Home / TNTJ விற்கு மறுப்பு / அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்

அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்

எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி

நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திய மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன.

« أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ،
الشريعة للآجري – (1 / 24)

ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய நான்கு பிரிவினர்தாம் பித்அத்தின் அடிப்படைக் குழுக்களாகும்.

ஸஹாபாக்கள் மத்தியில் ‘அஸ்மா ஸிஃபாத்’ விஷயத்தில் எவ்வித தவறான அணுகுமுறைகளும் இருக்கவில்லை. அவர்களின் பிற்பட்ட காலத்தில்தான் அனைத்து பிரிவுகளும் தோற்றம் பெறத்தொடங்கின என்பதை இது உணர்த்துகின்றது

நபித்தோழர்களின் மரணத்தின் பின்னால் ஆட்சிக்கு வந்த பனு உமையாக்களின் இறுதிக்காலத்திலும், அப்பாஸியர் ஆட்சியிலும்தான் (இல்முல் கலாம்) எனப்படும் பகுத்தறிவைக் கொண்டு சான்றுகளை அணுகும் தர்க்கவியல் முறை உருவானது.

இதன் பின்னர் அஸ்மா, ஸிஃபாத் விவகாரத்தில் பல கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய பிரிவுகள் தோற்றம் பெற்றன என்பது ஆய்வின் போது அறியமுடிகின்றது.

முதலாவது பிரிவினர்:

அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விஷயத்தில் வந்துள்ள அல்குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் தகுதிக்கு அமைவாக, அவற்றில் கூட்டல், குறைத்தல், பொருள்களை சிதைத்தல், திரிபு செய்தல், முறைமை கற்பித்தல், உருவகப்படுத்தல் என்ற தன்மைகளுக்கு அப்பால் நின்று அவற்றின் வெளிப்படையான பொருளில் அந்தப் பெயர்கள், பண்புகளை நிலைப்படுத்துவோர். இவர்களை ஸலஃபுகள் (அகீதா விவகாரங்களில் ஸஹாபாக்களின் வழி நடப்போர்) என்ற பொருளில் அழைக்கின்றனர்.

ஸலஃபுகள் எனப்படுவோர் ஷரீஆவின் சான்றுகளை அணுகும் விதத்தில் குறிப்பாக நம்பிக்கை கோட்பாடுகளில் ஸஹாபாக்களையும் அவர்களின் வழி நடந்த ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய துறைசார் இமாம்களையும், அவர்களின் வழி நடப்போரையும் ஆய்விற்குப் பின் பின்பற்றும் பிரிவினர்தான் இன்று ஸலஃபிகள் என அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

ஸலஃபுகளின் சிந்தனையைப் பிரதிபலிக்கும் இப்பிரிவினர் அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் இடம் பெறும் அஸ்மா, ஸிஃபாத் (அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் சார்ந்த) வசனங்களை திரிவுபடுத்தாது, அதன் வெளிப்படையான கருத்தில் விளக்குவதுடன், தவறான விளக்கத்திலும் மூழ்காது, அவற்றிற்கு தவறான தோற்றமோ, வடிவமோ கற்பிக்காது, உயர்மிகு அல்லாஹ்வின் தகுதிக்கு அமைவானதாக அவற்றை விளக்குவதை வழியாகக் கொண்டனர்.

இவர்கள், அல்லாஹ்வை அறிமுகப்படுத்தும் விஷயத்தில் பௌதீகவியல் சார்ந்த அவனது அத்தாட்சிகளை புற ஆதாரங்களாக எடுத்துக் கொள்வது போன்று, பகுத்தறிவு சார்ந்த ஆதாரங்களையும் பயன்படுத்தி அல்லாஹ்வின் உள்ளமையை நிறுவினர். இருப்பினும் அகீதா விவகாரத்தில் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பகுத்தறிவுக்கு வழங்காது அதைப் புறம் தள்ளினார்கள்.

ஏனெனில், பகுத்தறிவானது -தக்லீஃப்- கட்டளையிடப்பட்டதை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு உட்பட்டதாகும். அதனால் பகுத்தறிவை மார்க்கத்தின் ஒரு நீதியரசராக ஏற்க முடியாது என முடிவு செய்தனர். ஏனெனில் பகுத்தறிவுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரம் கொடுக்கப்பதானது வஹியின் அடிப்படையில் இருந்து தூரமாக்கவே வழி அமைக்கும் என்றும் அவர்கள் கண்டறிந்தனர். அதன் காரணமாக பகுத்தறிவை அகீதா தொடர்பான கருத்துக்களில் அவர்கள் ஏற்கவில்லை

கண்மூடித்தனமாக தனிமனிதர்களைப் பின்பற்றும் நவீன தக்லீத்வாதிகள் சிலர் நேர்வழி நடக்கும் ஸலஃபுகளை வழிகேட்டில் இருப்பவர்கள் போலவும், தாமே சுவனத்தின் வாரிசுகள் போலவும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்வது பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாவது பிரிவினர்:

‘அஸ்மா, ஸிஃபாத்’ தொடர்பாக வந்துள்ள அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் சான்றுகளை அதன் வெளிப்படையான பொருளில் கையாளும் இவர்கள், அவைகளை மனிதர்களின் பண்புகளுக்கு ஒப்பிட்டு விளக்குவர்.

உதாரணமாக கை, முகம் என இடம் பெறும் அல்லாஹ்வின் பண்புகளை மனிதர்களின் கரத்திற்கும், மனிதர்களின் முகத்திற்கும் ஒப்பிட்டு விளக்குகின்றனர். இதனால் இவர்கள் அல்லாஹ்வை அவனது தகைமைக்கு அமைவாக மதிக்கத் தவறியவர்களாக இருப்பதுடன், இறை நெறி தவறியவர்களாகவும் அல்லாஹ்வை அவனது படைப்பினங்களுக்கு ஒப்பிட்டவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இருந்தாலும் இவர்கள், அல்லாஹ்வின் யதார்த்தமும், மனிதர்களின் யதார்த்தமும் வேறுபட்டவை என்பதை ஒப்புக்கொள்கின்றனர். அதாவது: படைப்பாளனின் யதார்த்தமும் படைப்புக்களின் யதார்த்த நிலைகளும் வேறுபட்டிருப்பதால் படைப்பாளனின் பண்புகளும், அவனது படைப்புக்களின் பண்புகளும் வேறுபட்டே காணப்படுவது இயல்பாகும்.

படைப்பாளன், மற்றும் படைப்புக்கள் ஆகியவற்றின் யதார்த்தங்களுக்கிடையில் வேறுபாடு காணப்படுவதை அங்கீகரிப்பதன் மூலம் இவர்கள் தமக்குள் முரண்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை. அல்லாஹ்வின் பண்புகளான கை, முகம், பேச்சு போன்ற பண்புகள் படைப்பினங்களின் பண்புகளில் இருந்து வேறுபட்டே காணப்படும். மனித படைப்புக்களின் பண்புகள் அவற்றைப் போன்றவை எனக் கூறுவது அறியாமையின் உச்சகட்டமாகும்.

இவர்களைத்தான் அகீதா துறைசார் அறிஞர்கள் الممثلة ‘அல்முமஸ்ஸிலா’ படைப்பினங்களுக்கு நிகராக அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிப்போர்’ அல்லது ‘ஒப்பிட்டு நோக்குவோர்’ எனப் பெயரிட்டுள்ளதோடு, இந்த சிந்தனையானது மிகப்பொரும் வழிகேடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். நானும் அல்லாஹ், ‘நீயும் அல்லாஹ்’ என்ற அத்வைதக் கோட்பாட்டுக்கு வழிவகுத்த சித்தாந்தமாகவும் இது கொள்ளப்படுகின்றது.

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ [الزمر : 67]

அவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதித்து நடக்கவில்லை. பூமிகள் அனைத்தும் மறுமையில் அவனது பிடிக்குள் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தால் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் பரிசுத்தமானவனும், உயர்ந்தவனும் ஆவான். (அஸ்ஸுமர்: 67)

மூன்றாவது பிரிவினர்:

வெற்றுச் சிந்தனையுடன் அகீதாக் கோட்பாட்டை அறிய முற்படுவோர். ஆரம்ப காலத்தில் இவர்கள் அல்ஃபலாஸிஃபா (Philosophers) தத்துவவியலாளர்கள், தர்க்கவியலாளர்கள், அல்லது மெய்யியலாளர்கள் என்று வரையறுக்கப்பட்டு அறியப்பட்டனர்.

இவர்கள் தமக்குத்தாமே -ஹுகமா- தத்துவமேதைகள், ஞானிகள் என்று பெயர் சூடிக்கொண்டதோடு, இவர்களின் கருத்துக்களை அங்கீகரிக்க மறுத்தவர்களையும், குறைகண்டவர்களையும் ‘அல்அவாம்’ எதுவும் அறியாப் பாமரர்கள் எனவும் இகழ்ச்சியாக அழைத்தனர்.

இவர்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்ற கிரேக்க தர்க்கவியல் மேதைகளின் கருத்துக்களால் உந்தப்பட்டதன் விளைவாகவே இந்நிலைக்கு ஆளாகினர்.

அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் இவர்களை ஜதலிய்யூன்- தர்க்கவியலாளர்கள்- என அடையாளப்படுத்தி அழைத்தனர். இவர்கள், அல்லாஹ்வையும், அவனது பண்புகளையும், புலனுக்குத் தென்படாத மறைவான நம்பிக்கை கோட்பாடுகளையும் நம்புவதற்கு விவாதத்தையும் பகுத்தறிவையும் ஒரு கருவியாகக் கொண்டனர். அத்தோடு, ஸலஃபுக்கள் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அவற்றின் வெளிப்படையான பொருளில், இப்படித்தான் என்ற முறை குறிப்பிடாது நம்பிக்கை கொள்ள வேண்டும் எனக் கூறியதை வேதம் கொடுக்கப்பட்ட பாமரர்களைப் போன்று பொருள் அறிவின்றி நம்புவதுதான் ஸலஃபுகளின் வழியோ? என்று கிண்டலும் செய்தனர். தாம் அவ்வாறானவர்கள் அல்லர் என்றும், ஸலஃபுகளை விட அறிவில் நாமே மேலானவர்கள், தத்துவஞானிகள், மாமேதைகள் என்றும் வாதிட்டனர்.

نحن أهل العلم والحكمة இந்த அடிப்படையில்தான் இவர்கள் தம்மை ஹுகமா (ஞானிகள்) எனப் பெருமையாக அழைத்துக் கொண்டனர். இவர்கள் தமது வழிமுறை பற்றிக் குறிப்பிடுகின்றபோது طريقة الخلف أعلم وأحكم ‘பிற்காலத்தவரின் வழிமுறையானது அறிவார்ந்ததும், நுட்பமானதுமாகும்’ எனக் கூறி ஸலஃபுகளின் அறிவையும், அவர்கள் சென்ற வஹியின் வழியையும் கிண்டல் செய்தனர். இந்தப் பிரிவினரே கிரேக்க தர்க்கவியலாளர்கள் போன்று அல்லாஹ்வை காட்சிப் புலங்களால் நம்புவதை முதன்மைப்படுத்தினர்.

ஸலஃபுகளை கிண்டல் செய்யும் இவர்கள் போன்றோரின் உண்மைக்குப் புறம்பான போக்கு தவறானது என்பதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

طَرِيقَة السَّلَف أَسْلَمَ وَطَرِيقَة الْخَلَف أَحْكَم ‘ஸலஃபுகளின் வழிமுறையானது ஈடேற்றமானதாகும். ஆனால், பிற்காலத்தவரின் வழிமுறையானது அறிவார்ந்ததும், நுட்பமானதுமாகும்’ என்ற கோட்பாட்டை முன்வைக்கும் கருத்தானது நேர்த்தியானது அல்ல.

… لِأَنَّهُ ظَنَّ أَنَّ طَرِيقَة السَّلَف مُجَرَّد الْإِيمَان بِأَلْفَاظِ الْقُرْآن وَالْحَدِيث مِنْ غَيْر فِقْه فِي ذَلِكَ ، وَأَنَّ طَرِيقَة الْخَلَف هِيَ اِسْتِخْرَاج مَعَانِي النُّصُوص الْمَصْرُوفَة عَنْ حَقَائِقهَا بِأَنْوَاعِ الْمَجَازَات ، فَجَمَعَ هَذَا الْقَائِل بَيْن الْجَهْل بِطَرِيقَةِ السَّلَف وَالدَّعْوَى فِي طَرِيقَة الْخَلَف ، وَلَيْسَ الْأَمْر كَمَا ظَنَّ … (فتح الباري لابن حجر – (منقول من الشاملة)

ஏனெனில் இப்படி நம்புபவன் ஸலஃபுகளின் வழி என்பது குர்ஆனிய சொற்களையும் ஹதீஸையும் அதன் விளக்கம் பற்றி அறியாது வெளிப்படையாக நம்பிக்கை கொள்வது என்றும் நம்புகின்றான். கலஃபுகளின் வழியானது யதார்த்தமான பொருளில் இருந்து பொருள் மாற்றப்பட்ட சான்றாதாரங்களை பல்வேறுபட்ட சிலேடையான வார்த்தைகளால் விளக்குவதாகும் என்றும் நம்புகின்றான். இவன் முன்னோர்களின் வழிமுறை பற்றிய அறிவீனம், மற்றும் கலஃபுகளின் (பின்வந்தோர்) வழிமுறையில் உள்ள வெற்றுவாதம் ஆகிய இரண்டு பண்புகளை ஒன்றிணைத்துள்ளான். ஆனால் அவன் தவறாக எண்ணிக் கொள்வது போல் அல்ல விஷயம்…

… بَلْ السَّلَف فِي غَايَة الْمَعْرِفَة بِمَا يَلِيق بِاَللَّهِ تَعَالَى ، وَفِي غَايَة التَّعْظِيم لَهُ وَالْخُضُوع لِأَمْرِهِ وَالتَّسْلِيم لِمُرَادِهِ ، وَلَيْسَ مَنْ سَلَكَ طَرِيق الْخَلَف وَاثِقًا بِأَنَّ الَّذِي يَتَأَوَّلهُ هُوَ الْمُرَاد وَلَا يُمْكِنهُ الْقَطْع بِصِحَّةِ تَأْوِيله (فتح الباري لابن حجر / (منقول من الشاملة)

மாற்றமாக, அல்லாஹ்வை அவனது தகுதிக்கு அமைவாக அறியும் விஷயத்தில் ஸலஃபுகள் உச்ச நிலையில் காணப்பட்டனர். அவனுக்கு மரியாதை செலுத்தி, அவனது கட்டளைக்கு அடிபணிந்து அவனது நோக்கத்திற்குரியவாறு அவனுக்கு கட்டுப்படுவதிலும் அவர்கள் உயர் நிலையில் இருந்தனர். (கலஃபுக்கள்) பின்வந்தோர் வழி நடப்போர் தமது விளக்கம்தான் நாடப்பட்ட கருத்து என்பதில் கூட உறுதி அற்றவர்களாகவும், தமது விளக்கம் சரியானதுதான் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதவர்களாகவும் உள்ளனர். (ஃபத்ஹுல் பாரி)

கலஃபுகளின் அறியாமைதான் ஸலஃபுகளைப் பற்றிய தவறான இந்த புரிதலுக்கு காரணம் என ஸலஃபுகளில் ஒருவராக விளங்கும் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பது இங்கு சிந்திக்கப்பட வேண்டிய வரிகளாகும்.

قَالَ الشَّافِعِيّ رحمه الله : “ما فسد النَّاس إلا لما تركوا لسان العرب، واتبعوا لسان أرسطو ( مقدمة شرح العقيدة الطحاوية للحوالي )

அரபு மொழியை புறம் தள்ளிவிட்டு, அரிஸ்டாடலின் தத்துவத்தை பின்பற்றியதன் விளைவாகத்தான் மக்கள் வழிகெட்டுப்போனார்கள்’ என்ற இமாம் ‘ஷாஃபி (ரஹ்) அவர்களின் கூற்று சிந்திக்கத்தக்கதாகும்.

ஆரம்பகால அறிஞர்கள் பற்றி விமர்சனக் கருத்தை வெளியிடுகின்றபோது ‘ஸலஃபுகள் அரபுச் சொற்களின் கருத்துக்கள் மீது மாத்திரம் தங்கி இருப்போர் என்றும், அவர்கள் அகழ்ந்தெடுக்கும் திறன், ஆற்றல் இல்லாதவர்கள் என்றும் விமர்சிக்கும் போக்கை தற்கால அஷ்அரிய்யா அரபு மத்ரஸாக்களின் பாடநூல்களிலும், நவீனகால பகுத்தறிவுவாதிகளிடமும் பொதுவாகக் காண முடிகின்றது.

அஷ்அரிய்யா சிந்தனையுடைய அரபுக் கல்லூரிகள் பல அல்லாஹ்வைப் பற்றி சுத்த சூனியமாகவே இன்றுவரை போதித்து வருகின்றன என்பதை அவற்றின் பாடவிதானங்களில் இணைக்கப்பட்டுள்ள نور الظلام மற்றும் جوهرة التوحيد போன்ற நூல்கள் மூலமும், அந்தக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற மௌலவிகளின் குர்ஆன், மற்றும் ஹதீஸ் மொழியாக்கம், உரைகள், ஆக்கங்கள் மூலம் அறிய முடிகின்றது.

இந்தக் கோட்பாட்டாளர்கள் அஸ்மா ஸிஃபாத் பற்றி வந்துள்ள அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் வந்துள்ள சான்றுகளை வெளிப்படையான கருத்தில் அணுகுவதைத் தவிர்த்து, தமது பகுத்தறிவால் கண்டுபிடித்துக் கொண்ட சொற்களை அஸ்மா, ஸிஃபாத்தில் புகுத்தி புதியதொரு கோட்பாட்டை உருவாக்கியுள்ள இவர்களின் நிலை சதுப்பு நிலத்தை தண்ணீரால் குழைத்த கதையாகி விட்டது.

உதாரணமாக அல்லாஹ்வை அவனது உயர்ந்த பெயராகிய ‘ الله’ என்ற பெயர் கொண்டு அழைப்பதற்குப் பதிலாக ‘العلة الفاعلة’ செயற்கைக் காரணி, அல்லது الفعال இயக்கச் சக்தி, அல்லது உலகை இயக்கும் வல்லமையுள்ள ஒரு சக்தி என்ற பொருளில் அழைத்தனர்.

அவ்வாறே, உற்பத்தி செய்த உலகுக்கு உற்பத்தியாளன் இருந்தாக வேண்டும் என்ற பொருளில் அல்லாஹ் என்பவன் واجب الوجود வாஜிபுல் உஜுத்- ‘உள்ளமையில் அவசியம் இருந்தாக வேண்டியவன்’ என்றனர்.

அவ்வாறே படைப்பாளன் என்ற பரந்த பொருளைத்தரும் خالق என்ற சொல்லைக் கொண்டு அழைக்காமல் செறிவற்ற பொருள் கொண்ட صانع உற்பத்தியாளன் என்ற சாதாரண சொல்லைப் பிரயோகித்தனர்.

ஆரம்பமானவன் என்பதைக் குறிக்கின்ற அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் வந்துள்ள الأول என்ற சொல்லை புறம் தள்ளிவிட்டு قديم பழமையானவன் என்ற பொருள் குன்றிய வார்த்தை கொண்டு அழைத்தனர்.

அவ்வாறே இவர்கள் அல்லாஹ்விற்கென யதார்த்தமான பேச்சு என்பது கிடையாது என்று வாதிட்டதுடன், அவனது திருநாமங்களில் ஒன்றாக இடம்பெறாத ’முதகல்லிம்’ பேசுபவன் என்ற பெயர்ச்சொல் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று என்றனர்.

குர்ஆன், சுன்னாவில் இடம் பெறாத இவ்வாறான பெயர்கள், பண்புகளையும் சரிகண்ட பல நூல்கள் இலங்கை போன்ற அரபுக் கல்லூரிகளில் இன்றும் போதிக்கப்படுவதானது, அகீதா துறையில் பின்னடைவையும், பிற்காலத்தில் தோன்றிய புதிய சிந்தனைப் பிரிவுகளின் கோட்பாடுகளில் தமது மூளைகளை அடகுவைத்து, தெளிவற்ற ஒரு பாடத் திட்டத்தினைக் கொண்டு கல்லூரி மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதையும் புலப்படுத்துகின்றது.

அல்லாஹ்வை நாம் எப்படி தெளிவற்றமுறையில் நம்பி இருக்கின்றோமோ அவ்வாறே தமது சீடர்களும் அறிந்து செல்ல வேண்டும் போன்ற நிலையானது மாணவர்களின் நம்பிக்கை கோட்பாட்டில் இளைக்கப்படுகின்ற பெரும் அநீதியாகும்.

இவர்களின் இந்த நிலைப்பாடானது ஆரம்ப காலங்களில் அஹ்லுல்கலாம் -தர்க்கவியலாளர்கள், முஃதஸிலாக்கள் போன்றவர்களின் நிலைப்பாடாக இருந்தாலும், பிற்காலத்தில்தான் அஷ்அரிய்யா சிந்தனையாளர்களிடம் இந்த சிந்தனை ஊடுருவி இருக்கின்றது. இவர்கள் சுன்னாவை நம்பகத்தன்மை அற்ற ஆதாரமாகவே இன்றும் நோக்குகின்றனர்.

நான்காவது பிரிவினர்:

அஸ்மா, ஸிஃபாத் தொடர்பாக இடம் பெறும் வசனங்களுக்கு பொருள் தர மறுப்போர், அல்லது மௌனம் காப்போர்.

இவர்கள் مفوضة’ முஃபவ்விழா’ ஒப்படைப்பவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் பார்வையில் அல்குர்ஆன், ஹதீஸ்களில் வரும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய வசனங்கள் வெளிப்படையில் உள்ளவாறு பொருள் கொள்ள முடியாத மூல மந்திரமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால், பிற மொழி அறிவில்லாதவர்கள் ஒரு மொழியை பொருள் அறியாது படிப்பது போன்று அஸ்மா, ஸிஃபாத்தை அணுக வேண்டும் என வாதிடுகின்றனர்.

அவை, இறை வசனங்கள் என்பதை ஈமான் கொள்கின்றோம், ஆனால் அவை பொருளற்ற சான்றுகள் தாம் என்பதே நமது நிலைப்பாடாகும் என்றும் வாதிடுகின்றனர்.

சட்டம் சார்ந்த வசனங்களை விளங்க முடியுமானால் இவற்றை விளங்குவதில் என்ன பிரச்சினை என வினாத் தொடுக்கப்பட்டால் அவை அல்லாஹ்வுடன் தொடர்புடையதாச்சே என்கின்றனர். இந்தப் போக்கு குர்ஆன் சிந்திப்பதற்காக இறக்கப்பட்டது என்று கூறும் வசனங்களுக்கு நேர்மாற்றமான போக்காகும்.

(كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ (ص : 29

(இது) வேதமாகும். அவர்கள் அதன் வசனங்களை சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் அதில் படிப்பினை பெறுவதற்காகவும் இதனை நாம் உம்மளவில் இறக்கி வைத்தோம். (ஸாத்: 29)

அல்லாஹ்வின் வசனங்கள் அனைத்தும் அவனது அடியார்கள் புரிந்து கொள்ளும் விதமாகவே அமைந்துள்ளன. அவற்றில் இடம் பெறும் அஸ்மா ஸிஃபாத் பற்றிய வசனங்களின் பொருள் புரியாது என வாதிடுவது அறியாமையாகும்.

படைப்பினங்கள் தொடர்பான வசனங்கள் புரிகின்றது, படைப்பாளன் பற்றிய வசனங்கள் புரியவில்லை என வாதிடும் இப்பிரிவினரின் நிலைப்பாடு ஆச்சரியமளிக்கின்றது.

ஐந்தாவது பிரிவினர்:

அஸ்மா, ஸிஃபாத் தொடர்பான வசனங்கள் விஷயத்தில் எவ்வித விளக்கமும் கூறாது மௌனம் காப்போர்.

இவர்களுக்கும் முஃபவ்விழாக்களுக்கும் இடையில் காணப்படும் பிரதான வேறுபாடு என்னவெனில் முஃபவ்விழாக்கள் அஸ்மா, ஸிஃபாத் தொடர்பான வசனங்கள் விஷயத்தில் விளக்கம் தர முழுமையாக மறுப்பார்கள். இருந்தாலும், அஸ்மா, ஸிஃபாத்திற்கு வெளிப்படையான பொருள் கொள்ள வாய்ப்புள்ளது, அதற்கு மாற்றமாகவும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது எனக் கூறுவார்கள்.

இவர்களது பார்வையில் அவை அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இது பற்றி நாம் எதையும் பேசமாட்டோம். இதுவே இவர்களின் நிலைப்பாடாகும்.

ஆறாம் பிரிவினர்:

இது பற்றிய சிந்தனையே நமக்கு வேண்டாம். நம்மை நமது அமல்களுடன் விட்டுவிடுங்கள். எம்மைத் தொல்லைப்படுத்தாதீர்கள் எனக் கூறுவோர்.

அவை, எதுவாகவும் இருக்கட்டும். நாம் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விஷயத்தில் எதையும் விளங்க முற்படத் தயாரில்லை. குர்ஆனை ஓதுவோம், அல்லாஹ்வை வணங்குவோம். அதன் பொருள் பற்றி அலட்டிக் கொள்ளமாட்டோம். அது நமக்கு அவசியமும் இல்லை போன்ற பொறுப்பற்ற, கடமை உணர்வில்லாத நிலைப்பாடே இவர்களது கொள்கையாகும்.

இவர்கள் நபித்தோழர்களின் போக்கில் இருந்து மிகவும் தூரமானவர்கள் என்பதே நமது நிலைப்பாடாகும். ஏனெனில் ‘யூத மத குருக்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து முஹம்மதே! நிச்சயமாக அல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும், பூமிகளை ஒரு விரலிலும், மரங்களை ஒரு விரலிலும், நீரையும், ஈரலிப்பான மண்ணையும் ஒரு விரலிலும், ஏனைய படைப்புக்களை ஒரு விரலிலும் ஆக்கி நானே அரசன் எனக் கூறுவான் என்று எமது வேதத்தில் காண்கின்றோமே எனக் கூறியதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அதை உண்மைப்படுத்தும் முகமாக தனது கடவாய்ப் பற்கள் தெரிகின்றவரை சிரித்தார்கள் பின்னர்,

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ [الزمر : 67]

அவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதித்து நடக்கவில்லை. பூமிகள் அனைத்தும் மறுமையில் அவனது கைப்பிடிக்குள் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தால் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் பரிசுத்தமானவன், மிக்க மேலானவன். (அஸ்ஸுமர்: 67) என்ற திருமறை வசனத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நபித்தோழர்களிடம் ஓதிக் காண்பித்தார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

இங்கு நபித்தோழர்கள் இஸ்பஃ என்ற சொல்லின் பொருளை அல்லாஹ்வின் தகுதிக்கு அமைவாக நம்பினார்களே அன்றி அதற்கு மாற்றமாக இஸ்பஃ (விரல்) எப்படிப்பட்டது? மனிதனுக்கும் விரல் உண்டே! அதனால் விரல் என்பது அல்லாஹ்வுக்கு எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியையும் தவிர்த்துள்ளார்கள். (இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களின் ”ரஹுல் அகீததிஸ் ஸஃபாரீனிய்யா’ எனும் நூலில் இருந்து சிறுமாற்றத்துடன் தரப்படுகின்றது)

நபி (ஸல்) அவர்கள் தெளிவான அரபு மொழியில்தான் நபித்தோழர்களோடு உரையாடினார்கள். அவற்றின் வெளிப்படையான பொருளில்தான் அவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டார்கள். இதற்கு ஏராளமான சான்றுகளை குர்ஆனிலும், ஹதீஸிலும் காணமுடியும்.

‘உங்கள் இரட்சகன் இரு கண் பார்வை அற்ற குருடன் இல்லை. மாற்றமாக, தஜ்ஜால் என்பவன்தான் ஒற்றைக்கண் குருடன்’ (புகாரி, முஸ்லிம்)

‘இரு மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அது எப்படி என நபித்தோழர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த நபி (ஸல்) அவர்கள் ‘அவர்களில் ஒருவன் மற்றவனைப் போரில் கொலை செய்கின்றான். அதனால் அவன் சுவனத்தில் நுழைந்து விடுகின்றான். பின்னர் (கொலையாளியான) இவன் இஸ்லாத்தில் இணைகின்றான். அல்லாஹ் அவனை மன்னித்து விடுகின்றான். பின்னர் அவன் போரில் வீரமரணம் அடைகின்றான் என பதிலளித்தார்கள் (புகாரி, முஸ்லிம்)

‘சுவனவாதிகளில் இறுதியாக சுவனம் செல்லும் மனிதனைப் பார்த்து அல்லாஹ் சிரிப்பான்’ (புகாரி, முஸ்லிம்).

‘அல்லாஹ் அடியானுடன் நேரடியாகப் பேசுவான். அவனுக்கும், அவனது இரட்சகனுக்கும் இடையில் யாதொரு திரையோ, மொழி பெயர்ப்பாளர்களோ இருக்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவையும், இவை போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்றும் பல வார்த்தைகளையும் நபித்தோழர்கள் வெளிப்படையான பொருளில் புரிந்ததன் காரணமாகவே அல்லாஹ் சிரிப்பானா எனக் கேட்பதை விடுத்து, சம்மந்தப்பட்ட விஷயம் தொடர்பாக விளக்கம் கேட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் சிரிப்பு, கண், அவனது இருகரங்கள், அவனது வருகை போன்ற அவனுடன் தொடர்பான பண்புகளை நம்மைப் போன்று பொருள் மாற்றிப் புரிய வாய்ப்பே இல்லை என்பதை அவை பற்றிய அவர்களின் மௌனம் சிறந்த ஆதாரமாகும்.

மனிதர்களிடம் காணப்படும் இவ்வாறான உறுப்புக்கள், பண்புகள் அல்லாஹ்வின் பண்புகளாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் வர்ணிக்கப்பட்டு, பேசப்பட்டால் அவற்றை எவ்வித குறைகளும் அற்ற, படைப்புக்களின் பண்புகளுக்கு ஒப்பிடாது பாழடிக்காது, நிலைப்படுத்தாது அல்லாஹ்வின் பண்புகள் விஷயத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் முறை பற்றிய கேள்வி என்பது பண்புகள் பற்றிய அறியாமையாகும். இந்த நடைமுறைக்கு மாற்றமானவர்களாக இப்பிரிவினர் காணப்படுகின்றனர்…

..

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply