أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾
(செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.) அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.) அல் கலம் – 14-15
இவ்வசனத்தில் அல்லாஹ் அவன் அருளிய அருட்கொடைகளான செல்வம், பிள்ளைகள் என்பவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தும் அதற்கு மாறாக அல்லாஹ்வின் அத்தாட்சிகளை, நிராகரித்து, புறக்கணித்து முன்னோர்களின் கட்டுக்கதை எனக்கருதுவது பற்றி எடுத்துரைக்கிறான்.
மேலும் இதற்கு சான்றாக அல்லாஹ் மற்றுமொரு இடத்தில் கூறுகிறான்:
(நான் மட்டுமே படைத்தவனை என்னோடு விட்டுவிடுவீராக! அவனுக்கு நீண்ட செல்வத்தையும், கூடவே இருக்கக்கூடிய ஆண் மக்களையும் கொடுத்தேன். அவனுக்காக பல தயாரிப்புகளைச் செய்தேன். பின்னரும் நான் அதிகப்படுத்த வேண்டும் என அவன் ஆசைப்படுகிறான். அவ்வாறில்லை! அவன் நமது வசனங்களை மறுப்பவனாக இருக்கிறான். அவனுக்குச் சிரமம் தரும் வேதனை அளிப்பேன். அவன் (நமக்கு எதிராகச்) சிந்தித்தான். தீர்மானித்தான்). அல் முத்தஸ்ஸிர் 11 – 18.
(செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக இருக்கிறான் என்பதற்காக அவனுக்குக் கட்டுப்படாதீர்) என்ற வசனத்துக்கு அறிஞர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.
1. அவனுக்கு செல்வமும் ஆண் மக்களும் இருப்பதினாலா அவன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்து, முன்னோர்களின் கட்டுக்கதை எனக்கூறுகிறான்?
2. குறை கூறி, புறம் பேசித் திரிபவன் செல்வமும் ஆண் மக்களுமுடையவன் என்பதற்காகவா அவனுக்குக் கட்டுப்படுகிறீர்?
3. குறை கூறி, புறம் பேசித்திரிபவன் செல்வமுடையவனாக, ஆண் மக்கள் உடையவனாக இருந்தாலும் சரி. அவனுக்குக் கட்டுப்பட வேண்டாம்.
4. அல்லாஹ்வின் அருட்கொடைகளையும், அவனது அத்தாட்சிகளையும் நிராகரித்து புறக்கணிப்பதன் மூலம் அவன் எவ்வாறு செல்வத்தையும், பிள்ளைகளையும் பெற்றுக்கொள்வான்?.
5. அவன் செல்வமும், ஆண் மக்களும் இருக்கிறார்கள் என்பதனாலா மக்களுக்கு மத்தியில் புறம் பேசித் திரிகிறான்?