12வது படிப்பினை
ஆட்சியின் பாதுகாப்பிற்கு கண்கானிப்பு இன்றியமையாததாகும்.
{وَتَفَقَّدَ الطَّيْرَ }النمل: 20
பறவைகளை விசாரித்தார்கள்.
தனது ஆட்சியில் உள்ளவற்றைக் கண்கானிப்பது, சுலைமான் (அலை) அவர்களது வழமையாக இருந்தது என்பதை மேற்கூறிய வசனத்திலிருந்து புரியலாம். ஏனெனில் படையில் சிறு அங்கமான பறவை இனத்தைப் பற்றிக் கூட கண்கானிக்கும் பொழுது, படையின் ஏனைய அங்கங்களான மனிதர்கள், ஜின்களை; ஆகியவற்றைக் கண்கானிப்பார்கள் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஏனெனில் ஆட்சியின் வட்டாரங்கள் விரிவடைந்து அதனை அரசன் கவனித்துப் பராமரிக்காவிட்டால், குறிப்பாகத் தனது கண்காணிப்பை விட்டும் தூரமான பகுதிகளில் குழப்பமும், கெடுதியும் ஊடுருவி விடும். எத்தனையோ அரசுகளுடைய வீழ்ச்சி அதனது புறநகர்ப் பகுதிகளிலிருந்து ஏற்பட்ட சீர்கேடுகள் மூலமே உருவாகத் தொடங்கின. அவ்வாறே உமய்யாக்களின் ஆட்சி காலத்திலும் அதனது தூர தேசங்களில் குழப்பங்கள் உருவெடுக்கத் தொடங்கின. அதனை உணர்ந்த ஒரு கவர்னர் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் கெடுதிகளை விட்டும் எச்சரித்து கவிதை வடிவிலே ஒரு தகவலை அரசருக்கு அனுப்பிவைத்தார். (சாம்பலுக்குக் கீழ் அண்மையில் தீப்பிடிக்கக் காத்திருக்கும் நெருப்பைக் காண்கிறேன். அது எரியப் போகிறது.)
ஆனால் அவரது அந்தப் பேச்சை அவ் அரசன் பொருட்படுத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியதனால் ஆட்சியை இழக்க வேண்டியேற்பட்டது. அரசும் சின்னா பின்னமாகியது. எனவே தான் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து தானே தனது காரியங்களைத் திட்டமிடுகிறான். அவர்களது செயல்களை அறிந்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனது அறிவிலிருந்து அவைகளில் எதுவும் ஒரு அணுவளவும் விலகமுடியாது. ((நீர் எந்த விடயத்தில் இருந்தாலும் நீர் குர்ஆனிலிருந்து ஓதுவதும் எந்தவொரு அமலை நீங்கள் செய்வதாக இருந்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் சமயம் நாம் உங்களின் மீது சாட்சியாக இருப்போம். உமது இறைவனிடத்திலிருந்து பூமியிலோ, வானத்திலோ அனுப்பிரமானமோ அல்லது அதைவிட சிறியதோ, பெரியதோ விலக முடியாது தெளிவான புத்தகத்தில் இருக்கிறது.)) (யூனுஸ்:61)
இதனால் தான் ஆட்சியைப் பாதுகாக்க பராமரிப்பு, விசாரணை, கண்கானித்தல் போன்றன அவசியமாகும்.
உமர் (ரழி) அவர்கள் தமது ஊழியர்கள், கவர்னர்கள் ஆகியோரை விசாரிப்பவர்களாகவும், மக்களுக்கு மத்தியில் அவர்களது நடத்தைகளைப் பற்றி கேட்பவர்களாகவும் இருந்தார்கள். எனவே அல்லாஹ் அவர்கள் மூலம் நீதியை நிலைநாட்டினான். பாதுகாப்பு உருவானது.
தொடரும்……