Home / கட்டுரை / கட்டுரைகள் / தஃவாவின் முறையான அணுகுமுறை – இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

தஃவாவின் முறையான அணுகுமுறை – இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை.

ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை ஏவும் உரிமை எமக்கில்லை.

ஒருவர் ஒரு செயலை நல்லது என எண்ணி செய்து வருகின்றார். அதை மார்க்கம் செய்யவும், செய்யாமல் விடவும் அனுமதித்திருக்கின்றது என்றால், இவர் தனக்குத்தானே விதித்துக் கொண்டதை அடுத்தவர்களுக்கு ஏவ முடியாது. தனக்கு மாற்றமாக செயல்படுபவர்களை எதிர்க்கவும் முடியாது.

உதாரணமாக, ஒரு அமைப்பு வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி பெறுவதில்லை என முடிவு செய்துள்ளது. இப்படி முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அடுத்த அமைப்புக்களும் அப்படித்தான் இயங்க வேண்டும் என்று ஏவ முடியாது! எடுப்பவர்களை எதிர்க்க முடியாது. தாமாக தமக்கு உருவாக்கிக் கொண்ட சட்டத்தை அடுத்தவர்களுக்கு ஏவினால் மாற்று நிலைப்பாட்டில் இருப்பவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தால் தமது சுய முடிவை மார்க்கமாக்குகின்றார்கள்; தமது முடிவை அல்லாஹ்வின் முடிவுக்கு எதிராக முதுன்மைப் படுத்துகின்றனர் என்பது அர்த்தமாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி பெறுவதை மார்க்கம் தடுக்காத போது அதைத் தடுக்கும் உரிமையை இவர்களுக்குக் கொடுத்தது யார்?

இஸ்லாத்தின் இந்த வரையறையைத் தெரியாமல் எமது தலைவர் தடுத்துவிட்டால், அதை நீங்களும் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டில் செயற்படுவது அந்தத் தலைவரைக் கடவுளாக எடுப்பதற்கு சமனானதாகும்.

‘அவர்கள் அல்லாஹ்வை அன்றி, தங்களது மத குருக்களையும், தங்களது துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். ஒரே கடவுளை வணங்குமாறே அவர்கள் ஏவப்பட்டனர். அவனைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறுயாரும் இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவன்.”
(9:31)

கிறிஸ்தவர்கள் மதகுருக்களை எப்படி கடவுளாக எடுத்துக் கொண்டனர் என்பதற்கு நபியவர்கள் விளக்கமளிக்கும் போது, ‘அல்லாஹ் ஹலாலாக்கியதை உங்கள் மதகுருக்கள் ஹராமாக்கினர். நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்கள். அல்லாஹ் ஹராமாக்கியதை உங்கள் மதகுருக்கள் ஹலாலாக்கினர். நீங்களும் அதை ஹலாலாக எடுத்துக் கொண்டீர்கள். இதுதான் உங்கள் குருக்களுக்கு நீங்கள் செலுத்திய வணக்கமாகும்.” என விளக்கமளித்தார்கள்.

அல்லாஹ் வெளிநாட்டு நிதியை ஹலாலாக்கியுள்ள போது அதை தமது தலைவர் தடுத்துவிட்டார். எனவே, வெளிநாட்டு நிதியை ஹராத்தைப் போல் எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோம், கேவலப்படுத்துவோம், அசிங்கப் படுத்துவோம், அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவோம்… என்ற பாணியில் செயற்படுவது, குறித்த தலைவரை கடவுளாக எடுத்துக் கொள்வதற்கு ஒப்பான செயற்பாடாகும்.

இதே போன்று இஸ்லாம் தீமையைத் தடுக்குமாறு கூறுகின்றது. ஒரு செயல் ‘முன்கர்” பாவமானது என்பதையும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் தான் தீர்மானிக்க வேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் தீமை என்பது உறுதியானால்தான் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இஸ்லாம் மதுபானத்தைத் தடை செய்ய முன்னர் நபித்தோழர்களில் பலரும் அதைக் குடித்து வந்தனர். நபியவர்கள் அதைத் தடை செய்யவில்லை. இது பாவமானது என்பதை பகுத்தறிவை வைத்துப் புரிந்து கொள்ளலாம். நபித்தோழர்களில் சிலரும் இது தடுக்கப்பட வேண்டும் என விரும்பினர். இருப்பினும் நபியவர்கள் மதுவை சுயமாகத் தடுக்கவில்லை. அது பற்றிய இறுதி முடிவு அல்லாஹ்விடமிருந்து வந்த பின்னர்தான் தடுத்தார்கள்.

எனவே, நாம் தடுக்கும் செயல் தீயதாக இருக்க வேண்டும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தீயது ‘முன்கர்” என்பது உறுதியாகாத செயல்களைத் தடுக்கும் உரிமை எமக்கில்லை. ஒருவர் சுயமாக வேண்டுமானால் தவிர்ந்து கொள்ளலாம். அடுத்தவர்களை பலவந்தமாகத் தடுக்க முடியாது.

இந்த அடிப்படையில் மார்க்கத்தில் சில விடயங்கள் இருக்கலாம். ஒரு கோணத்தில் பார்க்கும் போது ஒரு கருத்து சரியாகத் தென்படலாம். மறுகோணத்தில் பார்க்கும் போது மற்றக் கருத்து சரியாகத் தென்படலாம். இரண்டு கருத்தும் ஆதாரத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வித்தியாசத்தால் ஏற்பட்டிருக்கும். இரு சாராரும் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே செயற் பட்டிருப்பார்கள். ஆனால், முடிவு முரண்பட்டதாக இருக்கும். இந்த நிலையில் இரு கருத்தில் எதனையும் ‘முன்கரானது” தீமையானது என்றோ, பாத்திலானது என்றோ கூற முடியாதிருக்கலாம். இது போன்ற விடயங்களை இஜ்திஹாதுக்குரிய விடயங்களாக நாம் பார்க்கின்றோம். இது போன்ற விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

இப்னு உமர்(வ) அறிவித்தார். ‘அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி(ச) அவர்கள் ‘பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள். வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். ‘பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும் வரை நாம் அஸர் தொழ வேண்டியதில்லை” என்று சிலர் கூறினர். வேறு சிலர் ‘இந்த அர்த்தத்தில் நபி(ச) அவர்கள் கூறவில்லை. எனவே நாம் தொழுவோம்’ என்றனர். இந்த விஷயம் நபி(ச) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி(ச) அவர்கள் குறை கூறவில்லை.” (புஹாரி: 946)

நபி(ச) அவர்களின் ஒரு கூற்றைப் புரிந்து கொள்வதில் இரு கருத்து வந்த போது அந்த இரு கருத்துடையவர்களில் எவரையும் நபியவர்கள் கண்டிக்கவில்லை. எனவே, இஜ்திஹாதுடைய விடயங்களில் ஒருவர் தனது கருத்தைப் பின் பற்றலாம். ஆனால், மாற்றுக் கருத்துடையவரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய முடியாது. அது நபிவழிக்கு முரணானதாகும். இதையே ‘லா இன்கார பீ மஸாயிலில் இஜ்திஹாதீயா” இஜ்திஹாதுடைய விடயங்களில் இன்கார் – மறுப்பு எதிர்ப்பிரச்சாரம் இல்லை என்று கூறுவர்.

இந்த நிலையில் நோக்கும் போது ரமழானுடைய பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதில் நியாயமான கருத்து வேறுபாடு நிலவுகின்றது. பிறையைக் கண்டு நோன்பு பிடிக்குமாறும் பிறையைக் கண்டு நோன்பை விடுமாறும் மேக மூட்டம் காரணமாக பிறை தென்படாவிட்டால் மாதத்தை முப்பதாகத் தீர்மானிக்குமாறும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் பிறையைக் கண்டு நோன்பு பிடிக்க வேண்டும். பிறையைக் கண்டு நோன்பை விட வேண்டும் என்பதில் அதிகமானோர் ஏகோபித்த முடிவில் உள்ளனர். உலகில் பிறை எங்கு தென்பட்டாலும் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டுமா அல்லது அவரவர் பகுதியில் பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தேசிய பிறையா? சர்வதேச பிறையா? என்ற இந்தக் கருத்து வேறுபாட்டை இஜ்திஹாதுடைய மஸ்அலாவாகவே அறிஞர்கள் பார்க்கின்றனர். அப்படியாயின் இதில் மாற்றுக் கருத்துடையவர் களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய முடியாது.

இந்த ஒழுங்கு இலங்கை தவ்ஹீத் தஃவா களத்தில் பேணப்படாததினால் தவ்ஹீத் அமைப்புக்கள் இரண்டாகப் பிளவுபட்டன. இதில் ஒரு சாரார் மற்ற சாராரை எதிர்த்து விமர்சித்துப் பிரச்சாரம் செய்ததினால் மனக்கசப்புக்கள் வளர்ந்தன, உறவுகள் முறிந்தன. எனவே, தஃவாவின் முறையான அணுகுமுறை என்ன என்பது பற்றிய தெளிவு அவசியமாக உள்ளது.

இஜ்திஹாதுடைய மஸ்அலாக்களில் ஒன்று சரியாகவும் மற்றையது பிழையாகவும்தான் இருக்கும். ஆனால், இரண்டில் எதையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய முடியாது. பிழைக்கும் ஒரு கூலி உண்டு என அல்லாஹ்வின் தூதர் கூறும் போது, ஒரு சரிக்குரிய செயலைக் கண்டித்துப் பிரச்சாரம் செய்ய முடியாது. எமது பார்வையில் இரண்டு கூலிக்குரிய செயலின் பக்கம் மக்களை வழிநடாத்த முற்படலாம். இதன் போதும் சில அடிப்படைகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இஜ்திஹாதுடைய மஸ்அலாக்களில் எதிர்ப் பிரச்சாரம் இல்லை. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நஸீஹத் செய்து கொள்ளலாம். இதைச் செய்வதால் இன்னின்ன நன்மைகள் உள்ளன. விடுவதால் இன்னின்ன பாதிப்புக்கள் உள்ளன. இதில் எதைச் செயற்படுத்துவது? தஃவாவுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்ற தோரணையில் இலாப நஷ்டங்களை அலசிப் பார்க்கலாம். ஆனால், எதிர்ப் பிரச்சாரத்தைத் தவிர்க்க வேண்டும்.

இஜ்திஹாதுடைய விடயங்களில் மாற்றுக் கருத்துடையோர்களில் சிலர் ஆலிம்களாக இருப்பார்கள். ஆலிம்களிடம் அவர்களது கருத்துக்கு எதிராக அவர்களுடன் இன்கார் – மறுப்புச் சொல்லக் கூடாது! ஆனால், ஆதாரங்களை அறியாத பொதுமக்கள் முகல்லிதாக இருந்தால் அவனின் கருத்துக்கு மறுப்புச் சொல்லலாம் என்ற விதியை அறிஞர்கள் பின்பற்றியுள்ளனர்.

நரித்தோலில் தொழுவது பற்றி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘(பதனிட்ட தோல் பரிசுத்தமானது என்ற) ஆதாரங்களின் அடிப்படையில் தொழுபவராக இருந்தால் பிரச்சினையில்லை. மார்க்க அறிவு இல்லாதவராக இருந்தால் இதில் தொழ வேண்டாம் என தடுக்கப்படுவார்” எனப் பதிலளித்தார்கள்.

ஆதாரத்தை விளங்கி ஒருவர் செயற்பட்டு வரும் போது அவரிடம் அதைத் தடுக்க முற்படுவது தேவையற்ற விரிசல்களை ஏற்படுத்தலாம். எனவே, அறிஞர்கள் இந்த அணுகுமுறையைக் கையாண்டுள்ளனர் என்பதைப் புரிய முடிகின்றது,

அறிஞர்களிடம் மறுப்புப் பிரச்சாரம்தான் செய்யக் கூடாது. ஆனால், அறிஞர்கள் உறுதியான ஒருமித்த கருத்துக்கு வருவதற் காகவும் கருத்துப் பரிமாற்றம் செய்யலாம். ஆனால், அந்தக் கருத்துப் பரிமாற்றம் பித்னாவையோ, இதைவிடப் பெரிய தீங்கையோ ஏற்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது. அதே போன்று அதில் காட்டும் ஈடுபாடு மார்க்கத்தினதும், சமூகத்தினதும் இதைவிடப் பெரிய விடயங்களில் பொடுபோக்கை எற்படுத்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது.

இஸ்லாமிய காயிதாக்கள் வரையறை களுக்கு ஏற்ப முடிந்தவரை கருத்து வேறுபாட்டை விட்டும் கழன்று வருவதற்கான வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கருத்து வேறுபாட்டை வளர்த்து அதைக் கருத்து முரண்பாடாக மாற்றும் நிலைக்குச் சென்று விடக் கூடாது என்பதில் கவனம் தேவை. இஜ்திஹாதுடைய மஸ்அலாக் களை பிரிவுக்கும், பிளவுக்கும் பகைமைக்குமுரிய காரணமாக மாற்றிவிடாதிருப்பதில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

மாற்றுக் கருத்தில் இருப்பவர்களின் நியாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நட்பு ரீதியான கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும். கருத்துப் பரிமாற்றம் விவாதமாக மாறாதிருப்பதிலும் ஒருவர் மற்றவரைப் பகைவராகப் பார்க்காத விதத்திலும் அமைதல் வேண்டும். இது போன்ற ஒழுங்குகளைக் கைக் கொண்டால் தஃவாக் களத்தில் பல பிரச்சினை களுக்குத் தீர்வு கிட்டலாம்.

எனவே, நம்மை ரமழான் எதிர் நோக்குகின்றது. ரமழான் நோன்பு மற்றும் பெருநாள் பிறை விடயத்தில் நிதானமான போக்கைக் கைக்கொள்ள நாம் முயல வேண்டும். இஜ்திஹாதுடைய மஸ்அலாவை அடிப்படையாக வைத்து சமூகத்தையும் தவ்ஹீத் சகோதரர் களையும் பிரித்துப் பகைமையை எற்படுத்தும் நிலைக்கு நாம் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருத்தல் அவசியமாகும். மார்க்கத்தின் அடிப்படையில் ‘முன்கர்” தீமை என்பது உறுதிப்படாத போது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதை தவிர்த்தல் அவசியமாகும்.

இஜ்திஹாதுடைய மஸ்அலாவில் இன்கார் – எதிர்ப்பிரச்சாரம் இல்லை என்ற இந்த அடிப்படையைப் புரிந்து அதற்கேற்ப எமது தஃவாவை அமைத்துக் கொள்ள முயல்வோமாக!

Check Also

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி ஜித்தா தஃவா சென்டர் ஹை அஸ்ஸலாமா சவூதி அரேபியா …

Leave a Reply