13வது படிப்பினை
குற்றத்திற்கேற்ற தண்டனை
{مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ } [النمل: 20]
என்ன நான் ஹுத்ஹுதைக் காணவில்லை அல்லது அது சமூகமளிக்கவில்லையா?
சுலைமான் (அலை) ஹுத்ஹுதைப் பற்றிக் கேட்டு, உடனடியாக அது ஆஜராகாமையால்; அது கூட்டத்தில் தனது பார்வையை விட்டுத் தூரமிருந்து அவருக்கு முன் ஆஜராகுவதில் தாமதம் காட்டியிருக்க வேண்டும். அல்லது அது தனது அனுமதியின்றி சமூகமளிக்காமலே இருந்திருக்க வேண்டும். என்பதனால், அவர்கள் இரு விதமான தண்டனைகளை நிர்ணயித்தார்கள். சமூகமளித்து தன் கடமையில் பொடுபோக்காக இருந்திருந்தால் கடும் வேதனையும், அடுத்தது தகுந்த காரணமின்றி சமூகமளிக்காமலிருந்திருந்தால் அதனைக் கொன்றுவிடுவதுமாகும். எனவே இதன் மூலம் தீமையின் பாரதூரத்திற்கேற்ப தண்டனையும் அமையலாம் என்பது விளங்குகிறது. ஒவ்வொரு தவறும் அதன் அளவுக்கும், அது மற்றோரின் உரிமையில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கேற்பவும் தண்டனைப் பெறத் தகுதி பெறுகிறது.
ஹத்துகள், கண்டிப்புக்கள், குற்றப் பரிகாரங்கள் என்பன, தீமை அதனை மேற்கொண்டவனுக்கும் ஏனையோருக்கும் ஏற்படுத்தும் விளைவைப் பொறுத்து, சில வேளை கடினமாகவும், சில வேளை இலகுவாகவும் இஸ்லாமியத் தண்டனைகள் திகழ்கின்றன. எனவே இதன் மூலம் அனுவளவேனும் அநீதியிழைக்காத நீதியான ஆட்சியாளனான அல்லாஹ்வின் முழுமையான நீதியும், எல்லையில்லா ஞானமும் தெளிவாகின்றது. உதாரணமாக விபச்சாரத்தின் தண்டனை அதனை மேற்கொண்டவன் திருமணம் முடிக்காதவனாக இருந்தால் அவன் மீது நூறு கசையடிகளும், ஓராண்டு நாடு கடத்தலும் விதியாகும். திருமணம் செய்த ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லப்படும்.
குற்றம் இழைத்தவனுக்கும், அவனைப் போன்றோருக்கும் எச்சரிக்கையாக அமைவதற்காக, குற்றமிழைத்தவனது குற்றத்திற்குப் பொருத்தமானதை ஆட்சியாளர் தேர்ந்தெடுப்பதற்காகத்தான் அல்லாஹ் வழிப்பறிக் கொள்ளைக்கு 4 விதமான தண்டனைகளை விதித்துள்ளான்.
இந்த விதியுடன் இதை அடுத்து வரும் ஜந்து விதிகளுமே சுலைமான் (அலை) அவர்களின் ஹுத்ஹுதுடனான விசாரணையினூடாகப் பெறப்படும் விசாரணையின் அடிப்படைகளாகும்.
இதன் மூலம் சுருக்கமான வார்த்தைகளில் ஆழமான கருத்துக்களை வழங்கும் தித்திக்கும் திருமறையின் அற்புதம் புலனாகின்றது.
தொடரும்……