Home / அகீதா (ஏனையவைகள்) / தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்)

தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A.

அறிமுகம் :

இஸ்லாம் தெட்டத்தெளிவான கொள்கையின் மீது நிறுவப்பட்ட இறைமார்க்கமாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தான் பின்பற்றுகின்ற இஸ்லாத்தின் கொள்கை பற்றிய தெளிவான அறிவை பெற்றிருப்பது கடமையாகும். இஸ்லாத்தின் கொள்கை பற்றிய அறிவின்றி புரியப்படும் எந்தவொரு வணக்க வழிபாடும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இஸ்லாமிய கொள்கை பற்றிய போதிய அறிவின்மை காரணமாகவே முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தின் தூய கொள்கைக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

பல்வேறு துறைகளுக்கும் சமூகத்தில் வழங்கப்படும் முக்கியத்துவம் இஸ்லாமிய கொள்கை என்ற அதிமுக்கியத்துவமிக்க துறைக்கு வழங்கப்படாமைக்கு காரணம், இஸ்லாத்தின் கொள்கை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெளிவான பார்வை இல்லாமற் போனதே ஆகும்.

இஸ்லாத்தின் பிரதான மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இஸ்லாமிய கொள்கை பற்றி மிக அதிகமாகவும் அழுத்தமாகவும் பேசும் போது, நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது 23 வருட தஃவா வாழ்வில் மிக அதிக காலம் இஸ்லாமிய கொள்கை பற்றிய பிரசாரத்தையே முன்னெடுத்திருக்கும் போது, சமூகத்தில் அதிகமாக பேசப்படாத அல்லது அழுத்தம் கொடுக்கப்படாத அல்லது அலட்சியம் செய்யப்படுகின்ற ஒரு துறையாக இஸ்லாமிய கொள்கை எனும் துறை மாறியிருப்பது நிச்சயமாக ஆபத்தான ஒரு அறிகுறியாகும்.

வரலாறு நெடுகிலும் தோன்றிய பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் இஸ்லாமிய கொள்கை பற்றிய பல நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கிறார்கள். இவ்வரிசையில் நாம் கற்பதற்கு தேர்வுசெய்த நூல் இத்துறையில் மிகப் பெறுமதிமிக்க ஒரு நூலாகும்.

நூல் பற்றிய சிறு குறிப்பு:

சமகாலத்தில் எழுதப்பட்ட அகீதா நூல்கள் வரிசையில் இஸ்லாமிய கொள்கை தொடர்பாக விரிவாகவும் தெளிவாகவும் அலசும் இந்நூல்.
‘தஸ்ஹீலுல் அகீததில் இஸ்லாமிய்யா’ என்ற பெயரில் நூலாசிரியரால் ஆரம்பமாக எழுதி வெளியிடப்பட்டது. அது மிகச் சிறியதாகவும் சுருக்கமானதாகவும் இருந்தமையால், ‘ஷர்ஹு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா’ எனும் பெயரில் பல்வேறு பெறுமதியான குறிப்புகளை உள்ளடக்கி, நூலாசிரியரே விரிவுரை நூலொன்றை பின்னர் எழுதினார். அது மிகவும் விரிவான ஒரு நூல் என்பதனால் கற்பிப்பதற்கு இலகுவாக அவ்விரிவுரை நூலை சிறிது சுருக்கி, ‘முஹ்தஸரு ஷர்ஹி தஸ்ஹீலில் அகீதா அல்இஸ்லாமிய்யா’ எனும் பெயரில் வெளியிட்டார். பல பதிப்புகள் கண்ட அந் நூல் பலரது வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் எனும் நோக்கில் மூல நூலும் விரிவுரை நூலும் ஒழுங்குபடுத்தி செவ்வைப்படுத்தப்பட்டு நூலாசிரியரினாலேயே ‘தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா’ எனும் பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டது. ஆக மொத்தத்தில் இந்நூல் நான்கு வகைப் பரிமாணங்களைப் பெற்றுள்ளது எனக் கூறலாம். நாம் தேர்வு செய்தது இறுதியாக குறிப்பிடப்பட்ட, 252 பக்கங்களைக்கொண்ட நூலாகும்.

இன்றளவும் முஸ்லிம் நாடுகளிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாட நூலாக போதிக்கப்படுவதானது, இந்த நூல் பெற்றிருக்கும் வரவேற்பிற்கும் அங்கீகாரத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

இலகு மொழிநடை, எளிமையான முன்வைப்பு, மிக நேர்த்தியான பகுப்பாய்வு முறைகள் என்பவற்றின் மூலம் சிறப்புப் பெறும் இந்நூல், அல்குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள், ஸஹாபாக்கள் மற்றும் இமாம்களின் தெளிவுரைகள் என்பவற்றின் மூலம் அழகுபெற்றுத் திகழ்கிறது.

நூலாசிரியர் பற்றிய சிறுகுறிப்பு :

நூலாசிரியர் கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்) அவர்கள் ஸஊதி அரேபியாவின் மதிக்கத்தக்க மார்க்க அறிஞர்களுள் ஒருவர். ‘பிக்ஹ் முகாரன்’ எனப்படும் ஒப்பீட்டாய்வு பிக்ஹ் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அவர், றியாத் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராகவும் பின்னர் மன்னர் ஸுஊத் பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றினார். அகீதா, பிக்ஹ் உள்ளிட்ட பல துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்றே நாம் கற்பதற்காக தேர்வுசெய்த நூலுமாகும்.

மிக காத்திரமான இந்நூலை உலகுக்கு வழங்கியமைக்காக நூலாசிரியருக்கு வல்ல அல்லாஹ் அருள்புரிவதோடு, இந்நூலின் பயனை அனைவரும் முழுமையாகப் பெற்றிட துணைநிற்பானாக…

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply