Home / FIQH / ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 3

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 3

_மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

தவாஃபோடு தொடர்புடைய சில தவறுகள்,

1. ஹஜருல் அஸ்வதிற்கு முன்பிருந்தே தவாஃபை ஆரம்பிப்பது அல்லது கஃபாவின் வாசலிலிருந்து தவாஃபை ஆரம்பிப்பது இது மிகப்பெரும் தவறும் வரம்பு மீறுதலும் ஆகும். இயன்றால் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டுவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும் . கூட்ட நெரிசலாக இருப்பின் ஹஜருல் அஸ்வதை நோக்கி கையை உயர்த்தி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். (கையை முத்தமிடவேண்டிய அவசியமில்லை )

2. “ஹிஜ்ர் இஸ்மாயீல்” என்று மக்களால் அழைக்கப்படுகின்ற (குர் ஆனிலோ ஹதீஸிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.) அரைவட்ட பகுதியை விட்டு விட்டு தவாஃப் செய்வது இதுவும் மிகப்பெரும் தவறாகும். அரைவட்ட பகுதி கஃபாவின் ஒரு பகுதியே இதனை விட்டுவிட்டு தவாஃப் செய்தால் தவாஃப் பூர்த்தி ஆகாது. மீண்டும் அவர் தவாஃபை திரும்ப செய்ய வேண்டும்.

3. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர,இறையில்லம் கஅபாவில் வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.நூல் புகாரி : 2429.

நூல் புகாரி : 2429.

4. அதே வேளையில் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுவதற்காக வேண்டிபோட்டி போடுவதும், கூட்ட நெரிசல் ஏற்படுத்துவதும் , சப்தமிடுவதும் கூடாது. இது சுன்னாவிற்கு மாற்றமான செயலாகும். எவரது நாவு மற்றும் கையிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவரே முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : புகாரி 10

5. மகாமு இப்ராஹீம் , கஃபாவின் திரைச்சீலை (கிஸ்வா ) , கஃபாவின் நான்கு மூலைகள் , ருகுனுல் யமானி, ஹஜருல் அஸ்வத் ஆகியவற்றை தொட்டு தடவுவது, முத்தமிடுவதின் மூலம் பரக்கத் கிடைக்கிக்கும் என நம்புவது மிகப்பெரும் தவறாகும். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. நூல் : புகாரி : 2435.

ஹஜருல் அஸ்வத் ஒரு கல் அதன் மூலம் எந்த நன்மையோ, தீமையோ, பறக்கத்தோ செய்ய முடியாது. என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

6. ஒவ்வொரு தவாஃப் மற்றும் ஒவ்வொரு ஸயீலும் குறிப்பிட்ட துஆக்களை ஓத வேண்டும் என்று உம்ரா மற்றும் ஹஜ் செப்பவர்களுக்கு தவறான முறையில் வழி காட்டபப்டுகிறார்கள். இதற்கு அல்லாஹ்வோ , அல்லாஹ்வின் தூதரோ வழி காட்டவில்லை. தவாஃப் மற்றும் ஸயீயின் போது திக்ரு , குர் ஆன் ஓதுவது , குர் ஆன் சுன்னாவில் வந்துள்ள ஸஹீஹான துஆக்களை ஓதுவது , தனக்காக துஆ செய்வது ஆகியவற்றில் ஈடுபடலாம். அதே வேளையில் நபி (ஸல்) ருக்னுல் யமானிற்கும் ஹஜருல் அஸ்வத்திற்கும் மத்தியில்

ربنا آتنا في الدنيا حسنةً ، وفي الآخرة حسنةً ، وقنا عذاب النار

என்ற து ஆவை ஓதி உள்ளார்கள் . அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிப் (ரலி) , நூல் : ஹாகிம் : 3098

7. சப்தமாக ஒருவர் து ஆவை சொல்ல மற்றவர்கள் ஆமீன் சொல்வது அல்லது அதனை திருப்பிச் சொல்வது இதுவும் கூடாது. அவரவர் தனித்தனியே சப்தத்தை உயர்த்தாமல் அனைத்து தவாஃப் மற்றும் ஸயீக்களில் து ஆ செய்ய வேண்டும்.

8. தவாப் செய்து முடித்து மகாமு இப்ராஹீமுக்குப் பின் இரண்டு ரக்க அத் தொழும் போது கிறாஅத் மற்றும் ருகூஃ , ஸுஜுதை நீட்டிச் செய்வது இதுவும் சுன்னாவிற்கு மாற்றமான செயல். அவ்விரண்டு ரகஅத்களையும் சுருக்கமாக தொழுவதே நபி வழியாகும். மேலும் மகாமு இப்ராஹீமுக்குப் பின் கூட்ட நெரிசலாக இருந்தால் அவ்விரண்டு ரகஅத்களையும் ஹரமின் எந்தப் பகுதியிலும் நிறைவேற்றலாம் .

8. தவாஃப் செய்யும் போது ஒளூ முறிந்து விட்டால் ஒளூ செய்து விட்டு விடுபட்ட தவாஃபிலிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். உதாரணமாக 5 வது தவாஃப் செய்து கொண்டிருக்கிறார் இன்னும் முடியவில்லை அதற்குமுன் ஒளூ முறிந்து விட்டது எனில் மீண்டும் 5 தவாஃபை அதன் ஆரமபத்திலிருந்து செய்ய வேண்டும். முதலாவது தவாஃபிலிருந்து செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

9. ஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கிறார் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் தவாஃபை நிறுத்தி விட்டு தொழுகையில் ஈடுபட வேண்டும். தொழுகை முடிந்ததும் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். முதலாவது தவாஃபிலிருந்து செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

10.ஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கிறார் தான் செய்கின்ற தவாஃபில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் உதாரணமாக 4 வதா அல்லது 5 வதா என்று சந்தேகம் ஏற்படுகின்றது இச்சூழலில் 4 என்று குறைவான எண்ணிக்கையை கணக்கில் கொள்ளவேண்டும்…

..

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Check Also

பாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமே தீர்வு

ஜும்ஆ குத்பா பாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமே தீர்வு, வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 16-03-2019 வெள்ளிக்கிழமை இடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *