﴾67:27﴿ فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ
(அதை அருகில் அவர்கள் பார்க்கும் போது (ஏக இறைவனை) மறுத்தோரின் முகங்கள் கெட்டு விடும். ‘நீங்கள் தேடிக்கொண்டிருந்தது இதுவே” எனக் கூறப்படும்). அல்முல்க் – 27
கியாம நாள் வந்து காஃபிர்கள் அதை கண்களால் பார்த்தால், காலம் நீண்டாலும் நடைபெற வேண்டியது நடந்தே தீரும், அது நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் பொய்ப்பித்தது நிகழ்கின்ற பொழுது அவர்களுக்கு அது கெடுதியாகவே அமையும் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்கள் நினைத்திருக்காத சில விடயங்கள் அல்லாஹ்விடமிருந்து வந்து அவர்களை சூழ்ந்து கொள்ளும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அநீதி இழைத்தோருக்கு பூமியில் உள்ளவை அனைத்தும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கும் இருக்குமானால் கியாம நாளில் தீய வேதனைக்கு ஈடாகக் கொடுப்பார்கள். அவர்கள் எண்ணிப் பார்க்காதவை அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும். அவர்கள் செய்த தீயவை அவர்களுக்கு வெளிப்படும். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்).
அஸ்ஸூமர் – 47, 48.
அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
(‘நீங்கள் தேடிக் கொண்டிருந்தது இதுவே”).
நீங்கள் அவசரப்பட்டுத் தேடிக்கொண்ட வேதனை இதுவாகும்.