6 வது படிப்பினை
ஒரு முஸ்லிமினது மனதைக் குளிரவைப்பது விரும்பத்தக்கதாகும்.
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا﴿النمل٢٧:١٩﴾
அதனது வார்த்தையினால் அவர் (சுலைமான் (அலை) அவர்கள்) சிரித்துப் புன்னகை செய்தார் (27:19)
அவர்கள் அறியாத நிலையில் என்ற வார்த்தையைக் கேட்டு தன்னைப் பற்றியும் தனது படையைப் பற்றியும் அவ் எறும்பு கொண்டிருக்கும் நல்லெண்ணத்தினால்சுலைமான்(அலை) அவர்களது மனம் மகிழ்ந்தது. அதனால்தான் அவர்கள் புன்னகைத்தார்கள்
.
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது சகோதரனது முகத்தைப் பார்த்து புன்முறுவல் செய்வதும் தர்மமாகும். நீ நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதும் தர்மமே. வழி தவறியோருக்கு வழிகாட்டுவதும் தர்மமே. பார்வையற்றவனைக் கவனிப்பதும் தர்மமே. பாதையை விட்டும் கல், முள்,எலும்பு போன்றவற்றை அகற்றுவதும் தர்மமே. உனது வாளியினால் உனது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிறைப்பதும் தர்மமே. ((திர்மிதி:1879))
அது போன்றே அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் தாஇயும் தன் சகோதரர்களை மகிழ்விக்கும் விடயங்களையே அதிகமாகக் கூற வேண்டும். அச்சமூட்டும் விடயங்களைத் தவிர்க்க வேண்டும். மனம் குளிரும் தகவல்களைக் கூறுவதில் முந்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறுதான் மலக்குமார்கள் விசுவாசிகளின் மரண சமயம் அவர்களுக்கு பயமோ,கவலையோ கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்களுக்கு சுவர்க்கத்திலுள்ள அந்தஸ்த்துக்களைக் கொண்டும் நன்மாராயம் கூறியோராக இறங்குவார்கள். என்பதை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
((எமது இறைவன் அல்லாஹ் என்று கூறி பின் அதில் நிலைத்திருப்போரிடம் நிச்சயமாக மலக்குமார்கள் வருகை தந்து, நீங்கள் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டாம். மேலும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள். எனக் கூறுவார்கள்)) (புஸ்ஸிலத்:30)
நபியவர்களும் கூட சில ஸஹாபாத் தோழர்களுக்கு அவர்கள் சுவர்க்கவாதிகள் என்பதாக சுபச்செய்தி கூறியுள்ளார்கள். பத்ர் ஸஹாபாக்கள் ஹூதைபியாவில் ரிழ்வான் ஒப்பந்தத்தில் கலந்துகொண்டோர், உகாஷதுப்னு மிஹ்ஸன், பிலால் (ரழி) ஆகியோருக்குக் குறிப்பாக நன்மாராயம் கூறியுள்ளார்கள்.
தொடரும்……