سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾
(அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்). அல் கலம் – 16
இவ்வசனத்திற்கு பல அறிஞர்கள் பல விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
அவனது மூக்கில் வாளினால் அடையாளமிடப்படும்.
கதாதா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
மறுமை நாளில் அவனது மூக்கில் ஒரு அடையாளமிடப்படும். அதன் மூலம் அவனை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அவன் யார் என்பதை நன்கு தெளிவு படுத்துவோம். எந்தளவுக்கென்றால், அவனது மூக்கில் அடையாளமிட்டு அவனை அறிமுகம் செய்வோம்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
(அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். ‘நம்பிக்கை கொண்டபின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக்கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!” என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்).
ஆலு இம்ரான் – 106.
(இது வெளிரங்கமான அடையாளமாகும்.)
மற்றுமொரு அடையாளமாக அல்லாஹ் இன்னுமொரு இடத்தில் குறிப்பிடுகிறான்:
(ஸூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகளை நீலநிறக் கண்களுடையோராக எழுப்புவோம்). தாஹா – 102.
இவ்வத்தியாயத்தின் 16வது வசனம் மூன்றாவது அடையாளத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அது தான் மூக்கின் மேல் நெருப்பினால் அடையாளமிடப்படுவது.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
(குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள்).
அர் ரஹ்மான் – 41.
இப்னுல் அரபீ என்ற அறிஞர் அஹ்காமுல் குர்ஆன் என்ற தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
பண்டைய காலத்து மக்கள் பாவம் புரிந்தவரின் முகத்தில் அடையாள மிடுவார்கள்.
பாகம்: 1840, பக்கம்: 4.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ஃகுர்தூம் என்ற அரபி வார்த்தையின் பொருள்கள்:
1. மனிதனின் மூக்கு 2. மிருகங்களின் உதடு 3. குழுவின் தலைவர்
(அன் நுகத் வல் உயூன்: பாகம் – 6, பக்கம் – 68).