Home / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை / இஷா தொழுகையின் நேரம் எது வரை?

இஷா தொழுகையின் நேரம் எது வரை?

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ…

சகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் பிரயோசனமாக இருக்கும் என்ற அமைப்பில் அக்கேள்விக்கான பதிலை எழுதுகிறேன்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் அழ்ழாஹு சுப்ஹானஹு வதஆலா 5 நேர தொழுகைகளை எங்கள் மீது விதித்துள்ளான். அத் தொழுகைகளின் சிறப்புக்கள் மற்றும் முறைமைகளையும் சொல்லித் தந்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அத்தொழுகைகளின் ஆரம்ப நேரங்களையும் இறுதி நேரங்களையும் நிர்ணயித்து தந்துள்ளார்கள். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொழுகைகளின் நேரங்களில் ஏன் இவ்வாறு பல கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன? என்று பார்க்கும் போது மார்க்க விடயங்களில் கருத்து சொல்லும் போது அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டாமல் சிலவைகளுடன் போதுமாக்கிக் கொள்வதேயாகும். இஷா தொழுகையின் நேரத்தை நிரணயிக்கும் விடயத்திலும் இதே பிரச்சினைதான் உள்ளதாக நான் கருதுகிறேன்.

முதலில் 5 நேர தொழுகைகளின் நேரங்களையும் சுருக்கமாக ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி விட்டு இஷா தொழுகையின் இறுதி நேரம் குறித்து பேசப்படும் கருத்து முரண்பாடுகளை எடுத்து வைத்து விளக்குகிறேன் இன்ஷா அழ்ழாஹ்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ழுஹ்ர் தொழுகையின் நேரம், சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமமாக) ஆகி, அஸ்ர் நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவு (இரவின் அரைவாசி) வரை உள்ளது. சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது.

இதை அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1075

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் சுருக்கமாக 5 நேர தொழுகைகளின் நேரங்களையும் சுட்டிக்காட்டுகிறது.

இஷா தொழுகையின் இறுதி நேரம் :

இஷா தொழுகையின் இறுதி நேரம் குறித்து 2 நிலைபாடுகள் பரவலாக அறிஞர்களுக்கிடையில் நிலவுகின்றன.

1. இரவின் அரைவாசி நேரம் வரை இஷா தொழுகையை தொழ முடியும்.

2. சுபஹ் தொழுகையின் நேரம் வரை இஷா தொழுகையை தொழ முடியும்.

முதலாம் கருத்திற்கான ஆதாரங்களும் வாதங்களும் :

ஆதாரம் 1.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) சொன்ன ஆதாரம்

இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவு (இரவின் அரைவாசி) வரை உள்ளது. (மேற்குறிப்பிட்ட ஹதீஸின் தேவையான பகுதி)

இதை அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1075

ஆதாரம் 2.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) செய்த ஆதாரம்

நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (இஷாத்) தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப் படுத்திப் பின்னர் எங்களிடம் வந்தார்கள். தொழுது முடித்ததும் எங்களை நேராக நோக்கி ‘நிச்சயமாக மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்திருப்பதால் தொழுகையில் இருப்பவர்களாகவே ஆவீர்கள்’ என்று கூறினார்கள்.

இதை அனஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 847

அழ்ழாஹ்வின் தூதரின் சொல்லும் செயலும் இஷா தொழுகையை இரவின் அரைவாசி வரைதான் பிற்படுத்த முடியும் என்பதை தாங்கி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, இஷா தொழுகையின் இறுதி நேரம் இரவின் அரைவாசி வரைதான்.

இதுதான் சரியான நிலைபாடாகும். (அழ்ழாஹு அஃலம்)

இரண்டாம் கருத்திற்கான ஆதாரங்களும் வாதங்களும் :

ஆதாரம் 1.

நீண்டதொரு ஹதீஸ் என்பதால் தேவையான பகுதியை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.

கைபர் யுத்தம் முடிவடைந்து அழ்ழாஹ்வின் தூதரும் தோழர்களும் ஓய்வெடுத்த போது தூக்கம் மிகைத்து அனைவரும் சூரியன் உதயமாகிய பின்னரே விழிக்கிறார்கள். அந்த சம்பவத்தின் தொடரில்…

அடுத்து பிலால் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதார்கள். பின்னர் அதிகாலைத் தொழுகையைத் தொழுதார்கள். (இதையெல்லாம்) ஒவ்வொரு நாளும் செய்வதைப் போன்றே அவர்கள் செய்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களில் சிலர் சிலரிடம் “நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?” என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “அறிவீர்: என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா?” என்று கேட்டுவிட்டு, “அறிவீர்: உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டுவிடுவதில்லை;

குறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான். (ஆதாரத்தின் பகுதி)

இவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுதுகொள்ளட்டும். மறுநாளாகிவிட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளட்டும்”என்றார்கள்.

இதை அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1213

ஆதாரம் 2.

உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டு விடுவதில்லை. குறைபாடெல்லாம் விழித்திருந்தும் ஒரு தொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் பிற்படுத்துவதுதான்.

இதை அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்
அபூ தாவூத் : 441

இந்த ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள ” ஒரு தொழுகையை மறு தொழுகை நேரம் வரும் வரை பிற்படுத்துவதுதான் குறைபாடு ” என்ற வாசகத்தை வைத்துக் கொண்டு இஷா தொழுகையை மறு தொழுகையின் நேரமான சுப்ஹு தொழுகையின் நேரம் வரை பிற்படுத்தலாம் என்று வாதிடுகிறார்கள்.

இந்த ஹதீஸ்கள் மற்றும் இது தொடர்பான ஹதீஸ்கள் குறிப்பிடும் விடயம் என்னவென்றால் ஒருவர் தூங்கிவிட்டார்; எழுந்து பார்க்கிறார்; குறிப்பிட்ட தொழுகையின் நேரம் முடிந்து அடுத்த தொழுகையின் நேரம் ஆரம்பித்து விட்டது. அல்லது மறந்து விட்டார்; ஞாபகம் வரும் போது குறிப்பிட்ட தொழுகையின் நேரம் முடிந்து அடுத்த தொழுகையின் நேரம் ஆரம்பித்து விட்டது. இந்த நிலமையில் நாம் என்ன செய்ய வேண்டும்? உடனே நேரம் முடிந்த தொழுகையை நாம் நிறைவேற வேண்டும் என்பதையே சொல்கிறது.

இரண்டாம் நிலைபாட்டில் உள்ளவர்கள் வைத்து வாதாடும் வாசகமானது ழுஹ்ர், அஸ்ர் மற்றும் மஃரிப் தொழுகைகளுக்கு மாத்திரமே பொருத்தமானது. ஏனெனில் ஒரு தொழுகையின் இறுதி நேரம் மறு தொழுகையின் ஆரம்ப நேரம் வரை இருக்கும் தொழுகைகள் இம்மூன்று தொழுகைகள் மாத்திரம்தான். இல்லை இஷா தொழுகைக்கும் இப்பொதுவான செய்தியை வைத்து சட்டமெடுக்க வேண்டும் என்று வாதாடினால் சுப்ஹு தொழுகயையும் ழுஹ்ர் தொழுகை வரை தொழ முடியுமென்று வாதாட வேண்டி வரும். யாரும் அவ்வாறு வாதாடியதும் கிடையாது. வாதாடவும் முடியாது. ஏனெனில் சுப்ஹு தொழுகை சூரியன் உதயமாகும் வரைதான் தொழ முடியுமென ஆதாரங்கள் உள்ளன. அதே போன்றுதான் இஷா தொழுகையும்.

எனவே, நாம் முதலாம் நிலைப்பாட்டில் சொன்ன ஆதாரங்களை வைத்துப் பார்க்கின்ற போது இஷா தொழுகையின் இறுதி நேரம் இரவின் அரைவாசி என்றே முடிவெடுக்க முடிகிறது. (அழ்ழாஹு அஃலம்)

அதே நேரம் இரவின் அரைவாசியை எவ்வாறு முடிவெடுத்துக்கொள்வது என்று பார்க்கின்ற போது காலத்துக்கு காலம் இது வித்தியாசமடையும். பொதுவாக 12am வரை இஷா தொழ முடியும் என்று சொல்லிவிட முடியாது. மஃரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்துடன் இரவு ஆரம்பித்து விடுவதாலும் சுப்ஹு தொழுகையின் ஆரம்ப நேரத்துடன் இரவு முடிவடைந்து விடுவதாலும் இடைப்பட்ட நேர மணித்தியாலங்களை கணக்கிட்டு இரண்டாக பிரித்து நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பு : ஒருவர் மஃரிப் தொழுதுவிட்டு தூங்கி விடுகிறார்; விழித்துப் பார்க்கிறார்; இரவின் அரைவாசியைத் தாண்டிவிட்டார். அல்லது இஷா தொழுகையை மறந்து விட்டார்; ஞாபகம் வரும் போது இரவின் அரைவாசியைத் தாண்டிவிட்டார். இவர் இஷா தொழ முடியாதா? என்றால் தாராளமாக அவர் தொழ முடியும். ஏனெனில் அவர் தொழுகையை அதனுடைய நேரம் முடிவடையும் வறை வேண்டுமென்றே பிற்படுத்தவில்லை. (அழ்ழாஹு அஃலம்)

1217. நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1217

இது தொடர்பில் கருத்து பரிமாற்றம் செய்ய விரும்புவோர் நாகரீகமான முறையில் தாராளமாக கலந்துரையாட முடியும். அதை நானும் எதிர் பார்க்கிறேன்.

_அழ்ஹாபிழ் ZM. அஸ்ஹர் (பலாஹி)
(மதீனா பல்கலைக்கழக மாணவன்)

Check Also

ஜனாஸாத் தொழுகை | பாகம் – 01 |

ஜனாஸாத் தொழுகை | பாகம் – 01 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube …

Leave a Reply