Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 44 to 52

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 44 to 52

فَذَرْنِي وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا الْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ﴿٤٤﴾
 (என்னையும், இச்செய்தி பொய்யெனக் கருதுபவனையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப்பிடிப்போம்)
அல் கலம் – 44
அவனது விடயத்தை என்னளவில் விட்டு விடட்டும். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். அவன் அறியாத வகையில் அவனுக்கு கடும் வேதனையுண்டு என அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை அல்லாஹ்வின் கராமத் கிடைப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு இழிவாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம்.) அல் அன்ஆம் – 44.
மேலும் மற்றுமொரு இடத்தில் கூறுகிறான்:

(அவர்களுக்கு நாம் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருப்பது குறித்து நல்லவற்றை விரைந்து வழங்குகிறோம்” என்று எண்ணுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உணரமாட்டார்கள்.) அல் முஃமினூன் – 55,56.
அதனால் தான் அல்லாஹ் அடுத்த வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்:
وَأُمْلِي لَهُمْ ۚ إِنَّ كَيْدِي مَتِينٌ ﴿٤٥﴾
(அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். நிச்சயமாக எனது சூழ்ச்சி உறுதியானது.)
அல் கலம் – 45
நிராகரிப்பாளர்களுக்குரிய தண்டனையை உடனடியாக வழங்காது பிற்படுத்தி வைக்கிறேன், அவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவக்கறையில் சிக்கித் தவித்து, கடுமையான வேதனையை அடைந்து கொள்வதற்காக!
நான் சூழ்ச்சி செய்வதிலும்,  தண்டனை வழங்குவதிலும், பழிக்குப் பழி வாங்குவதிலும் மிகக் கடுமையாளன்.
அல்லாஹ் கூறுகிறான்:
(‘(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது” என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும்; வேதனை அவர்களுக்கு உண்டு) ஆலு இம்ரான் – 178.
أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ ﴿٤٦﴾
 أَمْ عِندَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ ﴿٤٧﴾
 ((முஹம்மதே!) நீர் அவர்களிடம் கூலி கேட்டு அதனால் அவர்கள் கடன் சுமையை சுமக்கப் போகிறார்களா? அல்லது அவர்களிடம் மறைவானவை (பற்றிய அறிவு) இருந்து அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்களா?)
அல் கலம் – 46-47
முஹம்மதே! நிச்சயமாக அவர்களை அல்லாஹ்வின்  பக்கம் அழைப்பு விடுத்து, அவர்களின் நேர் வழிக்குப் பகரமாக அவர்களின் கூலியை எதிர்பாராது அல்லாஹ்வின் கூலியை மாத்திரம் எதிர்பார்த்து நிற்கிறீர்கள். ஆகையால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்படாது. அவ்வாறிருந்தும் அவர்களின் அறியாமை நிராகரிப்பின் காரணமாக நீர் எடுத்துச் சொல்வதை பொய்யெனக் கூறுகிறார்கள்.
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ الْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ ﴿٤٨
لَّوْلَا أَن تَدَارَكَهُ نِعْمَةٌ مِّن رَّبِّهِ لَنُبِذَ بِالْعَرَاءِ وَهُوَ مَذْمُومٌ ﴿٤٩
 فَاجْتَبَاهُ رَبُّهُ فَجَعَلَهُ مِنَ الصَّالِحِينَ ﴿٥٠
 (உமது இறைவனுடைய தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.) அல் கலம் – 48-50
•                                                          மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யார்?
மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யூனுஸ் பின் முத்தா (துன்னூன்).
யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் பக்தாதிலுள்ள ~நய்னவா| என்ற கிராமத்துக்குத் தூதராக அனுப்பினான். அவர் அங்கு வாழ்ந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்து, அவனுக்கு மாறுசெய்வதன் மூலம் கடுமையான வேதனையுண்டு எனவும் எச்சரிக்கை செய்தார். எனினும் அம்மக்கள் அவர்களின் கட்டளையை நிராகரித்து, மாறுசெய்த பொழுது,  கோபமுற்றவராக அல்லாஹ்வின் அனுமதியின்றி அவ்வூரை விட்டு புறப்பட்டு கடற்கரைப் பக்கமாக சென்றார். இவ்வாறு செய்வதன் மூலம் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என்றெண்ணி பயணத்தை மேற்கொண்டார். ஆனால், அவரது சமுதாயம் அவர் அவ்வூரை விட்டு வெளியேறிய பின் விசுவாசம் கொண்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்:
((கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள்;  இருக்கக்கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.) யூனுஸ் – 98.
கடற்கரைப் பக்கம் சென்ற அவர் கடலில் பொதிகளையும், பயணிகளையும் ஏற்றிச் செல்லும் கப்பலை நிறுத்தி, அதில் ஏறிச் சென்றார்.
அல்லாஹ் கூறுகிறான்:
(நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடினார்) அஸ் ஸாஃப்பாத் –140.
கடல் அலை மிகக் கடுமையாக இருந்தது. அதனால் கடலில் முழ்கிவிடக் கூடும் என மக்கள் பயந்து தங்களிடம் இருந்த பொதிகளை ஒன்றன் பின் ஒன்றாக கடலில் போட்டார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் நிறைவேரவில்லை. இறுதியாக பயணிகளில் சிலரைக் குறைத்து பலரைப் பாதுகாக்கலாம் என முடிவுக்கு வந்தார்கள். ஆனால், இக்காரியத்துக்கு யார் முன்வருவது என்ற சரிச்சை அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது. பின்,  சீட்டு; போட்டு தெரிவு செய்தபோது யூனுஸ் (அலை) அவர்களின் பெயர் வந்தது. இதை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகிவிட்டார்.)
அஸ் ஸாஃப்பாத் – 141.
பின்பு யூனுஸ் (அலை) அவர்கள் கடலில் பாய்ந்தார்கள். அல்லாஹ்வின்  நாட்டப்படி பெரிய மீன் ஒன்று அவர்களை விழுங்கி கடலின் ஆழத்துக்கு எடுத்துச் சென்றது. இக்கட்டத்தில் யூனுஸ் (அலை) அவர்கள் பலவிதமான இருள்களைச் சந்திக்க நேர்ந்தது. தனது கூட்டத்தாரை விட்டு கோபத்துடன் வந்த கவலை ஒரு பக்கமிருக்க, மீனுடைய வயிற்றுக்குள் ஒரு இருள், கடலின் ஆழம் மற்றொரு இருள், இரவின் இருள் இவ்வாறு இக்கட்டான சூழலில் இருந்த அவர்கள் முதலில் அல்லாஹ்வைத் தான் அழைத்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் எனறு நினைத்தார். உன்னைத் தவிர  வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.) அல் அன்பியா – 87.
அல்லாஹ்வை துதி செய்ய ஆரம்பித்த போது, அல்லாஹ் அவரது துயரத்தைப் போக்கினான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்) அஸ் ஸாஃப்பாத் – 143:144.
பின்பு மீன் அவரை கரையில் கொண்டு வந்து போட்டது. அப்போது அவர் நோயுற்றவராக போடப்பட்டாரே தவிர இழிவாக போடப்படவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்) அஸ் ஸாஃப்பாத் –145.
இது அல்லாஹ் அவர் மீது புரிந்த அருளாகும். அதைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்:
 (அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.) அல் கலம்- 49.
அத்துடன் அல்லாஹ் முடித்துக்கொள்ளவில்லை. மாறாக குளிரில் கிடந்து வந்த மனிதனுக்கு சூடு வழங்க வேண்டுமென்பதற்காக ~யக்தீன~; என்ற மரத்தை முளைக்கச் செய்தான். அது அவருக்கு நிழல் கொடுத்து, மறைத்து வைத்து, சூட்டை வழங்கியது. இதைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்:
(அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.)
அஸ் ஸாஃப்பாத் – 146.
மீண்டும் அல்லாஹ் அவர்களை அழைப்பு விடுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.) அஸ் ஸாஃப்பாத் – 147.
(அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமதானமும் உண்டாவதாக!)
இச்சம்பவம் மூலம் உண்மையுள்ள விசுவாசி பல படிப்பினைகளைப் பெற வேண்டும்.
1.       அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கை இழக்காதிருத்தல்.
2.       நிச்சயமாக அல்லாஹ் தௌபாவை ஏற்றுக் கொள்பவன். யூனுஸ் (அலை)  அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள்  அல்லாஹ் அவர்களை மன்னித்தான்.
3.       சங்கடத்தில் மாட்டிக் கொண்டவருக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ்வைத்  தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
(நெருக்கடியைச் சந்தித்தவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்) அந்நம்ல் – 62.
4.       ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யூனுஸ் (அலை) அவர்கள் மூலம் நேர்வழி அடைந்தார்கள் என்ற செய்தி இவரின் உயர் அந்தஸ்தைக் காட்டுகிறது.
5.       மனிதர்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களே! எனவே அவர்களில் அவன் நாடியவர்களைத் தண்டிப்பான். அவர் நபியாக இருப்பினும் சரியே!
وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ ﴿٥١
 وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ﴿٥٢
((முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். இவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். அது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.)  அல் கலம் – 51-52
இவ்வசனம் கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது பற்றி பல ஹதீஸ்களும் வந்துள்ளன.
இதற்கான சான்றுகள்:
((முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர்.)
அல் கலம் – 51.
(‘என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்” என்றார்.) யூஸுப் – 67.
மக்கள் மூலம் கண்திருஷ்டி ஏற்படும் என யஃகூப் (அலை) அவர்கள் பயந்தார்கள் காரணம், அவரது ஆண்மக்கள் பெருந் தொகையைக் கொண்ட பதினொரு பேர்கள். மேலும் அவர்கள் அழகு நிறைந்தவர்களும், உடல் வலிமை உள்ளவர்களும் என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணூர் உண்மையானது. கலாக்கத்ரை முந்தக் கூடிய ஏதாவது ஒன்றிருக்குமென்றிருந்தால் அது கண்ணூராகத் தான் இருக்கும். மேலும், குளிக்க வேண்டி ஏற்பட்டால் குளித்துக் கொள்ளுங்கள்.
                            அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி).
                            நூல்: முஸ்லிம் – 1719.
குறிப்பு: கண்ணூர் யார் மூலம் ஏற்பட்டது எனத்தெரிய வந்தால், அவரிடம் வுழூச் செய்யும்படிக் கூறி, அவர் வுழூச் செய்து விட்டு எஞ்சிய நீரை கண்ணூர் ஏற்பட்டவர் குளிக்க வேண்டும். (மேற்கூறப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்).
யாவற்றையும் நன்கறிந்தவன் மாபெரும் கிருபையாளன் அல்லாஹ் ஒருவனே!

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply