Home / FIQH / துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் & சட்டங்கள் – ஆசிரியர் : Mufti Omar Sharrif,

துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் & சட்டங்கள் – ஆசிரியர் : Mufti Omar Sharrif,

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

 

துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் & சட்டங்கள்

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும்.

 

தனது அடியார்கள் நன்மைகளை அதிகம் பெறவேண்டும் என்பதற்காக பல விசேஷ காலங்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அந்த விசேஷ காலங்களில் உள்ளவைதான் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள்.

 

இந்த பத்து நாள்கள் பற்றி பல சிறப்புகள் வந்துள்ளன.

 

அல்லாஹ் கூறுகிறான்: அதிகாலையின் மீதும் பத்து நாள்கள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1)

 

இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்: அதாவது, துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். இவ்வாறுதான் இப்னு அப்பாஸ், இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகிறார்கள்.

 

அல்லாஹ் ஒரு விஷயத்தின் மீது சத்தியம் செய்தால் அது ஒரு மகத்தான விஷயமாக இருக்கும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: அறியப்பட்ட நாள்களில் அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறவேண்டும் என்பதற்காகவும். (அல்குர்ஆன் 22:28)

 

இந்த அறியப்பட்ட நாள்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் பத்து நாள்கள் என்று இமாம் கதாதா (ரஹ்) கூறுவதாக இமாம் தபரி (ரஹ்) பதிவு செய்கிறார்கள்.

 

துல் ஹஜ் பத்து நாள்களின் சிறப்புகள் பற்றி வந்துள்ள நபிமொழிகள்

 

நபிமொழி 1

عنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي أَيَّامَ الْعَشْرِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ؟ قَالَ: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ

 

ரசூலுல்லாஹ் கூறுகிறார்கள்: நல்லமல்கள் அல்லாஹ் விற்கு மிக விருப்பமாக இருக்கின்ற நாள்கள் இந்த பத்து

நாள்களைவிட வேறு நாள்கள் இல்லை. (நபித்தோழர்கள்) கேட்டனர்: அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்ற நாள்களை விடவா? என்று. நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்ற நாள்களை விடவும்தான். ஆனால், யார் தனது உயிர், பொருளுடன் புறப்பட்டுச் சென்று பிறகு அவற்றில் எதனுடனும் அவர் திரும்பவில்லை என்றால் (அந்த ஜிஹாது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்).

 

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: அபூ தாவூது, எண்: 2438

 

இந்த அறிவிப்பை இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் சற்று வார்த்தை வித்தியாசத்துடன் பதிவு செய்துள்ளார்கள்.

 

நபிமொழி 2

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ عَمَلٍ أَزْكَى عِنْدَ اللهِ عَزَّ وَجَلَّ وَلَا أَعْظَمَ أَجْرًا مِنْ خَيْرٍ يَعْمَلُهُ فِي عَشْرِ الْأَضْحَى قِيلَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ قَالَ وَكَانَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ إِذَا دَخَلَ أَيَّامُ الْعَشْرِ اِجْتَهَدَ اِجْتِهَادًا شَدِيدًا حَتَّى مَا يَكَادُ يَقْدِرُ عَلَيْهِ

 

நபி கூறினார்கள்: “அல்லாஹ்விடம் மிகச் சிறந்த, மிக மகத்தான கூலியுடைய அமல்கள் ஏதும் இல்லை, துல் ஹஜ் பத்து நாள்களில் ஒருவர் செய்கின்ற நன்மையை விட.” அப்போது, அல்லாஹ்வுடைய பாதையில் செய்யப்படுகின்ற அமலை விடவுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படுகின்ற அமலை விடவும்தான். ஆனால், ஒருவர் தனது உயிர், பொருளுடன் புறப்பட்டு அவற்றில் எதனுடனும் திரும்பி வரவில்லையோ அவருடைய நன்மையைத் தவிர.

 

சயீது இப்னு ஜுபைர் (இப்னு அப்பாஸின் மாணவர், இந்த ஹதீஸை அவரிடமிருந்து அறிவிப்பவர்) துல் ஹஜ் பத்து நாள்கள் வந்துவிட்டால் நன்மைகளை செய்வதில் கடுமையான முயற்சி செய்வார்கள்.

 

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: சுனன் தாரமி, எண்: 1815

 

நபிமொழி 3

 

وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُولَ اللهِ صَلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل أَيَّام الدُّنْيَا الْعشْر يَعْنِي عشر ذِي الْحجَّة قيل

وَلَا مِثْلهنَّ فِي سَبِيل الله قَالَ وَلَا مِثْلهنَّ فِي سَبِيل الله إِلَّا رجل عفر وَجهه بِالتُّرَابِ

ரசூலுல்லாஹ் கூறினார்கள்: “உலக நாள்களில் மிக சிறப்பானது துல் ஹஜ்ஜுடைய பத்து நாள்களாகும்.” அப்போது கேட்கப்பட்டது: “அந்த பத்து நாள்கள் போன்று அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்வதை விடவுமா?” நபியவர்கள் கூறினார்கள்: “அந்த பத்து நாள்கள் போன்று அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்வதை விடவும்தான். ஆனால், தனது முகத்தை மண்ணில் கறை பதியவைத்தவரைத் தவிர

(-போரில் கொல்லப்பட்டவரைத் தவிர).

 

அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அத்தர்கீப் வத்தர்ஹீப், எண்: 1785. இந்த ஹதீஸை இமாம் பஸ்ஸார் மற்றும் இமாம் அபூ யஅலா இருவரும் சரியான சனதுடன் பதிவு செய்துள்ளார்கள் என்று அத்தர்கீப் வத்தர்ஹீப் உடைய ஆசிரியர் இமாம் முன்திரி கூறியுள்ளார்கள். ஷைகு அல்பானியும் இதை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

 

நபிமொழி 4

عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ فِيهِنَّ أَفْضَلُ مِنْ أَيَّامِ الْعَشْرِ قِيلَ

وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ؟ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ الله

ரசூலுல்லாஹ் கூறினார்கள்: எந்த நாள்களும் அவற்றில் அமல் செய்வது மிக சிறப்பானதாக இல்லை துல் ஹஜ்ஜுடைய பத்து நாள்களில் செய்யப்படும் அமலைவிட. அப்போது கேட்கப்பட்டது: அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்லும்போது செய்யப்படும் அமலைவிடவுமா? நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்லும்போது செய்யப்படும் அமலைவிடவும்தான்.

 

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது (ரலி), நூல்: முஅஜம் தபரானி கபீர், எண்: 10455. இந்த ஹதீஸை ஷைகு அல்பானி ஸஹீஹ் என்று ஸஹீஹுத் தர்கீப் என்ற நூலில் கூறியுள்ளார்கள்.

 

நபிமொழி 5

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ

 

ரசூலுல்லாஹ் கூறுகிறார்கள்: அல்லாஹ்விடம் மிக மகத்தான இன்னும்  நல்லமல்கள் அவனுக்கு மிக விருப்பமாக இருக்கின்ற நாள்கள் இந்த பத்து நாள்களைவிட வேறு நாள்கள் இல்லை. ஆகவே, அவற்றில் அதிகம் தஹ்லீல் (லா இலாஹ இல்லல்லாஹ்), தக்பீர் (அல்லாஹு அக்பர்), தஹ்மீது (அல்ஹம்து லில்லாஹ்) கூறுங்கள்.

 

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்னது அஹ்மது, எண்:6154. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் யஸீது இப்னு அபீ சியாது என்பவர் பலவீனமானவராக இருந்தாலும் இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பு தொடர்களிலும் வருவதால் இந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று ஷைகு ஷுஐபு மற்றும் அல்பானி இருவரும் கூறியுள்ளார்கள்.

 

இந்த நாள்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நல்லறங்கள்

 

1)            ஃபர்ழான, சுன்னத்தான, நஃபிலான தொழுகைகளை முழுமையாக நிறைவேற்றுவது.

 

2)            முடிந்த அளவு நஃபிலான நோன்புகள் நோற்பது.

عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ

وَيَوْمَ عَاشُورَاءَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ

ரசூலுல்லாஹ் துல் ஹஜ் மாதத்தில் முதல் ஒன்பது நாள்களும், ஆஷூரா அன்றும், ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாள்களும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பாளர்: நபியின் மனைவிமார்களில் ஒருவர், நூல்: அபூதாவூது, எண்: 2437. இந்த ஹதீஸை ‘ஸஹீஹ்’ என்று ஷைகு அல்பானி அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் நவவி (ரஹ்) கூறுகிறார்கள்: துல் ஹஜ் முதல் பத்து நாள்களில் நோன்பு நோற்பது மிகவும் விரும்பத்தக்க ஒரு அமலாகும்.

 

குறிப்பு: பிறை ஒன்றிலிருந்து ஒன்பது வரை நோன்பு நோற்பது சிறப்பாகும். பிறை 10 மற்றும் பிறை 11,12,13 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது கூடாது.

 

ஹாஜிகள் அரஃபா அன்றும் பிறை பத்திலும் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ் தமத்துஃ அல்லது ஹஜ் கிரான் செய்பவர்கள் குர்பானி கொடுக்க வசதி பெறவில்லை என்றால் அவர்கள் ஹஜ்ஜில் மூன்று நோன்பும் ஊர் திரும்பிய பின்னர் ஏழு நோன்பும் வைக்கவேண்டும். அந்த மூன்று நோன்புகளை துல் ஹஜ் பிறை 11,12,13 ஆகிய தினங்களில் நோற்கலாம். மற்றவர்கள் வேறு எந்த நோன்பையும் அந்த தினங்களில் நோற்கக் கூடாது. ஹாஜிகளில் குர்பானி கொடுத்தவர்களும் அன்றைய தினங்களில் நோன்பு நோற்கக்கூடாது.

 

3)  அதிகமாக திக்ருகள் செய்வது.

 

அந்த திக்ருகள்

لا إله إلا الله

الله أكبر

الحمد لله

இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்கிறார்கள்: இப்னு உமர், மற்றும் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுமா இருவரும் (இந்த பத்து நாள்களில் கடைத்தெருவிற்கு சென்று தக்பீர் சொல்வார்கள். அவர்களது தக்பீர் சப்தத்தை கேட்டு மக்களும் தக்பீர் சொல்வார்கள். முஹம்மது இப்னு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நஃபில் தொழுகைகளுக்கு பின்னர் தக்பீர் கூறுவார்கள்.

 

وَكَانَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ يُكَبِّرُ فِي قُبَّتِهِ بِمِنًى فَيَسْمَعُهُ أَهْلُ المَسْجِدِ فَيُكَبِّرُونَ وَيُكَبِّرُ أَهْلُ الأَسْوَاقِ حَتَّى تَرْتَجَّ مِنًى تَكْبِيرًا وَكَانَ ابْنُ عُمَرَ يُكَبِّرُ بِمِنًى تِلْكَ الأَيَّامَ وَخَلْفَ الصَّلَوَاتِ وَعَلَى فِرَاشِهِ وَفِي فُسْطَاطِهِ وَمَجْلِسِهِ وَمَمْشَاهُ تِلْكَ الأَيَّامَ جَمِيعًا وَكَانَتْ مَيْمُونَةُ تُكَبِّرُ يَوْمَ النَّحْرِ وَكُنَّ النِّسَاءُ يُكَبِّرْنَ خَلْفَ أَبَانَ بْنِ عُثْمَانَ وَعُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ لَيَالِيَ التَّشْرِيقِ مَعَ الرِّجَالِ فِي المَسْجِدِ.

 

மினாவில் தனது கூடாரத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்பீர் கூறுவார்கள். மஸ்ஜிதில் தங்கியிருப்பவர்கள் அதை செவியுற்றவுடன் அவர்களும் தக்பீர் சொல்வார்கள். கடை வீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் சொல்வார்கள். தக்பீர் முழக்கத்தால் மினாவே குலுங்கிவிடும்.

 

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இந்த நாள்களில் (பிறை 10, 11, 12, 13, 14 ஆகிய நாள்களில்) தக்பீர் கூறிக்கொண்டே இருப்பார்கள். தொழுகைகளுக்கு பின்னால், தனது விரிப்பில், தனது கூடாரத்தில், தனது சபையில், தான் நடந்து செல்லும்போது இந்த எல்லா நாள்களிலும் தக்பீர் சொல்வார்கள்.

மைமூனா ரழியல்லாஹு அன்ஹா பிறை பத்தில் தக்பீர் கூறுவார்கள். உஸ்மானுடைய மகனார் அபானுக்குப் பின்னால் தொழும் போதும் உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுக்கு பின்னால் தொழும் போதும் மஸ்ஜிதில் ஆண்களுடன் பெண்களும் தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்.

 

நூல்: புகாரி, பாடம்: மினாவிலும் அரஃபா செல்லும் போதும் தக்பீர் சொல்வது.

 

தக்பீர் உடைய வாசகங்கள்:

الله أكبر  الله أكبر الله أكبر كبيرا

الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد

الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد

4)  அரஃபா அன்று ஹஜ் செய்யாதவர்கள் நோன்பிருப்பது.

صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய ஆண்டு இன்னும் அதற்கு பிந்திய ஆண்டுக்கு கஃப்ஃபாராவாக (பாவங்களை போக்கக்கூடியதாக) இருக்கும் என்று அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன் என்று நபி கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலி), நூல்: முஸ்லிம், எண்: 1162

 

அரஃபாவில் ஹாஜிகளாக இருப்பவர்கள் நோன்பு நோற்பது கூடாது.

عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ إِنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ مَيْمُونَةُ بِحِلَابِ اللَّبَنِ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ إِلَيْهِ

மக்கள் அரஃபா தினம் அன்று ரசூலுல்லாஹ் ﷺ நோன்பு இருக்கிறார்களா-? என்று சந்தேகப்பட்டனர். ஆகவே, மைமூனா ரழியல்லாஹு அன்ஹா ஒரு பாத்திரத்தில் பாலை நபியவர்களிடம் அனுப்பினார்கள். நபியவர்கள் அரஃபாவில் நின்று கொண்டிருந்தார்கள். நபியவர்கள் அதிலிருந்து பருகினார்கள். அதை மக்கள் பார்த்தார்கள்.

 

அறிவிப்பாளர்: மைமூனா (ரலி), நூல்: முஸ்லிம், எண்: 1124.

 

5) அரஃபாவில் தங்கியிருக்கும் ஹாஜிகள் அதிகம் துஆ கேட்கவேண்டும். மேலும்

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

என்ற திக்ரை அதிகம் கூறவேண்டும்.

 

خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ،

لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

துஆக்களில் சிறந்தது அரஃபாவுடைய துஆ ஆகும். நானும் எனக்கு முன் சென்ற நபிமார்கள் கூறியவற்றில் சிறந்தது

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

என்ற திக்ர் ஆகும் என நபி ﷺ கூறினார்கள்.

 

பொருள்: அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரி யவன் வேறு யாரும் அறவே இல்லை. அவனுக்கு இணை அறவே இல்லை. அவனுக்கே ஆட்சி அனைத்தும் சொந்தம். அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தம். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன்.

 

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), நூல்: திர்மிதி, எண்: 3585. இந்த ஹதீஸை ஷைகு அல்பானி “ஹசன்- அழகானது” என்று கூறியுள்ளார்கள்.

 

6) ஹஜ்ஜில் இல்லாதவர்கள் பெருநாள் தொழுகையை முக்கியத்துவத்துடன் நிறைவேற்ற வேண்டும். தொழுகை இல்லாத பெண்களும் பெருநாள் திடலுக்கு செல்லவேண்டும். அங்கு முஃமின்கள் கேட்கின்ற துஆக்களில் கலந்து கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: நபியே உமது இறைவனுக்காக தொழுவீராக! இன்னும், பலியிடுவீராக! (அல்குர்ஆன் 108:2)

عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ أَمَرَنَا نَبِيُّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْ نُخْرِجَ العَوَاتِقَ وَذَوَاتِ الخُدُورِ وفي رواية حفصة

وَيَعْتَزِلْنَ الحُيَّضُ المُصَلَّى

உம்மு அதிய்யா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: எங்களது நபி ﷺ நாங்கள் வயதுவந்த பெண்பிள்ளைகளையும் திரையில் இருக்கின்ற வாலிப கன்னிப் பெண்களையும் அழைத்து வரும்படி எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.

ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்ற அறிவிப்பில் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து விலகி இருப்பார்கள் என்று நபியவர்கள் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது. (நூல்: புகாரி, எண்: 974)

 

7) வசதி உள்ளவர்கள் உழ்ஹிய்யா – குர்பானி கொடுக்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ

وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا

 

ரசூலுல்லாஹ் கூறினார்கள்: யாருக்கு வசதி இருந்து, குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழுகைத் திடலை நெருங்க வேண்டாம்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: இப்னு மாஜா, எண்: 3123, இந்த ஹதீஸை ஷைகு அல்பானி “ஹசன் – அழகானது” என்று கூறியுள்ளார்கள்.

 

8) உழ்ஹிய்யா குர்பானி கொடுப்பவர் துல் ஹஜ் பிறை பிறந்ததிலிருந்து தனது நகம், முடிவெட்டுவதை தவிர்க்கவேண்டும்.

عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَتِ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلَا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا

நபி கூறினார்கள்: “(துல் ஹஜ்ஜுடைய) பத்து நாள்கள் வந்துவிட்டால், உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நாடினால் அவர் தனது முடி, இன்னும் தனது உடல் முடியில் இருந்து எதையும் தொடவேண்டாம் (-வெட்டவோ சிரைக்கவோ வேண்டாம்).

அறிவிப்பாளர்: உம்மு சலமா (ரலி), நூல்: முஸ்லிம், எண்: 1977.

 

9) அரஃபா தினத்தின் காலையிலிருந்து பிறை 13 பதிமூன்று அஸ்ர் வரை ஃபர்ழான தொழுகைகளுக்கு பின்னர் ஹாஜி அல்லாதவர்கள் தக்பீர் சொல்ல வேண்டும். இந்த தக்பீர் ஒவ்வொரு ஃபர்ழ் தொழுகைக்கு பின்னர் மூன்று முறை இஸ்திங்ஃபார் கூறி,

 

اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام

என்ற திக்ரையும் கூறிய பின் சொல்லவேண்டும்.

இமாம் மக்கள் பக்கம் திரும்பி அமர்ந்து இந்த தக்பீர்களை சொல்வார். மக்களும் அவரவர் இந்த தக்பீர்களை சொல்ல வேண்டும். எல்லோரும் ஒரே சப்தத்தில் சொல்வதோ, இதற்கென்று தனி ஒரு ராகம் போடுவதோ கூடாது. மேலும், ஒருவர் சொல்ல, அதற்கு பின்னர் மற்றவர்கள் ஒரே குரலில் சொல்வதோ கூடாது. அவ்வாறே மூன்று முறை சொல்வதும் கூடாது. இதுதான் ஹதீஸ் கலை அறிஞர்களின் தீர்ப்பாகும். அவ்வாறே பெருநாள் தினம் அன்று திடலிலும் அவரவர் தக்பீர் சொல்லவேண்டும். தக்பீருடைய வாசகங்கள் முன்னர் மேலே விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர இன்று மக்கள் சொல்லக் கூடிய வாசகங்கள் ஆதாரமற்றவை.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ  قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الصُّبْحَ مِنْ غَدَاةِ عَرَفَةَ يُقْبِلُ عَلَى أَصْحَابِهِ

فَيَقُولُ عَلَى مَكَانِكُمْ وَيَقُولُ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ فَيُكَبِّرُ مِنْ غَدَاةِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ

ரசூலுல்லாஹ் அரஃபாவின் காலையில் ஸுப்ஹ் தொழுதவுடன் தனது தோழர்களை முன்னோக்கி உங்கள் இடங்களில் அமருங்கள் என்று கூறிவிட்டு

اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ

இந்த தக்பீரை கூறுவார்கள். அரஃபாவின் காலையிலிருந்து தஷ்ரீகுடைய கடைசி நாளின் அஸ்ரு தொழுகை வரை தக்பீர் சொல்வார்கள்.

அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: சுனன் தாரகுத்னி, எண்: 1737.

 

ஆசிரியர் : Mufti Omar Sharrif,

 

 

Patient 1

Check Also

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் குத்பா பேருரை

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் குத்பா பேருரை அஷ்ஷைக் நூஹ் அல்தாஃபி ரியாத் மாநகரில் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் …

Leave a Reply