بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்.
இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-: ஆங்கிலத்தில்:-
டாக்டர்ஜாகிர்நாயக்.
(நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை.)
-: தமிழாக்கம்:-
அபூ-இஸாரா
(இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், இவர்களுடைய பெயர் முஹம்மது மீரா சாஹிப், இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற ஊரை சார்ந்தவர்கள், இவர் சவூதி அரேபியா; அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தில் பல ஆண்டுகளாக தன்னார்வ தொண்டராகவும் மற்றும் பல விதங்களிலும் உதவியாளராக இருந்து கடந்த ஆண்டு ரமலான் மதத்தில் வபாத் ஆனார்கள், இவர்கள்தான் எனக்கு வீடியோவை எடிட்டிங் மற்றும் எப்படி அப்லோட் செய்யவேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்கள் இவர்களை ஒருமுறை சந்திக்க சென்றபோது அவர்கள் இதை என்னிடம் கொடுத்து இதை படியுங்கள் தாவாவிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கொடுத்தார்கள், அதை நானும் படித்து விட்டு அப்படியே வைத்து விட்டேன், அல்ஹம்துலில்லாஹ், இப்போது இதை பார்த்ததும் நான் பயன்பெற்றது போல் மற்ற சகோதர்களும் இதிலிருந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் குர்ஆன் கல்வி. காம்-ல் வெளியிடுகிறோம், இதைப் படிக்கக் கூடியவர்கள் இதை மொழியாக்கம் செய்த சகோதருக்காக துஆ செய்யுங்கள், இந்த உன்னதமான பணிக்காக அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து , சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை கொடுப்பானாக என்று பிரார்த்திக்கின்றோம் …
(நிர்வாகி, குர்ஆன் கல்வி. காம்,)
: முன்னுரை:
‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர்அழைப்பீராக! அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும், (அவன் வழியைச் சார்ந்து) நோர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அத்தியாயம் 16 ஸூரத்துல் நஹ்ல் – 125வது வசனம்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகின்றான்.
மக்களை இறைவனின் பாதையில் விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பு விடுக்கும் அழைப்பாளர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர்டாக்டர் ஜாகிர்நாயக் அவர்கள் என்றால் மிகையாகாது.
அவார் ஒரு மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவராக இருந்தாலும், தனது வாழ்க்கையை இஸ்லாத்திற்காகவே அர்ப்பணித்துவிட்ட ஒரு சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும்
இஸ்லாமிய ஆய்வு மையத்தின் நிறுவனரான இவர், உலகில் உள்ள மாற்று மதத்தவர்களுக்கு ஆங்கில மொழியில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர்.
கடந்த இரண்டு யுகங்களாக இஸ்லாத்தை எடுத்துச் சொல்லவென்று உலகில் அவர்செல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். இஸ்லாத்தைப் பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு இறைவனின் அருட்கொடையான அவரது பேச்சாற்றலால் – இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும் – அறிவியல் ரீதியாகவும் – தர்க்க ரீதியாகவும் அவர்அளிக்கும் பதில்கள் – இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்திருக்கிறது.
உலக அளவில் எவரெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி தவறான கருத்துக்களை கொண்டிருந்தார்களோ – அவர்களுடன் அழகிய முறையில் விவாதங்கள் நடத்தி அந்த விவாதங்களின் மூலம் அவர்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களை களைந்ததுடன், இறையருளால் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு யுகங்களாக டாக்டர்ஜாகிர்நாயக் அவர்களிடம் மாற்று மதத்தவ ர்கள் கேட்ட கேள்விகளையும், அதற்கு அவர்அளித்த பதில்களையும் “’இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி
கேட்கப்படும் கேள்விகள்”(Frequently Asked Questions) என்ற தலைப்பில் இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தின் (Islamic Research Foundation – I R F) வலைமனையில் ஆங்கில மொழியில் தொகுத்தளித்துள்ளார்கள். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும்
– அறிவியல் ரீதியாகவும் – தர்க்க ரீதியாகவும் டாக்டர்ஜாகிர்நாயக் அளித்துள்ள பதில்கள் அனைத்து தரப்பினரையும் இஸ்லாத்தைப் பற்றி தெளிவடையச் செய்யும் என்பதில் ஆச்சரியமில்லை.
இறை நாட்டத்தில் மேற்படி கேள்விகளையும் – பதில்களையும் தமிழ் அறிந்த அனைவரும் – படித்து – இஸ்லாத்தைப் பற்றி தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்படி கேள்வி – பதில்களின் ஆங்கில தொகுப்பினை தமிழாக்கம் செய்துள்ளேன். படித்து – சிந்தித்து – பயன்பெற வேண்டுகிறேன்.
டாக்டர்ஜாஹிர்நாயக் அவர்களின் முன்னுரை:
இஸ்லாத்தை மாற்று மதத்தவருக்கு எடுத்துச் சொல்லும்போது, அதன் சாதகமான கொள்கைகளை சிறப்பித்து சொல்லுவதால் மாத்திரம் மாற்று மதத்தவர்களில் பலர்உண்மையான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இஸ்லாத்தைப் பற்றி அவர்களது உள்ளத்தில் இருக்கும் சில கேள்விகள் நம்மால் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றது. மாற்று மதத்தவர்கள்
நம்முடைய வாதங்களை ஏற்றுக் கொள்ள முற்படும் அதே வேளையில், ”ஓ..! ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள்தானே நீங்கள்”” ”பெண்களை பர்தாவுக்குள் அடைத்து வைத்து – பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவர்கள்தானே நீங்கள்”” “”அடிப்படைவாதக் கொள்கைகளை உடையவ ர்கள்தானே நீங்கள்”” என்று நம்மைக் கேட்கக் கூடும்.
நான் மாற்றுமத்தவர்களைச் சந்திக்கும் போது இஸ்லாத்தில் அவர்கள் தவறாகக் கருதுவது என்ன என்று கேட்பேன். மிகக் குறைந்த அளவில் அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்து வைத்திருக்கும் செய்திகளைக் கொண்டு – அது சரியோ – தவறோ – மேற்படி செய்தி எந்த வழியில் அல்லது எந்த விதத்தில் பெறப்பட்டிருந்தாலும் – இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்கள் தவறாகக் கருதுவது என்ன என்று கேட்பேன். அவ்வாறு நான் கேட்பது, அவர்களை வெளிப்படையாக பேசத் தூண்டும்.
அவ்வாறு அவர்கள் வெளிப்படையாக பேசும் சிலவேளைகளில் அவர்கள் இஸ்லாத்தை விமரிசித்தாலும், மனோதிடத்துடன் அதனை நான் கேட்டுக் கொள்வேன்.
இஸ்லாமிய மார்க்கம் பற்றி மாற்று மதத்தவருக்கு இருக்கும் மொத்தச் சந்தேகங்களையும் இருபது கேள்விகளில் அடக்கிவிடலாம் என்பது கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் பணியில் நான் அனுபவரீதியாக உணர்ந்த உண்மை.
”இஸ்லாமிய மார்க்கத்தில் நீங்கள் காணும் தவறு என்ன?”” என்று மாற்று மதத்தவரை நீங்கள் எப்போது கேட்டாலும் அவர்கள் ஐந்து அல்லது ஆறு கேள்விகளை உங்களிடம் எடுத்து வைப்பார்கள்.
அவர்கள் எடுத்து வைத்த அந்த ஐந்து அல்லது ஆறு கேள்விகளும், பொதுவாக உள்ள இந்த இருபது கேள்விகளுக்குள் அடங்கி விடும்.
நீங்கள் அளிக்கும் தர்க்க ரீதியான பதில்கள், பெரும்பான்மையோர்உண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்ய வழிவகுக்கும்.
இந்த பொதுவான இருபது கேள்விகளுக்கும் – அதற்கான காரண கா ரியங்களுடனும், தர்க்க ரீதியாகவும் பதிலளிப்பது சிறந்த வழிமுறையாகும். இஸ்லாமியர்கள் நான் இத்துடன் அளித்திருக்கும் பதில்களை நினைவில் வைத்துக்கொண்டால் – அல்லது மனப்பாடம் செய்து கொண்டால், மாற்று
மதத்தவருக்கு பதிலளிப்பதில் இறைநாட்டத்தில் நிச்சயமாக நாம் வெற்றிபெறலாம்.
நாம் அவர்களுக்கு அளிக்கும் பதிலில் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய முழு உண்மைகளைத் தெரிந்து கொண்டு திருப்தியடையாமல் இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள், அவர்களின் உள்ளங்களிலிருந்து அகற்றப்படும் என்பது திண்ணம்.
ஒரு சில மாற்று மதத்தவர்கள் வேண்டுமெனில் உங்களது வாதத்திற்கு எதிர்வாதம் புரிய முன்வரலாம்.
அவர்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தை எடுத்துரைக்க நமக்கு மேலும் சில விபரங்கள் தேவைப்படும்.
மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு கேள்வியாக தொடரும்…
Good job…