புகள்: உதாரணம்: கை, கண், முகம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்….

….

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply