அர்பவூன நவவிய்யா நூல் PDF (Download)
بسم الله الرحمن الرحيم
القواعد الأربع للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي
இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள்
நுாலாசிரியர் : இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்)
விரிவுரை : ஸாலிஹ் இப்னு அப்தில்லாஹ் அல்உஸைமீ (ரஹ்)
மொழிபெயர்ப்பாளர் : S. அப்பாஸ் அலீ Misc
நுாலாசிரியர் குறிப்பு
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் நான்கு அடிப்படைகள் என்ற நுாலை அரபுமொழியில் தொகுத்துள்ளார்கள்.
சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாதிலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உயைனா என்ற ஊரில் இந்த அறிஞர் ஹிஜ்ரீ 1115 ம் ஆண்டு பிறந்தார்.
சிறுவயதிலேயே குா்ஆனை முழுமையாக மனனமிட்டார். மார்க்கக்கல்வியை சிறப்பாக கற்றுத்தேர்ந்து தான் மரணிக்கும் வரை அழைப்புப் பணி செய்தவர். அன்னாருடைய காலத்தில் இணைவைப்பும் பித்அத்களும் இஸ்லாமியர்களிடம் அதிகமாக பரவி இருந்தது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இந்த வழிகேடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட துன்பங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொண்டார்.
அப்போது சவூதியின் அமீராக முஹம்மது இப்னு சவூத் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். அமீர் அவர்கள் அறிஞர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.. இதனால் இணைவைப்பும் பித்அத்களும் ஒழிந்து மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கி நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றலானார்கள்.
இந்த மறுமலர்ச்சி அரபு நாட்டுடன் நின்றுவிடவில்லை. இந்த அறிஞர் அரபுமொழியில் பல்வேறு நுாற்களை தொகுத்துள்ளார். அவை அனைத்தும் அதிக பலன்களைக் கொண்டவை. அரபு அல்லாத நாடுகளிலும் தவ்ஹீத் புரட்சி ஏற்படுவதற்கும் இவர்கள் எழுதிய நுாற்களே அடிப்படையாகும்.
ஸலாசத்துல் உசூல் வஅதில்லதுஹா (இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்) கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவ நுால்) அல்கவாயிதுல் அர்பஉ (நான்கு அடிப்படைகள்) ஃபள்லுல் இஸ்லாம் (இஸ்லாமின் சிறப்புகள்) கஸ்புஸ் சுபுஹாத் (சந்தேகங்களை தெளிவுபடுத்துதல்) ஆகிய நுாற்கள் இஸ்லாமிய கொள்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் நுாற்களாகும். இவையல்லாத வேறு பல நல்ல நுாற்களையும் தொகுத்துள்ளார். ஹிஜ்ரீ 1206 ம் வருடத்தில் மரணித்தார்கள். அல்லாஹ் இவர்களது பாவத்தை மன்னித்து சொர்க்கத்தை வழங்குவானாக.
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ கலிமாவை மொழியும் பலர் இக்கலிமாவிற்கு நேர் எதிரான இணைவைப்புக்காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
இக் கலிமாவை மறுக்க வேண்டும் என்றோ இதற்கு நேர்எதிராக நடக்க வேண்டும் என்றோ இவர்கள் நினைப்பதில்லை. இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தாலும் இணைவைப்பைப் பற்றிய சரியானத் தெளிவு இவர்களிடம் இல்லை.
தவறான காரணங்களை கற்பித்துக்கொண்டு தாம் இணைவைக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர். எனவே இவர்கள் ஒருபக்கம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்துகொண்டும் இன்னொரு பக்கம் இணைவைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.
இன்னொரு சாரார் இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இவர்கள் இணைவைக்கும் மக்களை இணைவைப்பாளர்கள் என்றொ அவர்கள் செய்யும் செயலை இணைவைப்பு என்றோ கூறமாட்டார்கள். அவ்வாறு கூறக்கூடாது என்ற தவறான கொள்கையில் இருப்பார்கள். இதில் மென்மைப்போக்கை கடைபிடிப்பார்கள்.
இவர்களும் இணைவைப்பைப் பற்றி சரியாக அறியாதவர்கள் ஆவர். இந்நிலையில் உள்ளவர்கள் தற்போது இணைவைக்காவிட்டாலும் காலப்போக்கில் இணைவைப்பில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஓரிறைக் கலிமாவை மொழிந்த நாம் எக்காலத்திலும் இணைவைப்பில் விழாமல் இருக்க வேண்டும். இதற்கு இப்புத்தகத்தில் கூறப்படும் நான்கு அடிப்படைகள் மிக உதவியாக இருக்கும். ஆண் பெண் பெரியவர் சிறுவர் என அனைவரும் இந்த நான்கு அடிப்படைகளை மனனம் செய்வது அவசியமாகும்.
இவற்றை தெளிவாக அறிந்து மனதில் பதியவைத்தால் ஓரிறைக்கொள்கை ஆழப்பதிந்துவிடும். மறுபடியும் இணைவைப்பில் விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை அல்லாஹ் நாடினால்!
ஷிர்க்கிலிருந்து நாம் முழுமையாக விலகுவதற்கு இரண்டு விசயங்களை அறிய வேண்டும்.
1. நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்க அறிவு இருந்தால் இணைவைப்பில் விழாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள இயலும்.
2. இத்துடன் நபி(ஸல்) அவர்கள் யாருக்கு அழைப்புப் பணிச் செய்தார்களோ அந்த இணைவைப்பாளர்களின் நம்பிக்கை செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டாலும் இணைவைப்பிலிருந்து தப்பிக்கலாம். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இணைவைப்பாளர்கள் பற்றி தெளிவுபடுத்துவதே இந்த நுாலின் சாராம்சம். இது நான்கு அடிப்படைகளைக் கொண்டது.
இந்நுாலை மொழிபெயர்க்கும் ஆவல் எனக்குள் இருந்தது. சமீபத்தில் சவூதியின் மூத்த மார்க்க அறஞர்களில் ஒருவரும் மக்கா மற்றும் மதீனா அகிய இரு ஹரம்களில் இஸ்லாமிய கல்வியை போதிக்கும் ஆசிரியருமான ஷைக் ஸாலிஹ் இப்னு அப்தில்லாஹ் அல்உஸைமீ (ரஹ்) அவர்கள் அல்கோபரில் பள்ளிவாசல் ஒன்றில் இந்நுாலை முழுமையாக மக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். அந்த வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு வழங்கினான். இந்நுாலுக்கு அவர்கள் அளித்த விளக்கங்கள் மிகப் பலனுள்ளவை.
எனவே இந்நுாலை மொழிபெயர்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதற்குரிய விளக்கங்களையும் சேர்த்துக் கொடுத்தால் இது சமூகத்திற்கு அதிக பலனை அளிக்கும். எனவே இந்நுாலை படிப்பவர்கள் தானும் கற்று பிறருக்கும் எடுத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு
S. அப்பாஸ் அலீ Misc
நான்கு அடிப்படைகள்
அளவற்ற அருளாளனும் நிகரில்லா அன்புடையோனுமான அல்லாஹ்வின் பெயரால் (துவங்குகிறேன்)
அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்.
மகத்தான் அர்ஷிற்குரிய இறைவனும் சங்கைக்குரியோனுமான அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்களுக்கு பொறுப்பேற்பானாக! நீங்கள் எங்கிருந்தாலும் பாக்கியம் (பரகத்) பொருந்தியவனாக உங்களை ஆக்குவானாக!
1. தனக்கு கொடுக்கப்பட்டால் நன்றி செலுத்தபவராகவும்
2. தான் சோதிக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளக்கூடியவராகவும்
3. குற்றமிழைத்தால் பாவமன்னிப்புத் தேடுபவராகவும் அல்லாஹ் உங்களை ஆக்குவானாக!
இந்த மூன்று விசயங்களே நற்பாக்கியத்தை அடைவதற்கான வழிகள்.
அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும். அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் இவ்வாறே கட்டளையிட்டுள்ளான். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான்.
51وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ (56)
ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை.
அல்குா்ஆன் (51 56)
அல்லாஹ் உங்களை அவனை வணங்குவதற்காகவே படைத்தான் என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். இதன்பின் இபாதத் (வணக்கம்) என்பது ஓரிறைக்கொள்கை இருந்தாலே அது வணக்கம் என்று சொல்லப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
உளூஉள்ள நிலையில் உளூவை முறிக்கும் காரியங்கள் ஏற்பட்டால் உளூ முறிந்துவிடுவதைப் போன்று ஒருவர் அல்லாஹ்வை
வணங்குவதுடன் அவரிடம் இணைவைப்பு சேர்ந்துவிட்டால் அந்த வணக்கம் பாழாகிவிடும்.
எனவே இணைவைப்பு வணக்கத்துடன் கலந்தால் அது வணக்கத்தை பாழாக்கிவிடும். அமலை அழித்துவிடும். இணைவைத்தவர் நிரந்தர நரகத்திற்குரியவராகிவிடுவார். இதை நீங்கள் அறிந்துகொண்டால் நீங்கள் கட்டாயம் அறிய வேண்டிய விசயத்தை அறிந்துகொண்டவராவீர்கள். இந்த ஆபத்தான வலையிலிருந்து அல்லாஹ் உங்களை விடுவிக்கலாம்.
அல்லாஹ்விற்கு இணைகற்பிப்பதே அந்த ஆபத்தான வலையாகும். இதைப் பற்றியே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ (48)4
தனக்கு இணைகற்பிப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதுவல்லாதவற்றை தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான்.
அல்குா்ஆன் (4 48)
அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ள நான்கு அடிப்படைகளை அறிந்துகொள்வதின் மூலமே இந்த இணைப்பிலிருந்து விடுபட முடியும்.
விரிவுரை
1. பரகத் (அபிவிருத்தி) என்பது நன்மைகள் நிறைந்திருப்பதும் அவை நிலைத்திருப்பதையும் குறிக்கும் சொல்லாகும்.
2. அல்லாஹ் ஒருவனை மட்டுமே முன்னோக்கி வழிபடுதல் என்பது ஹனீஃபிய்யா (الحنيفية) என்ற சொல்லின் பொருளாகும். இப்பதத்தை அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கூறியுள்ளான்.
இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
1. மக்கத்து இணைவைப்பாளர்கள் தாங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் இருப்பதாகவும் அவர்களே தங்களுடைய தந்தை என்றும் கூறிவந்தனர். எனவே அல்லாஹ் இக்கொள்கையை இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறுகிறான்.
2. இப்ராஹீம் (அலை) அவர்களை அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கும் மக்களுக்கும் இமாமாக (தலைவராக) அல்லாஹ் நியமித்தான். இச்சிறப்பு அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவன் வழங்கவில்லை.
3. இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓரிறைக்கொள்கையை கடைபிடிப்பதில் மற்ற அனைவரையும் காட்டிலும் உயர்வான நிலையை
அடைந்தார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் நண்பன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் பரம்பரையில் வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இந்நிலையை அடையவில்லை. மகனை விட தந்தை முற்படுத்தப்படுவார் என்ற அடிப்படையில் ஹனீஃபிய்யா என்பது இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
3. இபாதத் என்ற பதம் இரு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1. இறைவன் விரும்புவதை செய்வதும் அவன் வெறுப்பதை விட்டும் விலகி இருப்பதும் வணக்கம் (இபாதத்) ஆகும்.
2. அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதும் இபாதத் ஆகும். அதாவது தவ்ஹீத் என்ற பொருளிலும் இபாதத் என்ற சொல் பயன்படுத்தப்படும்.
4. தவ்ஹீத் என்றால் அல்லாஹ்விற்குரிய உரிமைகள் அனைத்தும் அவன் ஒருனுக்கு மட்டுமே உரியது என்று நம்புவதும் இவற்றில் எந்த ஒன்றையும் பிறருக்கு உண்டு என நம்பாமல் இருப்பதாகும். அல்லாஹ்வின் உரிமைகள் மூன்று வகைப்படும். இதனடிப்படையில் தவ்ஹீத் மூன்று வகைப்படும்.
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா – அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. இதை வேறு யாரும் செய்யவில்லை என்ற நம்ப வேண்டும். உதாரணமாக மழை பொழிய வைத்தல் உணவளித்தல் துன்பங்களை நீக்கும் வானம் பூமி அழிந்துவிடாமல் அவற்றை சீராக செயல்பட வைத்து நிர்வகித்தல் மரம் செடி கொடி அனைத்து உயிரினங்களையும் படைத்தல் ஆகிய காரியங்களே படைத்து பரிபாலித்தலாகும். இதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் செய்யவில்லை என நம்ப வேண்டும். இது தவ்ஹீது ருபூபிய்யா எனப்படும்.
2. தவ்ஹீதுல் அஸ்மாஉ வல்ஸிஃபாத் – அல்லாஹ்விற்கு மட்டும் பிரத்யேகமாக சில பெயர்களும் பண்புகளும் உள்ளன. உதாரணமாக அல் ஹய் (நித்திய ஜீவன்) அல்கய்யூம் (நிலைத்திருப்பவன்) அஸ்ஸமத் (தேவையற்றவன்) அஹத் (தனித்தவன்) ஆகிய பெயர்களைக் கூறலாம். குழந்தை இல்லை மனைவி இல்லை உறக்கம் இல்லை பலவீனம் இல்லை மறதி இல்லை அனைத்தையும் அறிதல் ஆகியவை அல்லாஹ்வின் பண்புகளாகும். இதுபோன்ற பண்புகள் பெயர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்ப வேண்டும். இது தவ்ஹீதுல் அஸ்மாஉ வஸ்ஸிபாத் எனப்படும்.
3. தவ்ஹீதுல் உலுாஹி்ய்யா – எவன் படைத்து பரிபாலிப்பவனாகவும் உயர்வான பெயர்களுக்கும் பண்புகளுக்கும் உரியவனாக இருக்கின்றானோ அவனே படைப்பினங்களின் வணகத்திற்கு தகுதியானவன் ஆவான். அவனே அல்லாஹ். எனவே வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நிறைவேற்றுவதும் அவனல்லாத வேறு யாரையும் வணங்காமல் இருத்தல் தவ்ஹீது உலுாஹிய்யா எனப்படும். இது படைப்பினங்கள் செய்ய வேண்டிய காரியமாகும். உதாரணமாக அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்தல். அவனுக்கு மட்டுமே அறுத்துப் பலியிடுதல் அவனுக்கு மட்டுமே நோ்ச்சை செய்தல் ஆகியவை சில வணக்கங்களாகும்.
5. தவ்ஹீதிற்கு முற்றிலும் முரணான ஷிர்க் என்பதும் மூன்று வகைப்படும்.
1. ருபூபிய்யாவில் இணைவைத்தல்
2. அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத்தில் இணைவைத்தல்
3. உலுாஹிய்யாவில் இணைவைத்தல்
6. மேலும் ஷிர்க் (இணைவைப்பு) என்பது அது ஏற்படுத்தும் விளைவை கவனித்தால் அதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.
1. பெரிய இணைவைப்பு – முன்பு சொல்லப்பட்ட அல்லாஹ்வின் மூன்று உரிமைகளில் ஏதாவது ஒன்றில் பிறரை இணையாக்குவதாகும். இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடுவார். உதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்வது பெரிய இணைவைப்பாகும். இது நிரந்தர நரகத்தில் தள்ளும்.
2. சிரிய இணைவைப்பு – அல்லாஹ்விற்காக செய்யப்படும் நற்காரியங்களில் புகழ்ச்சியை எதிர்பார்ப்பதாகும். இது முகஸ்துதி எனப்படும். இக்காரியம் பெரிய இணைவைப்புக்குரிய இலக்கணத்தில் நுழையாது. இணைவைப்பைப் போன்ற சாயல் இதில் தெரிவதால் இது சிறிய இணைவைப்பாகும். இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடமாட்டார். மாறாக ஈமானிய குறைபாடு உடையவராகவும் பாவியாகவும் ஆகிவிடுவார். உதாரணமாக அல்லாஹ்விற்காக தொழுதுகொண்டிருப்பவர் தன் எண்ணத்தை மாற்றி பிறரிடம் நற்பேறு வாங்குவதற்காக தொழுதல் சிறிய இணைவைப்பாகும். இது பாவம் என்றாலும் இது நிரந்தர நரகத்தில் தள்ளாது. இறைவன் நாடினால் இத்தகையோரை நரகத்தில் தண்டித்துவிட்டு சுவனத்திற்குள் அனுப்பலாம்.
1. முதல் அடிப்படை
அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் யாரிடம் போரிட்டார்களோ அந்த இறைமறுப்பாளர்கள் உயர்ந்தோனாகிய அல்லாஹ் மட்டுமே படைப்பாளன்; நிர்வகிப்பவன் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். இருப்பினும் இந்த நம்பிக்கை அவர்களை இஸ்லாமில் நுழைக்கவில்லை. (ஏனென்றால் அவர்கள் வணக்கத்தில் அல்லாஹ்விற்கு இணைகற்பித்தனர்) இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
வானம் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவி மற்றும் பார்வைப் புலன்களை கைவசம் வைத்திருப்பவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிரையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்ததையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என (நபியே) கேட்பீராக! அவர்கள் அல்லாஹ் என்று கூறுவார்கள். நீங்கள் அஞ்சமாட்டீர்களா? எனக் கேட்பீராக!
அல்குா்ஆன் (10 – 31)
2. இரண்டாவது அடிப்படை
இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் பரிந்துரை செய்வார்கள் ஆகிய காரணங்களுக்காகவே நாங்கள் அவர்களிடம் சென்று பிரார்த்தனை செய்கிறோம் என மக்கத்து இறைமறுப்பாளர்கள் கூறினர். இதற்கு பின்வரும் வசனங்கள் சான்றுகளாகும்.
அறிந்துகொள்ளுங்கள்! துாய்மையான வணக்கம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. அவனல்லாத பொறுப்பாளர்களை ஏற்படுத்திக்கொண்டோர் இவர்கள் எங்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைப்பார்கள் என்பதற்காகவே நாங்கள் இவர்களை வணங்குகிறோம் (எனக் கூறுகின்றனர்).
இவர்கள் முரண்பட்ட விசயத்தில் இவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பொய்கூறும் மோசமான இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டமாட்டான்.
அல்குா்ஆன் (39 – 3)
இவர்கள் அல்லாஹ்வை விடுத்து அவர்களுக்கு தீங்கிழைக்கவோ நன்மை செய்யவோ இயலாதவர்களை வணங்குகின்றனர். இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்கள் எனக் கூறுகின்றனர்.
அல்குா்ஆன் (10 – 18)
பரிந்துரை நிராகரிக்கப்பட்ட பரிந்துரை அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரை என இரு வகைப்படும்.
1. நிராகரிக்கப்பட்ட பரிந்துரை
இது அல்லாஹ் அல்லாதவர்களிடம் வேண்டப்படுகின்ற பரிந்துரையாகும். யாரும் இந்த பரிந்துரைக்கு சக்திபெறமாட்டார்கள். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
இறைநம்பிக்கையாளர்களே! வியாபாரம் நட்பு பரிந்துரை ஆகிய எதுவும் இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யுங்கள்.
அல்குா்ஆன் (2 – 254)
2. அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரை
இது அல்லாஹ்விடம் வேண்டப்படுகின்ற பரிந்துரையாகும். பரிந்துரை செய்பவர் பரிந்துரையின் மூலம் கௌரவிக்கப்படுவார். அல்லாஹ் யாருடைய சொல்லையும் செயலையும் பொருந்திக்கொண்டானோ அவருக்கு அவன் அனுமதி வழங்கிய பிறகே பரிந்துரை செய்ய முடியும். இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்.
அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்பவர் யார்?
அல்குா்ஆன் (2 -255)
விளக்கம்
1. அல்லாஹ்விடம் நெருங்கினால் பலன்களையும் தேவைகளையும் இலகுவாக பெறலாம் என மக்கா இறைமறுப்பாளர்கள் நம்பினர்.
2. மேலும் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து தங்களுக்கு ஆபத்துகளும் இழப்புகளும் வராமல் அவற்றைத் தடுப்பதற்கு இந்த தெய்வங்களின் பரிந்துரை உதவும் என நம்பினர்.
3. ஒருவர் மற்றவருக்காக அல்லாஹ்விடம் நன்மையை வேண்டுவதே பரிந்துரை ஆகும்.
4. அல்லாஹ்வின் அனுமதியும் பொருத்தமும் இல்லாத பரிந்துரை நிராகரிக்கப்படும்.
5. அல்லாஹ்வின் அனுமதியும் பொருத்தமும் உடைய பரிந்துரை ஏற்கப்படும்.
3. மூன்றாவது அடிப்படை
நபி(ஸல்) அவர்கள் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும் பலதரப்பட்ட மக்களை கண்டார்கள். அவர்களில் சிலர் வானவர்களை வணங்கினர். சிலர் இறைத்துாதர்களையும் நல்லடியார்களையும் வணங்கினர். சிலர் மரங்களையும் கற்களையும் வணங்கினர். சிலர் சூரியனையும் சந்திரனையும் வணங்கினர். நபி(ஸல்) அவர்கள் இவர்களை வேறுபடுத்திப் பார்க்காமல் இவர்கள் அனைவரிடமும் போரிட்டார்கள். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
குழப்பம் இல்லாது ஒழிந்து அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போரிடுங்கள்.
அல்குா்ஆன் (8 – 39)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சிலர் சூரியனையும் சந்திரனையும் வணங்கினார்கள். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ நீங்கள் சிரம்பணிய வேண்டாம். நீங்கள் அவனை மட்டும் வணங்குபவர்களாக இருந்தால் அவற்றைப் படைத்தவனான அல்லாஹ்விற்கே சிரம்பணியுங்கள்.
அல்குா்ஆன் (41 – 37)
அவர்கள் வானவர்களை வணங்கினார்கள் என்பதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
நீங்கள் வானவர்களையும் இறைத்துாதர்களையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள் என உங்களுக்கு கட்டளையிடுகின்ற தகுதி (இறைத்துாதர்) யாருக்கும் இல்லை.
அல்குா்ஆன் (3 – 80)
மக்கள் இறைத்துாதர்களை வணங்கினர். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
மர்யமின் மகன் ஈசாவே! அல்லாஹ்வுடன் என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக்கொள்ளுங்கள் என நீர்தான் மக்களிடம் கூறினீரா? என அல்லாஹ் கேட்டான். அப்போது அவர் நீ துாயவன்! உண்மைக்குப் புறம்பான கூற்றை கூறும் தகுதி எனக்கு இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியேன். நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன் எனக் கூறுவார்.
அல்குா்ஆன் (5 – 116)
மக்கள் நல்லடியார்களையும் வணங்கிக்கொண்டிருந்தனர். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
இவர்கள் யாரை அழைக்கின்றார்களோ அவர்களில் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் தங்கள் இறைவனிடம் நெருங்குவதற்குரிய வழியை தேடுகிறார்கள். அவனுடைய அருளை எதிர்பார்க்கின்றனர். அவனுடைய தண்டனையை அஞ்சுகின்றனர்.
அல்குா்ஆன் (17 – 57)
மக்கள் மரங்களையும் கற்களையும் வணங்கினர். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
லாத் உஸ்ஸாவையும் மற்றொரு மூன்றாவதான மனாத்தைப் பற்றியும் சிந்தித்தீர்களா?
அல்குா்ஆன் (53 – 19)
மேலும் இதற்கு அபூ வாகித் அல்லைஸி (ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தியும் சான்றாக உள்ளது.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர்களத்தை நோக்கிப் புறப்பட்டோம். அது நாங்கள் இறைமறுப்புக் கொள்கையிலிருந்து விலகி புதிதாக இஸ்லாமை ஏற்ற தருணம். இணைவைப்பாளர்களுக்கு ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கே அவர்கள் தங்குவார்கள். தங்களின் ஆயுதங்களை அதில் தொங்கவிடுவார்கள். அதற்கு தாது அன்வாத் எனக் கூறப்படும். நாங்கள் வேறு ஒரு இலந்தை மரத்தை கடந்துசென்றபோது அல்லாஹ்வின் துாதரே! இணைவைப்பாளர்களுக்கு ஒரு தாது அன்வாத் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்திக் கொடுங்கள் என நாங்கள் கேட்டோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் துாயவன்)
அவர்களுக்கு பல கடவுள்கள் இருப்பதுபோன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக! என மூசா (அலை) அவர்களின் சமூகத்தார் மூசா (அலை) அவர்களிடம் கேட்டதைப் போன்றல்லவா இக்கேள்வி உள்ளது! என் உயிர் எவன் கைவம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களுக்கு முன்சென்றோரின் வழியை நீங்கள் பின்பற்றிச் செல்வீர்கள் எனக் கூறினார்கள்.
திர்மிதி (2106)
4. நான்காவது அடிப்படை
நமது காலத்தில் வாழும் இணைவைப்பாளர்கள் முற்காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்களைவிட இணைவைப்பில் மிக மோசமான நிலையில் உள்ளனர். ஏனென்றால் முற்காலத்தவர்கள் மகிழ்ச்சியின் போது இணைவைத்தனர். துன்பம் ஏற்படும்போது அல்லாஹ்வை மட்டும் அழைத்தனர். ஆனால் நம் காலத்தில் உள்ள இணைவைப்பாளர்கள் இன்பத்தின் போதும் துன்பத்தின் போதும் எப்பொழுதும் இணைவைக்கின்றனர். இதற்கு பின்வரும் வசனம் சான்றாக உள்ளது.
அவர்கள் கப்பலில் பயனிக்கும் போது வணக்கத்தை அல்லாஹ்வி்ற்கு மட்டுமே உரித்தாக்கி அவனை (மட்டுமே) அழைக்கின்றனர். அவர்களை அவன் காப்பாற்றி நிலத்திற்கு வந்துவிட்டால் அப்போது இணைவைக்கின்றனர்.
அல்குா்ஆன் (29 – 65)
விளக்கம்
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இணைவைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு எதிராக நபி(ஸல்) அவர்கள் போரிட்டார்கள். அவர்களை காஃபிர்கள் என பிரகடனப்படுத்தினார்கள்.
தற்போது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் சமகால மக்கள் இணைவைப்பில் அன்றைய மக்கத்து காஃபிர்களையே மிஞ்சிவிட்டனர். அவர்களைக் காட்டிலும் கடும் இணைவைப்பில் மூழ்கியுள்ளனர். காஃபிராகிவிட்டனர். பின்வரும் 11 குறிப்புகளிலிருந்து இந்த உண்மையை அறியலாம்.
1. முற்காலத்தவர்கள் மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தனர். துன்பத்தின்போது அல்லாஹ்வை மட்டும் அழைத்தனர். ஆனால் தற்காலத்தவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றனர்.
2. முற்காலத்தவர் வானவர்கள் நபிமார்கள் நல்லடியார்கள் ஆகியோர்களை அல்லாஹ்விற்கு இணையாகக் கருதினா். மேலும் கற்களையும் மரங்களையும் இணையாக்கினா். அவர்கள் தீயவர்கள் யாரையும் அழைத்துப்பிரார்த்திக்கவில்லை. ஆனால் தற்காலத்தில் உள்ளவர்கள் தீயவர்களையும் பாவிகளையும் மார்க்கத்திற்கு முரணானவர்களையும் அல்லாஹ்விற்கு இணையாகக் கருதுகின்றனர்.
3. தங்களின் கொள்கை நபிமார்கள் கூறிய ஏகத்துவத்திற்கு எதிரானது என்பதை முற்காலத்தவர்கள் ஒப்புக்கொண்டனர். தங்களது கொள்கையில்தான் நபிமார்கள் இருந்தார்கள் என அவர்கள் வாதிடவில்லை. ஆனால் தற்காலத்தில் உள்ளவர்கள் தங்களின் நிலைபாட்டையே நபிமார்கள் பிரச்சாரம் செய்தனர் என உண்மைக்குப் புறம்பாக வாதிடுகிறார்கள்.
4. அகிலத்தை நிர்வகிக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என முற்காலத்தவர்கள் நம்பினர். இதில் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கவில்லை. ஆனால் தற்காலத்தவர்கள் இறைநேசர்கள் அகிலத்தை நிர்வகிப்பார்கள் என நம்புகின்றனர். இதிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கின்றனர்.
5. அல்லாஹ்வே மிகப்பெரிய இறைவன். தாங்கள் வணங்கும் கடவுள்கள் அந்த மிகப்பெரிய இறைவனிடம் தங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்து நன்மை செய்வார்கள் என்று முற்காலத்தவர்கள் நம்பினர். அல்லாஹ்வை முற்றிலுமாக புறக்கணித்து தங்கள் கடவுள்களை முழுமையாக அவர்கள் சார்ந்திருக்கவில்லை. ஆனால் தற்காலத்தவர்கள் அல்லாஹ்வை முற்றிலுமாக புறக்கணித்து தாங்கள் வணங்கும் கடவுள்களை மட்டுமே சார்ந்துள்ளனர்.
6. முற்காலத்தவர்கள் பெரும்பாலும் வணக்கவழிபாடு விசயத்திலேயே அல்லாஹ்வுக்கு அதிகம் இணைகற்பித்தனர். படைத்து பரிபாலித்தல் அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் ஆகிய விசயங்களில் அவர்களின் இணைவைப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தவர்கள் அல்லாஹ்வின் உரிமைகளான வணக்கவழிபாடுகள் படைத்து பரிபாலித்தல் அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் ஆகிய அனைத்திலும் இவர்களின் இணைவைப்பு அதிகமாக உள்ளது.
7. தற்காலத்தில் உள்ளவர்கள் தங்களது கடவுள்களை வணங்குவது தங்களின் கடமை; இதுவே அவர்களை மதிக்கும் வழிமுறை; இதை கைவிடுதல் கடவுள்களை அவமதிக்கும் செயல் என நம்புகின்றனர். ஆனால் முற்காலத்து இணைவைப்பாளர்களிடம் இத்தகைய நம்பிக்கை இருக்கவில்லை.
8. முற்காலத்தவர்கள் தாங்கள் செய்யும் காரியம் இணைவைப்பு என்பதை ஒப்புக்கொண்டனர். அவர்களுடைய கடவுள்களிடம் பிரார்த்தனை செய்வதை தாங்கள் அவர்களை வணங்குவதாக குறிப்பிட்டனர். ஆனால் தற்காலத்தில் உள்ளவர்கள் தாங்கள் செய்யும் காரியம் வணக்கம் இல்லை என வாதிடுகின்றனர். இது கடவுள்களை நேசிப்பதுதான் என கூறுகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் அவர்களை வணங்கவே செய்கின்றனர்.
9. முற்காலத்தவர்கள் உலகத்தேவைகளுக்காகவே தங்களது கடவுள்களிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் மறுமையிலும் தங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்பவில்லை. ஆனால் தற்காலத்தில் உள்ளவர்கள். தங்களது கடவுளர்கள் இவ்வுலகத் தேவைகளை நிறைவேற்றித்தருவதுடன் மறுமையிலும் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்புகின்றனர்.
10. முற்காலத்தவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதுடன் அல்லாஹ்வையும் அவனது புனிதச்சின்னங்களையும் மகத்துவப்படுத்தினர். ஆனால் தற்காலத்தவர்கள் தாங்கள் பிரார்த்திக்கும் இறைநேசர்களின் நினைவிடங்களுக்கு மட்டுமே செல்வார்கள். அவர்களிடம் மட்டுமே பிரார்த்திப்பார்கள். இது போன்று இவர்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதோ அங்கே தங்குவதோ இல்லை.
11. தற்காலத்தில் உள்ளவர்கள் அல்லாஹ் தாங்களது கடவுள்களின் உருவத்தில் காட்சியளிப்பான் என நம்புகின்றனர். முற்காலத்தவர்களிடம் இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கவில்லை.
மேலும் இஸ்மிய அகீதா நூல்களை அறிந்துகொள்ள www.qurankalvi.com