Home / அகீதா (ஏனையவைகள்) / முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (04) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (04) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும்.

குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம்.

செத்துப் போன வாதங்களை உயிர்ப்பிப்ப தற்காக இந்த ஆக்கம் எழுதப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரில் வழிகெட்ட சிந்தனைகளை இறக்குமதி செய்த அனைவரும் குர்ஆன், ஹதீஸின் பெயரில்தான் இறக்குமதி செய்தனர். இன்றும் அதே நிலை நீடிக்கின்றது. எமது ஈமானை நாம் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால் இது பற்றிய விழிப்புணர்வு அவசியமாகும்.

அடுத்து, இஸ்லாத்தில் இல்லாத ஒரு கொள்கையை உருவாக்கிவிட்டு அதற்கு சாதகமாக அவர்கள் எப்படியெல்லாம் குதர்க்கம் புரிந்தனர் என்பதைப் புரிந்து கொண்டால், தப்பான ஒரு கொள்கைக்கு சாதகமாகக் கூட சிலர் குர்ஆன், சுன்னாவை வளைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். குர்ஆன், சுன்னாவுக்கான சரியான பொருளைப் புரிந்து கொள்ள, அவற்றை ஆரம்ப கால அறிஞர்கள் அதாவது, சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபித்தோழர்கள், தாபிஈன்கள் போன்ற நல்லவர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்ற விபரம் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், குப்ரிய்யத்தான கொள்கைகள் தலைகாட்டும் போதெல்லாம் அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் எவ்வளவு நுணுக்கமான ஆழமான பார்வையுடன் அவற்றை அணுகி அழித்துள்ளனர் என்பதையும் புரிய முடியும். அத்தகைய ஆழமான, ஆரோக்கியமான, நுணுக்கமான பார்வையுள்ள அறிஞர்களின் மறைவுகள்தான் இந்த சமூகத்தில் மிகப்பெரும் இழப்பாகும்.

முஃதஸிலா வாதம்:

குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை குர்ஆனே கூறுகின்றது.

‘நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு, இதனை அரபி(மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாம் ஆக்கினோம்.” (43:3)

இங்கே ‘ஜஅல்னாஹு” என்று அல்லாஹ் கூறுகின்றான். ‘ஜஅல” என்றால் படைத்தான் என்பதே அர்த்தமாகும். அல்குர்ஆனில் ‘ஜஅல” ஆக்கினான் என்பது ‘ஹலக” படைத்தான் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான ஆதாரங்களைக் காணலாம். இப்படிக் கூறி பின்வருவன போன்ற வசனங் களைத் தமது வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் கூறினர்.

(பார்க்க – (2:22, 30, 66, 125), (6:1, 6, 96, 97), (7:27, 189), (10:5, 67), (13:3), (15:16 ), 16:78), (17:12), (20:53), (25:47), (27:61)

இவ்வாறு அவர்கள் வசனங்களை அடுக்கிக் கொண்டு செல்லும் போது பார்க்கின்ற பாமர மக்கள் ஆதாரங்களை அடுக்கடுக்காக அள்ளி வீசுவதாகவே கருதுவர். வழிகேட்டை இறக்குமதி செய்யும் பலரும் சம்பந்தமில்லாமல் வசன எண்களை அள்ளி வீசி மக்கள் மனதை மயக்கவும், மாற்றவும் முயற்சித்து வருகின்றனர். இந்த மாய வலையை மதி கொண்ட அறிஞர்கள் யூகித்துக் கொள்கின்றனர். மதிகெட்டவர்கள் இவர்களின் சதி வலையில் வீழ்ந்து சத்திய வழியில் இருந்து சருகிச் செல்கின்றனர்.

அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களின் பதில்:

இந்த வாதத்திற்கு பதில் சொல்லும் போது இஸ்லாமிய அறிஞர்கள் முஃதஸிலாக்களிடம் சில கேள்விகளைக் கேட்டனர். ‘ஜஅல” என்றால் ‘ஹலக” அதாவது படைத்தான் என்பதுதான் உங்கள் வாதமா? ஆம்!, அப்படித்தான். அப்படித் தான் சொல்கின்றோம். இனியும் அப்படித்தான் சொல்வோம். படைப்புக்களை அல்லாஹ் தனித்துப் படைத்தானா அல்லது படைக்கும் விடயத்தில் அல்லாஹ்வுடன் யாரும் கூட்டு சேர்ந்தனரா என்று கேட்டனர்.

அதற்கு முஃதஸிலாக்கள்: இல்லை இல்லை, அல்லாஹ் தனியாகவே படைத்தான். அதில் அவனுடன் யாரும் கூட்டுச் சேரவில்லை.

மனிதர்களில் சிலர் குர்ஆனைப் படைத்தனர் என்று யாராவது சொன்னால் அவன் முஃமினா? காபிரா? எனக் கேட்கப்பட்ட போது, இல்லை அவன் காபிர். அவனது இரத்தம் ஹலாலாகும் என்று முஃதஸிலாக்கள் பதில் கூறினர்.

அல்லாஹ்வை மனிதர்கள் படைத்தார்கள் என்று சொல்பவன் காபிரா? முஃமினா? எனக் கேட்ட போதும் முஃதஸிலாக்கள் காபிர்கள் என்றனர்.

இவ்வாறே மனிதர்களில் சிலர் மலக்குகளைப் படைத்தனர் என்று கூறினால் அல்லாஹ்வுக்கு இணைகளைப் படைத்ததாகக் கூறினால் அவனைப் பற்றி என்ன கூறுவீர்கள் என்று கேட்ட போதும் அவனைக் காபிர்கள் என்று கூறுவோம் என்று பதில் கூறினர்.
இவ்வாறு பல கேள்விகளைக் கேட்ட பின்னர் நீங்கள் காபிர்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாளர்களாகிவிட்டீர்கள் எனக் கூறி குர்ஆனில் இருந்து ஆதாரங்களை அடுக்கினர்.

‘நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையே உங்களுக்குப் பொறுப்பாளனாக ஏற்படுத்தியிருக்கிறீர்கள்….” (16:91)

‘ஜஅல” என்பதற்குப் படைத்தான் என்பது அர்த்தம் என்றால் ‘கத்ஜஅல்துமுல்லாஹ் கபீலா” அல்லாஹ்வையே பொறுப்பாளனாக படைத் துள்ளீர்கள் என்று அர்த்தமாகும். இந்த அர்த்தத்தைச் செய்தால் அல்லாஹ்வைச் சில மனிதர்கள் படைத்தார்கள் என்று அர்த்தப்படும். நீங்கள் காபிராகிவிடுவீர்கள்.

அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள் (2:224) என குர்ஆன் கூறுகின்றது. ‘ஜஅல’ என்றால் படைத்தான் என்பது அர்த்தம் என்றால் அல்லாஹ்வைத் தடையாகப் படைக்காதீர்கள் என்று அர்த்தப்படும். இது பொருந்துமா?

‘அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகின்றனர்.” (16:57)

என்ற மேற்படி வசனத்தில் ‘ஜஅல” பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஜஅல” என்றால் படைத்தான் என்பது அர்த்தம் என்றால் அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களைப் படைக்கின்றனர் என்று அர்த்தம் மாறுபடும். இது சரியா?
‘அர்ரஹ்மானின் அடியார்களான வானவர்களைப் பெண் மக்களாக அவர்கள் ஆக்குகின்றனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்களது சாட்சியம் பதிவு செய்யப்பட்டு இவர்கள் (மறுமையில்) விசாரிக்கப்படு வார்கள்.” (43:19)

‘ஜஅல” என்பதற்குப் படைத்தான் என்பது அர்த்தமென்றால் ரஹ்மானின் அடியார்களான வானவர்களைப் பெண்களாகப் படைக்கின்றனர் என்று வரும். இது குப்ர் அல்லவா?
‘அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணையாளர்களை ஏற்படுத்திக் கொண்டனர். ‘நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக நீங்கள் செல்லுமிடம் நரகமாகும்” என (நபியே!) நீர் கூறுவீராக!” (14:30)

அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்துகின்றனர் என்பதற்கு இவர்கள் சொல்வது போல் அர்த்தம் செய்தால் அல்லாஹ்வுக்கு இணையாளர்களைப் படைத்தனர் என்று அர்த்தப்படும்.
‘அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக இவர்கள் ஜின்களை ஆக்கிவிட்டனர். அவனே அவர்களைப் படைத்துள்ளான். எவ்வித அறிவுமின்றி ஆண் மக்களையும், பெண் மக்களையும் அவனுக்கு கற்பனை செய்கின்றனர். அவன் தூய்மையானவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவனாகி விட்டான்.” (6:100)

ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஆக்கிவிட்டனர் என்பதற்கு இவர்கள் சொல்வது போல் அர்த்தம் செய்தால் ஜின்களை அல்லாஹ்வுக்கு நிகராக இவர்கள் படைத்தனர் என அர்த்தம் அமைந்ததாகிவிடும்.

”அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எதையும் இறக்கி வைக்கவில்லை” என அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனது கண்ணியத்திற்கு ஏற்றமுறையில் அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. ஒளியாகவும், மனிதர்களுக்கு நேர்வழியாகவும் மூஸா கொண்டுவந்த வேதத்தை இறக்கியவன் யார்? எனக் கேட்பீராக! அதை நீங்கள் (தனித்தனி) ஏடுகளாக ஆக்கி அவற்றில் (சிலதை) வெளிப்படுத்துகின்றீர்கள். அதிக மானதை மறைத்தும் விடுகின்றீர்கள். நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறிந்திராதவற்றைக் கற்றுக் கொடுக்கப்பட்டீhர்களே (அந்த வேதத்தை இறக்கியவன் யார்? எனக்கேட்டு) அல்லாஹ்தான் என்று கூறுவீராக! பின்னர் (வீண் விவாதத்தில்) அவர்கள் மூழ்கி, விளையாடிக் கொண்டிருப்பதிலேயே அவர்களை விட்டு விடுவீராக.” (6:91)

தவ்றாத் வேதத்தை தனித்தனி ஏடுகளாக ஆக்கினீர்கள் என்பதை இவர்கள் கூறுவது போல் அர்த்தம் செய்தால் தவ்றாத்தை தனித்தனி ஏடுகளாகப் படைத்தீர்கள் என்று அர்த்தம் செய்ய நேரிடும்.

‘(வேதத்தை) கூறுபோட்டவர்கள் மீது (வேதனையை) நாம் இறக்கியதைப் போன்று இக்குர்ஆனைப் பல பிரிவுகளாக ஆக்கியோர் மீதும் (இறக்குவோம்).” (15:90-91)

‘ஜஅல” என்பதற்குப் படைத்தான் என்று அர்த்தம் செய்தால் குர்ஆனை மனிதர்களில் சிலர் படைத்தனர் என அர்த்தம் செய்ய நேரிடும்.

எனவே, குர்ஆனை அறபி மொழியில் ஆக்கினோம் (16:57) என்ற வசனத்தை வைத்து அறபி மொழியில் படைத்தோம் என அர்த்தம் செய்தால் அதுதான் அதன் அர்த்தம் என அடம் பிடித்தால் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்படும் என இஸ்லாமிய அறிஞர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வீசி அவர்களின் முதுகெலும்பை முறித்தனர். ஆனால், வழிகேட்டை விலை கொடுத்து வாங்கியவர்கள் தமது முட்டாள் தனமான வாதத்தில் முரட்டுத்தனமான பிடிவாதத்தில் இருந்தனர்.

Check Also

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி ஜித்தா தஃவா சென்டர் ஹை அஸ்ஸலாமா சவூதி அரேபியா …

Leave a Reply