Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 1 to 4

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 1 to 4

سورة القلم
ஸூரதுல் கலம்  – எழுதுகோல் 
(அத்தியாயம் 68)

இந்த அத்தியாயம் மக்காவில் இறங்கியது.
இந்த அத்தியாயத்தின் சில வசனங்கள் மக்காவிலும் இன்னும் சில வசனங்கள் மதீனாவிலும் இறங்கப்பெற்றது. இந்த அத்தியாயத்திலுள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை ஐம்பத்திரண்டு (52) ஆகும்.
இந்த அத்தியாயத்தின் தலைப்புப் பற்றி சில வரிகள்….
1. அல்லாஹ் எழுதுகோலைப் படைத்து முதலாவதாக இட்ட கட்டளை, எழுதுக! என்பதாகும்.
2. அறிவைப் பாதுகாப்பதற்குப் பல வழிகள் உள்ளன. அவைகளில் ஒன்று எழுதுகோலாகும்.
3. கல்வி கற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களில் எழுதுகோலும் ஒன்றாகும்.
4. ‘கலம்” என்ற வார்த்தை அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ﴿١﴾  
 (நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக)
அல்கலம் –1
புனித அல்குர்ஆனில் சுமார் 29 அத்தியாயங்களில் அல்லாஹ் தனித்தனி எழுத்துக்களைக் கொண்டு ஆரம்பித்துள்ளான். அவைகளில் ஒன்று தான் கலம் அத்தியாயமாகும்.
இவ்வாறு இடம் பெறும் தனித்தனி எழுத்துக்கள் பற்றி ஐந்து விதமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
1. அதன் பொருளை அல்லாஹ் மாத்திரம் அறிவான்.
2. அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று.
3. அத்தியாயங்களுக்குரிய பெயராகும்.
4. பல எழுத்துக்கள்மூலம் இணைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு எழுத்தும் பெயராகும்.
5. அற்புதத்தை நிறுவ வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் எனது கருத்து முதலாவது கருத்தாகும். காரணம்,  நபி (ஸல்) அவர்கள் அதற்கு எவ்வித விளக்கமும் கூறவில்லை.
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் நூன்” என்ற வார்த்தைக்கு பல விளக்கங்களைக் கூறியுள்ளார்கள்.
1.       நூன்” என்றால் மையைக் குறிக்கும். ஏனெனில், அல்லாஹ் அதையடுத்து எழுது கோலைக் கூறுகிறான்.
அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன்வைக்கிறார்கள்:
பூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன், அல்லாஹ் எழுதுகோலை முதலில் படைத்தான். பின்பு நூனை”ப் படைத்தான். நூன்” என்பது மையாகும். பின் அதற்கு எழுதும்படி கட்டளையிட்டான். அப்பொழுது எதனை எழுத வேண்டும் எனக் கேட்டது. அதற்கு, கியாமநாள் வரை தேவைப்படும் அனைத்துக் காரியங்களையும் எழுத வேண்டுமெனக் கூற அது எழுதி முடித்தது. அது தான் அல்லாஹ்வின் வார்த்தை.
                                     நூல்: இப்னு அசாக்கிர்.
  குறிப்பு: இந்த ஹதீஸ் ஏற்கத்தகுதியற்றதாகும்.
  (நூன். எழுது கோல் மீது சத்தியமாக).
2.       நூன்” என்பது ஒரு பிரமாண்டமான மீனைக் குறிக்கும்.
3.       நூன்” என்பது ஒளியினாலான பலகையையும், எழுது கோலையும்   குறிக்கும்.  (எழுதுகோல்) இது எல்லா வகையான எழுதுகோல்களையும் உள்ளடக்கும். மேலும், எழுத்து மூலம் அறிவைப் பெற்றுக்கொள்ள அல்லாஹ் தனது அடியார்களுக்கு அருளாக வழங்கியுள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத்தந்தான்). அல் அலக் – 3,4.
(அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக).
இதற்கு இரண்டு விதமான விளக்கங்கள் இருக்கின்றன.
1. வானவர்கள் எழுதுவதன் மீது.
2. மனிதர்கள் எழுதுவதன் மீது.

  مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ ﴿٢﴾ وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ ﴿٣﴾
 وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ ﴿٤﴾  

((முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. நிச்சயமாக உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நிச்சயமாக நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்). அல் கலம் – 2-4

முஷ்ரிக்கீன்கள் நபி (ஸல்) அவர்களை பைத்தியக்காரன் என வர்ணித்தார்கள். அக் கூற்றுக்கான ஆதாரம்:
அல்லாஹ் கூறுகிறான்:
(‘அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்” என்று அவர்கள் கூறுகின்றனர்). அல் ஹிஜ்ர் – 6.
இவர்களின் கூற்றுக்கு மூன்று விதமான பதில்களை அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான்.
1.       நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் இல்லை என்பதை அல்லாஹ் சத்தியம் செய்து உறுதிப்படுத்திக் கூறுகிறான்:
(எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்).அத்தூர்–29.
2.       நபியே! தூதுத்துவத்தை மக்களுக்கு எத்திவைத்து, அவர்கள் செய்த நோவினைகளில் பொறுமையைக் கையாண்டதற்கு துண்டிக்காத நிரந்தரமான உயர்ந்த கூலி உமக்குண்டு எனக்குறிப்பிடுகிறான்.
3.       நபி (ஸல்) அவர்கள் மகத்தான குணத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.  (அல் கலம் –4)
எனவே பைத்தியம் பிடித்த மனிதன் தான் எதை சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை விளங்கமாட்டான். மேலும், சிறந்த நடவடிக்கைகள் அவனிடம் காணப்படமாட்டாது. மகத்தான நற்குணம் என்பது உயர்ந்த மனிதர்களின் பூரணப் பண்புகளில் ஒன்றாகும். அப்படியிருக்க எவ்வாறு பைத்தியம் என்று கூறமுடியம்?
மேலும், நபி (ஸல்) அவர்களின் நற்குணம் எவ்வாறு என்பது பற்றி ஆயிஷா (ரழி) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, அவர்கள் நீர் குர்ஆன் ஓதுகிறீரா? எனக் கேட்டார்கள். அதற்கு ஆம் எனப் பதிலளிக்க, அவர்களின் நற்குணம் அல்குர்ஆன் எனக் கூறினார்கள்.
                        அறிவிப்பாளர் : ஹிஷாம் பின் ஆமிர் (ரழி).
                        நூல் : முஸ்லிம் – 746.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply