Home / அகீதா (ஏனையவைகள்) / தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்)

தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A.

பாடம் : 01

இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்):

ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்) என்பது, அல்லாஹ்வை அவனது பெயர்கள் மற்றும் அவனுக்குரிய பண்புகளோடு ஒரே இறைவனாக ஏற்று, அல்லாஹ்வின் ஆற்றல்கள், செயற்பாடுகளின் மூலமாகவும் ; மனிதர்கள் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகள் மூலமாகவும் அவனே ஒரே இறைவன் என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

(மேற்படி வரைவிலக்கணத்தின் விளக்கம் யாதெனில்,

➖ அல்லாஹ்வுக்கு பல அழகிய பெயர்களும் பண்புகளும் உள்ளன, அவை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன என்றும்,

➖ அல்லாஹ்வின் ஆற்றலையும் சக்தியையும் நிரூபிக்கின்ற அவனது செயற்பாடுகள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிறையவே நிகழுகின்றன. இவற்றை நிகழ்த்துவதற்கு அவன் மாத்திரமே தகுதியுடையவன் என்றும்,

➖ இத்தகைய ஓர் இறைவனுக்கே சகலவிதமான வணக்க வழிபாடுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும்

நம்புவதற்குப் பெயர்தான் ‘தவ்ஹீத்’ (ஓரிறைக் கோட்பாடு) என்று கூறப்படும்)).

வல்ல அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்றுக்கொள்ளும் இயல்புடனேயே அனைத்து மனிதர்களும் படைக்கப்பட்டுள்ளார்கள்.

  • அல்லாஹ் கூறுகிறான்: ‘நீர் உம் முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை. அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்’ (30:30).
  • நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் (ஒரே இறைவனை ஏற்கும்) இயல்புடனே பிறக்கிறது. பின்னர் பெற்றோரே அக்குழந்தையை யூதனாக அல்லது கிறிஸ்தவனாக அல்லது நெருப்பு வணங்கியாக மாற்றிவிடுகிறார்கள்’ (புஹாரி, முஸ்லிம்).
  • அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூறினார்கள் : ‘எனது அடியார்கள் அனைவரையும் (என்னை ஒரே இறைவனாக ஏற்கின்ற) நேரிய இயல்புள்ளவர்களாகவே படைத்தேன். ஆனால் அவர்களிடம் ஷைத்தான்கள் வந்து நேரிய மார்க்கத்திலிருந்து அவர்களை திசைதிருப்பி விட்டார்கள்’ (முஸ்லிம்).

அதனால்தான் மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்களும் அவர்களது சந்ததிகளும் அல்லாஹ்வை மாத்திரம் ஏக இறைவனாக ஏற்று செயற்பட்டு வந்தார்கள் என்பதையும் பின்னர் நூஹ் (அலை) அவர்களது சமூகத்தாரின் காலத்திலேயே ஷைத்தான் அவர்களிடம் தோன்றி, ஏக இறைவனை நிராகரித்துவிட்டு அவனுக்கு இணையாக வேறு கடவுள்களை உருவாக்கி வழிபட வைத்தான் என்பதையும் வரலாற்றினூடு அறிகிறோம்.

அல்லாஹ்வை மூன்று விதங்களில் ஒரே இறைவனாக ஏற்று ஈமான்கொள்ள வேண்டுமென இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் :

1.தவ்ஹீத் அர்ருபூபிய்யா

2.தவ்ஹீத் அல்உலூஹிய்யா / தவ்ஹீத் அல் உபூதிய்யா/தவ்ஹீத் அல்இபாதா

3.தவ்ஹீத் அல்அஸ்மா வஸ்ஸிபாத்

இவை ஒவ்வொன்றும் பற்றி இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் விரிவாக நோக்கலாம்…

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply