Home / இமாம்களின் வரலாறு / இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு)

முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும்.

முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் எனவே அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டது என்ற பொருளில் “முவத்தா” என பெயரிட்டேன் எனக் கூறுகிறார்கள்”. (தன்வீருல் ஹவாலிக் – 06 இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ்)

ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூரின் வேண்டுதலுக்கு இணங்க இந்த தொகுப்பை இமாம் மாலிக் அவர்கள் எழுதினார்கள் என இமாம் இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது அல் இஸ்தித்கார் 1/168 ல் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நாற்பது வருடங்களாக முவத்தாவை மக்களுக்கு படித்துக் கொடுத்தார்கள் இடையில் கூடுதல், குறைவு செய்து அதனை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தினார்கள், அதனால் அவர்களிடமிருந்து வந்துள்ள அறிவுப்புக்களில் வித்தியாசமான போக்குகள் காணப்பட்டன, அதில் மிகப்பிரபல்யமான அறிவிப்பாக யஹ்யா அல்லைஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அறிவிப்பும் அபூ முஸ்அப் அஸ்ஸுஹ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அறிவிப்பும் காணப்படுகின்றது, இது பற்றிய விபரங்களை அல்லாமா புவாத் அப்துல் பாகி அவர்கள் முவத்தாவை திறனாய்வு செய்து நெறிப்படுத்தி எழுதும் போது அதற்கான முன்னுரையில் பதிவு செய்துள்ளார்கள்.

ஹதீஸ்களின் எண்ணிக்கையில் கருத்து வேற்றுமை நிலவுகின்றன, யஹ்யா அல்லைஸீ அவர்களின் அறிவிப்பின் பிரகாரம் மர்பூஃ, மவ்கூப் ஆன செய்திகள் உற்பட 1942 செய்திகளும் அபூ முஸ்அப் அஸ்ஸுஹ்ரி அவர்களின் அறிவிப்பின் படி மர்பூஃ, மவ்கூப் மற்றும் இமாம் மாலிகின் கருத்துக்கள் உற்பட 3069 செய்திகள் என்றும் கணிக்கப்படுகின்றது.

அபூ பக்ர் அல் அப்ஹரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; முவத்தாவிலுள்ள 1720 செய்திகளில் 600 செய்திகள் நபிகளாரோடு இணைக்கப்பட்டும் 222 முர்ஸலான செய்திகளும் 613 மவ்கூபான செய்திகளும் 285 தாபிஈன்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
(அல் கப்ஸ் – 1/58 – இப்னுல் அரபி ரஹிமஹுல்லாஹ்)
(தர்தீபுல் மதாரிக் – 1/193 காழி இயாழ் ரஹிமஹுல்லாஹ்)

இமாம் மாலிக் அவர்கள் தமது முவத்தாவில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்களை முதலிலும் அதற்கு அடுத்தபடியாக நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகளையும் சிலவேளைகளில் மதீனா வாசிகளின் செயற்பாடுகளையும் எழுதியிருப்பார்கள், அதனால் ஒரே நேரத்தில் அது ஹதீஸ் நூலாகவும் பிக்ஹ் நூலாகவும் அமையப்பெற்றுள்ளது.

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூற தாம் கேட்டதாக இமாம் ரபீஃ அவர்கள் கூறுகிறார்கள்; இமாம் மாலிக் அவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தியில் சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும் அதனை முழுமையாகவே விட்டுவிடுவார்கள்.

குர்ஆனுக்கு அடுத்தபடி மிக நம்பத்தகுந்த நூல் இமாம் மாலிக் இப்னு அனஸின் “முவத்தா” வைத்தவிர வேறு எதுவும் கிடையாது என்று இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்கள் – அல் இஸ்தித்கார், 1/166
அத்தம்ஹீத், 1/68

இமாம் ஷாபியின் இந்த கூற்று புஹாரி, முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு சொல்லப்பட்டது என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், இதனை ஹாபிழ் இப்னு கஸீர் அவர்களும் தமது “இஹ்திஸாரு உலூமில் ஹதீஸ்” 24,25 ல் உணர்த்தி எழுதியுள்ளார்கள்.

இமாம் இப்னு அப்தில் பர் அவர்களின் அத்தம்ஹீத், அல்இஸ்தித்கார், என்ற இரண்டு விரிவுரை நூல்களும் இமாம் பாஜி அவர்களுடைய அல் முன்தகா இமாம் சுயூதி அவர்களுடைய தன்வீருல் ஹவாலிக் போன்ற இன்னும் பல விளக்கவுரை நூல்களும் தெளிவுரைகளும் முவத்தாவிற்கு உள்ளன.

அல் பிக்ருல் மன்ஹஜி இன்தல் முஹத்திஸீன் –
(111-118) கலாநிதி ஹும்மாம் ஸஈத். மனாஹிஜுல் முஹத்திஸீன் – (285) கலாநிதி யாஸிர் அஷ்ஷுமாலி. முகத்திமது தஹ்கீகில் முவத்தா – அல்லாமா புவாத் அப்துல் பாகி போன்ற நூல்களில் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் “முவத்தா” குறித்து மேலுள்ள சில தகவல்கள் உட்பட இன்னும் மேலதிகமாக ஆராயப்பட்டுள்ளது.

இமாமுல் மதீனா இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஏதாவது மார்க்க தீர்ப்பொன்று கேட்கப்பட்டு விட்டால் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே நிற்பது போன்று பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
என அபுஸ் ஸல்த் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
இதனை இமாம் ஹதீப் அல்பக்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது அல்பகீஹ் வல் முதபக்கிஹ் – 2/354 ல் பதிவு செய்துள்ளார்கள்.

“முவத்தா” எனும் அறிவுக்களஞ்சியத்தை இந்த சமூகத்துக்கு வழங்கிய இமாமவர்களின் இறையச்சத்துக்கும் பேணுதலுக்கும் அறிவின் முதிர்ச்சிக்கும் மேலுள்ள இந்த ஒரு செய்தியே மிகப்பெரும் சான்றாகும்.

எங்களுடைய அன்புக்குரிய இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு வழங்குவானாக.

அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி, விரிவுரையாளர், அல்மனார் இஸ்லாமிய நிலையம், துபாய், அமீரகம்.

Check Also

பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை..!

மௌலவி யாஸிர் பிர்தொஸி உணவு, உடை, உறைவிடம் எவ்வாறு மனித வாழ்வின் அடிப்படையாக அமைந்துள்ளதோ, அவ்வாறே பாதுகாப்பும், அச்சமற்ற வாழ்வும் …

Leave a Reply