Home / Islamic Months / Haj / Umrah / Sacrifice / ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் தொடர் -1 | கட்டுரை

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் தொடர் -1 | கட்டுரை

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும்
தவிர்க்க வேண்டிய தவறுகளும்

தொடர் -1

ஆசிரியர் : யாஸிர் பிர்தௌஸி அல் – ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் மையம், (சவூதி அரேபியா)

ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான். “ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி : 1773

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1521

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூல்: புகாரி 1520

இத்தகைய நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய, பாவங்களுக்கு பரிகாரமான, பெண்களின் ஜிஹாத் என்று வரணிக்கபப்ட்ட ஹஜ்ஜின் நன்மைகளை அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளினால் ஹாஜிகள் இழந்து விடுகிறார்கள்.

இதனை சிறந்த உதாரணத்துடன் விளங்குவதாக இருந்தால் ஒரு மனிதன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து ஒரு வீட்டை கட்டுகின்றான் அதிலே நல்ல வண்ணங்களை பூசுகின்றான், அழகான மின் விளக்குகளை பொருத்துகின்றான், உயர் ரக தண்ணீர் குழாய்களை அமைக்கின்றான். இவற்றில் எதுவுமே அவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையெனில் அவன் எவ்வளவு கைசேதம் அடைவானோ அதைவிட மிகப்பெரும் கைசேதம் உடல் உழைப்புடன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து மிகப்பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஹஜ்ஜுக்கு சென்று அதன் நன்மையை முழுமையாக அடையாத ஹாஜி.

எனவே இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹாஜிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதின் மூலம் தவறுகளில் விழாமல் அவர்களை தடுப்பதோடு அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள்

1. அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்றுவதுடன்
அல்லாஹ்வுடைய தூதர் காண்பித்து தந்த அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்

சிலர் பகட்டை வெளிப்படுத்தும் நோக்கில் ஊராரை அழைத்து விருந்துபசாரம் செய்வதும், மேளதாளங்களோடு, தோரணங்களை தொங்க விட்டு மாலை அணிந்து ஊர்வலம் செல்வதும் ஊர் முழுக்க போஸ்டர்கள் அடிப்பது கட்டவுட்கள் வைப்பதும் இது போன்ற மார்க்கம் காண்பித்து தராத சில செயல்பாடுகளில் ஹஜ்ஜுக்கு செல்லும் முன்பும், சென்று திரும்பும் போதும் இவ்வாறு செய்கின்றனர் இது போன்ற செயல்களினால் உளத்தூய்மை (இக்லாஸ்) அடிபட்டு முகஸ்துதி மேலோங்கி ஹஜ்ஜின் மூலம் அடையும் நன்மைகளை இழந்துவிடுகிறார்.

2.மற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லையெனில் அல்லது அதிலே குறை ஏற்பட்டிருப்பின் அவர்களிடம் அதற்காக வருத்தம் தெரிவித்து விட்டு ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக (பெற்றோர்கள் , கணவன் மனைவி , இரத்த பந்த உறவினர்கள், நண்பர்கள்)

3. ஹஜ் என்ற இந்த இபாதத்தை நிறவேற்ற நாடுபவர்கள் அது குறித்த விஷயங்களை குர்ஆன் சுன்னா அடிப்படையில் முறையாக கற்றுத்தேர்ந்த ஆசிரியர் மூலம் பயிலவேண்டும்

“உங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறையை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்” . அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி யல்லாஹு அன்ஹு) , நூல் : முஸ்லிம் 1297

4….எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது … 2:197

5.பொருளாதாரம் மிகத்தூய்மையானதாக இருக்க வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51).
“நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், 1686 )

6. ஹஜ், உம்ராவிற்கு செல்பவர்களிடம் துஆ செய்யுமாறு வேண்டுதல் : நான் நபி (ஸல்) அவர்களிடம் உம்ரா செல்வதற்காக அனுமதி வேண்டினேன் எனக்கு அனுமதி அளித்தார்கள் ” எனது சகோதரனே உனது து ஆவில் எங்களை மறந்து விடாதே என்று கூறினார்கள் உமர் (ரலி ) கூறினார்கள் உலகம் முழுவதை விட இந்த வார்த்தை எனக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அறிவிப்பவர் : உமர் (ரலி ), நூல் : அபூதாவூத் 1280

7. பெண்கள் தனியாக ஹஜ்ஜுக்கு செல்லக் கூடாது : “எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி 3006 , முஸ்லிம் 1341)

பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று ஏராளமான நிபி மொழிகள் காணக்கிடக்கின்றன . என்றாலும் ஹஜ் , உம்ரா நடத்தும் சில நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை கணக்கில் கொண்டு தவறான முறையில் இவர் அவருக்கு மஹ்ரம் அவர் இவருக்கு மஹ்ரம் என்று காண்பித்து தங்களோடு அழைத்துச் செல்கின்றனர். இதுவும் தடுக்கப்பட்ட ஒன்றே..

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Check Also

துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும்

அஷ்ஷேக் தஸ்னீம் கபுரி ஹஜ் வழிகாட்டுதல் வகுப்பு துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும் 17 …

One comment

  1. Atabic Translation centre

    Masha Allah..great information provided !

    Keep it on we expect more to learn

Leave a Reply