سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾
(அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!)
அல் கலம் – 40
முஹம்மதே! என் மீது இட்டுக்கட்டும் அவர்களிடம், மறுமையில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதற்கு யார் பொறுப்பு எனக் கேட்பீராக.
أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِن كَانُوا صَادِقِينَ ﴿٤١﴾
(அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் கொண்டுவரட்டும்.) அல் கலம் – 41
அவர்கள் வாதிடுவது உண்மையாக இருந்தால் அவர்களின் நோக்கங்களை நிறைவு செய்யும் சாட்சியாளர்களாகிய தெய்வங்களை அவர்கள் கொண்டு வரட்டும்.
يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ ﴿٤٢﴾
(கெண்டைக்கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது) அல் கலம் – 42
அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டோம்.அதற்கு அவர்கள் ‘(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக்கொண்டு) சிரமப்படுவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் ‘இல்லை” என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்” என்று கூறிவிட்டு பின்வருமாறு விளக்கினார்கள்:
(மறுமை நாளில் அழைப்பாளர் ஒருவர், ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்)தெய்வவழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்(கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொண்டு வரப்பட்டு கானலைப்போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம் ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள்.
அப்போது அவர்களிடம் ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம் ‘இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), ‘குடியுங்கள்” என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும் போது) அவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள். பின்னர் கிறிஸ்தவர்களிடம், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், ;நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈஸாவை) வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று கூறப்பட்ட பின் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கவர்களும் ‘நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) ‘குடியுங்கள்” என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்து விடுவார்கள்.
இறுதியில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடிய ஒவ்வொரு நல்லவர்களும், கெட்டவர்களும் எஞ்சியிருப்பார்கள்.
மக்கள் அனைவரும் சென்ற பின்பும் நீங்கள் மாத்திரம் ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? எனக் கேட்கப்படும். அதற்கவர்கள், நாம் அவர்களைப் பிரிந்துவிட்டோம். நாம் இன்றய தினம் அவனின் பால் மிகத் தேவையுடையவர்களாக இருக்கிறோம். காரணம், ஒவ்வொரு அழைப்பாளரும் அவரது குழுவினருடன் அவரவர் வணங்கும் கடவுள்களிடம் சென்றுவிடுங்கள் எனக் கூறக்கேட்டோம் நாம் எமது இறைவனை எதிர்பார்த்தவர்களாக இருக்கிறோம் எனக் கூறுவார்கள்.
அவர்கள் முன்பு கண்ட தோற்றம் அல்லாத வேறு தோற்றத்தில் அல்லாஹ் அவர்களிடம் வந்து ‘நான் தான் உங்களது இறைவன்” எனக் கூறுவான். அதற்கு அவர்கள், ‘நீ தான் எங்களது இறைவன்” எனக் கூறுவார்கள். நபியவர்கள் மாத்திரம் அவனுடன் பேசுவார்கள். உங்களுக்கும் அவனுக்குமிடையில் அறிந்து கொள்ளக்கூடிய அடையாளம் உண்டா? எனக் கேட்பான். அதற்கவர்கள் கெண்டைக்கால் எனக் கூறுவார்கள். அப்போது அவனது கெண்டைக்கால் திறக்கப்பட்டு, ஒவ்வொரு விசுவாசிகளும் அவனுக்கு சிரம் பணிவார்கள். அப்போது முஃமினான ஆண், பெண் ஒவ்வொருவரும் அவனுக்கு சிரம் பணிவார்கள். இவ்வுலகில் முகஸ்துதிக்காக, மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக ஸூஜூது செய்தவர்கள் அல்லஹ்வுக்கு ஸூஜூது செய்யச் செல்வார்கள். ஆனால், அவர்களது முதுகு குனிய முடியாத நிலையில் நிமிர்ந்து நிற்கும்.
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி (ரழி).
நூல் : புகாரி (7439).
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ ﴿٤٣﴾
(அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து விடும். அவர்கள் உடலில் குறை ஏதுமற்று இருந்த நிலையில் (உலகில்) ஸஜ்தாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.) அல் கலம் – 43
விசுவாசிகள் தங்களது தலையை உயர்த்துவார்கள். அவர்களது முகம் பணிக்கட்டியை விட வெண்மையாகத் திகழும். மேலும் நயவஞ்சகர்கள், நிராகரிப்பாளர்களின் முகங்கள் மிகக் கருத்திருக்கும்.
(ஸஜ்தாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.)
இதில் அழைப்பு என்ற வார்த்தைக்கு அறிஞர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.
சயீத் பின் ஜுபைர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்” என்று அழைக்கப்பட்டும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
கஃப் பின் அல் அஹ்பார் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக இவ்வசனம் ஜமாஅத் தொழுகைக்கு பிந்தி வருபவர்கள் பற்றித் தான் இறங்கியது.
இப்ராஹிம் அத்தைமி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
பாங்கும், இகாமத்தும் சொல்லி அழைக்கப்பட்டும் வராதவர்களையே குறிக்கும்.