Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 17 to 33

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 17 to 33

 

(தோட்ட வாசிகளின் சம்பவம்)
 
 إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ ﴿١٧﴾
وَلَا يَسْتَثْنُونَ ﴿١٨﴾ فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ ﴿١٩﴾ فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ ﴿٢٠﴾ فَتَنَادَوْا مُصْبِحِينَ ﴿٢١﴾
أَنِ اغْدُوا عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَارِمِينَ ﴿٢٢﴾ فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ ﴿٢٣﴾
أَن لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ ﴿٢٤﴾ وَغَدَوْا عَلَىٰ حَرْدٍ قَادِرِينَ ﴿٢٥﴾
فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ ﴿٢٦﴾
بَلْ نَحْنُ مَحْرُومُونَ ﴿٢٧﴾
قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ ﴿٢٨﴾ قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ ﴿٢٩﴾
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَاوَمُونَ ﴿٣٠﴾
 قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ ﴿٣١﴾ عَسَىٰ رَبُّنَا أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَا إِنَّا إِلَىٰ رَبِّنَا رَاغِبُونَ ﴿٣٢﴾
كَذَٰلِكَ الْعَذَابُ ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ ﴿٣٣﴾
 
(அந்தத் தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். காலையில் அதை அறுவடை செய்வோம்” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர். இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக் கக்கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது. அது காரிருள் போல் ஆனது. நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்” என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக்கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள். தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள். அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது நாம் வழி மாறி (வேறு இடம்) வந்துவிட்டோம் என்றனர். இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம். அவர்களில் நடுநிலையாக நடந்துக்கொண்டவர் நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கேட்டார். எங்கள் இறைவன் தூயவன் நாங்கள் அநீதி இழைத்துவிட்டோம்” என்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியவராக முன்னோக்கினார்கள். எங்களுக்குக் கேடு ஏற்பட்டுவிட்டதே! நாங்கள் வரம்பு மீறிவிட்டோமே!” என்றனர். இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக்கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்” (என்றும் கூறினர்.) இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?) அல் கலம் – 17-33
 
இவ்வசனங்களில் அல்லாஹ் குறைஷிக் காஃபிர்களுக்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் கூறுகிறான். அவர்களுக்கு மிகப் பெரிய அருட்கொடையாக நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை வழங்கினான். அவ்வாறிருந்தும் அவர்கள் அதனைப் பொய்ப்பித்து ஏற்றுக்கொள்ளாது, போர்த்தொடுத்து நின்றார்கள்.
 
அச்சம்பவத்தின் சுருக்கம்:
 
யமன் நாட்டிலிருந்து சில மைல்களுக்கப்பால் ஒரு மனிதனுக்கு பெருந்தோட்டமொன்றிருந்தது. அவர் அதற்குரிய காத்தை அறுவடையின்; போது கொடுத்துவிடுவார். அவர் மரணித்த பின் அத்தோட்டம் அவரது வாரிசுகளுக்குச் சொந்தமாகிவிட்டது. அவர்கள் தந்தையைப் போன்று மக்களுக்கு காத் கொடுக்க விரும்பவில்லை. அதன் காரணமாக அவர்கள் திட்டமிட்டு, ஏழைகள் அறியாத வண்ணம் இரவோடிரவாகச் சென்று அறுவடை செய்துவிட வேண்டுமென அவர்களுக்கு மத்தியில் இரகசியமாகப் பேசிக்கொண்டனர். ஆனால், (இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாடினால் என்ற வார்த்தையை அவர்கள் கூறவில்லை. அதன் காரணமாக அல்லாஹ் வானத்திலிருந்து தண்டனையை இறக்கி அத்தோட்டத்தை தீக்கறையாக ஆக்கினான். அதிகாலையில் தமது தோட்டத்திற்குச் சென்றவர்கள் நாம் வழிதவறி வந்துவிட்டோமா என எண்ணுமளவுக்கு தோட்டம் காட்சியளித்தது.
 
(எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக்கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.)
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாவம் செய்வதை உங்களுக்கு நான் எச்சரிக்கைச் செய்கிறேன். ஓர் அடியான் தான் செய்யும் பாவம் காரணமாக தனக்கு தயார் செய்யப்பட்ட உணவை தடுத்துக்கொள்கிறான் என கூறிவிட்டு, மேற்கூறப்பட்ட வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
                            அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரழி).
                            நூல்: அஹ்மத் (2386).
(இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்)
 
தோட்டவாசிகளின் சம்பவத்தின் மூலம்; நாம் பெறும் படிப்பினைகள்:
 
  1. விசுவாசிகள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதையும், பொறுமையைக் கடைப்பிடிப்பதையும் பாடமாகப் பெறவேண்டும். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தைப் பெற்றதற்கு நன்றி செலுத்துவதுடன், எதிரிகள் (நிராகரிப்பாளர்கள்) மூலம் ஏற்படும் வேதனைகளில் பொறுமையைக் கையாள வேண்டும்.
  2. விசுவாசிகள் அல்லாஹ்வுக்காக தமது எண்ணங்களைச் சீர் செய்து கொள்ள வேண்டும்.
  3. நிராகரிப்பாளர்கள், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்கள் அவர்களுக்கு இறங்கிய வேதனையை நினைவு கூறவேண்டும்.
 
                                                            
அல்லாஹ்வினால் சோதனைக்குற்படுத்தப்பட்டவர்கள் யார்?
அவர்களுக்கும் தோட்டவாசிகளுக்குமிடையே என்ன தொடர்புண்டு?
 
சோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் மக்கா காஃபிர்கள்.
தோட்டவாசிகளுக்கு அல்லாஹ் பயிர்கள் நிறைந்த அடர்ந்த தோட்டத்தை வழங்கியிருந்தான். ஆனால், அதற்கு அவர்கள் நன்றி செலுத்தவில்லை. அதனால் அல்லாஹ் அவர்களைச் சோதித்தான்.
 
மக்கா காஃபிர்களுக்கு அல்லாஹ் பலவிதமான அருட்கொடைகளை வழங்கி அவர்களை சோதனைக்குட்படுத்தினான். நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவம், அல்குர்ஆன், செல்வம், ஆட்சி, அதிகாரம் அனைத்தையும் வழங்கியும் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவில்லை. அதன் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்:
 
(ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவ் வூருக்குரிய உணவு தாராளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான்.) அந்நஹ்ல் – 112.
 
(ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே. நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்)  அல் அன்பியா – 35.
 
(எந்த ஊருக்கு நபியை நாம் அனுப்பினாலும் அவ்வூரார் பணிய வேண்டும் என்பதற்காக அவர்களை வறுமையினாலும், நோயினாலும் நாம் பிடிக்காமல் இருந்ததில்லை. பின்னர் கெட்டதற்குப் பகரமாக நல்லதை மாற்றிக் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகிய போது ‘(எங்களுக்கு மட்டுமின்றி) எங்கள் முன்னோருக்கும் துன்பமும், இன்பமும் ஏற்பட்டன” எனக் கூறினர். எனவே அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களைத் தண்டித்தோம்.) அல் அஃராப் – 94,95.
 
((முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.) அல் அன்ஆம் – 42.
 
தோட்டவாசிகள் இறை நம்பிக்கையாளர்களா? அல்லது காஃபிர்களா?
 
அவர்களின் நிலை பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனினும் அவர்கள் தௌபா செய்ததாக அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்:
 
(‘இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக்கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்” (என்றும் கூறினர்.)) அல் கலம் – 32.
 
தௌபா அதற்கு முன் செய்த குற்றங்களை அழித்துவிடும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அறியாமல் தீய காரியம் செய்துவிட்டு தாமதமின்றி மன்னிப்புக்கேட்போருக்கே நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புண்டு அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.) அன்னிஸா – 17.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 67 |الحديث الموقوف அல் ஹதீஸ் அல் மவ்கூஃப்

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 67 | الحديث الموقوف அல் …

Leave a Reply