وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ﴿٥﴾
(முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.)
அல்முல்க் 67 : 5
(முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்.)
நீந்திச் செல்லக்கூடிய, பாய்ந்து ஓடக்கூடிய நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் வானத்தை அலங்கரித்துள்ளான். அல்லாஹ் இவ்வசனத்தில் நட்சத்திரங்களுக்கு ‘மஸாபீஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். இதன் கருத்து விளக்குகள் என்பதாகும். ஏன் அவ்வாறு பயன்படுத்தியுள்ளான் என்று பார்த்தால், அவைகளும் விளக்குகள் போன்று ஒளி கொடுக்கின்றன.
(அதே போன்று அதிகாலை என்ற வார்த்தைக்கு ‘சுபஹ்” என்று பயன்படுத்தப்படுகிறது. காரணம் அது பகல் நேரத்தில் மக்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது).
(அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம்.)
அந்த நட்சத்திரங்களை ஷைத்தான்களுக்கு எறிகற்களாக அல்லாஹ் கூறியிருக்கிறான். மேலும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
(முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்). வானவர்கள் எனும் உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு செய்திகளை) ஒட்டுக்கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும்.) அஸ் ஸாஃப்பாத் – 6-8.
அதாவது வானத்தில் வானவர்கள் பெற்றச்செய்தியை ஒட்டுக் கேட்கும் ஷைத்தான்களுக்குத் தான் நட்சத்திரங்கள் எறிகற்களாக பயன்படுத்தப் படுகின்றன. அதற்கான ஆதாரம்:
அல்லாஹ் கூறுகிறான்:
((ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்)கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராகக்) காண்பார்). அல் ஜின் -9.
நட்சத்திரங்களில் மூன்று விதமான பயன்கள் இருக்கின்றன.
1. ஷைத்தான்களுக்கு எறிகற்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
(முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம்.)அல் முல்க்5.
2. மக்களுக்கு வழிகாட்டியாகவும் படைத்துள்ளான்.
(நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.)
அன் நஹ்;ல் – 16.
3. வானத்தை அலங்கரிப்பதற்காகவும் படைத்துள்ளான்.
(முதல் வானத்தை விளக்குகளாள் அலங்கரித்தோம்.) அல் முல்க் – 5.
(அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்).
இந்தத் தண்டனையை ஷைத்தான்களுக்கு இவ்வுலகில் நாம் வைத்திருக்கிறோம். மறுமை நாளில் ‘சஈர்” என்ற நரக வேதனையை நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்:
(முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்). (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு செய்திகளை) ஒட்டுக்கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும். அவனைப் பிரகாசமான தீப்பந்தம் விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு).
அஸ் ஸாஃப்பாத் – 6-10.
கதாதா (ரழி) அவர்கள் இந்த நட்சத்திரங்கள் மூன்று நோக்கங்களுக்காகப் படைக்கப்பட்டதாகக் கூறுவதுடன் யார் அதல்லாத வேறு கருத்துக்களைக் கூறுகிறாரோ அவர் (சுய இச்சைக்குக் கட்டுப்பட்டு கூறுகிறார்) தனது காலத்தை வீணாக்கி, அறிவில்லாத விடயத்தில் தன்னை அழித்துக்கொண்டார் எனக் கூறுகிறார்கள்.