Home / FIQH / நபி வழியில் வுழூச் செய்வோம்!

நபி வழியில் வுழூச் செய்வோம்!

_அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள்.

இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதுபற்றி தெரிவித்திருக்கின்றார்கள். எவ்வாறு வுழூச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இன்னும், வுழூச் செய்கின்றவர்களுக்கு அதிகமான சிறப்புக்கள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, சரியான முறையில் எவ்வாறு வுழூச் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது எம்மனைவரின் மீதும் கடமையாகும். ஏனென்றால் தொழுகை அனைவரின் மீதும் கடமையாகும். அல்லாஹுத்தஆலா வுழூவின்றி எத்தொழுகையையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்களது முகங்களையும் முழங்கை வரைக்கும் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள். இன்னும், உங்கள் தலையை தடவிக்கொள்ளுங்கள். கரண்டை வரைக்கும் உங்கள் கால்களையும் கழுவிக்கொள்ளுங்கள்.

– அல்மாஇதா: 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வுழூ முறிந்து வுழூச் செய்யும் வரை உங்களில் ஒருவருடைய தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

– புஹாரீ, முஸ்லிம்

ஆகவே, தொழமுன் வுழூச் செய்வது அவசியமாகும். எங்கள் அனைவர் மீதும் வுழூவைக் கற்றுக்கொள்வது கடமையாகும். எமது முன்னோர்களாகிய ஸலபுகள் வுழூவைப்பற்றிக் கற்றுக்கொள்வதிலும் அதனைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும் ஆசையுள்ளவர்களாகக் காணப்பட்டார்கள்.

அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழூ செய்துவிட்டு தன்னைச் சூழ இருந்தவர்களைப் பார்த்து: அல்லாஹ்வின் தூதருடைய வுழூவை அறிந்துகொள்வது யாரை சந்தோஷப்படுத்துமோ அதுவே இந்த வுழூவாகும் என்றார்கள்.

– அபூதாவூத்

உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை கழுவிவிட்டு பின்பு தன்னைச் சூழ இருந்தவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரவர்கள் என்னுடைய இந்த வுழூவைப் போன்று வுழூச் செய்வதை நான் கண்டேன் என்றார்கள்.

– புஹாரீ, முஸ்லிம்

மேலும், எங்களுடைய ஸலபுகள் வுழூவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப்பற்றி அதுபற்றி அறிந்தவர்களிடம் அதிகமதிகம் கேட்கக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள். பிறருக்கு அதனைக் கற்றுக்கொடுப்பதிலும் அவர்கள் ஆர்வமாக இருந்திருக்கின்றார்கள்.

சில தாபிஈன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வுழூவைப்பற்றி கேட்டார்கள். அவர் அதனை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

– புஹாரீ, முஸ்லிம்

இதன் மூலம் ஸலபுகள் வுழூவைப்பற்றிக் கற்பதில் எந்தளவு ஆர்வமாக இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

எனவே, இச்சிறு தொகுப்பினூடாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வுழூ எவ்வாறு இருந்தது என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றேன். அல்லாஹ் இதனைக்கொண்டு அனைத்து முஸ்லிம்களுக்கும் பிரயோசனமடையச் செய்வானாக. இதனை அறிந்து கொள்பவர்கள் மீது பிறருக்கு இதனை எத்திவைப்பது கடமையான ஒன்றாகும். அல்லாஹ் எங்களுக்கு அருள்புரிவானாக. அவனுக்கே எல்லாப் புகழும்.

வுழூ என்ற வார்த்தையின் கருத்து

அரபு மொழியில் வுழூ என்றால் சுத்தம், அழகு என்று பொருள்படுகின்றது. மார்க்க அடிப்படையில் வுழூ என்றால் சுத்தமான நீரைக்கொண்டு உடம்பில் உள்ள குறிப்பிடப்பட்ட சில உறுப்பக்களை குறிப்பிடப்பட்ட ஒரு முறையைக்கொண்டு கழுவுவதாகும்.

வுழூவின் சிறப்புக்கள்

வுழூச் செய்கின்ற விடயத்தில் அதிகமான சிறப்புக்கள் ஆதாரபூர்வமான செய்திகளில் வந்திருக்கின்றன. அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. சுத்தமானவர்களை அல்லாஹ் விரும்புகின்றான்.

வுழூ என்பது ஒரு சுத்தமான காரியமாகும். எனவே, வுழூச் செய்பவர்களை அல்லாஹ் விரும்புகின்றான் என்பதை பின்வரும் வசனம் எங்களுக்கு தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

தவ்பாச் செய்கின்றவர்களையும் சுத்தமானவர்களையும் அல்லாஹ் விரும்புகின்றான்.

– அல்பகறா: 222

2. வுழூச் செய்வது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என்னுடைய இந்த வுழூவைப்போன்று யார் வுழூச் செய்து பின்பு இரண்டு ரக்அத்களைத் தொழுதால் மேலும், அவர் தொழும் போது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களோடு பேசாவிட்டால் அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

– புஹாரீ, முஸ்லிம்

3. வுழூ மறுமை நாளில் முஸ்லிம்களை அடையாளப்படுத்தக்கூடிய ஒரு செயலாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வுழூவுடைய அடையாளங்களின் காரணமாக ஒளிமயமானவர்களாக உள்ள நிலையில் மறுமை நாளில் என்னுடைய உம்மத்தினர்கள் அழைக்கப்படுவார்கள்.

– புஹாரீ, முஸ்லிம்

4. வுழூச் செய்வது சுவர்க்கத்தைப் பெற்றுத்தரும் ஒரு செயலாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்தால் பின்பு தனது உள்ளத்தாலும் முகத்தாலும் முன்னோக்கியவராக எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவருக்கு சுவர்க்கம் கட்டாயமாகிவிடும்.

– முஸ்லிம்

5. வுழூவுடைய நீர் வெளியேறுவதுடன் பாவங்களும் வெளியேறிவிடுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அடியான் வுழூச் செய்யும்போது தனது முகத்தைக் கழுவினால் அவர் தனது கண்ணால் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீரின் கடைசி சொட்டுடன் வெளியாகிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால் அக்கைகள் தொட்ட அனைத்துப் பாவங்களும் அந்த நீரின் கடைசிச் சொட்டுடன் அனைத்துப் பாவங்களும் வெளியாகிவிடும். அவர் தனது இரு கால்களையும் கழுவினால் அக்கால்கள் எதற்காக நடந்து சென்றனவோ அப்பாவங்கள் அனைத்தும் அந்த நீரின் கடைசிச் சொட்டுடன் வெளியாகிவிடும். இறுதியில் அவர் பாவங்களிலிருந்து சுத்தமாக்கப்பட்டவராக வெளியாகுவார்.

– முஸ்லிம்

வுழூவில் நீரை வீண்விரயம் செய்வது தடைசெய்யப்பட்டதாகும்.

மார்க்கத்தில் வீண்விரயம் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்:

நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண்விரயம் செய்பவர்களை விரும்பமாட்டான்.

– அல்அஃராப்: 31

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு கையளவு நீரினால் குளிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு கையளவு நீரினால் வுழூச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

– புஹாரீ, முஸ்லிம்

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: கடற்கரையோரத்தில் இருந்தாலும் நீரில் வீண்விரயம் செய்வது தடுக்கப்பட்ட ஒன்றாகும் என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒன்றுபட்டுள்ளனர்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வுழூவிலும் வுழூவல்லாத விடயங்களிலும் வீண்விரயம் செய்வது இழிவாக்கப்பட்ட செயல்களில் ஒன்றாகும்.

– ஷரஹு ரியாளிஸ்ஸாலிஹீன்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூச் செய்தார்கள்?

1. வுழூச் செய்ய ஆரம்பிக்கும்போது நிய்யத் வைக்க வேண்டும்.

நிய்யத் என்றால் ஒரு விடயத்தை நாடுவதாகும். மார்க்க அடிப்படையில் நிய்யத் என்றால் அல்லாஹ்வின்பால் நெருங்குவதற்காக வேண்டி ஓர் இபாதத்தை செய்வதற்கு உள்ளம் உறுதிகொள்ளல் ஆகும்.

வுழூச் செய்தவற்கு நிய்யத் வைப்பது அதனுடைய நிபந்தனைகளுள் ஒன்றாகும். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.

– புஹாரீ, முஸ்லிம்

நிய்யத்தை நாவினால் மொழிவது பித்அத்தாகும். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அவர்களுடைய தோழர்களோ நிய்யத்தை நாவினால் மொழியவில்லை. எனவே, அதனை விடுவது அவசியமாகும். நிய்யத்துடைய இடம் உள்ளமாகும்.

2. பின்பு அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும்.

வுழூச் செய்யும்போது பிஸ்மில்லாஹ் கூறாதவருக்கு வுழூ இல்லை என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால், அவைகள் அனைத்தும் பலவீனமானவைகளாகும். சில அறிஞர்கள் இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்புக்களையும் ஒன்று சேர்த்து இந்த ஹதீஸை சரிகண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் பல அறிவிப்புக்களில் இந்த ஹதீஸ் வந்திருக்கின்ற காரணத்தினால் இது சரியான ஹதீஸாக இருக்கின்றது என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

இன்னும் சில அறிஞர்கள் இது குறித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களையும் பலவீனமானவை என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் வுழூச் செய்வதற்கு முன் அல்லாஹ்வின் பெயர் கூறுவது மிகவும் ஏற்றமானதும் நபிவழிக்கு மிக நெருக்கமானதுமாகும். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயல்களை அல்லாஹ்வின் பெயர் கூறியே ஆரம்பிப்பார்கள்.

3. அல்லாஹ்வின் பெயர் கூறிய பின்பு இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவ வேண்டும்.

இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்அவ்ஸத் என்ற நூலில் வுழூச் செய்ய ஆரம்பிக்கும்போது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது சுன்னத்தாகும் என்பது ஏகோபித்த முடிவாகும் என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழூச் செய்யும் நீரைக் கொண்டுவருமாறு அழைத்தார்கள். பின்பு அந்த நீரால் தனது இரு கைகளுக்கும் ஊற்றி மூன்று முறை கழுவினார்கள். பின்பு அவர்கள் வுழூச் செய்த பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய இந்த வுழூவைப் போன்றே வுழூச் செய்தார்கள் என்று கூறினார்கள்.

– புஹாரீ

இரு கைகளையும் ஒன்று சேர்த்துக் கழுவ வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கையாகக் கழுவ வேண்டுமா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. சில அறிஞர்கள் ஒரு கையை முதலாவதாக மூன்று முறை கழுவிவிட்டு அடுத்த கையை மூன்று முறை கழுவலாம் என்று கூறியிருக்கின்றார்கள்.

இன்னும் சிலர் இரு கைகளையும் ஒன்றாகவே மூன்று முறை கழுவ வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள்.

இந்த இரண்டு முறைகளில் ஏதாவது ஒரு முறையைச் செய்தாலும் அந்த வுழூ சரியான வுழூவாகும். என்றாலும் முன்சென்ற உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் இரு கைகளையும் ஒன்றாகக் கழுவுவதே நபிவழியாகும் என்பதை உணர்த்துகின்றது.

கைவிரல்களை கோதிக்கழுவுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியிருக்கின்றார்கள். அவர்கள்: நீ வுழூச் செய்தால் உனது கைவிரல்களையும் கால்விரல்களையும் கோதிக்கழுவிக்கொள் என்று கூறினார்கள்.

– திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத்

4. பின்பு மூன்று முறை நாசிக்கு நீர் செலுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும்.

வாய்கொப்பளித்தல் என்றால் நீரை வாயினுள் செலுத்தி அதனை வாயினுள் சுற்றி பின்பு உமிழ வேண்டும். நாசிக்கு நீர் செலுத்துதல் என்றால் நாசின் அடிப்பகுதி வரை நீரை உள்வாங்கி பின்பு அதனை வெளியேற்றுவதாகும்.

மிக நன்றாக நாசிக்கு நீர் செலத்துமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியிருக்கின்றார்கள். நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர நாசிக்கு மிக நன்றாக நீர் செலுத்துவிடு! என்று அவர்கள் கூறினார்கள்.

– ஸஹீஹு அபீதாவூத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய்கொளிப்பதையும் நாசிக்கு நீர் செலுத்துவதையும் ஒரே நேரத்தில் சேர்த்து செய்பவர்களாகவே இருந்தார்கள். இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஒருபோதும் வாய்கொப்பளிப்பதையும் நாசிக்கு நீர் செலுத்துவதையும் பிரித்து செய்வது ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெறவில்லை.

– ஸாதுல் மஆத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ஒரு கையினாலே வாய்கொப்பளித்து நாசிக்கு நீரையும் செலுத்துவார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு கையினாலே வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார்கள்.

– புஹாரீ, முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாசிக்கு நீர் செலுத்தியதன் பின்பு அந்நீரை தனது இடது கையினால் வெளியேற்றுவார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை வுழூச் செய்தவற்கு நீரைக் கொண்டுமாறு அழைத்தார்கள். அவர் வுழூச் செய்யும்போது வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார். அந்நீரை தனது இடது கையால் அவர்கள் வெளியேற்றினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்தார்கள். பின்பு அவர்கள் இதுவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வுழூவாகும் என்று கூறினார்கள்.

– ஸஹீஹுன் நஸாஈ

5. நாசிக்கு நீர் செலுத்தி வாய்கொப்பளித்ததன் பின்பு முகத்தை மூன்று முறை கழுவ வேண்டும்.

வுழூச் செய்யும்போது முகத்தை கழுவுவது கட்டாயமாகும். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்களுடைய முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

– அல்மாஇதா: 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது முகத்தை கழுவுவதற்கு நீரை எடுக்கும்போது மூன்று அமைப்புக்களில் எடுத்திருக்கின்றார்கள்.

முதலாவது முறை: தனது ஒரு கையால் நீரை எடுப்பார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை நீரினுள் நுழைத்து அதனை வெளியாக்கி தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.

– புஹாரீ, முஸ்லிம்

இரண்டாவது முறை: தனது இரு கைகளாலும் நீரை எடுப்பார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளையும் நீரினுள் நுழைத்து அவ்விரண்டு கைகளாலும் நீரை அள்ளி தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.

– புஹாரீ

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: இரண்டு கைகளாலும் நீரை அள்ளுவது மிக இலகுவானதும் பரிமாறுவதற்கு நெருக்கமானதாகவும் இருக்கும்.

மூன்றாவது முறை: ஒரு கையால் நீரை எடுத்து அந்நீரை அடுத்த கையில் ஊற்றி பின்பு இரு கைகளாலும் முகத்தை கழுவுவார்கள்.

ஆதாரம்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கையளவு நீரை எடுத்து அதனை இவ்வாறு தனது அடுத்த கையுடன் சேர்த்து அவ்விரண்டாலும் தனது முகத்தை கழுவினார்கள்.

– புஹாரீ

முகத்தின் எல்லை அகலத்தால் ஒரு காதிலிருந்து அடுத்த காதுவரைக்கும், நீளத்தால் முடி முளைக்குமிடத்திலிருந்து இரு தாடைகளும் ஒன்று சேரும் இடம் வரையுமாகும்.

முகத்தை கழுவும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தாடியை குடைந்து கழுவுவார்கள். அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்தால் தனது தாடியை குடைந்து கழுவுவார்கள்.

– ஸஹீஹ் இப்னு மாஜா
6. முகத்தை கழுவியதன் பின்பு இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.

வுழூச் செய்யும்போது இரு கைகளையும் முழங்கை வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்களுடைய முகங்களையும் இரு கைகளையும் முழங்கை வரை கழுவிக்கொள்ளுங்கள்.” (அல்மாஇதா: 6)

கைகளைக் கழுவும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலதை முற்படுத்துவதையே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். என்றாலும் வலதை முற்படுத்திக் கழுவுவது கட்டாயமான ஒன்றல்ல. எவராவது ஆரம்பத்தில் இடது கையை கழுவிவிட்டு பின்பு வலதைக் கழுவினால் அவருடைய வுழூ சரியான மற்றும் செல்லுபடியானதாகும்.

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: ‘இடதைவிட வலதை முற்படுத்துவது ஏகோபித்த முடிவின்படி சுன்னாவாகும். ஏகோபித்த முடிவின்படி கட்டாயமான ஒன்றல்ல.” (அல்மஜ்மூஉ)

7. இரு கைகளையும் கழுவியதன் பின்பு தலையை மஸ்ஹு – தடவுதல் – செய்ய வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையை ஒரு முறை மாத்திரமே மஸ்ஹு செய்தார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை நீரில் நுழைத்தார்கள். பின்பு தனது தலையை மஸ்ஹு செய்தார்கள். தனது இரு கைகளையும் ஒருமுறை முன்னோக்கி பின்பு பின்னோக்கிக் கொண்டு வந்தார்கள்.” (புஹாரீ, முஸ்லிம்)

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை நீரில் நுழைத்து பின்பு தனது தலையை ஒருமுறை மஸ்ஹு செய்தார்கள்.” (ஸஹீஹு அபீதாவூத்)

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘சரியான கருத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல தடவை தனது தலையை மஸ்ஹு செய்யவில்லை என்பதாகும். மாறாக, அவர்கள் ஏனைய உறுப்புக்களை பல தடவைகள் கழுவினாலும் ஒருமுறையே தனது தலையை மஸ்ஹு செய்திருக்கின்றார்கள். இவ்வாறே அவர்களிடமிருந்து தெளிவான செய்தி இடம்பெற்றுள்ளது. இதற்கு மாற்றமாக எச்செய்தியும் அவர்களைத் தொட்டும் சரியாக இடம்பெறவில்லை.” (ஸாதுல் மஆத்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையின் முழுப்பகுதியையும் மஸ்ஹு செய்வார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘உங்களது தலையையும் மஸ்ஹு செய்துகொள்ளுங்கள்.” (அல்மாஇதா: 6)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளாலும் தனது தலையை மஸ்ஹு செய்வார்கள். தனது தலையின் ஆரம்பப் பகுதியிலிருந்து ஆரம்பித்து இரு கைகளையும் பிடறி வரை கொண்டு செல்வார்கள். பின்பு மஸ்ஹு செய்ய ஆரம்பித்த இடத்திற்கே தனது கைகளைக் கொண்டுவருவார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: ‘பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளாலும் தனது தலையை மஸ்ஹு செய்தார்கள். அவ்விரண்டையும் அவர்கள் முன்னோக்கியும் பின்னோக்கியும் கொண்டுவந்தார்கள். தனது தலையின் ஆரம்பப் பகுதியிலிருந்து ஆரம்பித்து அதனை பிடறி வரையும் கொண்டு சென்று பின்பு அவ்விரு கைகளையும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வருவார்கள்.” (புஹாரீ)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைகளைக் கழுவிய நீரினால் சிலவேளை தனது தலையை மஸ்ஹு செய்வார்கள். சிலவேளை புதிய நீரை எடுத்து தலையை மஸ்ஹு செய்வார்கள்.

கைகளைக் கழுவிய பின் புதிய நீரை எடுத்து தலையை மஸ்ஹு செய்தார்கள் என்பதற்கான ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய்கொப்பளித்தார்கள். பின்பு நீரை வெளியேற்றினார்கள். பின்பு தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். இன்னும் தனது வலது கையை மூன்று முறையும் அடுத்த கையை மூன்று முறையும் கழுவினார்கள். பின்பு கைகளைக் கழுவிய நீரல்லாமல் (புதிய நீரை எடுத்து) தனது தலையை மஸ்ஹு செய்தார்கள்.” (முஸ்லிம்)

அவர்கள் தனது தலையை கைகளைக் கழுவிய நீரினாலே மஸ்ஹு செய்வார்கள் என்பதற்கான ஆதாரம்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தனது முகத்தை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பின்பு நீரை அள்ளி அதனை இவ்வாறு செய்தார்கள். அதாவது அதனை அடுத்த கையுடன் சேர்த்து அவ்விரு கைகளாலும் தனது முகத்தை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி தனது வலது கையைக் கழுவினார்கள். பிறகு நீரை எடுத்து தனது இடது கையைக் கழுவினார்கள். பின்பு தனது தலையை மஸ்ஹு செய்தார்கள். அவர்கள் வுழூச் செய்துவிட்டு ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்வதை நான் இவ்வாறே கண்டேன்” என்று கூறினார்கள். (புஹாரீ)

இந்த ஹதீஸில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவுவதற்கு நீர் அள்ளி எடுத்ததாக இடம்பெற்றிருக்கின்றது. ஆனால், தலையை மஸ்ஹு செய்தவற்கு மாத்திரம் அவர்கள் நீரை எடுத்ததாக அங்கு குறிப்பிடப்படவில்;லை. எனவே, கைகளைக் கழுவிய நீரினாலே மஸ்ஹு செய்யலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

8. தலையை மஸ்ஹு செய்வதோடு அதற்குப்பின் இரு காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை மஸ்ஹு செய்வதோடு இரு காதுகளையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளின் வெளிப்புறத்தை தனது பெருவிரல்களாலும் உட்புறத்தை தனது சுட்டுவிரல்களாலும் மஸ்ஹு செய்வார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்தார்கள். நீரை அள்ளி வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பின்பு நீரை அள்ளி தனது முகத்தை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி தனது வலது கையை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி தனது இடது கையை கழுவினார்கள். பின்பு தனது தலையையும் இரு காதுகளையும் மஸ்ஹு செய்தார்கள். காதுகளின் உட்புறத்தை சுட்டுவிரல்களாலும் வெளிப்புறத்தை தனது பெருவிரல்களாலும் மஸ்ஹு செய்தார்கள்.” (நஸாஈ, இப்னுமாஜா)

தலையை மஸ்ஹு செய்த நீரினாலே அவர்கள் காதுகளையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளை மஸ்ஹு செய்தவற்கு புதிய நீர் எடுக்கமாட்டார்கள். இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையுடன் இரு காதுகளையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளின் வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளை மஸ்ஹு செய்வதற்கு அவர்கள் புதிய நீர் எடுத்ததாக அவரை தொட்டும் உறுதியாகவில்லை.” (ஸாதுல் மஆத்)

9. காதுகளை மஸ்ஹு செய்வதன் பின்பு இரு கால்களையும் கழுவ வேண்டும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘உங்கள் கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்.” (அல்மாஇதா: 6)

எனவே, கால்களைக் கழுவுவது கட்டாயமாகும். கால்களைக் கழுவும்போது கால்விரல்களைக் கோதிக்கழுவுவது சுன்னாவாகும். இதற்கான ஆதாரம் முன்பு கூறப்பட்டுவிட்டது.

குறிப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்யும்போது ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று முறை கழுவியுள்ளார்கள்.

ஆதாரம்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று முறை கழுவிவிட்டு ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய இந்த வுழூவைப்போன்று வுழூச் செய்வதை நான் கண்டேன்” என்று கூறினார்கள். (புஹாரீ)

சிலவேளை அவர்கள் தனது உறுப்புக்களை இரண்டு முறைகள் கழுவியிருக்கின்றார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் இரண்டு முறைகள் கழுவி வுழூச் செய்தார்கள்.’ (புஹாரீ)

சிலவேளை அவர்கள் சில உறுப்பக்களை மூன்று முறைகளும் சில உறுப்புக்களை இரண்டு முறைகளும் கழுவுவார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூவைப்பற்றி கேட்கப்பட்டபோது அவர்கள் வுழூச் செய்து காண்பித்தார்கள். நீரை தனது இரு கைகளுக்கும் ஊற்றி மூன்று முறை கழுவினார்கள். பின்பு பாத்திரத்தில் தனது கையை நுழைத்து மூன்று கையளவு நீரினால் மூன்று முறை வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் அந்நீரை செலுத்தி வெளியேற்றினார்கள். பின்பு பாத்திரத்தில் தனது கையை நுழைத்து நீர் எடுத்து தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு பாத்திரத்தில் தனது கையை நுழைத்து நீர் எடுத்து தனது இரு கைகளையும் முழங்கை வரைக்கும் இரு முறைகள் கழுவினார்கள். (புஹாரீ)

இந்த ஹதீஸில் அவர்கள் தனது கைகளை இரு முறையும் ஏனைய உறுப்புக்களை மூன்று முறைகளும் கழுவியிருக்கின்றார்கள்.

சிலவேளை அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் ஒரு முறை மாத்திரம் கழுவுவார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் ஒவ்வொரு முறை கழுவி வுழூச் செய்தார்கள்.” (புஹாரீ)

மூன்று தடவைகளுக்கு அதிகமாக வுழூச் செய்வதை அவர்கள் தடுத்தார்கள். ஒரு நாட்டுப்புறவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து வுழூவைப்பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்கள் அம்மனிதருக்கு ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்மூன்று முறைகள் கழுவி வுழூச் செய்து காண்பித்தார்கள். பின்பு ‘வுழூ இவ்வாறுதான், இதைவிட யார் அதிகரிக்கிறாரோ அவர் தீங்கிழைத்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார், அநியாயம் இழைத்துவிட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹு அபீதாவூத்)

அல்லாஹ்வின் அருளின் காரணமாக இந்தத் தொகுப்பினூடாக நபிவழியில் எவ்வாறு வுழூச் செய்ய வேண்டும் என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். ஆகவே, எமது வுழூக்களை இந்த அடிப்படையில் நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இத்தொகுப்பை பிறருக்கும் வழங்கி அவர்களுக்கும் இதனைக்கொண்டு பிரயோசனமடையச் செய்வது அனைவரினதும் கடமையாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்…

Check Also

ஜனாஸாத் தொழுகை | பாகம் – 01 |

ஜனாஸாத் தொழுகை | பாகம் – 01 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube …

Leave a Reply