Home / அகீதா (ஏனையவைகள்) / முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன.

இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற இதழில் இது குறித்து நோக்கினோம். இங்கு முஃதஸிலாக்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட சில பெயர்களையும் அவர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காரணங்களையும் நோக்கவுள்ளோம்.

முஃதஸிலாக்கள் தமக்குத்தாமே சூட்டிக் கொண்ட பெயர்கள்:

1. முஃதஸிலாக்கள்:
இந்தப் பெயர் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களால் இவர்களுக்கு சூட்டப்பட்டது. இந்தப் பெயரிலிருந்து தப்பிக் கொள்ள அவர்கள் முயன்றாலும் அவர்களால் முடியவில்லை. எனவே, இவர்களில் சிலர் தம்மை ‘முஃதஸிலா” என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன் அதற்கு விளக்கமும் கூற ஆரம்பித்தனர். உதாரணமாக,

‘அவர்கள் கூறுபவற்றில் நீர் பொறுமையாக இருப்பீராக! மேலும், அழகிய முறையில் அவர்களை நீர் வெறுப்பீராக!” (73:10)

இந்த வசனத்தைச் செயல்படுத்துவதென்றால் சமூகத்தை விட்டும் ஒதுங்காமல் -இஃதிஸால்- இல்லாமல் செயற்படுத்த முடியாது என வாதிட்டு சமூகத்தை விட்டும் ஒதுங்குவதற்கான ஆதாரங்களை முன்வைத்தனர்.

2. அஹ்லுல் அத்ல் வத் தவ்ஹீத்:
‘அத்ல்” என்றால் நீதி, நியாயம் என்பது அர்த்தமாகும்ஃ அவர்கள் தம்மை, ‘அஸ்ஹாபுல் அத்ல்” – நீதியின், நேர்மையின் கூட்டத்தினர் என்று கூறிக் கொண்டனர். எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல பெயர்களில்தான் தமது கெட்ட கொள்கையைப் போதித்தன.

அத்ல் – நீதி என்பது நல்ல வார்த்தைதான். அவர்கள் அல்லாஹ்வை உண்மையில் நீதவானாகக் காட்டுவது நாம்தான் என்று சொன்னார்கள். கழாகத்ரை மறுப்பதுதான் இதனுடைய அடிப்படை.

அல்லாஹ்வே கத்ரை நியமித்துவிட்டு அடியார்களைத் தண்டிப்பது நீதியானது அல்ல என்று கூறி கத்ரை மறுத்தனர். கத்ரை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லாஹ்வை அநியாயக் காரனாக சித்திரிப்பதாகக் கூறினர். கத்ர் மறுப்பு என்ற தமது கொள்கையை வைத்துத்தான் தம்மை ‘அஸ்ஹாபுல் அத்ல்”, ‘அஹ்லுல் அத்ல்” – நீதியின் அணியினர், அல்லாஹ்வை நீதமாகக் காட்டும் கூட்டம் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

‘அஹ்லுத் தவ்ஹீத்” – தவ்ஹீத்வாதிகள் என்றும் தம்மை அழைத்துக் கொண்டனர். ‘அல்லாஹ்வின் பண்புகளை ஏற்பது அல்லாஹ்வுக்கு இணை வைத்தலை உண்டு பண்ணும்” என்று இவர்கள் நம்பினர். எனவே, இவர்கள் அல்லாஹ்வின் ஸிபத்துக்களை மறுக்கும் தாமே உண்மையான தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொண்டனர்.

3. அஹ்லுல் ஹக்!:
முஃதஸிலாக்கள் தம்மை சத்தியவான் களாகவும் ஏனையவர்களை ‘அஹ்லுல் பாதில்” – அசத்தியவாதிகளாகவும் கூறி வந்தனர். அல்லாஹ்வை எல்லாவிதமான குறைகளில் இருந்தும் தூய்மைப்படுத்தும் கூட்டமாகத் தம்மை அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் ஸிபத்துக்களை ஏற்பவர்கள் முஷ்ரிக்குகளாகவும் ‘முஷப்பிஹா” அல்லாஹ்வுக்கு ஒப்புவமை கூறுபவர்களாகவும் அவர்கள் பார்த்தனர்.

முஃதஸிலாக்களின் வளர்ச்சியும் அதற்கான காரணமும்:

வரலாற்றில் முஃதஸிலாக்கள் பெரும் வளர்ச்சி கண்டார்கள். இது ஒரு சிந்தனை சார்ந்த வழிகேடு. இதனால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதும், இனங்காட்டுவதும் சிரமமானதாகும். இந்தப் பெயரில் இன்று எந்த ஒரு அமைப்பும் இல்லையென்றாலும் இந்த வழிகெட்ட சிந்தனையால் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் நிறையவே இருக்கின்றனர். இது ஒரு கொள்கை சார்ந்த வழிகேடாக இருப்பதால் அடையாளம் காண்பது கடினமானது. செயல்சார்ந்த வழிகேட்டை உடனே புரிந்து கொள்ளலாம். கொள்கை சார்ந்த வழிகேடுகள் சில போது அந்தக் கொள்கையை ஏற்றவர்களுக்கே, தான் இந்த வழிகெட்ட கூட்டத்தின் கொள்கையில் இருக்கின்றேன் என்பது தெரியாமல் இருக்கும்.

எனவே, இந்த சிந்தனை வளர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது எனலாம்.

முஃதஸிலாக்களின் வளர்ச்சிக்கான காரணங்கள்:

1. அரசியல் செல்வாக்கு:
முஃதஸிலா கொள்கையின் பிறப்பிடமாக பஸரா திகழ்கின்றது. அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் பக்தாத், கூபா, பஸரா போன்ற நகரங்கள் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்தன. அறிவையும் நாகரிகத்தையும் மற்றப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கும் பிரதேசங்களாக இவைகள் திகழ்ந்தன.

அத்துடன் அப்பாஸிய ஆட்சியாளர்களில் பலரும் தீவிர முஃதஸிலா கொள்கை சார்பானவர்களாக மாறினர். ஒரு நாட்டின் அரசு ஒரு கொள்கையில் அல்லது மதத்தில் இருந்தால் குடிமக்கள் அதன்பால் ஈர்க்கப்படுவது இயல்பாகும். அத்துடன் முஃதஸிலா கலீபாக்களில் சிலர் மாற்றுக் கொள்கையுடைய அறிஞர்களை சிறை பிடித்து சித்திரவதையும் செய்தனர். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) போன்றவர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஃதஸிலாக்களுக்கு அரசியல் பலம் கிடைத்ததால் மாற்றுக் கருத்துடையவர்கள் அடக்கப்பட்டனர். இதனால் பரந்து விரிந்த அப்பாஸிய ஆட்சியில் முஃதஸிலாக் கொள்கை வெகு வேகமாகப் பரவியது எனலாம்.

2. தீர்ப்பை முன்வைத்தனர்:
அன்றைய உலகு சந்தித்த பல பிரச்சினை களுக்கு முஃதஸிலாக்கள் தீர்வு சொன்னார்கள். அந்தத் தீர்வு சரியானதாக இல்லாவிட்டாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

உதாரணமாக, பெரும்பாவம் செய்யும் முஸ்லிமின் நிலை என்ன என்பது குறித்து பெரிய சர்ச்சை அன்று கிளம்பியிருந்தது.

கவாரிஜ்கள்:
பெரும்பாவம் செய்பவன் காபிர், அவன் நரகத்தில் நிரந்தரமாக இருப்பான் என்றனர். இந்தக் கொள்கை மக்கள் மத்தியில் பாவத்தை விட்டும் ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் மாற்றுக் கொள்கைவாதிகளை மார்க்கத்தின் பெயரில் கொடூரமாக் கொலை செய்தனர். அதை அவர்கள் பாவமாகப் பார்க்கவில்லை.

முர்ஜிய்யாக்கள்:
பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ‘குப்ருடன், நன்மை செய்வதால் எந்தப் பயனும் இல்லாதது போல் ஈமானுடன் பாவம் செய்வதால் எந்தப் பாதிப்பும் இல்லை” என இவர்கள் போதித்தனர். இது மக்கள் மத்தியில் பெரும்பாவங்களையும் சர்வசாதாரணமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியது. பாவங்கள் பெருக இது காரணமாக அமைந்தது.

அஹ்லுஸ்ஸுன்னா:
அஹ்லுஸ்ஸுன்னாவுடைய அறிஞர்கள் பெரும்பாவம் ஈமானை விட்டும் வெளியேற்றாது, குப்ரில் நுழைவிக்காது. ஆனால், பாவியாவான். அவனது பாவத்தின் அளவுக்கு அவன் தண்டிக்கப்படுவான் என்று கூறினர். இதுதான் சரியானது.

இருப்பினும் முஃதஸிலாக்கள் பெரும் பாவம் செய்தவன் முஃமினும் இல்லை, காபிரும் இல்லை. ஈமானுக்கும் குப்ருக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான். அவன் நரகம் செல்வான். அதில் நிரந்தரமாக இருப்பான். காபிரை விட குறைந்த தண்டனை வழங்கப்படும் எனக் கூறினர்.

ஆதாரங்களின் அடிப்படையில் பிரச்சினையை அணுகாதவர்களுக்கு பெரும்பாவம் செய்பவன் முஃமினும் இல்லை, காபிரும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான் என்ற கருத்து நடுநிலையானதாகத் தெரிந்தது. எனவே, இது சரிதான் என்று ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறே முஃதஸிலாக்கள் எல்லா வழிகெட்ட அமைப்புக்களில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து புதிய கொள்கையை உருவாக்கியிருந்தனர். இதனால் பலரும் அவசரப் பட்டனர். முஃதஸிலாக்களிடம் கவாரிஜ்களிலும், ஷீஆக்களிலும் கொள்கைத் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இவ்வாறே பலவற்றைச் சேர்த்து வழங்கியமை, அவர்களது கொள்கைப் பரம்பலுக்கு முக்கிய உதாரணமாகத் திகழ்ந்தது எனலாம்.

பிற சமயக் கொள்கைகளின் தாக்கம்:

முஃதஸிலாக்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பிற சமயங்களின் தாக்கம் பிரதானமான காரணமாக இருந்தது எனலாம்.

நபி(ச) அவர்களின் மரணத்தின் பின் அரபுலகின் பல பகுதிகளும் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டது. அவ்வப்பகுதியில் இஸ்லாத்தை ஏற்ற மக்கள் அந்தந்தப் பகுதியில் வசித்த மாற்று மத மக்களுடன் இரண்டறக் கலந்து வாழும் நிலை ஏற்பட்டது. சிந்தனைச் சிக்கல்கள் தோன்ற இது ஒரு காரணமாகத் திகழ்ந்தது.

இவ்வாறே இஸ்லாமிய ஆட்சி விரிவடையும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர். இவர்கள் போதிய மார்க்கத் தெளிவு இல்லாமலும் பழைய கொள்கைகளில் இருந்து முற்று முழுதாக விலகாத நிலையிலும் இஸ்லாத்தில் இணைந்ததால் பிற மத சிந்தனைத் தாக்கத்திற்குள்ளாகினர்.

மற்றும் சிலர் அல்லாஹ்வுக்காக இஸ்லாத்தில் இணையாமல் உலகாதாய நோக்கத்திற்காக இஸ்லாத்தில் இணைந்ததால் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது பற்றோ, பாசமோ இருக்கவில்லை. பிடிப்பும் இருக்கவில்லை. பெயரளவு முஸ்லிம்களாக இவர்கள் திகழ்ந்தனர். இவர்கள் கொள்கை அளவில் பழைய நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
மற்றும் சிலர் இஸ்லாத்தின் மீது கொண்ட கோபத்தில் இஸ்லாத்தில் இணைந்தனர். முஸ்லிமாக நடித்துக் கொண்டு உள்ளே இருந்து முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்பது இவர்களின் திட்டம். இந்தத் திட்டத்துடன் உள்ளே வந்தவர்கள் வெளிப்படையில் தம்மை முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்டாலும் குப்ருடைய கொள்கையில்தான் இருந்தனர். இவர்கள் தமது குழந்தைகளுக்கும் அவர்களது கொள்கைகளையே கற்றுக் கொடுத்தனர். இதனால் முஸ்லிம் சமூகத்தில் பிற மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பலர் உருவாகும் நிலை உண்டானது.

அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் மாபெரும் அறிவெழுச்சி ஏற்பட்டது. எனவே, ஏராளமான நூற்கள் அறபு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. இதில் தத்துவ நூல்களும் முக்கியத்தும் பெற்றன. உரோம, பாரசீக, இந்து மதங்களில் தாக்கம் செலுத்திய பல நூற்களும் அரபியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. முஸ்லிம்களில் ஒரு குழுவினர் இந்நூல்களில் அதிக அக்கறை காட்டினர். தேவையில்லாத தத்துவ வாதங்களுக்குள் மூழ்கத் துடித்தனர். முஸ்லிம் உலகில் ஏற்பட்ட கொள்கைக் குழப்பங்களுக்கும் தத்துவ வாதங்களுக்கும் இடையில் நிறையவே தொடர்புண்டு என்றால் மிகையாகாது. இந்த நூற்களினூடாக பிற மத கொள்கைகள் இஸ்லாமிய சாயம் பூசப்பட்டு முஸ்லிம்களுக்குள் ஊடுருவியது.

இவ்வாறு பிற மத தாக்கம் இஸ்லாமிய உலகை உலுக்கிக் கொண்டிருந்த சூழலில்தான் முஃதஸிலா சிந்தனை தோற்றம் பெறுகின்றது. முஃதஸிலா சிந்தனைக்கும், பிற மதங்களின் கொள்கைக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உண்டா? என்ற கேள்வி எழலாம்.

தத்துவவாதிகள் கடவுள் பற்றித்தான் அதிகம் அலட்டிக் கொண்டு கருத்துக்கள் கூறினர். ‘இல்முல் கலாம்” என்ற பெயரில் முஸ்லிம்களும் அதில் மூழ்கினர். ஆனால், ஆரம்ப கால அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ‘குர்ஆன், சுன்னாவில் அல்லாஹ் பற்றி போதிய அளவு கூறப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளதை அப்படியே ஏன்? எப்படி? என்ற கேள்வியின்றி, இப்படித்தான், அப்படித்தான் என்ற விளக்கமின்றி உள்ளதை உள்ளது போல் நம்பினால் போதும்” என்று கூறினர். இதுதான் சரியானதும், பாதுகாப்பானதுமான நிலைப்பாடாகும். ஆனால், பாமர மக்களுக்கு எதுவும் புத்திக்குப் புலப்படுகின்றமாதிரி இருந்தால்தான் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள்.

முஃதஸிலாக்கள் மாற்றுமத சிந்தனைகளின் தாக்கத்திற்குள்ளாகுவதற்கு தத்துவ நூல்களில் அவர்கள் காட்டிய ஆர்வம் முக்கிய காரணமாகும்.

முஃதஸிலாக்களும் யூதர்களும்:

முஃதஸிலாக்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற புதியதொரு கொள்கையைக் கொண்டு வந்தனர். இந்தக் கொள்கைக்கும் யூத சிந்தனைக்கும் தொடர்பிருக்கின்றது. லபீத் இப்னு அஃஸம் எனும் யூதன்தான் முதன் முதலில் தவ்ராத் படைக்கப்பட்டது என்ற கருத்தைக் கூறியவன் என இமாம் இப்னுல் அதீர்(ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். (தத்கிரதுல் ஹுப்பாழ் 4ஃ 185), அல்காமில் பித் தபிரீஹ் 1ஃ9)

குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வழிகெட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர்களில் மிக முக்கியமானவர் ‘பிஸ்ருல் முறைஸி” என்பவன். இவனது தந்தை ஒரு யூதனாவான். ஏற்கனவே குர்ஆன் படைக்கப் பட்டது என்ற கருத்து யூத சிந்தனையில் இருந்து எப்படி வந்தது என்பது குறித்து நாம் குறிப்பிட்டுள்ளோம் என்பதை நினைவூட்டுகின்றேன்.

கிறிஸ்தவமும், முஃதஸிலாவும்:

கிறிஸ்தவ சிந்தனைக்கும், முஃதஸிலா சிந்தனைக்கும் இடையில் நிறையவே தொடர்புண்டு எனலாம்.

உமையாக்களின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்கள் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தனர். சில கிறிஸ்தவ அறிஞர்கள் அரச சபையிலேயே செல்வாக்குடன் திகழ்ந்தனர். முஆவியா(வ) அவர்கள் தனது எழுத்தாளராக சர்ஜூன் இப்னு மன்ஸூர் எனும் கிறிஸ்தவரை நியமித்திருந்தார்.

முஆவியா(வ) அவர்களுக்குப் பின் அவரது மகன் யஸீத் இவரிடம் ஆலோசனை பெறுபவராக இருந்தார். (தபரி 6ஃ183, அல் காமில் 4ஃ7)

சர்ஜூனுக்குப் பின்னர் அந்த இடத்தை அவரது மகன் யஹ்யா அத்திமிஷ்கி பெற்றார்.

இந்த யஹ்யா திமிஷ்கி கிறிஸ்தவ மதத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நூற்களை எழுதினார். ஒரு முஸ்லிம் இப்படிக் கேள்வி எழுப்பினால் இப்படிப் பதில் கூற வேண்டும் என்ற கருத்துப் பரிமாற்ற ரீதியில் அவரது நூற்கள் அமைந்திருந்தன.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் மத ரீதியான விவாதங்கள் நடந்தன. உமையா மற்றும் அப்பாஸிய ஆட்சியினரின் தாராளத்தன்மைக்கு அவை ஆதாரமாகவும் அமைந்தது. கலீபா மஃமூனின் அவையிலேயே சில விவாதங்கள் நடந்தன. இதனூடாக சில கிறிஸ்தவ சிந்தனைகளும் முஸ்லிம்களுக்குள் ஊடுருவின.

முஃதஸிலாக்கள் கழாகத்ரை மறுத்தனர். முஸ்லிம் உலகில் முதன் முதல் கழாகத்ரை மறுத்தவன் ‘மஃபத் அல் ஜுஹனி” என்ப வனாவான். இவன் இந்த சிந்தனையை அபூயூனுஸ் எனும் கிறிஸ்தவரிடமிருந்து பெற்றான். (அல்பர்க் பைனல் பிரக் 17)

இவனுக்குப் பின்னர் இக்கொள்கையை அதிகம் பேசியவன் ‘சைலான் அத்திமிஷ்கி” எனும் கிப்தியாவான். இவன் கிறிஸ்தவனாக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவன். இதனூடாகவும் கிறிஸ்தவத்திற்கும் இக்கொள்கைக்குமிடையில் உள்ள தொடர்பை யூகிக்கலாம்.

‘யஹ்யா அத்திமிஷ்கி” அல்லாஹ், ‘கைர்” நல்லவன். அவனிடமிருந்துதான் எல்லா நன்மைகளும் ஊற்றெடுக்கின்றன என்றான். முஃதஸிலாக்களும் அல்லாஹ், ‘கைர்”நல்லவன், அவனிடமிருந்து கெட்டது எதுவும் வராது என்று கூறினர். கத்ரையும், அல்லாஹ்வின் நாட்டத்தையும் மறுப்பதற்கான வழியாக இதை அமைத்தனர்.

இவ்வாறே அல்லாஹ்வின் பண்புகளை நிராகரிக்கும் கருத்தையும் இவர்கள் கிறிஸ்தவத் திடமிருந்து பெற்றனர். இதன் அடிப்படையில் அல்லாஹ்வின் பண்புகள், செயல்களுக்கு மாற்று விளக்கமளித்தனர்.

முஃதஸிலாக்கள் இது போன்ற கிறிஸ்தவ சிந்தனையால் தாக்கம் பெற்றவர்களினூடாக அந்தக் கருத்துக்களைப் பெற்று அவற்றைத் தமது வாதத்திறமையினூடாக இஸ்லாமிய மயப்படுத்தி வந்தனர். முஃதஸிலாக்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பிற மதங்கள் குறிப்பாக யு+த, கிறிஸ்தவ மதங்களின் தாக்கம் முக்கிய காரணமாகத் திகழ்ந்தது என்றால் அது மிகையன்று!

Check Also

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி ஜித்தா தஃவா சென்டர் ஹை அஸ்ஸலாமா சவூதி அரேபியா …

Leave a Reply