Home / Non Muslim program / கேள்வி எண் 18. மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

கேள்வி எண் 18. மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

கேள்வி எண் 18.

மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

பதில்:

  1. மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

அறிவியல் அறிவும் – தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் எப்படி இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.

  1. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.

அருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாஹிர் நாயக் ஆங்கிலத்தில் எழுதி வெளியாகியுள்ள’ ”Quran and Modern Science Compatible Or Incompatilble” என்ற புத்தகத்தை படியுங்கள். குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்அனைத்தும் சரியானதுதான் என்று கண்டறியப்படும் அளவிற்கு, அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம்உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு – அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் – ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகளும் முற்றிலும், அதாவது 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் – எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்கரீதி விதியின்படி குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் – சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே பகுத்தறிவு ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதே.

  1. மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இல்லாமல், மனித நலம் மற்றும் மனித அமைதி போன்றகருத்துக்களை கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.

சமுதாயத்தைக் கொள்ளையடிப்பது நல்லதா? கெட்டதா? என்று கேட்டால் சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதன் சமுதாயத்தைக் கொள்ளையடிப்பது கெட்டது என்றே பதிலளிப்பான். சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க, பலம் மிகுந்த ஒரு சமுதாய கொள்ளைக்காரனுக்கு சமுதாயத்தைக் கொள்ளையடிப்பது தவறானது என்று ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் எவ்வாறு உணர்த்த முடியும்?

உதாரணத்திற்கு நான் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த – பலசாலியான ஒரு கொள்ளைக் காரன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் நான் மிகுந்த அறிவுடைய ஒரு தர்க்கவாதியும் கூட. கொள்ளை அடிப்பது சரியானதுதான் என்று நான் சொல்கிறேன். ஏனெனில்கொள்ளையடிப்பதால் சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எனவே கொள்ளையடிப்பது எனக்கு நல்லது என்று நான் சொல்கிறேன்.

கொள்ளையடிப்பது சரியானது அல்ல என்று யாராவது என்னிடம் தர்க்க ரீதியாக வாதிட முயலுவார்கள் எனில் அவர்களின் வாதத்தை என்னால் உடனடியாக முறியடிக்க முடியும். கொள்ளையடிப்பது சரியானது அல்ல என்று என்னிடம் வாதிட முற்பட்டவர்கள் வைத்த வாதங்கள் பின்வருமாறு.

  1. a. திருடுபவன் கஷ்டங்களை அனுபவிப்பான்.:

யார் திருடுகிறானோ, அவன் கஷ்டங்களை அனுபவிப்பான் என்று சிலர் வாதிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் வேண்டுமெனில் கஷ்டங்களை அனுபவிப்பார்களேத் தவிர, திருடியவர் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. திருடியவன் நல்லதையே அனுபவிப்பான். ஆயிரம் டாலர்களை திருடிய ஒருவன், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர உணவு உண்ணலாம்.

  1. நீ திருடினால், உன்னிடம் வேறு எவராவது திருடுவார்கள்.

நீ யாரிடமாவது திருடினால், உன்னிடமிருந்து வேறு எவராவது திருடுவார்கள் என்று சிலர் வாதிடுவார்கள். என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் படைத்த திருடன். தவிர என்னைப் பாதுகாக்கவென்று பல அடியாட்களை நான் வைத்திருக்கிறேன். நான் வேறு எவரிடமிருந்தும் திருட முடியுமேத் தவிர, என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் பொருந்திய திருடன். திருடுவது ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டுமெனில் கஷ்டமான வேலையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற படைபலம், பணபலம் உள்ள ஒருவனுக்கு திருடுவது எளிதானது.

  1. c. திருடினால் காவல் துறை கைது செய்யும்.

திருடினால் காவல் துறை கைது செய்யும் என்று சிலர் வாதிடலாம். நான் திருடினாலும் காவல் துறை என்னை கைது செய்ய முடியாத அளவுக்கு நான் காவல் துறையினரை விலைக்கு வாங்கியிருக்கிறேன். மந்திரிகளை கூட நான் விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு எனக்கு பணபலம் உண்டு. ஒரு சாதாரண மனிதன் திருடினால் அவனை காவல் துறை கைது செய்யும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நானோ காவல் துறை கூட கைது செய்ய முடியாத அளவிற்கு படைபலமும், பணபலமும் உள்ளவன். எனவே நான் திருடினால் என்னை காவல் துறை கைது செய்யாத அளவிற்கு நான் ஒரு பலம் பொருந்திய குற்றவாளி.

  1. d. திருடுவதன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.

திருடுவதன் மூலம் எளிதாக பணம் கிடைக்கிறது. பணம் கிடைக்க அதிகமாக கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடலாம். திருடுவதால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பணம் எளிதாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்தால்தான் நான் திருடுகிறேன். ஒரு மனிதன் எளிதான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம். கடினமான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்திசாலியான மனிதன் எளிதான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுப்பான்.

  1. e. திருடுவது மனிதத் தன்மைக்கு எதிரானது.

திருடுவது மனித குலத்திற்கு எதிரானது. ஓரு மனிதன் மற்ற மனிதர்களின் நலத்தைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என சிலர் வாதிடலாம். இவ்வாறு வாதிடுபவர்களைப் பார்த்து நான் சில கேள்விகளை கேட்கிறேன். ”மனிதத் தன்மை’ என்கிற சட்டத்தை எழுதி வைத்தது யார்?. நான் எதற்காக அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்?.

மனிதத் தன்மை என்கிற சட்டம் – உணர்வு பூர்வமான மனிதர்களுக்கு வேண்டுமெனில் சரியானதாகத் தெரியலாம். ஆனால் நான் ஒரு தர்க்க ரீதியான, சுயநலம் கொண்ட மனிதன். பிறருடைய நலம் பேணுவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே மனிதத் தன்மை என்பது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டேயல்ல.

  1. f. திருடுவது சுயநலம்.

திருடுவது சுயநலம் என்று சிலர் வாதிடலாம். திருடுவது சயநலம் என்பது நூறு சதவீதம் உண்மையானதுதான். திருடுவதால் நான் எனது வாழ்க்கையை கஷ்டமின்றி சுகமாக அனுபவிக்கலாம் என்கிற சூழ்நிலையில், நான் ஏன் ஒரு சுயநலவாதியாக இருக்கக் கூடாது?.

திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது.

இவ்வாறு திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது. மேற்காணும் தர்க்க ரீதியான வாதங்கள் யாவும் சாதாரண மனிதர்களை வேண்டுமானால் திருப்தி கொள்ள வைக்கலாம். ஆனால் மேற்படி தர்க்க ரீதியான வாதங்கள் சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளை திருப்தி படுத்த முடியாது. மேற்கூறப்பட்ட வாதங்கள் எதுவும் சரியான காரண காரியங்களுடன் நிரூபிக்கப்பட முடியாத வாதங்கள் ஆகும். எனவேதான் தற்போது உலகம் முழுவதும் எண்ணற்ற குற்றவாளிகள் இருக்கின்றனர்.

இவ்வாறுதான் சமுதாயத்தில் மலிந்து போய்க் கிடக்கும் இன்னபிற குற்றங்களான வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்றவையும் சரியானது அல்ல என்று சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு முன்பு தர்க்க ரீதியாக நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகும்.

  1. ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த குற்றவாளியை, அவன் செய்வது குற்றம் என்று எளிதாக நம்ப வைக்க முடியும்.

இப்போது நாம் இடம் மாறிக் கொள்வோம். நீங்கள் உலகத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி என்று வைத்துக் கொள்வோம். உங்களது கட்டளைக்கு அடிபணிய ஆட்களும், அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தவிர உங்களை பாதுகாப்பதற்கு தனியாக ஒரு கூலிப்படையும் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று – நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் – என்னால் நிரூபிக்க முடியும்.

திருடுவது குற்றம் என்பது பற்றி – ஒரு குற்றவாளியின் முன்பு – நாம் மேலே விவரித்துள்ள விவாதங்களை எடுத்து வைக்கும்போது – அந்த குற்றவாளி திருடுவது குற்றம் அல்ல என்று மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாதாடினாலும் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா

தீயச் செயல்களும் தவறு என்று – நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் – என்னால் நிரூபிக்க முடியும்.

சமுதாயத்தில் சக்தி மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி – அவன் செய்யும் குற்றங்கள் எதுவுமே குற்றமல்ல என்று தர்க்க ரீதியாக செய்யும் விவாதங்கள் யாவும் உண்மை நான்

ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா

தீயச் செயல்களும் தவறு என்று – நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் – என்னால் நிரூபிக்க

முடியும்.

  1. எல்லா மனிதர்களும் நீதி நிலை நிறுத்தப்படுவதை விரும்புகிறவர்களே!

எல்லா மனிதர்களும் நீதி நிலை நிலை நிறுத்தப்படுவதை விரும்புவார்கள். பிறருக்கு நீதி கிடைப்பதை வெறுப்பவர்களாக இருந்தாலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விரும்புபவர்களாத்தான் இருப்பார்கள். சிலபேர் பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதை தலைக்கேறியவர்களாக – பிறரை துன்புறுத்தவும் – அநியாயம் இளைக்கவும் துணிந்து விடுவார்கள். பதவியும், செல்வாக்கும் கொண்டவர்கள் – அதன் பலத்தைக் கொண்டு பிறருக்கு அநியாயம் செய்ய முனைவதோடு – மேற்படி பதவியும் – செல்வாக்கும் – தங்களுக்கு பிறர் அநியாயம் செய்வதை தடுக்கும் என்றும் கருதுகிறார்கள். பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார   போதையை கையில் வைத்திருப்பவர்கள் கூட – தங்களுக்கு ஒரு அநியாயம் இளைக்கப்படும் போது – நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

  1. இறைவன் மிக்க நீதியும், வல்லமையும் கொண்டவன்.

நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் குற்றவாளிக்கு முதலில் – இறைவன் இருக்கின்றான் என்பதை தெளிவாக்குவேன். (இறைவன் இருக்கின்றான் என்பதை எப்படி தெளிவாக்குவது என்ற கேள்விக்கான விடையை பாருங்கள்) இறைவன் எல்லோரையும்விட வல்லமை மிக்கவன். இறைவன் நீதியும் நேர்மையும் உடையவன் என்பதையும் அந்த குற்றவாளிக்கு தெளிவாக்குவேன். அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நிஷாவின் 40வது வசனம் கூறும் ‘ ‘நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்’ என்கிற வார்த்தைகளை எடுத்துரைப்பேன்.

  1. இறைவன், என்னை தண்டிக்கவில்லை. ஏன்?

அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், அருள்மறை குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை உணர்ந்து, இறைவன் இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொண்ட குற்றவாளி, இத்தனை வல்லமையும், நீதியையும் கொண்ட இறைவன் தன்னை ஏன் தண்டிக்கவில்லை என்று வாதம் செய்யலாம்.

  1. யாரெல்லாம் அநியாயம் செய்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

பணபலம், மற்றும் சமுதாய செல்வாக்கு இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, யாரெல்லாம் அநியாயம் செய்யப்பட்டார்களோ அவர்கள் – தங்களுக்கு குற்றம் இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்கள். வல்லுறவு கொண்டவர்களுக்கும், திருடியவர்களுக்கும் சரியான ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எல்லா சாதாரண மனிதர்களும் எண்ணுவது இயல்பு. இவ்வுலகில் ஏராளமான குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டாலும், பலர் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதை பார்க்கிறோம். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக, ஆடம்பரமாக தொல்லையற்ற நிம்மதியோடு இவ்வுலகில் வாழ்வதை நாம் காண்கிறோம். பணபலமும், செல்வாக்கும் நிறைந்த ஒருவருக்கு, அவரைவிட அதிக பணபலமும், அதிக செல்வாக்கும் பெற்ற ஒருவரால் அநியாயம் செய்யப்படும்போது, தனக்கு அநியாயம் செய்தவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்.

  1. இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வு.

இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வுதான் என்பதை அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஏழாவது அத்தியாயம் ஸுரத்துல் முல்க்கின் 02வது வசனம் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றது.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக்க மன்னிப்பவன்.

  1. இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது.

இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது என்பதை பற்றி அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் – ஸுரத்துல் ஆல இம்ரானின் 185வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (அல்-குர்ஆன் 3 : 185).

இறுதித் தீர்ப்பு மறுமை நாளில்தான் வழங்கப்படும் என்பதை மேலே சொல்லப்பட்ட அருள்மறை வசனத்தின் மூலம் நாம் அறியலாம். ஒரு மனிதன் இறந்த பிறகு – அவன் மீண்டும் உயிர்பிக்கப்படுவான். ஒரு மனிதன் தான் செய்த தவறுக்காக இவ்வுலகில் கொஞ்சமாக தண்டிக்கப்படலாம். அல்லது தண்டிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவன் செய்த தவறுக்குமுழு தண்டணையும் மறுமைநாளில்தான். வல்லறவு குற்றத்தில் ஈடுபட்டவனையோ அல்லது திருடனையோ இறைவன் இவ்வுகத்தில் தண்டிக்காமல் விட்டு விடலாம். ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மறுமை நாளில் பதில் சொல்லியேத் தீர வேண்டும். மறுமைநாளில் அதாவது மரணித்தபின் உள்ள வாழ்க்கையில் அவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.

  1. நாஜி கொடுங்கோலன் ஹிட்லருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?.

அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற சம்பவம் நாஜி கொடுங்கோலன் ஹிட்லர் ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காவல்துறையினர் ஹிட்லரை கைது பண்ணி சட்டத்தின் முன்பு நிறுத்தியிருந்தால் – மனிதனால் இயற்றப்பட்ட சட்டம், அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற ஹிட்லருக்கு என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?. சட்டத்தின் மிகக் கூடுதல் தண்டனையான மரண தண்டனையை வழங்கியிருக்க கூடும். ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன?.

10. அல்லாஹ் – ஹிட்லரை – அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை பெற்றவன்:

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் பொதெல்லாம், அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான். (அத்தியாயம் 4 ஸூரத்துன்னிஸா – 56வது வசனம்) அல்லாஹ் – அவன் நாடினால் – ஹிட்லரை – அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை கொண்டவன்.

11. மறுமை நம்பிக்கை இல்லாமல் மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே இல்லை.

மறுமை வாழ்க்கை அதாவது மனிதனின் இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடும். அநியாயம் செய்பவர்கள் – குறிப்பாக பணபலமும், படை பலமும், சமூகத்தில் செல்வாக்கும் பெற்றவர்கள் அநியாயம் செய்யும் போது – மறுமை வாழ்க்கைஎன்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடக் கூடும். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் – இறப்புக்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என்கிற மறுமை நம்பிக்கை அவசியம்.

Check Also

அன்பும் அறமும்

அல் ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற சகோதரத்துவ சங்கம் நிகழ்ச்சி அன்பும் அறமும் Subscribe …

Leave a Reply