இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்….. (10)
ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..
இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து” இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார்.
‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.”
(யோவான் 18:40)
யோவானின் கருத்துப்படி அவன் ஒரு திருடன். லூக்காவும், மாற்கும் கலகக் காரனாகவும் கொலைகாரனாகவும் அவனை அறிமுகப்படுத்துகின்றனர்.
‘அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினி மித்தமும் கொலைபாதகத்தி னிமித்தமும் காவலிலே வைக்கப் பட்டிருந்தான்.”
(லூக்கா 23:19)
இதே கருத்தையே மாற்கு (15:7) இல் கூறுகின்றார்.
‘கலகம் பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.” (மாற்கு 15:7)
இதே வேளை, அப்போஸ்தவர் 3:14 இல் அவன் கொலைகாரன் என்று கூறப்பட்டுள்ளது. அவன் திருடனா?, கலகக்காரனா?, கொலைகாரனா? அல்லது வெறும் கொலைக் குற்றம் புரிந்தவனா? ஏன் இந்த முரண்பாடு? இந்த முரண்பாடுகள் அடிப்படை சம்பவத்தில் சந்தேகத்தை உண்டுபன்னவில்லையா?
சிலுவையைச் சுமந்தது யார்?
இயேசுவின் சிலுவையைச் சுமந்தது யார் என்பதைக் குறிப்பிடுவதிலும் ஏற்பாடுகள் முரண் படுகின்றன. சீமோன் என்பவன் சிலுவையைச் சுமக்கும்படி பலவந்தப்படுத்தப்பட்டதாக மாற்கு கூறுகின்றார்.
‘சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.” (மாற்கு 15:21)
இதே கருத்தையே மத்தேயு 27:32, லூக்கா 23:26 இருவரும் கூறுகின்றனர். ஆனால், யோவான் மூவருக்கும் முரண்படுகின்றார். ‘கொல் கொதா” எனப்படும் இடம் வரை இயேசுவே சிலுவையைச் சுமந்து சென்றதாகக் கூறுகின்றார்.
‘அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்து கொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.”
(யோவான் 19:17)
‘கொல்கொதா” எனப்படும் இடம் வரை சிலுவையைச் சுமந்து சென்றது யார்?, இயேசுவா? சீமோனா? ஏன் இந்த முரண்பாடு?! புனித ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டவர்கள் இப்படி ஒன்றுக் கொன்று முரண்பட்ட விதத்தில் தகவல் சொல்ல முடியுமா? என்று சிந்தித்தால் புதிய ஏற்பாடோ, பழைய ஏற்பாடோ புனித ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டவை அல்ல என்பது தெளிவாகத் தெரியும். மனித கற்பனைக்கும், அறிவுக்கும் ஏற்பவே இவை எழுதப்பட்டுள்ளன என்பது சந்தேகமின்றிப் புரியும். இந்த இயேசுவின் சிலுவைச் சம்பவம் முரண்பாடு நிறைந்தது, போலியானது. இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை என்ற குர்ஆனின் கூற்றின் உண்மைத் தன்மை உறுதியாகத் தெரியும்
யூதாஸின் இறுதி நிலை:
யூதாஸ் என்ற இயேசுவின் சீடன்தான். 30 வெள்ளிக் காசுக்காக அவரைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. அவனது இறுதி முடிவு என்ன என்பதிலும் பைபிள் முரண் படுகின்றது. அவன் கவலை கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக மத்தேயு கூறுகின்றார்.
‘அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள்.”
‘அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாத்கத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத் திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டு வந்து:”
‘குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.”
‘அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.”
‘பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி,”
‘ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.”
‘இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்த நிலம் என்னப்படுகிறது.”
(மத்தேயு 27:2-8))
இங்கே யூதாஸ் கவலை கொண்டு அந்தக் காசை வீசி எறிந்ததாகவும், அந்தப் பணத்தினால் ஒரு நிலத்தை அதிகாரிகள் வாங்கி அதனை மயான பூமியாகப் பாவித்ததாகவும் அது இரத்த நிலம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப் படுகின்றது.
இதே செய்தியை அப்போஸ்தலர்-1 எப்படிக் கூறுகின்றது என்று பாருங்கள்.
‘சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக் குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது.
அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்குபெற்றவனாயிருந்தான்.
அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.
இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.”
(அப்போஸ்தலர் 1: 16-19)
இங்கே யூதாஸ் கவலைப்பட்டதாகக் கூறப்படவில்லை. பணத்தைப் பெற்று அதன் மூலம் அவன் ஒரு நிலைத்தை வாங்கியதாகக் கூறப்படுகின்றது. அவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படவில்லை. விழுந்து வயிறு வெடித்து செத்ததாகக் கூறப்படுகின்றது. அதனால்தான் அது இரத்த பூமி என்று கூறப்படுவதாகக் கூறப்படுகின்றது. முழுத் தகவலும் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாகவே அமைந்துள்ளது.
யூதாஸ் என்பவனிடம்தான் இயேசுவின் பணம் இருந்தது. பணத்திற்காக அவன் காட்டிக் கொடுப்பதாக இருந்தால் அந்தப் பணத்தையே எடுத்துக் கொண்டு ஓடியிருக்க முடியும். யூதாஸ் விடயத்தில் இவர்களின் இந்த முரண்பாடு ஆச்சரியமாக உள்ளது. இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவன் இயேசுவின் உருவ அமைப்புக்கு மாற்றப்பட்டதாகவும், அவனே சிலுவையில் இயேசுவிற்குப் பகரமாக அறையப்பட்டதாகவும் குர்ஆனின் விளக்க வுரைகள் கூறுகின்றன. அப்படிப் பார்க்கும் போது இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டு விட்டான். அவன் எப்படி இறந்தான் என்று கற்பனையாகக் கூறும் போது தற்கொலை செய்து கொண்டான் என்று ஒருவரும் கடவுளினால் தண்டிக்கப்பட்டு வயிறு வெடித்து இறந்தான் என்று மற்றொருவரும் கூறுகின்றனர் என்பதை யூகிக்க முடிகின்றது.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட இருவர்:
இயேசுவின் வலதும், இடதுமாக இரண்டு திருடர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். அவர்கள் பற்றி புதிய ஏற்பாடுகள் முரண்பட்ட தகவல்களைத் தருகின்றன.
‘அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப் பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.” (மத்தேயு 27:44)
அவரோடு சிலுவையல் அறைப்பட்டவர் களும் அவரை நிந்தித்ததாகவும் கூறப்படுகின்றது. இதே கருத்தையே மாற்கு 15:32 இலும் கூறப்படுகின்றது. ஆனால், லூக்கா மாறுபட்ட கருத்தைக் கூறுகின்றார்.
‘அன்றியும் சிலுவையில் அறையப் பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.”
‘மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?”
‘நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,”
‘இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.”
‘இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
(லூக்கா 23:39-43)
இங்கே ஒருவன் பரிகசித்ததாகவும் மற்றவன் அவனைக் கண்டித்ததாகவும் கூறப் படுகின்றது. இதில் எது உண்மை? அந்த இருவரும் நரகவாதிகளா? அல்லது ஒருவன் நரகவாதி, மற்றவன் சுவனவாதியா?
புனித ஆவியால் உந்தப்பட்டு எழுதியவர் களுக்கிடையே ஏன் இந்த முரண்பாடு? இந்த முரண்பாடுகள் சிலுவை சம்பவத்தின் உண்மைத் தன்மையின் உறுதியைக் குறைக்கின்றன வல்லவா?