Home / ஃபிஹ்க் ஏனையவைகள் / இலங்கை/தமிழக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளின் வகைகள்

இலங்கை/தமிழக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளின் வகைகள்

தொகுப்பு : ஷுஐப் உமரி

(1 )உறுதிப்படுத்தப்பட்டவை
(2)ஷாபி மத்ஹப்
(3) ஊர் வழமை
(4)உலமாக்களின் பொறுப்பு

உறுதிப்படுத்தப்பட்டவை:

அல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் வழிகாட்டுதல் படி செய்யப்படுபவை. இவை உளத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்டால் பூரண நன்மை கிடைக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 4:13)

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ”நாங்கள் அல்லாஹ்வுக்குக்கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்”எனவும் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 33:66…68)

ஷாபி மத்ஹப்:

ஷாபி மத்ஹப் அடிப்படையில் செய்யப்படுபவை. இவ்வாறானவைகளை நான்கு விதமாக பிரிக்கலாம்.

ஒன்று :
ஸஹீஹான ஹதீஸ்களை விளங்குவதில் அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட
வேறுபாடு காரணமாக செய்யப்படுபவை.

நோன்பாளி நண்பகலுக்குப் பின்னர் பல் துலக்கக் கூடாது என்ற கருத்தும், சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பிறை பற்றிய சர்ச்சையும்
இதற்கு உதாரணம். இவற்றுக்கு இஜ்திஹாத் என்ற வகையில் கூலி வழங்கப்படலாம்.

இரண்டு :
பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யப்படுபவை.
ஸுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது, தஸ்பீஹ் தொழுகை, மரணத்தருவாயில் இருப்பவர்களுக்கு ‘சூரா யாஸீன்’ ஓதுவது போன்றவை இதற்கு உதாரணம்.

இவற்றுக்குரிய ஹதீஸ்கள் பலவீனம் என்று தெரிந்த பின்னரும் அவற்றை வைத்து அமல் செய்வதால் எந்த நன்மையும் கிடைக்காது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.இந்த ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தும் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகிறது.
(ஸஹீஹ் முஸ்லிம்)

மூன்று / நான்கு
குர்ஆன் ஹதீஸின் எந்த ஆதாரமும் இன்றியும் ஷாபி மத்ஹபிலேயே கூறப்படாதவைகளையும் செய்வது.

ஐவேளை தொழுகைகளின் பின்னர் ஓதப்படும் கூட்டு துஆ போன்றவை இதற்கு உதாரணம்.

இவற்றுக்கு அல்லாஹ்வோ ரஸூலோ பொறுப்பில்லை அவற்றுக்கு நன்மை கிடைப்பதற்கு பதிலாக பாவமே கிடைக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :
(நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 48:16)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்காதீர்கள். ஏனெனில், என்னைக் குறித்து யார் பொய் கூறுகிறாரோ அவர் நரகம்தான் செல்வார்.இந்த ஹதீஸை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
(ஸஹீஹ் முஸ்லிம்)

ஊர் வழமை என்று செய்யப்படுபவை:

இவை பெரும்பாலும் ஜனாஸா மற்றும் திருமண நிகழ்வுகளுடன் சம்பந்தப்படுகின்றன.

ஜனாஸா வீட்டுக்கு முன்பாகவும் ஜனாஸா தொழுகைக்கு பின்னரும் கூட்டாக துஆ கேட்பது, மையித்தின் உறவினர்கள் மையவாடியில் வரிசையாக நின்று மக்களுடன் முஸாபஹா செய்தல், நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலாத்து நாரியா என்ற ஷிர்க் வாத்தைகள் அடங்கியதை 4444 தடவை ஓதுவது போன்றவை
இவற்றுக்கு உதாரணம்.

இவ்வாறானவற்றுக்கும் அல்லாஹ்வோ ரஸூலோ பொறுப்பில்லை. அவற்றுக்கு நன்மை கிடைப்பதற்கு பதிலாக பாவமே கிடைக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 42:21)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒரு போதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். (இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று நான் கூறுவேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சொல்லப்படும். உடனே நான் எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப் படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! என்று (இரண்டு முறை) கூறுவேன்.

அறிவிப்பவர்: ச‍ஹ்ல் (ரலி) ஆதாரம்: பு‍ஹாரி ஹதீஸ் இலக்கம்: 6583,6584

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல் குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

உலமாக்களின் பொறுப்பு :
குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் படி மக்களை வழிநடத்த வேண்டும். மார்க்க விஷயங்களில் எதையும் யாருக்கு பயந்தும் மறைக்கக் கூடாது.

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த) மக்களை அறிவதை போல (இந்த உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் உறுதியாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.( அல்குர்ஆன்2:146)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும், அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ உறுதியாக அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்2:159)

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, உறுதியாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்த மாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.( அல்குர்ஆன் 2:174)…

Check Also

இரவுத் தொழுகையின் சட்டங்கள் ! | தொடர் – 3 |

இரவுத் தொழுகையின் சட்டங்கள் ! | தொடர் – 3 | அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply