குறிப்பு : பின்வரும் அத்தியாயத்தின் அதிகமான வசனங்கள் வலீத் பின் முகைரா, அபூஜஹல் விடயமாகத் தான் இறங்கியது.
فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ ﴿٨﴾ وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ﴿٩﴾
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١٠﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١١﴾
مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾
(பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்! (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர். அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! அவன் குறை கூறுபவன், கோள் சொல்லித் திரிபவன். நன்மையைத் தடுப்பவன், வரம்பு மீறுபவன், குற்றம் புரிபவன். முரடன், இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்). அல் கலம் – 8-13
(பொய்யென கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்!).
இவ்வசனங்களில் நபி (ஸல் அவர்களை எதிரிகள் கூறிய குற்றச் சாட்டுகளிலிருந்து இறைவன் தூய்மைப்படுத்துகிறான். மேலும், நபியவர்களுக்கும் அவர்களுக்குமிடையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது என்பதை தெளிவு படுத்துகிறான். காரணம், நபி (ஸல்) அவர்களை மகத்தான நற்குணத்தில் இருப்பதாகக் கூறி வர்ணிப்பதுடன், குறை கூறும் அவர்களை இழிவான பத்து பண்புகளைக் கொண்டு வர்ணிக்கிறான்.
அவைகளாவன:
1.பொய்யுரைத்தல் 2.வளைந்து கொடுத்தல் 3.அதிகம் சத்தியம் செய்தல் 4.இழிவு 5.குறை கூறுதல் 6.கோள் சொல்லித் திரிதல்
7.வரம்பு மீறுதல் 8.நன்மையைத் தடுத்தல் 9. குற்றம் புரிதல்
10. முரடன்.
((முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர்).
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘இத்ஹான்” என்ற அரபு வார்த்தைக்கு பன்னிரண்டு விதமான கருத்துக்கள் உள்ளதாக குர்துபி இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள். அவைகளில் மிகப் பொருத்தமானது வளைந்து கொடுத்தல் என்பதாகும். அக்கருத்தைத் தான் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களும் சரி கண்டுள்ளார்கள். அவரின் கருத்துக்குச் சான்றாக காஃபிரூன் என்ற அத்தியாயம் இறங்கியதற்கான காரணத்தைக் கூறுகிறார்:
மக்கா காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களை அழைத்து, ‘நாம் வணங்கும் சிலைகளை நீங்கள் ஒரு வருடமும், நீங்கள் வணங்கும் கடவுளை நாம் ஒரு வருடமும் வணங்குவோம்” எனக்கூறினார்கள். அப்பொழுது தான் அல்லாஹ்; காஃபிரூன் அத்தியாயத்தை இறக்கினான்.
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் இன்னுமொரு காரணத்தையும் முன்வைக்கிறார்கள்:
((முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!) பனூ இஸ்ராயீல் – 74.
(அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்!)
அவர்களுக்கு வளைந்துகொடுக்க வேண்டுமென்பதைக் கருதி பல முயற்சிகளைச் செய்கிறார்கள். அதிலொன்று தான் அதிகம் சத்தியம் செய்தல்.
இதன்மூலம். மார்க்கக் காரியங்களில் வளைந்து செல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. ஆனால் உலகக் காரியங்களைப் பொருத்தவரை அதில் வளைந்து செல்வது குற்றமில்லை என்பது தெளிவாகிறது. அதற்கான ஆதாரத்தை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்:
(மார்க்க விடயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும்
அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்).
அல் மும்தஹினா – 8.
(அவன் குறை கூறுபவன், கோள் சொல்லித் திரிபவன்).
குறை கூறி, புறம் பேசித் திரிவது மிக மோசமான பண்புகளில் ஒன்றாகும். இது பற்றி பல வசனங்கள், பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
அல்லாஹ் கூறுகிறான்:
(நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூறவேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன்).
அல் ஹுஜ்ராத் – 11,12.
மேலும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளுக்கு அருகாமையில் நடந்து செல்லும் போது அக்கப்ருகளில் வேதனை செய்யப்படுவதை செவியுற்றார்கள். பின்பு, இவர்கள் இருவரும் பெரிய குற்றத்திற்காக வேதனை செய்யப்படுகிறார்கள் எனக் கருதுகிறீர்களா? ஆம். அவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்கமாட்டார் (மற்றொரு அறிவிப்பில், சரியான முறையில் சுத்தம் செய்யமாட்டார்) மற்றவர் மக்களுக்கு மத்தியில் கோள் சொல்லித் திரிபவர் எனக் கூறிவிட்டு பச்சை ஈத்த மட்டை ஒன்றை எடுத்து இரண்டாகப் பிளந்து அவர்களிருவரின் கப்ருகளின் மேலே நட்டினார்கள். அப்போது சஹாபாக்கள், ஏன் இவ்வாறு செய்தீர்கள் என வினவிய போது, அவைகள் காயாமலிருக்கும் வரை அவர்களுக்கு வேதனை குறைக்கப்படும் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி).
நூல்: புகாரி, முஸ்லிம்.
குறிப்பு : இந்த ஹதீஸை மையமாக வைத்துத் தான் இன்று வரை மையத்தை அடக்கம் செய்து விட்டு கப்ரின் மீது பச்சைக் கொப்புகளை அல்லது மரங்களை நட்டி வைக்கிறார்கள். இவ்வாறு செய்வது சரியானதா? அல்லது தவறானதா? என்பதைப் பார்போம்.
இன்று இவ்வாறு செய்து வருவது தவறான ஒரு செயலாகும். காரணம்:
1. நபி (ஸல்) அவர்கள் வேதனையை செவியுற்றார்கள். எம்மால் வேதனையை செவியுற முடியாது.
2. நபி (ஸல்) அவர்கள் நட்டியபின் சஹாபாக்களில் யாரும் அதைத் தொடர்ந்து செய்யவில்லை.
3. ஏனைய கப்ருகளுக்கு நபியவர்கள், அந்நிகழ்ச்சிக்கு முன்போ அல்லது பின்னால் வாழ்ந்த காலங்களிலோ அவ்வாறு செய்யவில்லை.
4. நபி (ஸல்) அவர்கள் மையத்தை அடக்கம் செய்துவிட்டு நட்டியதாக ஹதீஸில் வரவில்லை. மாறாக, ஒரு நாள் மாத்திரம் கப்ருகளுக்கு அருகாமையால் நடந்து செல்லும்போது இவ்விடயம் நடைபெற்றுள்ளது. எனவே, அடக்கம் செய்துவிட்டு நடுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
5. இந்த ஹதீஸ் கப்ரின் வேதனையுண்டு என்பதை உறுதி செய்கிறது.
6. நபி (ஸல்) அவர்கள் வேதனை செய்யப்படுவதற்கான காரணத்தைக் கூறினார்கள். குற்றம் புரிந்தவர்களின் பெயர்களைக் கூறவில்லை. எனவே குற்றம் புரிந்தவர்களின் பெயர்களை மறைப்பது நன்று. ஆனால் அவர் மூலம் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்களானால் அவரது பெயரைச் சுட்டிக்காட்டுவது குற்றமில்லை.
•சிலர் பூக்களை கப்ரின் மீது போட்டுவிடுகிறார்கள். இது அந்நியர்களின் கலாச்சாரமாகும்.