Home / Islamic Months / Muharram / முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்…

முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்…

தொகுப்பு : ரஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம்,
சவுதி அரேபியா.

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;, அன்னாரின் குடும்பத்தினர்;, அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.

அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான்.

‘வானங்கள், பூமிகள் படைக்கப்பட்ட நாட்களில் இருந்தே அல்லாஹ்வின பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்)புனிதமானவையாகும்.’ (அத்தவ்பா:09)

அந்த அடிப்படையில் இஸ்லாமிய மாதங்களாக முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் போன்ற பன்னிரெண்டு மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹுத்தஆலா கண்ணியமிக்க மாதங்களாக ஆக்கியிருக்கின்றான்.
இந்த புனிதமான 04 மாதங்கள் எவைகள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபீ பக்ரா (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் :

அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்து பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து ‘ரஜப்’ மாதமாகும். (புஹாரி : 4662)

அந்த அடிப்படையில் இந்த மாதங்களில் போராடுவது மற்றும் மற்ற மனிதர்களுக்கு அநியாயம் இழைப்பது, தீய விடயங்களில் ஈடுபடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை தடுக்கப்பட்டதின் ஊடாக கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் யாரேனும் எங்கள் மீது அத்துமீறுகின்றபோது அதனை நடப்பதற்காக போராடுவது ஆகுமாக்கப்பட்டுள்ளது. இதனை அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

{الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ} الآية ஜسورة البقرة:194ஸ

‘புனித மாதத்திற்கு புனித மாதமே ஈடாகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் சீர் குலைக்கப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு. ஆதலால், எவரேனும் மீறி உங்கள் மீது (போர்புரிய) வந்தால், அவர் உங்கள் மீது மீறியது போன்று நீங்களும் அவர்மீது மீறி (போர்புரிய)ச் செல்லுங்கள்.’ (அல்பகரா : 194)

எனவே, இந்த மாதங்கள் இஸ்லாத்தில் மட்டுமல்ல ஜாஹிலிய்யா காலத்தில்கூட கண்ணியமிக்க மாதங்களாகவே கருதப்பட்டுவந்தன. என்றாலும், சிலவேளைகளில் அவர்களால் இந்த மாதங்களை கண்ணியப்படுத்துகிறோம் என்ற நோக்கில் தங்களுக்கு நினைத்தாற்போல் இவைகளை முன்பின் ஆக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். இதனைப்பற்றி அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

{إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ} ஜسورة التوبة:37ஸ.

‘(சிறப்புற்ற மாதங்களை, அவர்கள் விருப்பப்படி) முன்பின் ஆக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதனால் நிராகரித்துக் கொண்டிருப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடத்தில் அ(வ்வாறு முன்பின் ஆக்குவ)தை ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை ஆகாததாக்கி விடுகின்றனர் (இவ்வாறு செய்வதெல்லாம்) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்கு (அவர்களின் எண்ணிக்கைளை) சரியாக்குவதற்காகத்தான்ள பின்னர்) அல்லாஹ் தடுத்தவற்றை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்கின்றனர் அவர்களுடைய செயல்களின் தீமை (ஷைத்தானால்) அவர்களுக்கு அலங்காரமாக ஆக்கப்பட்டுவிட்டது மேலும் அல்லாஹ், நிராகரிக்கும் (இக்)கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.’ (அத்தவ்பா: 09)

இதேபோன்று வேறுசில மாதங்களை வேறுவிடயங்களில் மூலம் அல்லாஹ்வினாலும் அவனது தூதரினாலும் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பொழுது நாம் இருப்பது சந்திர கணக்குப்படி முதலாவது மாதமான முஹர்ரம் மாதமாகும். எனவே, இதன் சிறப்பைப்பற்றியும் அதில் செய்யக்கூடிய சில முக்கிய விடயங்களைப் பற்றியும் அறிஞர்களின் சில கருத்துக்களின் சுருக்கமான தொகுப்பாக தமிழில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்…..

முதன்முதலாக இஸ்லாமிய முதல் மாதமும், இஸ்லாமிய முதல் வருடமும் அறிமுகமான விதம் நபியவர்களுக்கு முன்னரே ஜாஹிலிய்யா கால மக்களிடம் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகவும், அவைகள் இப்பொழுது நாம் எவ்வாறு அரபு மாதங்கள் என்று கூறுகின்றோமோ அதேவிதத்திலேயே குரைஷியர்களுக்குப் பின்னர் அறிமுகமாகவும், புழக்கத்திலும் இருந்தன.
என்றாலும் இதுதான் வருடத்தின் முதல் மாதம் என்ற கணக்கெடுப்பு இருக்கவில்லை. அதேபோன்று, இது இந்த வருடம்தான் என்ற கணக்கெடுப்பும் இருக்கவில்லை. மாறாக அக்காலத்தில் நடக்கும் ஒரு வித்தியாசமான நடந்த நிகழ்வு அல்லது சம்பவத்தை வைத்தே வருடத்தை தங்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். உதாரணமாக நபியவர்கள் பிறந்த வருடத்தை ‘ஆமுல் பீல்’ (யானை வருடம்) என்று அந்த மக்களிடத்தில் பிரபல்யம்பெற்று காணப்பட்டது. ஏனெனில் அந்த வருடம்தான் ஆப்ரஹான் என்ற அரசன் தனது யானைப் படைகளுடன் கஃபாவை அழிப்பதற்காக வந்த நிகழ்வு நடைபெற்றது.

எனவே, முஹர்ரம் என்பது இஸ்லாமிய கணக்கில் முதல் மாதமாகவும் , ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய வருடத்தின் முதல் வருடமாகவும் ஹி.17ஆம் ஆண்டு உமர் பின் ஹத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக்காலத்தில் வைத்தே ஆலோசணை செய்து தீர்மாணிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை இமாம் ஹாகிம் அவர்கள் ஷஃபியைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள் : அபூ மூஸா அவர்கள் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதினார்கள். (அதிலே) ‘உமரவர்களே உங்களிடமிடந்து எங்களுக்கு புத்தகங்களும் கடிதங்களும் வருகின்றன அவைகளில் திகதி குறிப்பிடப்படாத நிலையில்’ எனவே, உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மனிதர்களை ஒன்றுகூட்டி… முதல் வருடத்தை எவ்வாறு தெரிவு செய்வது?? மற்றும் முதல் மாதத்தை எவ்வாறு தெரிவு செய்வது?? என்று ஆலோசனை செய்தார்கள்.
அதன்போது முதல் வருடத்தை நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த வருடத்தை வைத்து தெரிவு செய்வோம் என்றும், நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததை வைத்து கருத்தில் கொள்வோம் என்ற கருத்துக்கள் கூறப்பட்டன. என்றாலும் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்தே முதல் வருடத்தை கணக்கிலெடுப்போம் என்ற கருத்தையே ஆதரித்தார்கள். ஏனெனில், ஹிஜ்ரத் நிகழ்வே சத்தியத்திற்கும் அசத்தியத்திகும் இடையிலான பிரிகோடாக இருந்தது என்ற ரீதியில்’.
அதேபோன்று முதல் மாதத்தை ரமழானை அடிப்படையாக வைத்து கணக்கிலெடுப்போம். ஏனெனில், அதிலேதான் கண்ணியமிக்க அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது என்று கூறப்பட்டது. அதேபோல் முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக கொள்வோம். ஏனெனில், மக்கள் கடமையாக்கப்பட்ட ஹஜ் கடமையை நிறைவு செய்துவிட்டு தம்வீடுகளுக்கு திரும்புகிறார்கள் என்ற கருத்து கூறப்பட்டது. இதில் முஹர்ரம் மாதம் முதல் மாதமாக இருப்பதே சிறந்தது என்ற கருத்தையே உமர் றழியல்லாஹு அவர்கள் ஆதரித்து அதனையே அறிமுகப்படுத்தினார்கள்.
எனவே, முதல் வருடமாக நபியவர்களின் ஹிஜ்ரத் நிழ்ந்த வருடத்தையும், முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தை தீர்மானித்து மக்களுக்கு அறிவித்தல் கொடுத்தார்கள்.
இந்த கண்ணியமிக்க 04 மாதங்களில் சிறந்த மாதம் எது என்பதில் அறிஞர்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. அதிலே முஹர்ரம் மாதம் தான் சிறந்த மாதம் என்று இமாம் ஹஸனுல் பஸரீ றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள். இதனையே வேறுசில அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதற்கு ஆதாரமாக நஸாஈ கிரந்தத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள, அபூதர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக்காட்டுகிறார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘இரவுகளில் சிறந்தது எது?’ மேலும் ‘மாதங்களில் சிறந்தது எது?’ என்று வினவினேன். அதற்கு ‘இரவுகளில் சிறந்தது நடுப்பகுதி| என்றும். ‘மாதங்களில் சிறந்தது அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதமும் சிறந்தது| என்றும் நபியவர்கள் பதிலளித்தார்கள். (ஆதாரம் : நஸாஈ)

எனவே, இந்த மாதத்தில் பொருந்தியிருக்கும் சில மிக முக்கிய சட்டங்கள் என்று பார்க்கின்றபோது

1- இதிலே போராட்டம் தடுக்கப்பட்டுள்ளது :
அதாவது நாங்களாகவே போராட்டத்தை ஆரம்பிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிரிகள் எங்களை தாக்கவருகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக வேண்டி எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள போராடலாம்.

2- இந்த மாதத்தில் நோன்பு நோற்பது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ரமழான் மாத நோன்பிற்குப் பிறகு நோன்புகளில் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். (ஆதாரம் : முஸ்லிம்)
எனவே, இம்மாதத்தின் பெரும்பான்மையான நாட்களில் நோன்பு நோற்பது ஏற்கத்தக்கதாகும்.

3- இம்மாதத்தில் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது :
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆவது தினத்ததைக் குறிக்கும். இந்த தினத்திலேயே அல்லாஹுத்தஆலா மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களின் கூட்டத்தினரையும் பாதுகாத்ததுடன், பிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடிக்கச் செய்தான். எனவே, இதற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள், எனவே நபியவர்களும் நோன்பு நோற்றார்கள்.

இதனைப் பற்றி இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் வினவப்பட்டபோது, ‘இந்த நாளில்தான் (இறைத்தூதர்) மூஸா அலைஹிஸ்ஸலாம் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித்தான். எனவே, இந்நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்’ என யூதர்கள் கூறினர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே’ என்று கூறிவிட்டு, ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

எனவே, இந்த ஆஷுரா நோன்பு பற்றிய நான்கு நிலைப்பாடுகள் இருந்தன. என்று ‘லதாஇபுல் மஆரிப்’ எனும் நூலின் 96-102 வரையுள்ள பக்கங்களில் இமாம் ஸைனுத்தீன் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :

முதலாவது நிலைப்பாடு :
நபியவர்கள் மக்காவில் ஆஷுரா நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். என்றாலும் மக்களை அத்தினத்தில் நோன்பு நோற்குமாறு ஏவவில்லை :
ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : ஜாஹிய்யா காலத்து குறைஷிகள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அத்தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) வந்த பின்னர் அவர்களும் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷுரா நோன்பு நோற்கலாம், நாடியவர் அதை விட்டுவிடலாம்’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
வேறொரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : விரும்பியவர் நோன்பு நோற்கட்டும் விரும்பியவர் நோன்பை விட்டுவிடட்டும். (ஆதாரம் : புஹாரி)

இரண்டாவது நிலை :
நபியவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபோது, வேதங்கொடுக்கப்பட்டவர்கள் அத்தினத்தில் நோன்புநோற்று அத்தினத்தை கண்ணியப்படுத்துபவர்களாக இருந்தார்கள். எனவே, நபியவர்களும் நோன்பு நோற்று – மனிதர்களையும் நோன்பு நோற்குமாறு பணித்தார்கள்.

மூன்றாவது நிலை :
ரமழான் மாதம் நோன்பு கடமையாக்கப்பட்டபோது தனது தோழர்களுக்கு ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்குமாறு ஏவுவதை விட்டுவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷுரா) அன்று நோன்பு நோற்று வந்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்புவரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம், நாடியவர் அ(ந்நாளில் நோன்பு நோற்ப)தை விட்டுவிடலாம்’ என்றார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

நான்காவது நிலை :
நபியவர்கள் தனது வாழ்நாளில் கடைசிகாலத்தில் ஆஷுரா தினத்தில் மாத்திரம் நோன்பு நோற்காமல் அதற்கு முன்னைய தினமாக ஒன்பாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று உறுதிபூண்டார்கள். ஏனெனில், வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு முரணாக செயற்படவேண்டும் என்ற ரீதியில்.
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா தினத்தில் தாமும் நோன்ப நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’ என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

4- ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பதின் சிறப்பு :
அபூகதாதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷுரா தின நோன்பைப்பற்றி கேட்கப்பட்டது? அதற்கு நபியவர்கள், ‘சென்றவருட பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான் என கருதுகிறேன்’ என்றார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
எனவே, ஒரு முஸ்லிமைப்பொருத்தவரையில் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது தினத்தில் மாத்திரம் நோன்பு நோற்பதால் இந்த பயனை அடைந்து கொள்வான். என்றாலும், பத்தாவது தினத்துடன் சேர்த்து அதற்கு முன்னைய தினமான ஒன்பதாவது தினத்திலும் நோன்பு நோற்பதால் அதன்முழுமையான பயனையும், கூலியையும் அடைந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்…

5- வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு முரணாக நாம் எப்படி நோன்பு நோன்பது :
இதனைப்பற்றி இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக கூறினார்கள்: ‘வருகின்ற வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது தினமும் நோன்பு நோற்பேன்’ என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸிலிருந்து விளங்குவது என்னவென்றால், வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு முரணாக இத்தினத்தில் நோற்கவேண்டிய வழிமுறையை நபியவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். அதாவது முஹர்ரம் மாதம் 09ஆவது மற்றும் 10ஆவது தினங்களில் நோன்பு நோற்பதாகும்.

என்றாலும், ஒரு சிலர் கூறுகின்றார்கள் : ஒன்பதாவது தினத்திலும் பத்தாவது தினத்திலும் நோன்பு நோற்குமாறு , அப்படி இல்லையென்றால் பத்தாவது தினமும் பதினொராவது தினமும் நோன்பு நோற்குமாறு. ஏனெனில், அதற்கு ஒரு ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள் :
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். இன்னும் அன்றைய தினத்திற்கு முன்னர் ஒரு நாளோ அல்லது பின்னர் ஒரு நாளோ நோன்பு நோற்பதின் மூலமாகவோ யஹுதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளுங்கள்.’ (ஆதாரம் : அஹ்மத், இப்னு ஹுஸைமா, பைஹகீ)

குறிப்பு : மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில், இதில் வரக்கூடிய அறிவிப்பாளர்களான முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அல்அன்ஸாரீ மற்றும் தாவூத் பின் அலீ அல்-குரஷி ஆகிய இருவரும் பலவீனமானவர்கள். ஆகையால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
மேலும், பலவீனமான ஹதீஸ்கள் என்பன சந்தேகத்திற்குரிய செய்திகளாகும். ஆகையால், இம்மார்க்கம் சந்தேகத்தைக்கொண்டு நிலைநிறுத்தப்படமாட்டாது.
எனவே, இந்த முஹர்ரம் மாதத்தை நபியவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கண்ணியப்படுத்துவதுடன், 09ஆம் 10ஆம் நாட்களில் நோற்று அதன்மூலம் பாவங்கள் மன்னிப்பட்ட அடியார்களாக எங்களை அல்லாஹுத்தஆலா ஆக்கிவைப்பானாக.

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!

முழுத்தகவல்களையும் புத்தக வடிவில் படிக்க

Click Here To Download The E_book

Check Also

மூஸா நபியின் வாழ்வில் சில படிப்பினைகள்

மூஸா நபியின் வாழ்வில் சில படிப்பினைகள் வழங்குபவர்: அஷ்ஷேக் யாஸிர் ஃபிர்தவ்ஸி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …

Leave a Reply