قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّـهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴿٩﴾
(அதற்கவர்கள், ஆம்! நிச்சயமாக எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம் எனக்கூறுவார்கள்). அல்முல்க் – 9
அல்லாஹ் தனது படைப்புகளுடன் நீதமாக நடப்பதாகக் கூறுகிறான். அவன் தூதர்களை அனுப்பி ஆதாரத்தை முன்வைக்காது யாரையும் வேதனை செய்யமாட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை).
அல் இஸ்ராஃ – 15.
மேலும் கூறுகிறான்:
(உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா? என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்பார்கள். எனினும் ஏக இறைவனை மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகிவிட்டது). அஸ் ஸூமர் – 71
இவ்வாறு இழிவை சுமந்தவர்களாக கவலையும் அடைவார்கள். அவர்களின் கவலை அவர்களுக்குப் பயன்தராது.
(பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்) என்று கூறியவர்கள் யார்? யாருக்குக் கூறினார்கள்? என்பதில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.
1. அவ்வாறு கூறியவர்கள் காஃபிர்கள். அவர்கள் தூதர்களைப் பார்த்துச் சொன்னார்கள். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளவில்லை எனக்கூறி மேலும் பொய்ப்பித்து நீங்கள் வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.
2. அவ்வாறு கூறியவர்கள் நரகத்திற்குப் பாதுகாப்பான மலக்குமார்கள். காஃபிர்கள் அம்மலக்குமார்களிடம் நிச்சயமாக எம்மிடம் தூதர்கள் வந்தார்கள் எனக்கூறிய சமயத்தில்.
(ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்). அல்முல்க் – 8
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட