Home / Islamic Months / Ramadan / Fasting / ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா? கட்டுரை | மௌலவி அப்பாஸ் அலி MISC

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா? கட்டுரை | மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா?

PDF (Download)

ரமளானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகளை நோற்கும் வழக்கம் பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது. சஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் நபிமொழி இதற்கு சான்றாக உள்ளது.

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ رواه مسلم  

  • مسلم 1984

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலிலி)

நூல் : முஸ்லிம் (2159)

                இந்த நபிமொழி பலவீனமானது. எனவே ஆறு நோன்பு நோற்பது பித்அத் ஆகும் என தற்போது சிலர் தவறானக் கருத்தைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய விம்சனம் அல்ல.

இதற்கு முன்பே இந்த நபிமொழி சிலரால் விமர்சிக்கப்பட்டது. இது தவறான விமர்சனம் என்பதால் இப்னுல் கய்யும் போன்ற அறிஞர்கள் இதனை மறுத்து அழகிய முறையில் பதிலளித்துள்ளனர்.

அறிஞர் அல்பானீ இப்னு தைமியா இப்னுல் உஸைமீன் பின்பாஸ் மற்றும் பல அறிஞர்கள் இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளனர். குறிப்பாக இமாம் முஸ்லிம் அவர்கள் இதனை தனது சஹீஹ் முஸ்லிமில் பதிந்ததின் மூலம் இதனை ஆதாரப்பூர்வமானது என்று தெரிவித்துள்ளார்கள்.

இமாம் திர்மிதீ இமாம் அபூதாவுத் இமாம் அஹ்மது இமாம் நஸாயீ இமாம் பைஹகீ மற்றும் பல ஹதீஸ் தொகுப்பு நூலாசிரியர்கள் தங்கள் நூற்களில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளனர்.

இனி இந்த செய்தியின் மீது சொல்லப்படும் விமர்சனத்தையும் அதற்கான பதிலையும் அறிந்துகொள்வோம்.

அறிந்துகொள்ள வேண்டிய உண்மை

                அறிவிப்பாளரின் நினைவாற்றல் குறைபாட்டின் காரணத்தால் ஒரு செய்தி பலவீனமானது எனக் கூறப்பட்டால் அச்செய்தி 100 சதவீதம் தவறானது பொய்யானது என நாம் நினைத்துவிடக்கூடாது. நினைவாற்றல் குறைபாடு உள்ளவர் சரியாகவும் அறிவிக்கலாம். தவறாகவும் அறிவிக்கலாம். இவர் விசயத்தில் நமக்கு இந்த சந்தேகம் வருவதால் இவருடைய அறிவிப்பை ஏற்காமல் பலவீனமானது என முடிவுசெய்கிறோம்.

                இவருடைய அறிவிப்பை நாம் ஏற்கமறுத்ததற்கு அவர் விசயத்தில் நமக்கு எழுந்த சந்தேகம் மட்டுமே காரணமாகும். இந்த அறிவிப்பாளர் இதில் தவறிழைத்துவிட்டார். இந்த செய்தி தவறாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இவரது அறிவிப்பு மறுக்கப்படுவதில்லை.

                இந்த அறிவிப்பாளர் விசயத்தில் நமக்கு சந்தேகம் மேலோங்குவதால் அவரது அறிவிப்பு பலவீனமானது எனக் கூறுகிறோம். அதாவது சந்தேகத்தைத் தான் பலவீனம் என்று கூறுகிறோம். இது நீங்காமல் நீடித்திருக்கும் பலவீனம் அல்ல. சந்தேகம் நீங்கிவிட்டால் பலவீனமும் நீங்கிவிடும். இவர் அறிவிக்கும் செய்தியை ஆதாரப்பூர்மானது என முடிவுசெய்யப்படும்.

                இந்த அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தியைப் போன்று வேறு அறிவிப்பாளர்கள் அறிவித்திருந்தால் அப்போது இச்செய்தியில் இவர் தவறிழைக்கவில்லை. சரியாகவே அறிவித்துள்ளார் என்ற நம்பிக்கை ஏற்படும். இதற்கு முன்பு இவர் விசயத்தில் நமக்கு ஏற்பட்ட சந்தேகம் நீங்கிவிடும்.

                இவருடன் உடன்படும் அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை அவர்கள் அச்செய்தியில் எந்த அளவு உடன்படுகிறார்கள் ஆகியவற்றைப் பொறுத்து அவருடைய அறிவிப்பு வலுப்பெறும். அந்த செய்தியின் மீது நம்பிக்கை அதிகமாகும்.

சஅத் பின் சயீத்

                ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய மேற்கண்ட செய்தியில் சஅத் பின் சயீத் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் தன் ஆசிரியர் உமர் இப்னு சாபித்திடமிருந்து இச்செய்தியை அறிவிக்கிறார். உமர் பின் சாபித் தன் ஆசிரியர் அபூ அய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்.

சஅத் இப்னு சயீத் நினைவாற்றல் குறைபாடுடையவர். எனவே இந்த செய்தி பலவீனம் என இச்செய்தியை பலவீனம் எனக் கூறுபவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

                அறிவிப்பாளர் சஅத் நேர்மையானவர் என்றாலும் இவரது நினைவாற்றலில் குறைபாடுள்ளது என்ற விம்சனம் உண்மைதான். எனவே இச்செய்தியை இவர் தவறாக அறிவித்திருப்பாரோ என்ற சந்கேதம் எழலாம். இந்த சந்தேகம் இங்கே தேவையற்றது. இதனடிப்படையில் இதை பலவீனமானது எனக் கூறுவதும் தவறு.

இவர் குறித்த இந்த செய்தியை தவறாக அறிவிக்கவில்லை. சரியாகவே அறிவித்துள்ளார் என முடிவுவெடுப்பதற்கு துணைச் சான்றுகள் ஏராளம் உள்ளன. இது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளையும் ஒருங்கினைத்துப் பார்க்கும் போது இந்த உண்மையை தெளிவாக உணரலாம். எனவே தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இந்த செய்தியை தன் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

துணைச் சான்றுகள்

                இந்த நபிமொழியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அவர்களிடமிருந்து உமர் பின் சாபித் அறிவிக்கிறார். உமர் பின் சாபித்திடமிருந்து மொத்தம் ஐவர் இச்செய்தியை அறிவித்துள்ளனர். சஅத் பின் சயீத் அறிவித்ததைப் போன்றே மற்ற நால்வரும் அறிவித்துள்ளனர்.

مشكل الآثار للطحاوي  – باب بيان مشكل ما روي عن رسول الله صلى الله عليه

 كما قد حدثنا يوسف بن يزيد ، قال : حدثنا سعيد بن منصور ، قال : حدثنا عبد العزيز بن محمد ، قال : أخبرني صفوان بن سليم ، وزيد بن أسلم ، عن عمر بن ثابت ، عن أبي أيوب الأنصاري ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” من صام رمضان وأتبعه ستا من شوال فكأنما صام الدهر مشكل الآثار للطحاوي  – باب بيان مشكل ما روي عن رسول الله صلى الله عليه

                சஃப்வான் இப்னு சுலைம் ஸைத் இப்னு அஸ்லம் ஆகிய இவருவரும் இச்செய்தியை உமர் இப்னு சாபித்திடமிருந்து அறிவித்துள்ளனர். இவ்விருவரிடமிருந்து இதை அறிவிக்கும் மாணவர் அப்துல் அஸீஸ் இப்னு முஹம்மத் நேர்மையாளர் என்றாலும் சில நேரங்களில் தவறிழைக்கக்கூடியவர் என்பதால் இதனை நாம் முதன்மையான ஆதாரமாக குறிப்பிடவில்லை.

                அப்துல் அஸீஸ் அறிஞர்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டவர் அல்ல. இவரது அறிவிப்புக்களை துணைச்சான்றாக கருதும் அளவுக்கு தகுதியுள்ளவர்.

 كما حدثنا أحمد بن شعيب ، قال : حدثنا هشام بن عمار ، عن صدقة ، قال : حدثنا عتبة ، قال : حدثني عبد الملك بن أبي بكر ، قال : حدثني يحيى بن سعيد ، عن عمر بن ثابت ، قال : غزونا مع أبي أيوب الأنصاري ، فصام رمضان وصمنا ، فلما أفطرنا قام في الناس , فقال : إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : ” من صام رمضان وصام ستة أيام من شوال كان كصيام الدهر ” ووجدنا ممن رواه أيضا عن عمر هذا عبد ربه بن سعيد الأنصاري *

                இந்த செய்தி உமர் பின் சாபித்திடமிருந்து யஹ்யா பின் சயீத் என்பாரும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் உத்பா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நேர்மையாளர் என்றாலும் அதிகமாக தவறிழைக்கக்கூடியவர். இவரையும் அறிஞர்கள் புறக்கணிக்கவில்லை. மற்றவரின் அறிவிப்புக்களை உறுதிபடுத்தும் அளவுக்கு தகுதியுள்ளவர் ஆவார்.

مشكل الآثار للطحاوي  – باب بيان مشكل ما روي عن رسول الله صلى الله عليه

 كما حدثنا أحمد بن شعيب ، قال : حدثنا محمد بن عبد الله بن الحكم ، قال : حدثنا أبو عبد الرحمن المقرئ ، قال : حدثنا شعبة بن الحجاج ، عن عبد ربه بن سعيد ، عن عمر بن ثابت ، عن أبي أيوب الأنصاري ، ولم يرفعه أنه قال : ” من صام شهر رمضان ثم أتبعه بستة أيام من شوال فكأنما صام السنة ” ووجدنا هذا الحديث أيضا قد رواه عن رسول الله صلى الله عليه وسلم ثوبان مولاه ، وجابر بن عبد الله الأنصاري 

                உமர் பின் சாபித்திடமிருந்து அப்து ரப்பிஹி என்பவரும் இச்செய்தியை அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறைபாடும் இல்லை. இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள்.

                இதனை முதன்மை ஆதாரமாக நாம் குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்படவில்லை. மாறாக அபூ அய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்றால் காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்ற செய்தியை அபூ அய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்பதும் அன்னாரிடமிருந்து இதனை உமர் பின் சாபித் அறிவித்தார் என்பதும் இதன் மூலம் தெள்ளத்தெளிவாக உறுதியாகிவிட்டது. எனவே சஅத் பின் சயீதுடைய அறிவிப்பில் இந்த சந்தேகங்களுக்கு வேலையில்லை.

                இது நபி(ஸல்) அவர்களின் கூற்றா? அபூ அய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களின் கூற்றா? என்ற சந்தேகம் மட்டும் இங்கே எழலாம். நபி(ஸல்) அவர்களின் கூற்றாக வரும் அறிவிப்புக்கள் முழுவதையும் கவனிக்க வேண்டும். மேலும் அபூ அய்யூப் (ரலி) அவர்கள் இதனை சுயமாக கூறியிருக்க முடியாது என்பதையும் சிந்திக்க வேண்டும். எனவே இது இருவிதங்களிலும் வந்துள்ளது என்று புரிவதே சரியானது.

குறையில்லாத சரியான அறிவிப்பு

صحيح ابن حبان  – كتاب الصوم

أخبرنا الحسين بن إدريس الأنصاري ، حدثنا هشام بن عمار ، حدثنا الوليد بن مسلم ، حدثنا يحيى بن الحارث الذماري ، عن أبي أسماء الرحبي ، عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : ” من صام رمضان ، وستا من شوال ، فقد صام السنة ” *

                நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

                ரமலானில் நோன்பு நோற்று ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பவர் அந்த வரும் முழுவதும் நோன்பு நோற்றவர் ஆவார்.

அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)

நூல் : இப்னு ஹிப்பான்

                இந்த செய்தியில் வரும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவர். சவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து இதனை அறிவிக்கும் அறிவிப்பாளர் அபூ அஸ்மா ரஹ்பீ குறித்து சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

                அறிமுகமில்லாதவர்களை நம்பகமானவர் என முடிவு செய்யும் அலட்சியப்போக்குடையவர்களான இமாம் இஜ்லீ இமாம் இப்னு ஹிப்பான் ஆகிய இருவர் மட்டுமே அபூ அஸ்மாவை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். இதன் காரணத்தால் இச்செய்தி பலவீனமானது எனக் கூறுகின்றனர்.

                இமாம் முஸ்லிம் அவர்கள் அபூ அஸ்மாவிடமிருந்து 10 நபிமொழிகளை தனது நூலில் பதிவுசெய்துள்ளார்கள். இதன் மூலம் இந்த அறிவிப்பாளர் இமாம் முஸ்லிம் அவர்களிடம் நம்பகமானவர் என்பது உறுதியாகிறது. எனவே தான் இமாம் இப்னு ஹஜர் அவர்களும் அபூ அஸ்மாவை நம்பகமானவர் எனக் கூறியுள்ளார். எனவே இது ஆதாரப்பூர்வமான சரியான செய்தியாகும்.

                அபூ அஸ்மா நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாதவர் என்ற வாதத்தை ஏற்றாலும் பிரச்சனையில்லை. இச்செய்தி சஅத் பின் சயீதுடைய அறிவிப்பை வலுப்படுத்தக்கூடியதாகவே அமைந்துள்ளது.

                மேலும் இச்செய்தி ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்ததாகவும் அபூகுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாகவும் வந்துள்ளது. இவை பலவீனமான அறிவிப்புக்களாக இருந்தாலும் சஅத் பின் சயீதின் அறிவிப்புக்கு வலுசேர்கக்கூடிவையாக உள்ளது. இதனை இமாம் இப்னுல் கய்யும் அவர்கள் தஹ்தீபு சுனன் என்ற தனது நூலில் தெரிவித்துள்ளார்கள்.

تهذيب سنن أبي داود وإيضاح مشكلاته (1/ 475، بترقيم الشاملة آليا)

روَرَوَاهُ مِنْ حَدِيث عَبْد اللَّه بْن سَعِيد بْن أَبِي سَعِيد الْمَقْبُرِيّ عَنْ أَبِي سَعِيد عَنْ أَبِي هُرَيْرَة عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ . قَالَ أَبُو نُعَيْم : وَرَوَاهُ عَمْرو بْن دِينَار عَنْ عَبْد الرَّحْمَن بْن أَبِي هُرَيْرَة عَنْ أَبِيهِ , وَرَوَاهُ إِسْمَاعِيل بْن رَافِع عَنْ أَبِي صَالِح عَنْ أَبِي هُرَيْرَة . وَهَذِهِ الطُّرُق تَصْلُح لِلِاعْتِبَارِ وَالِاعْتِضَاد .

                எனவே ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்ற செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

                அபூ அஸ்மா அறிவிக்கும் இச்செய்தி ஷாம் வாசிகள் வழியாக வந்துள்ளது. மதீனாவில் நடைமுறையில் இல்லாத இச்செய்தி ஷாம்வாசிகளுக்கு எப்படி கிடைத்தது? என்று சிலர் கேட்கின்றனர்.

                ஆறு நோன்பு கடமையான நோன்பல்ல. எனவே இது கட்டாயம் சமுதாயத்தில் எல்லா காலத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதன் சிறப்பு பற்றிய செய்தியை ஓரிரு நபித்தோழர்கள் மட்டும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிக்க வாய்ப்புள்ளது.

தேவையற்ற விமர்சனங்கள்

                இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஆறு நோன்பு நோற்பதை விமர்சித்துள்ளார்கள் என்று கூறுகின்றனர். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இதுபற்றி வரும் நபிமொழிகளை குறைகண்டதாக எந்தத் தகவலும் இல்லை.

                முவத்தா மாலிகில் இதுபற்றி அவர் செய்யும் விமர்சனத்தைப் பார்க்கும் போது ஒரு உண்மையை அறியலாம். இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் காலத்தில் மார்க்கத் தெளிவில்லாதவர்கள் இந்த ஆறு நோன்பை ரமலான் நோன்போடு இணைத்து கடமையானது போல் கருதி நோன்பு நோற்றுள்ளனர். இதனைத் தான் இமாம் மாலிக் (ரஹ்) விமர்சனம் செய்துள்ளார்கள்.

و سَمِعْت قَوْله تَعَالَى يَقُولُ فِي صِيَامِ سِتَّةِ أَيَّامٍ بَعْدَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ إِنَّهُ لَمْ يَرَ أَحَدًا مِنْ أَهْلِ الْعِلْمِ وَالْفِقْهِ يَصُومُهَا وَلَمْ يَبْلُغْنِي ذَلِكَ عَنْ أَحَدٍ مِنْ السَّلَفِ وَإِنَّ أَهْلَ الْعِلْمِ يَكْرَهُونَ ذَلِكَ وَيَخَافُونَ بِدْعَتَهُ وَأَنْ يُلْحِقَ بِرَمَضَانَ مَا لَيْسَ مِنْهُ أَهْلُ الْجَهَالَةِ وَالْجَفَاءِ لَوْ رَأَوْا فِي ذَلِكَ رُخْصَةً عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَرَأَوْهُمْ يَعْمَلُونَ ذَلِكَ (موطأ)

                மாலிக் (ரஹ்) அவர்களின் காலத்தில் அறிஞர்களிடம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் இல்லாததால் இஸ்லாமிய சமூகம் முழுவதும் இதை செய்யவில்லை என்று கூற முடியாது. இமாம் அஹ்மது இமாம் ஷாஃபி இமாம் இப்னுல் முபாரக் மற்றும் பலர் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு இப்னுல் கைய்யும் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

تهذيب سنن أبي داود وإيضاح مشكلاته (1/ 486، بترقيم الشاملة آليا)

أَمَّا الْأَوَّل فَقَوْلكُمْ : إِنَّ الْحَدِيث غَيْر مَعْمُول بِهِ : فَبَاطِلٌ , وَكَوْن أَهْل الْمَدِينَة فِي زَمَن مَالِك لَمْ يَعْمَلُوا بِهِ لَا يُوجِب تَرْك الْأُمَّة كُلّهمْ لَهُ , وَقَدْ عَمِلَ بِهِ أَحْمَد وَالشَّافِعِيّ وَابْن الْمُبَارَك وَغَيْرهمْ . قَالَ اِبْن عَبْد الْبَرّ : لَمْ يَبْلُغ مَالِكًا حَدِيث أَبِي أَيُّوب ,

                மேலும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கு இந்த நபிமொழி சென்றடையாமல் இருந்திருக்கலாம் என இமாம் இப்னு அப்தில் பர் தெரிவித்ததையும் இப்னுல் கைய்யும் பதிவுசெய்துள்ளார்கள்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்குத் தெரியாத மதீனாவாசிகள் வழியாக வரும் செய்தி ஹதீஸ் அல்ல என்றக் கூற்று தவறானது. மாலிக் (ரஹ்) அவர்களும் மனிதர் தான். அவருக்கும் பல ஹதீஸ்கள் கிடைக்காமல் தவறிப்போக வாய்ப்புள்ளது என்பதே நியாயமான சிந்தனை.

                மாலிக் (ரஹ்) அவர்கள் தனிப்பட்ட முறையில் இந்த நோன்புகளை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற தகவலும் உள்ளது.

تهذيب سنن أبي داود وإيضاح مشكلاته (1/ 479، بترقيم الشاملة آليا)

وَقَالَ مُطَرِّف : كَانَ مَالِك يَصُومهَا فِي خَاصَّة نَفْسه . قَالَ : وَإِنَّمَا كَرِهَ صَوْمهَا لِئَلَّا يُلْحِق أَهْل الْجَاهِلِيَّة ذَلِكَ بِرَمَضَان . فَأَمَّا مَنْ يَرْغَب فِي ذَلِكَ لِمَا جَاءَ فِيهِ فَلَمْ يَنْهَهُ .

                இமாம் அஹ்மது பின் ஹம்பள் அவர்கள் இந்த நபிமொழியை பலவீனம் எனக் கூறியது போன்று சிலர் கூறலாம். ஆனால் இது உண்மையல்ல.

                இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் அறிவிப்பாளர் சஅத் பின் சயீதை பலவீனமானவர் என்று விமர்சனம் செய்துள்ளார். ஒரு அறிவிப்பாளரை பலவீனமானவர் எனக் கூறுவதால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானது என விளங்கக்கூடாது. ஏனென்றால் பலவீனமான அறிவிப்பாளரின் ஒரு செய்தி வேறு துணைச்சான்றுகளின் மூலம் ஆதாரப்பூர்வமானதாக இருக்கும்.

ஆறு நோன்பு தொடர்பான செய்தி பலவீனமானது என்று இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் எங்கும் விம்சனம் செய்யவில்லை. மாறாக இந்த செய்திகளை தன் நூலில் பதிவுசெய்தது மட்டுமின்றி அவரும் இந்த நோன்பை நோற்கக்கூடியவராகவே இருந்துள்ளார்.

ஆறு நோன்பு தொடர்பான ஹதீஸை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. இச்செய்தி பலவீனமானது என்பதால் தான் பதிவு செய்யவில்லை என்ற வாதமும் தவறானது.

تهذيب سنن أبي داود وإيضاح مشكلاته (1/ 482، بترقيم الشاملة آليا)

 فَإِنْ قِيلَ : فَلِمَ لَا أَخْرَجَهُ الْبُخَارِيّ ؟ قِيلَ : هَذَا لَا يَلْزَم , لِأَنَّهُ رَحِمه اللَّه لَمْ يَسْتَوْعِب الصَّحِيح وَلَيْسَ سَعْد بْن سَعِيد مِنْ شَرْطه , عَلَى أَنَّهُ قَدْ اِسْتَشْهَدَ بِهِ فِي صَحِيحه ,

இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்யாமல் விட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானது என்று முடிவெடுத்தால் ஏராளமான சரியான ஹதீஸ்களை நாம் நிராகரிக்க வேண்டும். தான் பதிவுசெய்யாமல் விட்ட செய்திகள் பலவீனமானது என இமாம் புகாரி அவர்களே கூறவில்லை.

புகாரியில் பதிவுசெய்யாமல் விட்ட பல செய்திகளை இமாம் புகாரி அவர்கள் சஹீஹ் என தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தன் நூலில் பதிவு செய்யும் செய்திகளுக்கு ஒரு ஆதாரப்பூர்வமான செய்திக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகளைக் காட்டிலும் கூடுதலான நிபந்தனைகளை வைத்துள்ளார்கள். இதற்கு உடன்பட்டு வரும் செய்திகளை பதிவு செய்வார்கள். இதற்கு உட்படாமல் இருக்கும் செய்திகள் ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் பதிவு செய்யாமல் விட்டுவிடுவார்கள். எனவே இதை ஒரு விமர்சனமாக செய்யத் தேவையில்லை.

கருத்துப் பிழையா?

                ரமலானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றால் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்ற செய்தியின் கருத்தில் தவறு இருப்பதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

                இந்த ஆறு நாட்கள் நோன்பு நோற்றால்தான் காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என இச்செய்தி கூறுகிறது. அதாவது ரமலானின் 30 நோன்புகளை நோற்றால் காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை ஏற்படாது என இச்செய்தி கூறுகிறது. கடமையான நோன்பை விட உபரியான நோன்பை சிறப்பிக்கும் வகையில் இச்செய்தி உள்ளது என விமர்சனம் செய்கின்றனர்.

                ரமலானின் 30 நோன்புகளை நோற்றால் நன்மை கிடைக்காது என்று இச்செய்தி கூறவில்லை. மாறாக 300 நாட்கள் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று கூறுகிறது. இதைத் தொடர்ந்து ஆறு நோன்பு வைத்தால் 60 நோன்பு என்ற அடிப்படையில் 360 நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குகிறான். இதன் மூலம் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மையை பெறுகிறோம்.

                ஆறு நோன்பு நோற்றால்தான் ரமலானில் நோற்ற நோன்புகளுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறினால் இது கடமையான நோன்பை விட உபரியான நோன்பை சிறப்பித்தல் எனக் கூறலாம். அல்லது ரமலானில் நோன்பு நோற்காவிட்டாலும் பரவாயில்லை. ஆறு நோன்பு நோற்றுவிட்டால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைத்துவிடும் என்று கூறினால் இது கடமையான நோன்பை விட உபரியான நோன்பை சிறபிப்பது எனக் கூறலாம்.

                ஒரு நன்மைக்கு அல்லாஹ் 10 மடங்கு கூலி தருகிறான். 36 நோன்புகளை நோற்றால் 360 நோன்புகளை நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குகிறான். ஒரு வணக்கத்திற்கு அல்லாஹ்வின் கருணையால் பன்மடங்காக்கித் தரப்படும் நன்மை விசயத்தில்  நமது அறிவை புகுத்தி விமர்சிப்பதும் தேவையற்ற ஒப்பீடு செய்து மிகைப்படுத்துவதும் நல்ல செயல் அல்ல.

Check Also

ரமலானில் யாருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படும்?

அஷ்ஷெய்க் அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப …

One comment

  1. *ஷவ்வால் மாத ஆறு நோன்பு பிடிக்கலாமா?* – சுமையா (ஷரயிய்யா)

    ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கும் வழக்கம் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது.

    ஆயினும் சம காலத்தில் சில அறிஞர்கள் அந்த ஹதீஸ் பலவீனமானது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் என்பதை அறியக்கூடியதாய் உள்ளது. இதனால் இந்த ஹதீஸின் நிலை பற்றி மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.

    அல் ஹதீஸ்

    ”யார் ரமழான் மாத நோன்பை நோற்கிறாரோ அந்த ஒரு மாதம் பத்துமாதங்களுக்குச் சமனாகும். இன்னும் அவர் ரமழானின் பின்னர் (ஷவ்வால்) ஆறு நோன்பை நோற்றால் அது ஒரு வருட நோன்பை பூர்த்தியாக்குயது போன்றாகும்”

    இந்த ஹதீஸ் இமாம் அஹ்மதின் முஸ்னத் அஹமத் (21825), இமாம் நசாயியின் சுனனுல் குப்ரா (2819), இமாம் இப்னு ஹிப்பானின் ஸஹீஹ் (3718), இமாம் தபரானியின் முஃஜமுல் கபீர் (1433), இமாம் பஸ்ஸாரின் முஸ்னத் (99), இமாம் தஹாவியின் முஸ்கிலுல் ஆதார் (1958), இமாம் பைஹகியின் ஷூஅபுல் ஈமான் (3452) போன்ற இன்னும் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

    ஹதீதின் நிலைப்பாடு

    இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஒர ஹதீஸ் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

    இந்த ஹதீதை நபியவர்கள் கூறியதாக தவ்பான் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

    இதனை தவ்பான் ரழி வாயிலாக அபூ அஸ்மா அர் ரஹபி என்பவர் அறிவிக்கின்றார். அபூ அஸ்மா அர்ரஹபி கூறியதாக அறிவிப்பவர் யஹ்யா இப்னு ஹாரித் என்பவராவார். இவரிடம் இருந்தே இந்த ஹதீத் பலரால் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

    குறிப்பாக முஹம்மத் இப்னு சுஅய்ப் இப்னு சாபூர், இஸ்மாயீல் இப்னு அய்யாஸ், தவ்ர் இப்னு யஸீத் போன்றோரே இந்த ஹதீதின் பிரதான அறிவிப்பாளரான யஹ்யா இப்னு ஹாரிதிடம் இருந்து அறிவிப்பவர்களாகும்.

    இவ்வாறு இந்த அறிவிப்பாளர் வரிசையில் வரும் மேற்கண்ட அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாகும். எனவே இந்த நம்பகமானவர்களால் இடம்பெறும் தவ்பான் ரழியின் ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

    இவ்வாறே ஹதீத் கலையில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர் இமாம் அபூ ஹாதிம் தனது இலலுல் ஹதீத் என்ற கிரந்தத்தில் ”இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது” என சுட்டிக்காட்டுகின்றார். இது இந்த ஹதீதின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சிறந்த ஒரு சான்றாகும்.

    மேலும் அவர் அதே கிரந்தத்தில் ”இந்த ஹதீதை ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழி அவர்களும் அறிவிக்கின்றார்கள். அதுவும் ஆதாரபூர்வமான செய்தி” என எடுத்துக்காட்டி இந்த ஹதீதின் தரத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பு எம்மிடத்தில் அறியப்படவில்லை.

    விமர்சனத்தின் காரணம்

    இவ்வாறு ஆதாரபூர்வமான ஹதீதை பலவீனம் என சிலர் பிரச்சாரம் செய்யக் காரணம் தவ்பான் ரழியால் அறிவிக்கப்படும் இந்த ஹதீதை மற்றொரு ஸஹாபி அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். என்றாலும் அந்த அறிவிப்பு பலவீனமானதாகும்.

    எனவே தவ்பான் ரழியின் மேற்கூறப்பட்ட அறிவிப்பை அறியாதவர்கள் அபூ அய்யூப் ரழி அவர்களின் ஆதாரமற்ற ஹதீதை வைத்து தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கலாம். மேலதிக விளக்கத்துக்காக அந்த பலவீனமான அறிவிப்பின் விபரத்தையும் இதனுடன் இணைக்கின்றோம்.

    பலவீனமான அறிவிப்பு

    யார் ரமழானில் நோன்பு நோற்று பின்னர் அதனைத் தொடர்ந்ததாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இந்த ஹதீதை அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
    இது இமாம் முஸ்லீமின் ஸஹீஹ் (1991), இமாம் திர்மிதியின் சுனன் (689), அபூ தாவுதின் சுனன் ((2082), இமாம் இப்னு மாஜாவின் சுனன் ((1706), இமாம தாரமியின் சுனன் (1707), இமாம் அஹமதின் முஸ்னத் (22941) போன்ற இன்னும் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

    அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழி கூறியதாக இந்த ஹதீதை அறிவிப்பவர் உமர் பின் தாபித் என்பவராகும். உமர் பின் தாபித்திடமிருந்து அதை அறிவிப்பவர்கள் இருவராகும். முதலாமவர் ஸஅத் பின் ஸயீத் அல் அன்ஸாரி, மற்றையவர் ஸப்வான் இப்னு சுலைம் அல் கர்ஸீ. இவ்விருவரின் அறிவிப்புக்களும் பலவீனமானவைகளாகும்.

    முதலாவது அறிவிப்பான ஸஅத் பின் ஸயீத் அல் அன்ஸாரியின் அறிவிப்பு

    பலவீனத்துக்கு காரணம்

    இது பலவீனமாவதற்கு காரணம் அதன் பிரதான அறிவிப்பாளர் ஸஅத் பின் ஸயீதே ஆகும். இவர் ஹதீத் கலை வல்லுனர்கள் பலரால் குறைகூறப்பட்ட ஓர் அறிவிப்பாளராகும். ஸஅத் பின் ஸயீத் பற்றிய இமாம்களின் கருத்துக்கள்.

    இமாம் நசாயீ – ”இவர் பலமானவர் இல்லை என்றும்”, இமாம் அஹமத் ”இவர் பலவீனமானவர் என்றும்”, இமாம் யஹ்யா இப்னு மயீன் ஒரு சந்தர்ப்பத்திலும் ”இவரை நம்பகமானவர்” என்று கூறினாலும், பின்னர் இவரின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் விதத்தில் ”இவர் பலவீனமானவர்” என்றும்,

    இமாம் இப்னு ஹிப்பான் – ”இவர் தவறிழைக்கக் கூடிய கூடியவராக இருந்தார்” என்றும்,

    இமாம் அபூ ஹாதம் ” இவர் ஹதீதை மனனம் செய்யமாட்டார்”, கேட்டு அப்படியே சொல்வார் என்றும்

    இமாம் திர்மிதி -”இவரின் மனனம் சம்பந்தமாக அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்” என்றும் கூறியுள்ளார்கள்.

    இவ்வாறே மேற்கண்ட முன்னோடிகளான இமாம்களின் கருத்துக்களை வைத்து ஆராய்ந்து தான் ஒரு முடிவு கூறும் வழக்கம் கொண்ட பிற்கால அறிஞர் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் – ” இவர் நம்பகமானவர் இருப்பினும் நினைவாற்றல் குறைபாடு உடையவாக இருந்தார்” என்றும் விமர்சித்துள்ளார்.

    ஆக பிரசித்திபெற்ற இந்த அறிஞர்கள் பெரும்பான்மையினரின் கருத்து இவர் பலவீனமானவர் என்பதை சுட்டிக்காட்டுவதால் இவ்வாறான ஒருவரால் அறிவிக்கப்படும் செய்தி ஆதாரத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

    அடுத்து இரண்டாமவர் ஸப்வானின் அறிவிப்பு

    இவ் அறிவிப்பு பலவீனமாவதற்கு காரணம் ஸப்வானிடம் இருந்து இந்த ஹதீதை கேட்டறிவிக்கும் அவரின் மாணவர் அப்துல் அஸீஸ் இப்னு முஹம்மத் அத் தராவுர்தி என்பவராகும். மேலே நம்பகத்தன்மையில் விமர்சிக்கப்பட்ட ஸஅத் இப்னு ஸயீத் என்பவருக்கு பக்கபலமாக நம்பகமான அறிவிப்பாளர் ஸப்வான் இப்னு சுலைம் இந்த ஹதீதை அறிவித்திருப்பினும் அவரின் மாணவரால் இவரின் அறிவிப்பும் ஆதாரமாக ஏற்க முடியாத ஓர் நிலையையே அடைகின்றது.

    அப்துல் அஸீஸ் அத்தராவுர்தி பற்றிய இமாம்களின் கருத்து

    இமாம் அபூ சுர்ஆ ” இவர் மனன சக்தி மிகக் குறைபாடுடையவராக இருந்தார்” என்றும்

    இமாம் அபூ ஹாதம் ”இவர் ஆதாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டார்” என்றும்

    இமாம் அஹமத் ”இவர் தனது கிரந்தத்தில் இருந்து அறிவித்தால் அது ஆதாரபூர்வமானது மாறாக வேறு யாருடையதாவதிலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார்” என்றும்,

    இமாம் நசாயீ ஒரு சந்தர்ப்பத்தில் ”பரவாயில்லை” என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் ”பலமற்றவர்” என்றும்,

    இமாம் இப்னு ஸஅத் ”இவர் நம்பகமானவர் அதிக ஹதீத்களை அறிவிப்பார் என்றாலும் தவறுவிடுவார்” என்றும்

    இமாம் இப்னு ஹிப்பான் ”தவறுவிடக்கூடியவராக இருந்தார்” என்றும் விமர்சித்துள்ளார்கள்.

    அதேபோல் இமாம் இப்னு ஹஜரும் ”இவர் நம்பகமானவர் என்றாலும் மற்றவர் கிரந்தத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார்” என்றும் கூறுயுள்ளார்கள். அதேவேளை இமாம் யஹ்யா இப்னு மயீன் மற்றும் அலீ இப்னு மதீனி ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளார்கள்.

    முடிவு

    முஸ்லீம் போன்ற கிரந்தங்களில் இடம்பெ|றும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை பிடிப்பது சுன்னத்தான காரியமட் என்பது பற்றிய அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழி அவர்களின் செய்தி பலவீனமானதாக இருந்தாலும், ஆதாரபூர்வமான அறிவிப்பு வேறு கிரந்தங்களில் தவ்பான் ரழி வாயிலாக இடம்பெற்றுள்ளதால் ஷவ்வாலின் ஆறு நோன்பு நோற்பது நபிவழியே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

    குறிப்பு

    இந்த நோன்பை தொடராகத்தான் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் தொடராக பிடிக்க வேண்டும் என்ற கருத்தை பலவீனமான அறிவிப்பே சுட்டிக்காட்டுகிறது. எனவே விரும்பியவர் ஷவ்வால் மாதத்திற்குள் நோற்பது போதுமானதாகும்.

    ✔அதிகமாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மைகளில் நீங்களும் பங்காளிகளாக மாறுங்கள்.

    இலங்கையின் தலை சிறந்த மௌலவிமார்களின் ஹதீஸ்கலை ஆய்வுகள், கேள்வி பதில்கள், மார்க்கத் தெளிவுகள், மற்றும் கட்டுரை ஆக்கங்கள்போன்றவற்றை அறிந்து கொள்ள கீழ் உள்ள இணைய தளத்தை பார்வையிட மறக்காதீர்கள்.
    © www.srilankamoors.com

Leave a Reply