Home / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை / பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |

பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது:

ஏனைய தொழுகைகளைப் போல் ஜனாஸா தொழுகையிலும் பெண்கள் ஆண்களோடு ஜமாஅத்தாக கலந்து கொள்ளலாம்.

ஆண்களுக்கு ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்டது போல் பெண்களுக்கும் ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். அதற்கு நபிகளாரின் மனைவிமார்கள் ஜனாஸா தொழுகை தொழுத செயற்பாடு ஆதாரமாக அமையப் பெறுவதைப் பார்க்கலாம்.

ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இறந்தபோது அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப் போவதாகவும் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது பிரேதம் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டுவந்து,அவர்கள் தொழுதுகொள்வதற்காக வைக்கப்பட்டது. பிறகு “மகாஇத்” எனும் இடம் நோக்கி இருந்த “பாபுல் ஜனாயிஸ்” தலைவாயில் வழியாகப் பிரேதம் வெளியே கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மக்கள் குறை கூறுவதாகவும் “பிரேதங்களைப் பள்ளிவாசலுக்குள் கொண்டுசெல்லப்படாது” என்று அவர்கள் பேசிக் கொள்வதாகவும் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான் “மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப்பட்டுக் குறை கூறுகின்றனர்? பள்ளிவாசலுக்குள் ஒரு பிரேதத்தைக் கொண்டு சென்றதற்காக எங்களை அவர்கள் குறைசொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப்பகுதியில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினேன்.

இதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹிமஹுழ்ழாஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1771

மேற்குறிப்பிட்ட செய்தி பெண்கள் ஜனாஸா தொழுவது மார்க்கமாக்கப்பட்ட ஓர் காரியம் என்பதை உணர்த்துகிறது. அதே நேரம் பெண்கள் ஜனாஸா தொழ முடியாது என்றால் ஏனைய நபித் தோழர்கள் நபிகளாரின் மனைவிமார்கள் வேண்டிய போது தடை செய்திருப்பார்கள். அது மாத்திரமில்லாமல் ஜனாஸா தொழுகை மற்றும் அதோடு தொடர்பு பட்ட காரியங்களை விளக்கிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்கள் ஜனாஸா தொழுகை தொழ முடியாது என்றால் அதையும் விளக்கியிருப்பார்கள். ஆனால் ஜனாஸா தொடர்பான சட்டங்களில் பெண்களுக்கு தடை செய்யப்பட்ட அம்சம் அவர்கள் ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வதை மட்டும் தான். அதையும் ஹராம் என்ற அடிப்படையில் அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் தடுக்கவில்லை. ஆண், பெண் சேர்ந்து ஜனாஸாவை பின் தொடரும் போது பித்னாக்கள் ஏற்பட்டு விடலாம் என்பதால் தான் தடுத்திருக்க முடியும் என்பதை பின் வரும் நபி மொழியினூடாக விளங்க முடிகிறது.

ஜனாஸாவை பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.

இதை உம்மு அதிய்யா(ரழியழ்ழாஹு அன்ஹா) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1278

எனவே, “வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை” என்ற வார்த்தை ஆண்களோடு சேர்ந்து பெண்கள் ஜனாஸாவை பின் துயராமல் இருப்பது சிறந்தது என்பதைக் காட்டுகிறதே தவிர ஆண்களோடு சேராமல் ஜனாஸா தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாயலுக்கு வருவதையோ அல்லது பெண்கள் வீடுகளில் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதையோ தடுக்கவில்லை எப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆண்களோடு பெண்கள் சேர்ந்து ஜனாஸாவை பின் தொடர்வதைத்தான் அழ்ழாஹ்வின் தூதர் தடுத்திருக்கலாம் என்பதை பின்வரும் நபி மொழியினூடாகவும் புரிய முடிகிறது.

இறைத்தூதர்(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்”
(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை.

இதை உஸாமா இப்னு ஸைத்(ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5096

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரிகளே, ஜனாஸா தொழுகை உங்களுக்கும் மார்க்கமாக்கப்பட்ட ஒரு தொழுகை. உங்கள் உரிமையை நீங்கள் உலமாக்களை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். ஏன் யாருடைய ஜானாஸாவிற்காகவோ மதீனா, மஸ்ஜிதுந் நபவியில் தொழுகுறீர்! மக்கா, மஸ்ஜிதுல் ஹராமில் தொழுகிறீர்! தொழுகையில் அவருக்காக பிரார்திக்குறீர்! உங்களுடைய தாய், தந்தைக்காக, பாச மிகு பிள்ளைக்காக, ஏனைய உற்றார் உறவினர், அயலவருக்காக அவர்களது பாவ மன்னிப்புக்காக உஹுத் மலைக்கு ஒப்பாக்கப்பட்ட நன்மையை அடைந்து கொள்வதற்காக உங்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள கூடாது? எதற்காக நன்மைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டும்? ஒன்று உங்களுடைய வீடுகளில் ஜனாஸா தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு தருமாறு நீங்கள் கோர வேண்டும். அல்லது ஆண்களோடு சேராமல் பள்ளிவாயலுக்கு சென்று ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள அனுமதி தருமாறு கோர வேண்டும். ஏனெனில் இது உங்கள் உரிமை! (கடமையான தொழுகையில் கூட பெண்கள் ஜமாஅத்தோடு தொழும் உரிமை பறிபோனது வேறு அமசம்)

சமூகத்தில் பெண்கள் ஜனாஸா தொடர்பான விடயங்களில் தூரமாக்கப்பட்டிருப்பதற்கு பின்வரும் செய்தி காரணமாக அமையலாம் என நினைக்கிறேன்.

ليس للمرأة نصيب في الجنازة

ஜனாஸாவிலே பெண்களுக்கு எந்தவொரு பங்கும் கிடையாது.

இந்த செய்தியைப் பொறுத்தவரை எந்தவொரு அடிப்படையுமற்ற செய்தியாகும்.

எனவே, நம் சமூகத்தில் ஒழிக்கப்பட்ட ஒரு காரியமான பறிக்கப்பட்ட ஒரு உரிமையான பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதை நாம் தான் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் கோரும் பட்சத்தில் யாராலும் மறுக்க முடியாது என்பதையும் மேற் கூறப்பட்ட நபி மொழிகளினூடாக அறிந்து கொள்ள முடிகிறது.

அழ்ழாஹு அஃலம்.

-அல் ஹாபிழ் ZM. அஸ்ஹர் (பலாஹி)(மதீனா, பல்கலைக்கழக மாணவன்)

Check Also

02 : நோயாளிகள் செய்ய வேண்டியவை

சிறப்பு பயான் நிகழ்ச்சி, ஜனாஸாவின் சட்டங்கள், ஃபிக்ஹ் | பாடம் – 2 | சிறப்புரை : அஷ்ஷேய்க் அன்ஸார் …

Leave a Reply