Home / அக்கீதாவும் மன்ஹஜும் / கப்று வணக்கமும் சிலை வணக்கமும்…

கப்று வணக்கமும் சிலை வணக்கமும்…

بسم الله الرحمن الرحيم

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி

அல்லாஹ்வுக்கு மிகவுமே கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம் அவன் எம்மைப் படைத்திருக்க நாம் அவனை வணங்காமல் அவனுக்கு இணைவைப்பதாகும். எம்மையெல்லாம் படைத்த அல்லாஹ்வுத்தஆலா நாம் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை தராமல் விட்டதில்லை. அந்தடிப்படையில் எமக்கு வழிகாட்டிகளாக காணப்படுகின்ற அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இணைவைப்பின் விபரீதம் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்தடிப்படையில் தான் சிலை வணக்கமென்பதை எப்படி நாம் இணைவைப்பென்று அறிந்து வைத்திருக்கின்றோமோ அவ்வாறே கப்று வணக்கமும் இணைவைப்பாகவே இருந்து கொண்டிருக்கின்றது. இவ்விரு வணக்கமும் தோற்றம் பெற்றதற்கு இடையில் நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டிருக்கின்றது.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலத்தில் ஐந்து நல்லடியார்கள் வாழ்ந்து மரணிக்கின்றார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திய ஷைத்தான் நூஹ் நபியின் சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்த முனைகின்றான். எனவேதான் அம்மக்களிடம் வந்து முதற் கட்டமாக மரணித்த ஐந்து பேரினதும் கப்றுக்கு
சென்று அவர்களை கண்ணியப்படுத்துங்கள் என்று கூறியதிலிருந்து ஆரம்பித்த ஷைத்தான் இறுதியில் அம்மக்களுக்கு சிலை வைத்து அவர்களை வணங்குங்கள் என்று ஊசலாட்டத்தை ஏற்படுத்திவிட்டான்.

இந்த வகையில்தான் சிலை வணக்கத்தின் ஆரம்பம் கப்றுகள் விடயத்தில் எல்லை மீறுவதும். கப்றுகளுடைய விடயத்தில் எல்லைமீறுவதன் முடிவு சிலைகளை வணங்குவதாகும். எனவே சிலையை வணங்குவது எப்படி இணைவைப்பாக இருக்கின்றதோ அப்படியே கப்று வணக்கமும் இணைவைப்பாகவே இருக்கின்றது.

ஆனால் இன்றைய காலத்தில் சிலை வணக்கத்தை இணைவைப்பாக பார்க்கின்ற சில மக்கள் கப்று வணக்கத்தை இணைவைப்பு என்று பார்ப்பது கிடையாது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் இவ்வணக்கமும் இஸ்லாத்திலுள்ள கலாசாரங்களில் ஒன்றுதான் என மக்கள் தவறாக எண்ணுகின்றார்கள்.

மரணித்தவர்களது கப்றுகளை வணங்குகின்ற இடங்களாக எடுப்பது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு எச்சரித்திருக்கின்றார்கள்.

“அல்லாஹ்வுத்தஆலா யூதர்களையும் கிறிஸ்தவவர்களையும் சபிப்பானாக. அவர்கள் அவர்களது நபிமார்களுடைய கப்றுகளை (வணங்குகின்ற) மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டார்கள்”

இந்த நபிமொழியில் கப்றுகளை வணங்குகின்ற மஸ்ஜித்களாக எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றத்தரக் கூடியது என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றதென்பதை அறிந்து கொள்ள முடியும்.

இன்னுமொரு நபிமொழியில்

“அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் அவர்களது நபிமார்களதும் நல்ல மக்களதும் கப்றுகளை மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டனர்(அந்த இடத்தில் தொழுதார்கள், அதனை சூழவும் தொழுது கொண்டார்கள்). அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் கப்றுகளை பள்ளிகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை அவ்வாறு நீங்கள் மஸ்ஜிதாக எடுத்துக் கொள்வதை விட்டும் தடுக்கிறேன்” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த நபிமொழியின் மூலமாக கப்று வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட தடையினை 3 கோணங்களாக அறிந்து கொள்ள முடியும்.

_முதலாவது_:-

இவ்வாறு அவர்களது கப்றுகளை செய்வது கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களை இழிவுபடுத்துவதாக ஆகிவிடும்.

_இரண்டாவது:-_

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் மஸ்ஜிதாக “எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று பொதுவாகவே தடை செய்திருக்கின்றார்கள்.

_மூன்றாவது:-_

இந்த நபிமொழியின் இறுதியில் “நிச்சயமாக நான் உங்களை இவ்வாறு செய்வதை விட்டும் தடுக்கிறேன்” என்று உறுதியாகவே கூறப்பட்டுள்ளது.

ஆகவேதான் கப்றுகளை மஸ்ஜித்களில் கட்டுவதும், அதில் ஜனாஸாத் தொழுகையைத் தவிர மற்றைய தொழுகைகளை நிறைவேற்றுவதும் தடைசெய்யப்பட்ட காரியமாகும். அது பர்ளான தொழுகையாக இருந்தாலும் சரி உபரியான சுன்னத்துகளாக இருந்தாலும் சரி.

இதுவெல்லாம் இப்படியிருக்க சில மக்கள் கப்றுகளிடத்தில் சென்று தங்களது தேவைகளை முன்வைக்கின்றார்களே இது இணைவைப்பு கிடையாதா? அல்லாஹ் தான் மன்னிக்கவேமாட்டேன் என்று கூறியிருக்கின்ற பெரிய இணைவைப்பாக இது காணப்படுகின்றது.

அல்லாஹ் கூறுகிறான்:

“அல்லாஹ்வுடன் சேர்த்து வேறு எவர்களையும் அழைக்காதீர்கள்”
(72:18)

“அல்லாஹ் உங்களது இரட்சகன். அதிகாரம் அவனுக்கே உரியது. அவனையன்றி நீர் அழைப்போர் அணுவளவும் ஆற்றல் பெறமாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைத்தாலும் உங்கள்
அழைப்பை அவர்கள் செவியேற்கமாட்டார்கள். அவர்கள் செவியேற்றாலும் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள். மறுமை நாளில் உங்களின் இணைவைப்பை அவர்கள் நிராகரித்தும் விடுவார்கள்”
(35:13,14)

இந்த திருமறை வசனத்தின் மூலம் மரணித்த மக்களாக இருந்தாலும் சரி அல்லது சிலைகள், மரங்கள், கற்கள் எதுவாகயிருந்தாலும் நாம் கேட்கின்ற பிரார்த்தனைகளை கேட்கமாட்டார்களென்றும் அப்படி ஒரு வாதத்துக்கு அவர்கள் கேட்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கேட்கின்ற பிரார்த்தனைக்கு பதிலளிக்கவேமாட்டார்கள் என்று ஆணித்தரமாகவே கூறப்பட்டுள்ளது.

இறுதியாக, கப்றுகளை வணங்குபவர்கள் கூறக்கூடிய காரணம்தான் நாம் அல்லாஹ்வைத்தான் வணங்குகின்றோம். என்றாலும் இந்தக் கப்ரில் இருப்பவர்கள் எங்களை மறுமையில் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைப்பார்கள் என்று ஒரு இடைத்தரகராகவே வைத்திருக்கிறோம் என்கிறனர். இதே கூற்றைத்தான் அன்றைக்கு நபியவர்களை வெறுத்த அந்தக் குறைஷிக் காபிர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்

“எவர்கள் அவனையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களோ அவர்கள், இவர்கள் அல்லாஹ்விடம் எமக்கு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தி வைப்பதற்காக நாம் இவர்களை வணங்குகின்றோம் (என்று கூறுவார்கள்)”
(39:03)

அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களை இணைத்த அக்காபிர்கள் முஸ்லிம் பெயர்களை வைத்தவர்களாக இருந்திருந்தாலும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாக இருந்தார்கள். எனவே சிலையை வணங்குவது எப்படி இணைவைப்பாக இருக்கின்றதோ அப்படியே கப்றை வணங்கி அதனிடம் தன்னுடைய தேவையை முன்வைப்பதும் இணைவைப்பாக இருக்கின்றது.

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைத்தலை மன்னிக்கவேமாட்டான். அது தவிர ஏனையவற்றை தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான் நிச்சயமாக எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவன் பெரும் பாவத்தையே இட்டுக்கட்டி விட்டான்”
(04:48)

எனவே அற்ப உலகுக்காக மறுமையை பாழ்படுத்தாமல் இணைவைப்பை ஏற்படுத்தக் கூடிய காரியங்களிலிருந்து தவிர்ந்து வாழ்வோமாக.

Check Also

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்

بسم الله الرحمن الرحيم முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா? முஹர்ரம் மாதம் பிறக்கும்போது சில முஸ்லிம்கள் …

Leave a Reply