Home / FIQH / ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்…

இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் !
ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு முறைகளையும், ஒழுக்க விதிகளையும் சரியான முறையில் இஸ்லாம் நமக்கு வழிக் காட்டியுள்ளது.

குறிப்பாக ஆண்கள் எப்படி உடை அணிய வேணடும். அது போல் பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும். என்று தனித் தனியாக நபியவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் ஆண்கள் கீழாடையை எந்த அளவு வரை அணியலாம் என்பதை இந்த கட்டுரையின் மூலம் அலசுவோம்.

ஆண்கள் தனது கீழாடையை கரண்டைக்கு கீழ் அணியலாமா ? அணியக் கூடாதா ? என்ற விசயத்தில் பலவிதமான கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.
என்ன கருத்து மோதல்கள் வந்தாலும் குர்ஆன், அல்லது ஹதீஸ் என்று வந்து விட்டால், அதற்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது கூடாது. அது நரகத்திற்கு செல்லும் என்றும், பெருமைக்காக வேண்டி கரண்டைக்கு கீழ் அணிந்தால் மட்டும் தான் நரகம். பெருமை இல்லா விட்டால் தாராளமாக கரண்டைக்கு கீழ் அணியலாம் என்றும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

கரண்டைக்கு கீழ் ஆடை அணிந்தவர்களை அல்லாஹ் மறுமை நாளில் டேப் எடுத்து அளந்து பார்க்க போகிறானா ?
சிறிய சீலை துண்டு கரண்டைக்கு கீழ் வருவதினால் பெரிய தண்டனையான நரகமா ?
அந்நியர்கள் இதை கேட்டால் என்ன நினைப்பார்கள் ? என்று ஆளுக்கு ஆள் மார்க்கத்தை விட்டு, விட்டு பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகிறார்கள்.

மார்க்க சட்ட திட்டங்கள் அந்நியவர்களுக்காக கிடையாது. சரியாக இருந்தால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாம் பின் பற்றியே ஆக வேண்டும்.

இப்படியே அந்நியர்கள் என்ன நினைப்பார்கள், அந்நியர்கள் என்ன நினைப்பார்கள், என்று ஆளுக்கு ஆள் சொல்லப்பட்ட இஸ்லாமிய சட்டங்களை மாற்றப் போனால் நிலைமை என்னவாகும். ?

வுளு செய்யும் போது கரண்டைக்காலில் ஒரு சிறிய இடம் கழுவப்படாவிட்டால் நரகம் என்று நபியவர்கள் கூறினார்கள். இதற்காக நரகமா ? சிறிய இடம் தானே கழுவப்படவில்லை, அந்நியர்கள் என்ன நினைப்பார்கள் என்று கூற முடியுமா ?

எனவே மார்க்கத்திற்கு அளவுகோல் குர்ஆனும், ஹதீஸூம் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கரண்டைக்காலும், பெருமையும்:

“ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆடையை (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்-4233)

மேலும்“ முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, “நீர் யார்?” என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில்படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்” என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்” என்றார்கள்.( முஸ்லிம்-4236)

இதே கருத்தில் வரக் கூடிய பல ஹதீஸ்கள் உள்ளன. குறிப்பாக இப்படியான ஹதீஸ்களை வைத்து பெருமைக்காக கீழாடையை கரண்டைக்கு கீழ் அணிவது தான் கூடாது. பெருமை இல்லா விட்டால் அணியலாம் என்று கூறி கரண்டைக்கு கீழ் அணியக் கூடிய நிலையை காணலாம்.

பொதுவாக அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை அதிகமான ஆட்சியாளர்கள் இருந்து சாமானியர் வரை தனது கீழாடையை அப்படி அணிவது தான் தனக்கு மதிப்பு என்று அணியும் நிலையை கண்டு வருகிறோம். அப்படி அணிவதால் பெருமை தானாகவும் வந்து விடுகிறது.

ஆனால் இஸ்லாம் அப்படி அணிவதை தடை செய்கிறது. தனது நடவடிக்கையிலும் அடக்கம் இருக்க வேண்டும், அதே போல் தனது ஆடை அலங்காரத்திலும் அடக்கம் இருக்க வேண்டும் என்பதை வழிக் காட்டுகிறது.

கரண்டைக்கு மேல் ஆடை அணிவது தான் அடக்கம் என்பதை இஸ்லாம் உறுதிப்படுத்துகிறது.

கரண்டைக்கு கீழ் ஆடை அணியக் கூடியவர்கள் தனக்கு சாதகமாக, மேலதிகமாக பின் வரும் ஹதீஸையும் ஆதாரமாக முன் வைக்கிறார்கள்.

“அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), ‘நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே’ என்று கூறினார்கள்.(புகாரி-3665)

இந்த ஹதீஸை எடுத்துக் காட்டி அபூபக்கர் (ரலி) அவர்களே தனது கீழ் ஆடையை கரண்டைக்கு கீழாக தானே அணிந்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸை நன்றாக கவனித்தால்
அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது கீழ் ஆடையை கரண்டைக்கு கீழாக அணிய வில்லை, தன்னை அறியாமல் கரண்டைக்கு கீழாக ஆடை நழுவி போகிறது என்று கேட்ட சந்தர்ப்பத்தில் தான் நபியவர்கள் அப்படி கூறினார்கள்.

அது மட்டும் அல்ல, அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆடையின் ஒரு பகுதி தான் இறங்குகிறது என்பதையும் குறிப்பிட்டு காட்டுகிறார்கள்.எனவே அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது கீழ் ஆடையை கரண்டைக்கு மேலாக தான் அணிந்துள்ளார்கள் என்பது தெளிவாக உள்ளது.

மேலும் கரண்டைக்கு மேலாக ஆடை அணிவது சம்பந்தமாக சில ஹதீஸ்களை பார்த்து விட்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வரலாம்.

கரண்டைக்கு மேலால் ஆடை:

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி- 5787)

இந்த ஹதீஸில் பெருமை என்ற வாசகம் இல்லாமல் கரண்டைக்கு கீழாக அணிந்தாலே நரகம் என்ற எச்சரிக்கையை காணலாம்.

மேலும்“அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்- 171)

இது போல பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களில் பெருமைக்காக என்ற வாசம் கிடையாது. பொதுவாக கரண்டைக்கு கீழாக ஆடை அணிந்தாலே நரகம் என்று தான் வந்துள்ளது.

மேலும்“ அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை (கணுக்காலுக்குக்) கீழே இருந்தது. அப்போது அவர்கள், “அப்துல்லாஹ்! உமது கீழாடையை உயர்த்திக் கட்டு” என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். பிறகு “இன்னும் சிறிது (உயர்த்து)” என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். பின்னர் அதையே நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

(இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், “எதுவரை உயர்த்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “கணைக்கால்களின் பாதியளவுக்கு” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்-4238)

இங்கு உமர் (ரலி) அவர்களுடைய மகன் தனது கீழாடையை கரண்டைக்கு கீழாக அணிந்த நிலையில் செல்லும் போது, அப்துல்லாஹ்வே ! உயர்த்துவீராக ! என்று நபியவர்களின் கட்டளையாகவே உள்ளது.

நீங்கள் பெருமைக்காக அணிந்தீர்களா ? இல்லையா என்ற கேள்வியை நபியவர்கள் கேட்க வில்லை. ஒரு முஃமினுடைய கீழ் ஆடை கரண்டைக்கு மேலாக இருக்க வேண்டும் என்பதை மேல் சென்ற ஹதீஸ் தெளிவுப் படுத்துகிறது.

அதே போல் “ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கெண்டை அளவிற்கு அல்லது கரண்டை அளவிற்கு இருக்க வேண்டும்….(திர்மிதி, அஹ்மது, அபூதாவூது)

அதே போல் உமர்(ரலி) அவர்கள் குத்தப்பட்டு, காயப்பட்ட நிலையில் இருந்த போது ஒரு இளைஞர் உமர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு திரும்பி செல்லும் போது, அந்த இளைஞரை உமர் (ரலி) அவர்கள் அழைத்து உனது கீழ் ஆடையை உயர்த்துவீராக என்று கூறினார்கள்.

எனவே ஒரு இறை விசுவாசியின் கீழ் ஆடை கரண்டைக்கு மேலாக தான் இருக்க வேண்டும் என்பதை பல ஹதீஸ்களில் தெளிவாக காணலாம்.

பெருமையும், ஆடையும்:

இன்று ஆண்கள் கீழாடையை தைக்கும் போதே கரண்டைக்கு கீழாக அளவு கொடுத்து தைக்கிறார்கள் என்றால் அது தான் தெளிவான பெருமையாகும்.

ஒருவர் கரண்டைக்கு மேலாக கீழாடை அணிந்துள்ளார். நோயின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணமாகவோ உடல் மெலிந்து, இப்போது கீழாடை அணியும் போது சற்று கரண்டைக்கு கீழாக ஆடை செல்கிறது என்றால் இவர் அந்த ஹதீஸின் அடிப்படையில் பெருமைக்குறியவராக கருதப்படமாட்டார்.

ஏன் என்றால் இவர் கீழ் ஆடையை தைக்கும் போதே கரண்டைக்கு மேலாக தான் தைத்துள்ளார். சந்தர்ப்ப சூழ்நிலையால் கரண்டைக்கு கீழாக ஆடை இறங்குகிறது.

எனவே இது பெருமையில் அடங்காது. அல்லது பஸ்ஸிலே நீண்ட நேரம் மேலே கம்பியை பிடித்த வண்ணம் நின்று கொண்டே பிரயாணம் செய்கிறார். அப்போது கீழாடை சற்று கீழே இறங்கும் இது பெருமையில் அடங்காது. அபூபக்கர் (ரலி) அவர்கள் ஏற்கனவே கரண்டைக்கு மேலாக அணிந்திந்தார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் கீழாடையின் ஒரு பகுதி கீழே இறங்குகிறது என்பதை ஹதீஸில் பார்த்தோம்.

மேலும் எங்களிடம் பெருமை இல்லை என்று கரண்டைக்கு கீழாக ஆடை அணிந்திருக்கும் அதிகமானவர்கள் தொழுகையின் போது கீழாடையை கரண்டைக்கு மேலாக சுருட்டி விடுகிறார்கள்.?

அல்லது இஸ்லாமிய நிகழ்ச்சியின் போது தனது கீழாடையை கரண்டைக்கு மேலாக சுருட்டி விடுகிறார்கள். ?

தொழுகை, அல்லது இஸ்லாமிய நிகழ்ச்சி என்றால் கரண்டைக்கு மேலாகவும், ஏனைய சந்தர்ப்பங்களில் கரண்டைக்கு கீழாக ? இது முனாபிக் தனம் இல்லையா ?
கரண்டைக்கு கீழ் அணிவது கூடும் என்றால், ஏன் இப்படியான சந்தர்ப்பங்களில் கீழாடையை சுருட்ட வேண்டும்.?

நபியின் கீழாடை:

மார்க்கம் என்று வரும் போது நபியவர்கள் எதை, எப்படி செய்தார்களோ அப்படி தான் செய்வோம் என்று உறுதியாக கூறக் கூடியவர்கள், ஆடை விசயத்தில் நபியவர்களையோ, அல்லது நபியவர்களை பின் பற்றி முன் மாதிரியாக வாழ்ந்து சென்ற ஸஹாபாக்களையோ தனது முன் மாதிரியாக எடுத்துக் கொள்வது கிடையாது.

நபியவர்கள் தனது கரண்டைக்கு கீழாக ஆடை அணியவில்லை, ஸஹாபாக்கள் தனது கரண்டைக்கு கீழாக ஆடை அணியவில்லை என்றால், அதுவே நமக்கு சிறந்த முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாமே ?
ஏன் தேவையில்லாமல் கருத்து மோதல்கள் ?

சந்தேகத்தை தவிர்ந்து கொள்ளல்:

கரண்டைக்கு கீழாக ஆடை அணியலாமா ? அணியக் கூடாதா ? என்ற கருத்து இரண்டு பக்கத்திலும் வாதப் பிரதி வாதங்களாக மாறி, மாறி முன் வைக்கப்படும் இந்த நேரத்தில், சந்தேகத்தை விட்டும் ஒதுங்கிக் கொள்வதை தானே இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது.

“ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது, இரண்டுக்கும் மத்தியில் உள்ளது சந்தேகத்திற்குறியது. எவர் சந்தேகத்தை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாறோ அவர் தன்னையும், தனது மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொண்டார். எவர் சந்தேகத்தில் விழுகிறாறோ அவர் ஹராத்தில் விழுந்து விட்டார்”. இந்த ஹதீஸின் அடிப்படையில் இரண்டு பக்கத்திலும் வரும் வாதப் பிரதி வாதங்களின் கருத்துகளை விட்டு, விட்டு நபியவர்களும், ஸஹாபாக்களும் எது வரை தனது கீழாடையை அணிந்திருந்தார்களோ அப்படி நாமும் அணிந்து கொள்வோம் என்ற இறுதி முடிவுக்கு வருவதை தானே அல்லாஹ் நமக்கு நினைவுப் படுத்துகிறான்.

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கு”.(4-59)

“உபதேசம் செய்யுங்கள், அது முஃமின்களுக்கு பயன் தரும்…

“அல்லாஹ் மிக அறிந்தவன்”.

Check Also

மக்களின் உள்ளங்களைக் கவர | பாகம் – 02 |

மக்களின் உள்ளங்களைக் கவர | பாகம் – 02 | வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply