18வது படிப்பினை
சந்தேக நபரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே.
{أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ } [النمل: 21]
அல்லது அது என்னிடம் தெளிவான அத்தாட்சியைக் கொண்டுவரவேண்டும்.
சுலைமான் (அலை) அவர்கள் ஹூத்ஹூதிற்கு தனது அனுமதியின்றி சமூகமளிக்கத் தவறியதால் கடுமையான தண்டனை வழங்குவேன். என அச்சுறுத்தல் வழங்கியிருந்தும், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரம் அல்லது சமூகமளிக்காமைக்கு தகுந்த காரணத்தை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் தண்டனையை விளக்கிக் கொள்வதாக வாக்குறுதியளித்ததன் மூலம் ‘தண்டனையைத் தடுக்கும் நியாயம் அல்லது தவறை நியாயப்படுத்தும் காரணிகளை இல்லாமற் செய்யும் உறுதியான ஆதாரத்தின் மூலம் சந்தேக நபரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவன் நிரபராதியாகக் கணிக்கப்படுவார்.” என்ற முக்கியமான ஒரு சட்டத்தை இயற்றுகிறார்கள்.
எனவே இதன் மூலம் ஆட்சியாளன் தனது பிரஜைகளுக்குத் தண்டனை வழங்குவதிலே கவனமாக இருக்காது அவர்களுக்கு பாதுகாப்பையும், நிம்மதியையுமே ஒரு ஆட்சியாளர் விரும்ப வேண்டும் என விளங்கலாம்.
எனவேதான் ஒரு நீதிபதி மன்னிப்பு வழங்குவதில் தவறிழைப்பது தண்டனை வழங்குவதில் தவறிழைப்பதை விடச் சிறந்ததாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ((இயன்றளவு முஸ்லிம்களை விட்டும் தண்டனைகளைத தவிர்த்துக் கொள்ளுங்கள். அவருக்கு வெளியேறுவதற்கு ஏதேனும் வழியிருக்குமானால் அவரை விட்டு விடுங்கள். ஏனெனில் தலைவர் மன்னிப்பு வழங்குவதில் தவறிழைப்பது, தண்டனை வழங்குவதில் தவறிழைப்பதை விடச் சிறந்ததாகும்.)) (திர்மிதி:1344)
மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அந்தஸ்துடையோரின் ஹத்துகளைத் (சமூக குற்றத்திற்கான தண்டனை) தவிர்ந்த ஏனைய தவறுகளை மன்னித்து விடுங்கள். (3803)
எவர் மீதும் அவரிடம் கேட்டறியாமலும், குற்றத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமின்றியும், தீர்ப்புச் செய்வது கூடாது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
மேலும் ஆட்சியாளன் தவறான வார்த்தை அல்லது ஆதாரம் ஆகியவற்றைக் கொண்டு ஏமாந்து விடாது சந்தேகத்திலிருந்து விடுவிக்கவோ அல்லது நிரூபிக்கவோ தெளிவான ஆதாரத்தைப் பெறுவது அவசியம் என்பதும் தெளிவாகிறது.
ஹூத்ஹூத் தண்டனையை விட்டுத் தப்பி மன்னிக்கப்படத் தகுந்த ஆதாரம் அதனிடம் இருந்ததைக் நாம் காண்கிறோம்.
தொடரும்……