Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 2

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 2

 
 
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ﴿٢﴾
 
 
 (உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும்,  வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன், மன்னிப்பவன்.) அல்முல்க் (67:2)   
 
விளக்கம்: அல்லாஹ்,  மனிதர்களில் யார் நல்லமல் புரிவார்கள் என்பதைப் பரீட்சிப்பதற்காக படைப்பினங்களை இல்லாமையிலிருந்து படைத்தான் என்பதாகும்.
 
அல்லாஹ் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான் என்பதற்கு அறிஞர்கள் பலவிதமான விளக்கங்களைக் கூறியிருக்கிறார்கள்.
 
1.            மரணத்தையும் வாழ்வையும் படைத்து இவ்வுலகத்தை வாழ்வுக்குரியதாகவும் மேலும் அழிவுக்குரியதாகவும் ஆக்கியுள்ளான். ஆகையால் தான் அவன் நாடியவர்களை குறிப்பிட்ட காலம் வரை வாழச்செய்கிறான்,  நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான்.
 
2.            அவன் உங்களை வாழ்விற்காகவும்,  மரணத்திற்காகவும் படைத்திருக்கிறான்.
 
3.            மரணம் என்பது இவ்வுலகில் மரணிப்பதாகும். வாழ்வு என்பது மறுமை வாழ்வாகும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
(இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக்கூடாதா?) அல் அன்கபூத் (29:64).
 
4.            இல்லாமையிலிருந்து படைப்பினங்களைப் படைத்தான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
(அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான் பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!) அல் பகரா (2:28).
            
             வாழ்வை விட அல்லாஹ் மரணத்தை முற்படுத்தியதற்கான காரணத்தை சில அறிஞர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்:
 
1.            மரணம் பழமையானது. அதனால் தான் அல்லாஹ் அதனை முற்படுத்தியுள்ளான். காரணம் அனைத்து வஸ்துக்களும் இல்லாமையிலிருந்தவை. அதனால் மரணத்தின் சட்டத்தில் அடங்குகின்றன.
 
உதாரணமாக: இந்திரியத் துளி, மண் போன்றவை.
 
2.            மரணத்தை ஞாபகமூட்டுவதன் மூலம் அமல் செய்வதற்கு ஆர்வம் ஏற்படும்.
 
3.            மரணம் என்பதைக்கொண்டு நாடப்படுவது இந்திரியம், இரத்தக்கட்டி, சதைப்பிண்டம் ஆகியவையாகும். இவை அனைத்தும் மனிதன் உருவாகமுன் உயிரற்றுக்கிடந்தவை. (அல்லாஹ்வே நன்கறிந்தவன்)
 
(உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக)
 
அல்லாஹ் இவ்விடத்தில் அதிகம் அமல் செய்பவர் யார் என்று சோதிப்பதற்காக” என்று கூறவில்லை. அதற்குரிய காரணம், அமல்கள் அதிகம் செய்வதென்பது முக்கியமல்ல. மாறாக செய்யப்படும் அமல் சொற்பமாக இருந்தாலும் சீராக, சிறப்பாக, முகஸ்துதியின்றி செய்ய வேண்டுமென்பதை நாடுகிறான். சிறந்ததென கூறுவதாயின் அல்குர்ஆன், அல்ஹதீஸூக்கு உட்பட்டதாகவும்,  மனத்தூய்மையுடனும் அமைந்திருக்க வேண்டும்.
 
(அவன் மிகைத்தவன், மன்னிப்பவன்.)
 
அவன் நாடியதைச் செய்வான், நாடிய பிரகாரம் தீர்ப்பு வழங்குவான். அவன் நாடியதைத் தடுப்பதற்கு யாரும்கிடையாது. அவ்வாறிருந்தும், யார் பாவமன்னிப்புக் கோறுகிறாரோ அவரை அல்லாஹ் மன்னிக்கின்றான்.
தொடரும்……

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply