Home / அறிவுரைகள் / உங்களை நீங்களே தூய்மைப் படுத்தாதீர்கள்…

உங்களை நீங்களே தூய்மைப் படுத்தாதீர்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

இன்று உலகில் மாறி, மாறி பிறரை குத்திக் காட்டி, குறை சொல்லி திரிவதை அன்றாடம் கண்டு வருகிறோம். ஒரு அரசியல்வாதி நான் மட்டும்சரி மற்றவர்கள் தவறில் இருக்கிறார்கள் என்கிறார். இன்றுள்ள சில அமைப்புகளில் உள்ளவர்கள். நாங்கள் சுத்தம் மற்றவர்கள் எல்லாம் அசுத்தம் என்று தங்களை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள் இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை காணலாம்.
மனிதனைப் பொருத்தவரை தன்னை சுத்தமானவனாகவும், பிறரை குறைக்காணக் கூடியவனாகவும், அதிகமாக காணப்படுகிறான். தான் நிறைவாக இருப்பதாக இவனே இவனுக்கு தீர்பளித்துக் கொள்கிறான்.

பள்ளியோடு சம்பந்தப்பட்டவர் பள்ளி நிர்வாகி சரியில்லை, தலைவர் சரியில்லை, பள்ளியில் கடமை புரியும் இமாம் சரியில்லை, இப்படியே இவரது பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இவர் பள்ளிக்கு நேரத்திற்கு தொழ போக மாட்டார். பள்ளியில் நடக்கும் வேலைகளில் பங்கெடுக்க மாட்டார், அதேநேரம் தன்னுடன் இரண்டு பேர்களை வைத்துக் கொண்டு ஒரே குறை பேசிக் கொண்டே இருப்பார். சில வியாபாரம் செய்யக் கூடியவர்கள் பிற சக வியாபாரிகளை குறை பேசிக் கொண்டே இருப்பார்கள். சில மௌலவிமார்கள் பிற சில மௌலவிமார்களை குறை பேசிக் கொண்டே இருப்பார்கள்.இப்படி அந்தந்த துறையைச் சார்ந்தவர்கள் தன்னை சார்ந்தவர்கள் சரியில்லை நான் மட்டும் சரி என்று சொல்லக் கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம்.
தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்பதை அல்லாஹ் பின் வருமாறு கூறுகிறான்…

(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் – எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் – யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.(53-32)

மேலும்“ (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (4-49)

எனவே யாரும் யாரையும் குறை சொல்லக் கூடாது என்பதை படைத்தவன் நமது சிந்தனைக்கு கொண்டு வருகிறான். இன்றைய தஃவா களத்தில் உள்ள சிலரும், சில அரசியல்வாதிகளும் அற்ப இலாபத்திற்காக தன்னை சாராத கட்சிக்காரர்களை கடுமையான முறையில் குறை சொல்லி விமர்சனம் செய்கிறார்கள் என்றால், நாங்கள் யோக்கியர்கள் மற்ற அனைவரும் அயோக்கியர்கள் என்று பகிரங்மாக பேசி திரிவதை காண்கிறோம் என்றால், தஃவாவின் பெயரிலும்,அரசியலின் பெயரிலும் தங்களை தாங்களே சுத்தப் படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் யார்? நீங்கள் எப்படிப் பட்டவர் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள், உங்கள் கொடுக்கல், வாங்கள் எப்படி, உங்கள் உள்ளம் எப்படி பட்டது என்பதை அல்லாஹ் தான் நன்கு அறிந்தவனாகும்.

அல்லாஹ்விடம் சிறந்தவர்கள் உங்களில் இறையச்சம் உடையவர்களாகும். அல்லாஹ் உங்கள் உருவத்தையோ செல்வத்தையோ பார்ப்பது கிடையாது மாறாக உங்கள் உள்ளத்தை தான் பார்க்கிறான். ஒரு மனிதனிடத்தில் பணிவு வர வேண்டும். அல்லாஹ்விற்காக பணிபவர்களை அல்லாஹ் உயர்த்துகிறான் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்கள் தங்களுடன் வாழ்ந்த சக தோழர்களை தங்களை விட முக்கியத்துவம் கொடுத்து உயர்வாக மதிப்பார்கள். ஒரு தவறை திருத்திக் கொடுக்கும் போதும் கண்ணியமான முறையில் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக என்று கூறி சம்பந்தப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக் கொடுப்பார்கள். அல்லாஹ் அவர்களை சுவனவாசிகள் என்று உறுதிபடச் சொல்லியிருந்தாலும் எனக்கு சுவர்க்கம் கிடைக்குமா என்ற ஆதங்கத்துடனே இருப்பார்கள். நான் முனாபிக்கா என்று மாறி, மாறி பயந்தவர்களாக கேள்விக் கேட்டுக் கொள்வார்கள். பிறர் நலம் பேணுவதில் அதி முக்கியத்துவம் காட்டுவார்கள். அதனால் தான் அவர்கள் உலகிலே சிறந்த சமுதாயம் என்று நபியவர்களால் சொல்லப்பட்டார்கள்.
அவர்களை நானும் பொருந்திக் கொண்டேன், அவர்கள் என்னைப் பொருந்திக் கொண்டார்கள்.என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். ஸஹாபாக்கள் ஒரு போதும் தங்களை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்ளவில்லை.

எனவே நாம் நம் மீது கடமையாக்கப்பட்ட கடமைகளை தொடராக செய்து வரவேண்டும். ஆனால் நான் மட்டும் தான் சுத்தம் மற்றவர்கள் அனைவரும் சரியில்லை என்ற ஆணவம் கலந்த பேச்சை விட்டு விடுங்கள்…

Check Also

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள்

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள் அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 26 – 11 – 2020 …

Leave a Reply