Home / Q&A / இஸ்லாமிய (அகீதா) கொள்கை – 200 வினா விடைகள்

இஸ்லாமிய (அகீதா) கொள்கை – 200 வினா விடைகள்

(அகீதா) கொள்கை – 200 வினா விடைகள்.

 

******************

Download PDF

******************

அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்)

தமிழில்: அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan.

 

 

 

 

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

சங்கைமிக்க மார்க்க மேதை அஷ்ஷெய்க் ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ” என்பதே இவரது இயற்பெயராகும். ஷெய்க் அவர்கள் “மத்ஹஜ்” கோத்திரத்தின் ஒரு பிரிவான “ஹகம் பின் சஃத் அல் உஷைரா”வுடன் இனைத்து அல்ஹகமி என அழைக்கப் பட்டார். சவுடதி அரேபியாவின்  தென்கிழக்கில் உள்ள “ஜாஸான்” இல் அமையப் பெற்ற “அல் மளாயா” நகருக்கு உற்பட்ட “அல் ஸலாம்” கிராமத்தில் ஹிஜ்ரி 1342 ம் வருடத்தில் பிறந்தார்கள். பின்னர் அவரது தந்தையுடன் பிரபல்யமான “சாம்தா” நகரத்துக்குற்பட்ட “அல்ஜாளிஃ” கிராமத்தை நோக்கிப்பயணமானார். அங்கே தாய் தந்தை அரவனைப்பிலே வாழ்ந்து வந்த அவர்கள் அக்கால சமூக வழக்கத்துக்கேட்ப அவரது பெற்றோர்களுக்காக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டார். எனினும் மனன சக்தியிலும், விவேகத்திலும் அக்கால இளைஞர்களுக்கு மத்தியில்​ ஒரு அத்தாட்சியாகத் திகழ்ந்தார்கள். வெறும் பனிரெண்டு வயதுக்குள் அல் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடித்தார்கள். அவரையும் அவரது மற்ற புதல்வரான முஹம்மத் பின் அஹ்மத் என்பரையும்​ பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி கல்வியூட்ட விரும்பாத தந்தை அக்கிராமத்தில் வாழ்ந்த ​ அஷ்ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” (ரஹ்) என்பவரை அவ்விருவருக்கும் ஆசிரியராக நியமித்தார்.​ பின்னர் இவருடைய தந்தை ஹிஜ்ரி 1360 ம் வருடத்தில் வபாத்தாகவே தனது ஆசிரியரு டனே கல்வி கற்க முழு நேரத்தையும் செலவிட்டார்கள். அவரைப்பற்றி அவரது ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்; (அக்காலத்தில் கற்பதிலும் கல்வி போதிப்பதி லும் நூல்கள் இயற்றுவதிலும் நிர்வாகத்திலும் அவருக்கு நிகரான ஒருவர் அப்பிரதேசத்தில் இருக்கவில்லை). எனவே அவருடைய ஆசிரியர் அவருக்கு தனது செல்வப் புதல்வியைத் திருமணம் செய்து வைத்தார் பின்னர் அவ்விருவரும் மார்க்க அறிவைக் கற்கக்கூடிய (ஸாலிஹான) நல்ல குழந்தை களை ஈன்றெடுத்தார்கள்.​​

ஹிஜ்ரி 1362 ம் ஆண்டில் ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” அவருடைய மாணவர் “ஹாபில் அல் ஹகமி” என்பவரிடம் நடாத்திய மாதிரிப் பரீட்சையில் “ஸாலிஹான” முன்னோர்களின் இஸ்லாமியக் கொள்கையை ஒரு ஏகத்துவக் கவிதை   நூலில் இயற்றுமாறு பணிந்தார்கள்​ உடனே அவர்கள் (أرجوزة سلم الوصول إلى علم الأصول) “அடிப்படை அறிவின்பால் அழைத்துச்செல்லும் ஏணி” என்ற கவிதை நூலை இயற்றினார்கள். இது தவிர இஸ்லாமிய மதச்சட்டம், அதன் அடிப்படைகள், ஏகத்துவம், நபிகளாரின் வாழ்கை வரலாறு, சொத்துப்பங்கீடு போன்ற துறைகளில் உரை நடையிலும் கவிதை நடையிலும் பல நூல்களை எழுதியுள்ளார். அச்சிலேறிய, அச்சிலேறாத பதி​​​னைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர்கள் தனது இளமையிலே​ ஹிஜ்ரி 1377 ஆண்டு ஹஜ் கடமைகளை முடித்த பின்னர் புனித மக்கா நகரி​லேயே வபாத்தாகி அங்கேயே​ நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவரை விசாலமான சுவனபதியில் குடியிருத்துவானாக. ​ ​

 

 

200 வினா விடைகள்.

 

  1. வினா; அடியார்கள் மீதுள்ள முதல் கடமை யாது?

விடை :

அடியார்கள் மீதுள்ள முதல் கடமை அல்லாஹ் அவர்களை எதற்காகப் படைத்து, அவர்களிடம்​உறுதிமொழியும் வாங்கினான், மேலும் தூதர்க ளையும் அவர்களிடம் அனுப்பி, அவனது வேதங்ளையும் இறக்கினான், இம்மை​, மறுமை, சுவர்க்கம், நரகம் போன்றவைகளையும் படைத்தான். மேலும் ​கியாமத் நாள் வருவதும் (மீஸான்) தராசில் நிறுக்கப்படுவதும், (நன்மை​​தீமை) ஏடுகள் வழங்கப்படுவதற்குமான உண்மைகளை​​ப் விளங்கிக்கொள்வதேயாகும்.

  1. வினா; அல்லாஹ் படைப்பினங்களை எதற்காகப் படைத்தான்?​​ ​​​ ​

விடை :

அல்லாஹ் தனது திருமறையில் இது சம்பந்தமாக பின்வருமாறு கூறுகின்றான்.​

  • (வானங்களை​யும், பூமியையும், அவ் விரண்டுக்கு மத்தியிலுள்ள வைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்கவில்லை, (நிச்சியமாக) அவ்விரண்டையும் உண்மையைக் கொண்டே தவிர – நாம் படைக்கவில்லை, எனினும் அவர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிய மாட்டார்கள்.) அத்துகான் 37,38
  • (வானத்தையும், பூமியையும், இவை இரண்டுக்கு மத்தியலுள்ள வற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை, இது நிராகரித்தவர் களின் எண்ணமேயாகும், ஆகவே நிராகரித்த வர்களுக்கு (நரக) நெருப்பின் கேடு தான் (உண்டு) ஸாத் 27
  • (வானங்களையும், பூமியையும், அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத் திற்காவே) படைத்திருக்கின்றான், இன்னும் ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு கூலி கொ​டுக்கப்படு வதற்காகவும் (படைத்துள்ளான்) அவர்கள் அனியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.) அல்ஜாஸியா 22​​
  • மேலும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவ​ற்காகவே தவிர நான் படைக்க வில்லை.) அத்தாரியாத் 56. ​

 

  1. வினா; (அப்த்) அடிமை என்பதன் கருத்து யாது?

விடை

அடிமை என்ற பதம் பொதுவாக அல்லாஹ்வின் படைப்புகளில் (உயிருள்ள, உயிரற்ற) அனைத்தையும்​ அடக்கிய போதிலும் குறிப்பாக முஃமின்களையே அது குறிக்கும் ஏனெனில் அவர்களே அல்லாஹ்வின் சங்கை மிக்க அடியார்களும் உள்ளச்சம் கொண்ட நேச​​ர்களுமா வார்கள். அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.

  1. வினா; (இபாதத்) வணக்கம் என்றால் என்ன?

விடை

வணக்கம் என்றால் உள்ரங்கமான அல்லது வெளிப்படையான சொற்கள் செயல்கள் ரீதி யில் அல்லாஹ் விரும்பக்கூடிய சகல விடயங்களும், மேலும் அவைகளுக்கு முரன்பாடான அல்லது எதிரானவைகளில் இருந்து நீங்கியிருத்தலும் வணக்கமாகும்.

  1. வினா; ஒரு செயல் எப்போது (இபாதத்) வணக்கமாக மாறும்?

விடை

அச்செயலில் இரண்டு விடயங்கள் பூரணமாக இருக்க வேண்டும் அவை, நிறைவான கீழ்ப் படிவுடன் கூடிய நிறைவான நேசமாகும். அல்லாஹ் கூறுகின்றான்.(…​​விசுவாசிகளோ அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக்கடுமை யானவர்கள்…)​ அல்பகரா 165.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சயமாக தங்கள் இரட்சகனின் பயத்தால் அஞ்சி எச்சரிக்கையாக இருக்கின்றார்களே அத்தகையோரும்)அல்முஃமினூன் 57

இவ்விரண்டையும் ஒரே வசனத்தில் இனைத்துக் கூறும் போது (…நிச்சயமாக, இவர்கள் யாவரும் நன்மைகளில் (மிகத் துரிதமாக) விரைபவர்களாக இருந்தார்கள், (நம்முடைய அருளை) ஆசித்தும், (நம் தண்டனையைப்) பயந்தும்,  நம்மை (பிரார்த்தனை செய்து) அழைப்பவர் களாகவும் இருந்தார்கள், அவர்கள் (யாவரும்) நம்மிடம் உள்ளச்சமுடையோர்களாகவும் இருந்தார்கள்.

 

  1. வினா; ஒரு அடியான் (ரப்பை) அவனைப் படைத்து போசித்துப் பாதுகாப்பவனை​​​ நேசிப்பதற்கான அடையாளம் என்ன ?

விடை.

அதன் அடையாளம் அல்லாஹ் நேசிப்பவற்றை அவன் நேசித்தும் அல்லாஹ்வுக்கு கோப மூட்டக்கூடிவைகளைத் தவிர்த்தும் அவனது கட்டளைகளை ஏற்று அவனது விளக்கள் களைத் தவிர்ந்துக் கொள்வான்​​, மேலும் அல்லாஹ்வின் நேசர்களை நேசித்து அவனது விரோதி களைப் பகைத்துக்கொள்வான். எனவே தான் அல்லாஹ் வுக்காக​ நேசிப்பதும் அவனுக்காகவே பகைத்துக் கொள்வதும் ஈமானின் பலமான கயிராகும்.

 

  1. வினா; அல்லாஹ் திருப்தி கொள்பவற்றை​ அடியார்கள் எப்படி அறிந்தார்கள்?

விடை

அல்லாஹ் தூதர்களை அனுப்பியதன் மூலமும், அவனது விருப்பு வெறுப்புக்களை விளக்கி வேதங்களை இறக்கிய தனாலும் அடியார்கள் அதை அறிந்து கொண்டார்கள். இதனால் அவர்களுக்கெதிரான ஆதாரம் நிலைப்பெற்று அல்லாஹ்வின்  எல்லையற்ற ஞானமும் தெளிவாகியது.

அல்லாஹ் கூறுகின்றான் (அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதார மும் இல்லா திருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும் தூதர்கள் பலரை (சுவர்கத்​தைக் கொண்டு) நன்மாராயம் கூறுகின்றவர்களா கவும் (நரகத்தைக்கொண்டு) அச்சமூட்டி எச்சரிக் கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்.) அன்னிஸா 165.

​மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக​ “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின் பற்றுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான், உங்கள் பாவங்களையும் உங்களுக் காக அவன் மன்னித்து விடுவான் அல்லாஹ் மிக்க மன்னிப்புடையவன், மிகக்கிரபையுட​ய வன்”.​​)​​ ஆலு இம்ரான் 31

  1. வினா; இபாதத்(வணக்கத்)தின் நிபந்தனைகள் எத்தனை​?

விடை மூன்று அவையாவன

ஒன்று; உண்மையான மன உறுதி. இது வணக்கம் உண்டாவதற்கான நிபந்தனை.

இரண்டு; தூய என்னம்

மூன்று; அவ்வணக்கம் அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த  ஒரே மார்க்கத் துக்கு உடன்படல்.

இவ்விரண்டும் வணக்கம் ஏற்றுக் கொள்ள ப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.​​

 

  1. வினா;உண்மையான மனஉறுதி என்றால் என்ன​?

விடை

அலட்சியம் சோம்பல் போன்றவைகளைக் கழைந்து தனது பேச்சை செயலுடன் உண்மைப்படுத்த முயற்சித்தல்.

அல்லாஹ் கூறுகிறான்; (விசுவாசம் கொண்டோரே  நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்?

நீங்கள் செய்யாததை (பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரிதாகி விட்டது.) அஸ்ஸஃப் 2,3 ​​

  1. வினா; தூய என்னம் என்றால் என்ன​?

விடை/

அடியானின் உள்ரங்கமான அல்லது வெளிப் படையான​ சொற்கள் செயல்கள்  அனைத்தும் அல்லாஹ்வை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்;

(இன்னும், அல்லாஹ்வை-அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கிய வர்களாக (அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின் பால்)சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்​வை வணங்குவதற்காகவே அன்றி​ கட்டளையிடப் படவில்லை…)​அல்பய்யினா 5.​

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (மனிதர் களில்) எவருக்கும் (தன் தர்மத்தின் மூலம் பிரதிபலனைக் கருதிக்) கொடுக்கப்படும் எந்த உபகாரமும் தம்மிடம் இல்லை. மிக்க மேலான தம் இரட்சகனின் முகத்தைத் தேடி​யே தவிர (வேறு எந்த நோக்கத்துடனும் அவர் செலவு செய்யவில்லை). அல்லைய்ல் 19,20.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உணவை உண்போரிடம்) உங்களுக்கு நாம் உணவளிப்ப தெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தான், உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதி பலனையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை). அத்தஹ்ரு 9.​​​​

  1. வினா;அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கம் யாது​?

விடை/

(அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய மார்க்கமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சியமாக அல்லாஹ் விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்…) ஆலு இம்ரான் 20.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; அல்லாஹ் வுடைய மார்கமல்லாத  (வேறு மார்க்கத்) தையா அவர்கள் தேடுகின்றார்கள் வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை, (அவை) விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாகக் கீழ்ப்படிந்து (தங்களை ஒப்படைத்து விட்டன) மேலும் அவனள விலேயே திரும்பக்கொண்டு வரப்படுவார்கள்).​​​  ஆலு இம்ரான் 83. பார்க்க மேலும்​ அல்பகரா 130, ஆலு இம்ரான் 85, அஷ்ஷூரா 21.

  1. வினா;இஸ்லாம் மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை​?

விடை/

மூன்று படித்தங்களாகும் அவையாவன; இறை நம்பிக்கை (ஈமான்), அடிபணிதல் (இஸ்லாம்), அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான் )என்பனவாகும். எனினும் அவை ஒவ்வொன் றும் தனியாக்க கூறப்படும்போது முழு மார்க்கத்தையுமே​ குறிக்கும்.

  1. வினா; இஸ்லாம் என்றால் என்ன​?

விடை/

அல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிபடுதல், இனைவைக்காதிருத்தல்.

அல்லாஹ் கூறுகின்றான்; எவர் அல்லாஹ் வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்த வராக இருக்க அசத்தியத்திலிருந்து நீங்கி) சத்தியத்தைச் சார்ந்த மார்க்கத்தையும் பின் பற்றுகின்றாறோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்?…). அன்னிஸா 125.​​ பார்க மேலும்​ லுக்மான்22, அல் ஹஜ்34.

 

  1. வினா; அது பொதுவாகக் கூறப்படும் போது முழு மார்க் கத்தையும் உள்ளடக்கும் என்பதற்கான ஆதாரம் யாது​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (நிச்சியமாக அல்லாஹ் விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்…) ஆலு இம்ரான் 20.

நபி (ஸல்) கூறினார்கள்:இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும். நூல் முஸ்லிம்

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (இஸ்லாத்தில் மிகச்சிறந்தது ஈமான் (விசுவாசம்) கொள்வதாகும்) .நூல் புகாரி,

இது சம்பந்தமாக மேலும் பல ஹதீஸ்கள் உள்ளன.

  1. வினா; அதை விளக்கும் போது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளைக்கொண்டு அடைமொழி வழங்குவதற்கான ஆதாரம் யாது​?

விடை/

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் (இஸ்லாம்) மார்க்கத்தைப் பற்றி வினவிய நபிமொழியில் வந்துள்ள. ”இஸ்லாம் என்றால் வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் எனச்சாட்சி கூறுவதும், தொழுகையை நீ உறிய நேரத்தில் தொழுவதும், ஜகாத்தை கொடுப்பதும், ரமழான் மாத்த​​தில் நோன்பு நோட்பதும், வசதியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும்” என்ற நபியவர்களின் கூற்றும், மேலும் “இஸ்லாம் (மார்க்கம்) ஐந்து (தூன்கள்) மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது”​ ​என்ற கூற்றுமாகும். இந்த நபிமொழியிலும் அவைகளையே கூறிய நபியவர்கள்  இதில் ஹஜ்ஜை நோன்பைவிட முற்படுத்திக் கூறினார்கள், அவ்விரண்டு (நபி மொழிகளு)ம் இரண்டு ஸஹீஹான கிரந்தங்களிலும் (பதிவாகி) உள்ளன.​​

  1. வினா; இரு சாட்சியங்களுக்கும் (இஸ்லாம்) மார்க்கத்தி லுள்ள அந்தஸ்து யாது​?

விடை/

அவ்விரண்டின் ஊடாகவே தான் ஒரு அடியான் (இஸ்லாம்) மார்க்கத்தில் நுளையலாம்.​​​ அல்லாஹ் கூறுகின்றான்; (உண்மையான விசுவாசிகளெல்லாம் “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங் கொண்டார்களே அத்தகையோர் தாம்”). அன் நூர் 62.​​​

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (“அல்லாஹ் வையன்றி (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை யென்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் மேலும் அவனது தூதருமாவார்” என்று மனிதர்கள் சாட்சி கூறும் வ​​​ரை நான் அவர்களுடன்​போராட கட்டளையிடப் பட்டுள்ளேன். நூல் புகாரி

  1. வினா; “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாரு மில்லை” என்ற சாட்சியத்தின் ஆதாரம் யாது​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(“தன்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை” என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர் களும், நீதியை நிலை நாட்டும் அறிவுடை யோரும் (உறுதி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞான மிக்கவன்) .ஆலு இம்ரான் 18.

மேலும்அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை’ என்பதை அறிந்து கொள்வீராக!) முஹம்மத் 19.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!) ஸாத் 65.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப் பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப் பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்).அல்முஂமினூன் 91.

(‘அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்’ என்று கூறுவீராக)அல் இஸ்ரா 42.

  1. வினா “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக் குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற சாட்சியத்தின் கருத்து யாது ​?

விடை/

அல்லாஹ் தவிர்ந்த ஏனைய அனைத்து  படைப்பினங்களுக்கும் வணக்கம் செழுத்து வதை மறுத்து, வழிபடுவதிலும், தன் அரசாட்சியிலும் இனையே இல்லாத அல்லாஹ்வுக்கு மாத்திரமே அது உறியது என ஏற்றுக்கொள்ளல். அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ்வே உண்மையானவன். அவனை யன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யான வை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்) அல் ஹஜ் 62.

​​​​​

  1. வினா;“அல்லாஹ்வைத் தவிர (வணக்கத் துக்குரிய) இறைவன்வேறு யாருமில்லை” என்ற சாட்சியத்தின் சகல நிபந்தனைகளையும் ஒருங்கே பேனாது ​​ஒருவர் மொழிந்தால் அது அவருக்கு பயனளிக்காது என்றால் அதன் நிபந்தனைகள் யாது​​?

விடை/அதன் நிபந்தனைகள் ஏழு;​

  • அ(ச்சாட்சியத்)திலுள்ள மறுத்தல், ஏற்றுக் கொள்ளல் ஆகிய கருத்துக்களை அறிதல்.
  • அ(ச்சாட்சியத்)தை உள்ளத்தால் உறுதி கொள்ளல்.
  • உள்ரங்கமாகவும் வெளிப்படையாகவும் சாட்சியத்துக்கு கட்டுப்படல்.
  • சாட்சியத்தின் கருத்துக்களிலிருந்தோ, அல்லது அது கட்டாயப் படுத்துபவைகளி லிருந்தோ யாதொன்றையும் மறுக்காது ஏற்றுக் கொள்ளுதல்.​
  • அதில் உளத்தூய்மையாக இருத்தல்.
  • ​வெறுமனே நாவினால் மாத்திரமின்றி அடிமனதினாலும் சாட்சியத்தை உண்மைப் படுத்துதல்.​
  • அவ்வாறு சாட்சி கூறியவர்களை நேசித்தல், மேலும் அதற்காகவே பகைத்தலும் நேசித்தலுமாகும்.

 

  1. வினா; “அறிதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;  (அறிந்து உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர).அஸ்ஸுக்ருப் 86

அதாவது தம் நாவினால் மொழிந்ததன் கருத்தை இதயத்தினால்(அறிந்து) “அல்லாஹ் வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற(உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர) என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (யார் “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று அறிந்தவராக மரணிக்கிராரோ அவர் சுவனம் நுளைந்து விடுவார்).நூல் முஸ்லிம்.

21.வினா;“உறுதி கொள்ளல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்ட வர்கள். அவர்களே உண்மையாளர்கள்). அல்ஹுஜ்ராத் 15.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (“அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்றும் மேலும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன்.​ அவ்விரண்டு (சாட்சியங் கள்) உடனும் சந்தேகம் கொள்ளாது ​ஒரு அடியான் (மரணித்து) அல்லாஹ்வை சந்தித்தால் கட்டாயமாக அவன் சுவர்க்கம் நுளைந்து விடுவான்). நூல் முஸ்லிம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் ​கூறினார்கள்; (இந்த தோட்டத்துக்கு அப்பால் “அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று மன உறுதியுடன் சாட்சி கூறுபவரைக் கண்டால் அவருக்கு சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்வீராக).​​ நூல் முஸ்லிம்.

  1. வினா; “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது).லுக்மான் 22.

  1. வினா;​“ஏற்றுக்கொள்ளுதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை​?

விடை/

சாட்சியத்தை​​ ஏற்றுக் கொள்ளாதோர் விடயத்தில்​ அல்லாஹ் கூறுகின்றான்; (அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!…)

…(அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப் போராக அவர்கள் இருந்தனர், பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?’ என்று கேட்கின்றனர்). அஸ்ஸாப்பாத் 22 முதல் 36 வரை.​

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவு மில்லை. இது தான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத்தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்).நூல் புகாரி.

 

  1. வினா; ​“உளத்தூய்மை”என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது). அஸ்ஸுமுர் 3.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ் வேதத்தை உம்மிடம் நாம் அருளி யுள்ளோம். எனவே வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக), அஸ்ஸுமுர் 2.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (எனது மன்றாட்டத்தினால் (மறுமையில்) அதிக சந்தோசம் அடையும் மனிதர் யாரெனில் உளத் தூயமையுடன்“அல்லாஹ்வைத்தவிர (வணக்கத் துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று கூறியவராகும்).நூல் புகாரி

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(அல்லாஹ்வின் முகத்தையே நாடி “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று கூறியவருக்கு அல்லாஹ் நரகத்தை தடை செய்து விட்டான்).நூல் புகாரி​

 

  1. வினா;“உண்மைப்படுத்துதல்” என்ற நிபந்தனைக்கு அல் குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(அலிஃப், லாம்,மீம்.

“நம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார் கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா”?

அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித் தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்). அல்அன்கபூத் 1-3.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் தனது உள்ளத்தால் உண்மைப்படுத்தி “அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” எனச்சாட்சி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் கட்டாயமாக நரகத்திலிருந்து தடைசெய்து விடுவான்.

இஸ்லாத்தின் கடமைகளைக் கற்றுக் கொடுத்தல் “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக அதை விடக் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்” எனக்கூறிய கிராமவாசியிடத்தில் நபி (ஸல்) அவர்கள் “அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றி பெற்று விட்டார்” எனக்கூறினார்கள். நூல் புகாரி முஸ்லிம்.

 

  1. வினா; ​“நேசித்தல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்) அல்மாயிதா 54

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளதோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். அவை,

  1. அல்லாஹ்வும் அவனின் தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்துக்குரியோராவது.

2.ஒருவரை மற்றவர் அல்லாஹ்விற்காக நேசிப்பது.

3.இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின் அந்த இறை மறுப்பிற்கே திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பது) .நூல் புகாரி

 

.27.வினா; ​“அல்லாஹ்வுக்காக நேசித்தலும் அவனுக்காகவே பகைத்தலும்​​” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களை யும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளா தீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்)… (அல்லாஹ் வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்) அல்மாயிதா 51முதல் 55 வரை.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்). அத்தவ்பா 23.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ் வையும், அவனது தூதரையும் பகைப்பவர் களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர்).அல்முஜாதலா 22.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(நம்பிக்கை கொண்டோரே! எனது பாதையிலும், எனது திருப்தியை நாடியும் அறப்போருக்குப் புறப்படு வோராக நீங்கள் இருந்தால் எனது பகைவரை யும், உங்கள் பகைவரையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாகஆக்கிக் கொள்ளாதீர்கள்!..). அல் மும்தஹ்னா 1 முதல் இறுதி ஸுரா வரை.

  1. வினா; ​“முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்துக்கான ஆதாரம் யாது?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்) ஆலு இம்ரான் 164.

மேலும்அல்லாஹ் கூறுகின்றான்;(உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரி டம் பேரன்பும், இரக்கமும் உடையவர்) அத்தவ்பா 128.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

((முஹம்மதே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் போது “நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்” என்று கூறுகின்ற னர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான்…) அல் முனாபிகூன் 1.

 

  1. வினா; ​“முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்தின் கருத்து யாது?

 

விடை/

நிச்சியமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர்கள் ஜின்கள் அடங்களாக அனைவருக்கும் அனுப்பபட்ட அல்லாஹ்வின் தூதரும் அடியானுமாவார் என நாவினால் கூறியதற்கு அமைவாக அடி மனதினால் உறுதியாக உண்மைப்படுத்துவதாகும்.​​​

அல்லாஹ் கூறுகின்றான்; (நபியே உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவ ராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்) அல் அஹ்ஸாப் 45,46.

எனவே அவர்கள் எங்களுக்கு அறியத் தந்த கடந்த கால மற்றும் எதிர்கால செய்திகள், அனுமதித்த வைகள் தடைசெய்தவைகள், அ​னைத்தையும் உண்மைப் படுத்துவதும், ​மேலும் அவர்கள் கட்டளையிட்டவைகளை ஏற்று வழிப்படுவதும், விளக்கியவைகளை தவிர்ந்து கொள்வதும், அவரது மார்க்கத்தைப் பின்பற்றுவதும், அவர் தீர்ப்பு வழங்கிய வைகளைத் திருப்தி கொள்வதுடன் அவைகளை ஏற்று அவருடைய வழி முறைகளை இரகசியத் திலும் பரகசியத்திலும் பின்பற்று வதும் எங்களது கடமையாகும், மேலும் அல்லாஹ் வின் தூதை அவரே எத்தி வைத்தார் எனற அடிப்படையில் அவருக்கு வழிப்படுவதும் மாறு செய்வதும் ​அல்லாஹ் வுக்கு வழிப்படுவதற்கும் மாறு செய்வதற்கும் சமனாகும், அவரைக் கொண்டு தெளிவான செய்தியை எத்தி வைத்து அவரது சமூகத்தை யும் தெளிவான ஆதாரத்தில் நிறுத்தி​ மார்க்கத்தை பரிபூரணப் படுத்தும் வரை அவரது உயிரை அல்லாஹ் கைப்பற்றவில்லை.​

 

30.வினா;“அல்லாஹ்வைத் தவிர (வணக்கத் துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்தின்   நிபந்தனை கள் யாது, மேலும்  இடண்டாவது சாட்சியம் இன்றி முதல் சாட்சியம் ஏற்கப்படுமா?

விடை/

ஏலவே நாம் கூறியது போல் ஒரு அடியான் இவ்விரண்டு சாட்சியங்களினூடாக அன்றி மார்கத்தில் நுளைய முடியாது, ஏனெனில்​இவ்விரண்டும் ஒன்று மற்றொன்றுடன் இணைந்தவை, முதல் சாட்சியத்தின் நிபந்தனைகளே இரண்டாவதின் நிபந்தனை களுமாகும்.​

31.வினா; தொழுகை மற்றும் (ஸகாத்) ஏழை வரி கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை​​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(…அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்) அத்தவ்பா 5.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(அவர்கள் திருந்தி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள். அறிகின்ற சமுதாயத் திற்குச் சான்றுகளைத் தெளிவாக்கு கிறோம்). அத்தவ்பா 11.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்ற தாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்கு மாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம்) அல்பய்யினா 5.

 

32வினா; நோன்பு கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை​​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவ தற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது) அல்பகரா 183.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்).அல்பகரா 183.

மேலும் கிராம வாசியின் நபிமொழியில் கூறப்பட்டுள்ளதாவது “முஹம்மதேநோன்பிலிருந்து அல்லாஹ் எனக்குக் கடமையாக்கியதை அறியத்தருவீரா எனக் கேட்டதற்கு நபியவர்கள் நீர் (மேலதிக) ஸுன்னத்தாக நோன்பு நோற்றாலன்றிரமளான் மாதத்தில் நோன்பு வைப்பது தான் என்றார்கள்.​ நூல் புகாரி.

 

33.வினா; ஹஜ் கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை​​?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை யும், உம்ராவையும் முழுமைப் படுத்துங்கள்)அல்பகரா 196

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(… அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்).ஆலு இம்ரான் 97.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நிச்சியமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கினான்).நூல் புகாரி முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; (இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்)மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1. இறைவன் ஒருவன் என ஏற்பது. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5.ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்) நூல் முஸ்லிம்.

 

  1. வினா; அவைகளில் ஒன்றை ஒருவன் மறுத்தால் அல்லது அதை ஏற்று (பின்னர் அதைச்செய்யாது) பெருமையடித்தால் அவர் நிலை என்ன​​?

விடை/

இப்லீஸ், பிர்அவ்ன் போல் பெருமையடித்தவர் களையும் ஏனைய பொய்யர்களையும் போன்று அவனும் நிராகரித்தவன் (காபிர்) ஆக கொள்ளப்படுவான்.​

 

  1. வினா; ஒருவர் அவைகளை ஏற்று, பின்னர் வேறு விளக்கம் கற்பித்தோ அல்லது அசட்டையாகவோ அவைகளை செய்யாது விட்டு விட்டால் அவர் நிலை என்ன?

விடை/

மேற் கூறிய நிலையில் ஒருவர் தொழுகையை அதன் உறிய நேரத்தில் தொழாது பிற்படுத்தினால் அவரிடத்தில் பாவமன்னிப்பு (தவ்பா) செய்யக்கோரப்படும், மறுக்கும் பட்சத்தில் தண்டனைக்காக கொள்ளப்படுவார். ஏனெனில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்;

(…அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடை யோன்) அத்தவ்பா 5.

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (“அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன்வேறு யாருமில்லை யென்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் மேலும் அவனது தூதருமாவார்” என்று மனிதர்கள் சாட்சி கூறும் வ​​​ரை நான் அவர்களுடன் ​போராட கட்டளையிடப் பட்டுள்ளேன்). நூல் புகாரி

அவ்வாரே ஸகாத் (ஏழை வரி) கொடுக்க மறுக்கும் ஒருவர் சக்தியற்றவராக இருப்பின் அவரிடமிருந்து (முஸ்லிம்களின் தலைவர்) இமாம் பலத்தைப் பிரயோகித்து அவர் வழங்க வேண்டிய ஸகாத்தையும் கூடவே மேலதிக தொகையையும் அபராதமாக எடுத்து அவருக்குத் தண்டனையும் வழங்குவார். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (எவர் ஸகாத்தைக் கொடுக்க மறுக்கிறாரோ அவரிடத்திலிருந்து நாம் அதையும் அதனுடன் மேலதிகமாக அவருடையசொத்தில் ஒரு பகுதியையும் அரவிடுவோம்) நூல் அபூதாவூத்.

ஆயினும் ஸகாத் (ஏழை வரி) கொடுக்க பளமுல்ல ஒரு குழுவினர் மறுத்தால் அவர்கள் அதைக்கொடுக்கும் வரை (முஸ்லிம்களின் தலைவர்) இமாம் மீது ஏற்கனவே கூறப்பட்ட ஆதாரங்களுக்கு இணங்க அவர்களுடன் போர் புரிவது கடமையாகும். அவ்வாறு தான் அபூ பக்கர் (ரலி) அவர்களும் மேலும்  ஏனைய ஸஹாபாக்களும் செய்து காட்டினார்கள்.

மேற்கூறிய நிலையில் நோன்பை விடுபவர் தொடர்பாக எந்த வித ஆதாரமும் கிடைக்காத படியால் (முஸ்லிம்களின் தலைவர்) இமாம் அக்குற்றத்தைப் புரிபவர்களுக்கு ஏற்றவாறு ஒழுக்கமூட்டுவார்.

அவ்வாரே ஹஜ் கடமையை  விடுபவருக்கு இன்மையில் தண்டனை வழங்குவது தொடர்பாகஎந்த வித ஆதாரமும் கிடைக்க வில்லை, அக்கடமையை மரணிக்கும் வரை ஒருவர் செய்ய முடியுமாக இருப்பினும் அதை விடுபவருக்கு மருமையில் கிடைக்கும் தண்டனை கடுமையானது. எனவே அதை நிறைவேற்ற முந்திக் கொள்வதே சிறந்தது.

36.வினா; விசுவாசம்(ஈமான்) என்றால் என்ன?

விடை/

விசுவாசம் (ஈமான்) என்றால் சொல்லும் செயலுமாகும். அதாவது இதயத்தினாலும் நாவினாலும் கூறி இதயத்தினாலும் நாவினாலும் உறுப்புக்களினாலும் செயல் படுத்துவதேயாகும், (அல்லாஹ்வுக்கு) வழிபடு வதன் மூலம் அது அதிகரிக்கும், பாவம் செய்வதன் மூலம் அது குறைவடையும். எனவே தான் விசுவாசிகள் (ஈமானில்) விசுவாசத்தில் வித்தியாசப்படுகிரார்கள்.

 

37- வினா;  விசுவாசம் (ஈமான்) சொல்லாகவும் செயலாகவும் இருப்பதற்கு ஆதாரம் என்ன?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;(… மாறாக அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு விருப்பமானதாக ஆக்கினான். அதை உங்கள் உள்ளங்களில் அழகாக்கினான்..). அல் ஹுஜ்ராத் 7

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (…அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்!…) அல் அஃராப் 158

ஒரு அடியான் இஸ்லாம் மார்க்கத்தில் நுளைவ தற்கு அவசியமான இரு சாட்சியங்களின் கருத்தும் இதுவே யாகும், நாவினால் மொழி வதும் உள்ளத்தால் உறுதி கொள்வதும் முரண் படாதிருந்தாலன்றி அவை பயனளிக்காது.

அல்லாஹ் கூறுகின்றான்;(.. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை). அல் பகரா 143

அதாவது (கிப்லா) திசை கஃபாவுக்கு மாற்றப்படுவதற்கு முன் பய்துல் முகத்தஸை நோக்கி தொழுத உங்கள் தொழுகைகளை அவன் வீனாக்க மாட்டான் என்பதே இதன் கருத்தாகும். இங்கு இதயம், நா, புற உறுப்புக்கள் அனைத்தினாலும் நிகழும் தொழுகைக்கு (ஈமான்) விசுவாசம் என கூறியாள்ளான், அவ்வாரே நபி (ஸல்) அவர்களும் புனிதப்போர், லைலதுல் கத்ர் இரவில் நின்று தொழுதல், ரமளானில் நோன்பு நோற்றல், ஐநேரத்தொழுகையை நிறைவேற்று தல் போன்ற இன்னோரன்ன வணக்கங்களை யும் ஈமான் எனக் கூறியுள்ளார்கள், மேலும்​வணக்கங்களில் சிறந்தது எது எனக் கேட்கப் பட்டதும் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கொண்டு விசுவாசம்கொள்வதாகும்” என கூறினார்கள். நூல் புகாரி​  ​ ​​

38- வினா;  விசுவாசம் (ஈமான்) கூடுவதற்கும் குறைவதற்குமான ஆதாரம் என்ன?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (தமது நம்பிக்கை யுடன் மேலும் நம்பிக்கையை அதிமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோ ரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான் …) அல் ஃபத்ஹ் 4.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (…அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கி னோம்).  அல் கஹ்ஃப் 13.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (…நேர் வழி பெற்றோருக்கு நேர் வழியை அல்லாஹ் அதிகமாக்குகிறான்…) மர்யம் 76.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான்) முஹம்மத் 17.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (…நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும்..), அல் முத்தஸிர் 31

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (… நம்பிக்கை கொண்டோருக்கு இது நம்பிக்கையை அதிகமாக்கியது…). அத்தவ்பா 124

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக் கியது…) ஆலு இம்ரான் 173.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (…நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிக மாக்கவில்லை) அல் அஹ்ஸாப் 22.

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (நீங்கள் இப்போது என்னுடன் இருப்பது போல் சகல நிலைகளிலும் இருந்தால் உங்களுடன் மலக்குகல் (முஸாபஹா) கைலாகு கொடுப்பார்கள்.​நூல் முஸ்லிம்.

 

39- வினா; (முஃமினான) விசுவாசிகள்(ஈமான் எனும்) விசுவாசத்தில் ஏற்றத்தாழ்டையவர்கள் என்பதற்குரிய ஆதாரம் என்ன?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; ((மூன்றாம் வகையினர்) நம்பிக்கை கொள்வதில் முந்திக்கொண்டவர்கள் (இவர்கள் சுவனத்தின் பால்) முந்திக் கொண்டவர்களாவர்). (இவர்கள் தாம் (தங்கள் இரட்சகம் பக்கம் மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்கள்) 10 முதல் 27 வது வசனம் வரை.  ​​

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ( ஆகவே (அல்லாஹ்வுக்கு) நெருக்கமாக்கப் பட்டவர் களில் அவர் இருந்தால்)அல்வாகிஆ 88 முதல் 91 வது வசனம் வரை.  ​​

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (பின்னர், நம் முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத் தோமே அத்தகையோரை அவ்வேதத்துக்கு வாரிசுகளாக்கி வைத்தோம், ஆகவே அவர்க ளில் தமக்குத் தாமே ​​அநியாயம் செய்து கொண்டவரும் உள்ளனர்; அவர்களில் நடு நிலையான வழியில் சேன்றவர்களும் உள்ளனர்; அவர்களில் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு நன்மையானவற்றில் முந்திக்கொண்டோரும் உள்ளனர்; இதுவே மிகப்பெரும் பேரரு​​ளாகும்.)  ஃபாதிர் 32.

 

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்;(எவருடைய உள்ளத்தில் ஒரு தங்க நாணயமளவு இறை நம்பிக்கை இருக்குமோ அவரை அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றுவான்,​ பின்னர் எவருடைய உள்ளத்தில் அரைத்​ தங்க நாணயமளவு இறைநம்பிக்கை இருக்குமோ அவரையும் அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றுவான்) நூல் புகாரி முஸ்லிம்.

 

40- வினா;  (ஈமான்) விசுவாசம் என பொதுவாக கூறப்படும் போது முழு மார்க்கத்தையும் அது உள்ளடக்கியது என்பதற்கு  ஆதாரம் என்ன?

 

விடை/

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இத்தூதுக் குழுவினர் யார்?’ அல்லது “இக்கூட்டத்தார் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “ரபீஆ’ (குடும்பத்தினர்)” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இழிவுக்குள்ளாகாமலும் மன வருத்தத்திற் குள்ளாகாமலும் வருகை புரிந்த சமூகத்தாரே! வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். அத்தூதுக் குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்கு மிடையே “முளர்’ குலத்து இறைமறுப்பாளர் களில் இன்ன குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். (இதனால், போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்குத் தெளிவான சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்கள் எங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம்; அ(வற்றைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். நான்கு பொருட்களை(ப் பயன்படுத்த வேண்டாமென)த் தடை செய்தார் கள்: அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, “அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது (என விளக்கமளித்து விட்டு), தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது. அத்துடன், போரில் கிடைக்கும் பொருள்களிலி ருந்து ஐந்திலொரு பங்கை (அரசுப் பொது நிதிக்கு) நீங்கள் செலுத்திட வேண்டும்” என்று(ம்) கூறினார்கள்.நூல் புகாரி முஸ்லிம்

 

  • வினா: (ஈமான் எனும்) இறை நம்பிக்கையை விளக்கும் போது அதன் ஆறு தூன்களைக் கொண்டு அடைமொழி வழங்குவதற்கான ஆதாரம் யாது​?

விடை; ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் (இஸ்லாம்) மார்க்கத்தைப் பற்றி வினவிய நபிமொழியில் கூறப் பட்டுள்ளதாவது. “…அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?” என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர் களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும், விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்” என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் “உண்மை தான்” என்றார்.. நூல்; புகாரி முஸ்லிம்.

  • வினா: அதற்கான ஆதாரத்தை அல் குர்ஆனி லிருந்து சுருக்கமாகத் தருக?

விடை; அல்லாஹ் கூறுகின்றான்; மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிட மாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ் வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களை யும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்ப முள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும், வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும், கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமை யைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள் தாம் இறை அச்சமுடையவர்கள்!  அல் பகரா 177.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; நிச்சயமாக நாம்  ஒவ்வொரு பொருளையும் (நிர்னயிக்கப்பட்ட) அளவின் படியே படைத்துள்ளோம்.” அல் கமர்; 49.

அவைகள் அனைத்துக்குமான ஆதாரங் களை தனித் தனியே பின்னர் நாம் கூறுவோம்.​

  • வினா: அல்லாஹ்வை (ஈமான்) விசுவாசம் கொள்ளுதல் என்றால் என்ன?

விடை;  அல்லாஹ் ஒருவன் மாத்திரமே ​இருப்பதை அடி மனதினால் உறுதியாக உண்மைப் படுத்த வேண்டும், அவ​​னே ஆரம்பமானவன் அவனுக்கு முன் எதுவுமில்லை, அவனே இறுதியானவன் அவனுக்குப் பின் எதுவுமில்லை, அவனே வெளிரங்கமானவன், அவனுக்கு அப்பால் எதுவுமில்லை, அவனே அந்தரங்கமானவன் அவனையன்றி  எதுவுமில்லை, ​அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன், (அவன்) தனித்தவன், (யாவற்றை விட்டும்) தேவை யற்றவன், அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப் படவுமில்லை, அவனுக்கு நிகராக எவரு மில்லை, மேலும் (தௌஹீத் உலூஹிய்யா) அல்லாஹ்வை (வணக்கத்துக்குரிய) இறைவன் என்பதிலும் (தௌஹீத் ருபூபிய்யா எனப்படும் அகிலத்தைப் படைத்துப்) பராமரிப்பவன் என்பதிலும், (தௌஹீத் அல் அஸ்மா வஸ்ஸிபாத் எனப்படும்) அவனுக்குரிய திருநாமங்க ளிலும் பண்புகளிலும் அவனைத்​ தனிமைப்படுத்த வேண்டும்.

  • வினா: (தௌஹீத் உலூஹிய்யா எனப்படும் வணக்கத்துக்குரிய) இறைவன் என தனிமைப் படுத்துதல் என்றால் என்ன​?

விடை; சொற்கள் செயல்கள் ரீதியில் அல்லாஹ் விரும்பக் கூடிய, அந்தரங்கமான அல்லது வெளிப் படையான, அனைத்து வணக்கங்களையும் அவனுக்கு மாத்திரமே ​செழுத்துவதும் அவனைத் தவிர்ந்த எவருக் கும்/எவற்றுக்கும் அதனைச் செலுத்த மறுப்பதுமாகும்.​

அல்லாஹ் கூறுகின்றான்; “என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.” அல் இஸ்ரா 23.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!” அன்னிஸா 36.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக!” தாஹா 14.

“அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற சாட்சியத்தின் கருத்தும் இதுவேயாகும்.

  • வினா: (தௌஹீத்உலூஹிய்யா எனப்படும் வணக்கத்துக்குரிய) இறைவன் என தனிமைப் படுதலின் மறுபுறம் யாது?

விடை; அதன் மறுபுறம் இணைவைப்பதாகும், அது இரண்டு வகைப்படும் அவையாவன;

  • முற்றிலும் (தௌஹீத் உலூஹிய்யா வுடன்) முரண்படும் (சிர்க் அக்பர் எனப்படும்) பெரிய இணை​,
  • அதன் பூரணத்துவத்துடன் முரண்படும் (சிர்க் அஸ்கர் எனப்படும்) சிறிய இணை என்பனவாகும்.​

 

  • வினா: (சிர்க் அக்பர் எனப்படும்) பெரியஇணை என்றால் என்ன?

விடை; ஒருவர் அல்லாஹ்வுக்கு வேறொருவரை இணை வைத்து, அல்லாஹ்வை நேசிப்பது போல் அவரை நேசிப்பதும் அல்லாஹ்வைப் பயப்படுவது போல் அவருக்குப் பயப்படுவதும், அவரிடத்தில் அபயம் கோருவதும், பிரார்த்திப்பதும், ஆதரவு வைப்பதும், அவரிடத்திலுள்ளவற்றில் ஆசைவைப்ப தும், அவரின் மீது நம்பிக்கை வைப்பதும் மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் அவருக்கு வழிப்படுவது அல்லது அதற்கு மாற்றமாக நடந்து கொள் வது போன்றவைகளில் ஈடுபடுவதாகும். ​

அல்லாஹ் கூறுகின்றான், “தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இது அல்லாதவைகளை தான் நாடியோ ருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” அன்னிஸா 116.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “..அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.” அன்னிஸா 48.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “.அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்…” .அல்மாயிதா 72.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்” அல் ஹஜ் 31

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன வென்றால், அவர்கள் அவனை வணங்க வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும் இத்தகைய மக்களை அல்லாஹ் (மறுமையில்) வேதனைப் படுத்தாமல் இருப்பது தான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும்”. நூல் புகாரி முஸ்லிம்

இத்தகைய (சிர்க் அக்பர் எனப்படும்) பெரிய இணை வைப்பாளர்கள் குரைஷ் குளத்தைச் சேர்ந்த நிராகரிப் பாளர்களுக்கும், மேலும் அவர்களைப் போன்றோர் களுக்கும், உள்ளத்திலுள்ள நிராகரிப்பை மறைத்து இஸ்லாத்தை வெளியில் காட்டும் நயவஞ்ச கர்களுக்கும் நிகரானவர்கள். ​

அல்லாஹ் கூறுகின்றான்; “நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.

மன்னிப்புக் கேட்டுத் திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத் தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர. அவர்கள் விசுவாசம் கொண்டோரு டன் இருப்பார்கள். நம்பிக்கை கொண்டோ ருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.” அன்னிஸா 145,146.

  • வினா: (சிர்க் அஸ்கர் எனப்படும்) சிறிய இணை என்றால் என்ன?

விடை; அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய ஒரு வணக்கத்தில் சிறிதளவு முகஸ்துதி சேர்ந்து விடுவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்; “… தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக் காது  இருக்கட்டும்” என்று (முஹம்மதே) கூறுவீராக.” அல் கஹ்ப் 110.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்கள் மீது நான் மிகவும் பயப்படக்கூடிய விடயம் என்னவெனில் (சிர்க் அஸ்கர் எனப்படும்) சிறிய இணையாகும். உடனே (சிர்க் அஸ்கர்) என்றால் என்ன? என்று கேட்கப்பட்டதற்கு அது தான் முகஸ்துதி என்றார்கள். பின்னர் அதை விளக்கிக்கூறும் போது “ஒருவர் தனது தொழுகையை வேறொரு மனிதர் பார்த்துக் கொண்டி ருப்பதற்காக அழகு படுத்துவதைப் போன்று” என்றார்கள். நூல் இப்னு மாஜா. ​

மேலும், பெற்றோர், கஃபா,  இணை வைக்கப் பட்டவை, அமானிதம் போன்ற​​ அல்லாஹ் அல்லாத இன்னோரன்ன விடயங்களைக் கொண்டு சத்தியம் செய்வதும் இதில் அடங்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “உங்களுடைய தந்தைமார்களைக் கொண்டோ, அல்லது தாய்மார் களைக் கொண்டோ, அல்லது (அல்லாஹ்வுக்கு) இணை வைக்கப் பட்டவைகளைக் கொண்டோ, ​​சத்தியம் செய்யாதீர்கள்,” நூல் அபூதாவூத், நஸாஈ.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறாதீர்கள் மாறாக கஃபாவுடைய இறைவனின் மீது சத்தியமாக என்றே கூறுங்கள்.” நூல் முஸ்நத் அஹ்மத்

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “அல்லாஹ்வை கொண்டே அன்றி சத்தியம் செய்யாதீர்கள்” நூல் புகாரி.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “எவர் அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்கிறாரோ அவர் எம்மைச் சேர்ந்தவர் அல்லர்.” நூல் அபூதாவூத்.​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “எவர் அல்லாஹ் அல்லாதவைகளைக் கொண்டு சத்தியம் செய்கிறாரோ, நிச்சயமாக அவர் அல்லாஹ்வை மறுத்து (காபிராகி) விட்டார் அல்லது (அவனுக்கு) இணைவைத்து விட்டார்.” ​​நூல் அபூதாவூத்.​

மேலும் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வும்  நீங்களும் நாடியபடியே (நடக்கும்)” எனக்கூறிய ஒருவரிடம் அல்லாஹ்வோடு என்னை இணை வைத்து விட்டீரா? எனக் (கண்டித்துக்) கூறிவிட்டு “அவ்வாரல்ல. அல்லாஹ் நாடிய படியே மாத்திரம் (நடக்கும்) எனக் கூறுவீராக” என்றார்கள்.நூல் நஸாஈ.​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “அல்லாஹ்வும் இந்த மனிதரும் நாடியபடியே (நடக்கும்)” எனக்கூறாதீர்கள் அதற்கு மாற்றமாக “அல்லாஹ்வும் பின்னர் இந்த மனிதரும் நாடியபடியே (நடக்கும்)” எனக் கூறுங்கள்” .நூல் அபூதாவூத்

மார்க்க அறிஞர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வும், பின்னர் இந்த மனிதரும் இல்லாவிட்டால் (கைகூடியிருக்காது) எனக் கூறுவதில் தவறில்லை, ஆயினும் “அல்லாஹ்வும் இந்த மனிதரும் இல்லா விட்டால் (கைகூடியிருக்காது) என்று கூறுவதே தவறாகும்.

  • வினா: இங்கு (அரபு மொழிச்) சொற்களுக்கிடையிலுள்ள “و ,ثم” ஆகிய எழுத்துக் களுக்கு இடையிலான வேறுபாடுகள் யா​வை?

விடை; (அரபுமொழியில்)”و” எனும் எழுத்தினால் (ஒரு செயலில் ​​இருவரை) சேர்க்கும்போது, (அவ்விருவரும் குறித்த செயலில்) சரி சமமான பங்காளிகள் என்பதைக் குறிக்கும், எனவே “அல்லாஹ்வும் நீயும் நாடியபடியே (நடக்கும்)” எனக்கூறியவர் அல்லாஹ்வின் நாட்டத்தை அடியானின் நாட்டத்துடன் சரி சமமாக பங்கு பிரித்து விடுகிறார், ஆயினும்  “ثم” எனும் எழுத்தினால் (ஒரு செயலில் ​​இருவரை) சேர்ப்பது “ஒருவருக்குப்பின் மற்றவர்​” என்ற கருத்தையே குறிக்கும். இதன் அடிப் படையில்​ “அல்லாஹ்வும் பின்னர் நீயும் நாடியபடியே (நடக்கும்)” எனக் கூறியவர் அல்லாஹ் நாடிய பின் அடியான் நாடினான், என ஏற்றுக் கொள்கிறார்.

அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். “அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கி றான்.  அத்தஹ்ர் 30

  • வினா: (தௌஹீத் ருபூபிய்யா எனப்படும் அகிலத்தைப் படைத்துப்) பராமரிப்பவன் என தனிமைப் படுத்துதல் என்றால் என்ன​?

விடை;  உண்மையில் அல்லாஹ்வே அனைத்துப் படைப்பினங்களையும் பராமரிப்பவனும், அரசனு மாவான், அவைகளைப் படைத்தவனும், திட்டமிடு பவனும் செயல் படுத்துபவனும் அவனே, ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை. அவனது கட்டளையை மறுப்பவரோ, தீர்ப்பை ஒத்திவைப்பவரோ​ எவரு மில்லை, அவனுக்கு எதிராகவோ நிகராகவோ எதுவுமில்லை. மேலும் தவ்ஹீத் ருபூபிய்யாவின் கருத்துக்களி​லோ அல்லது அல்லாஹ்வின் பண்புகள், திருநாமங்களின் கருத்துக்களில் ஏதாவ தொன்றிலோ அவனுடன் பிரச்சினைப் படக்கூடிய வேறு ஒருவன் இல்லை ​என்றும் உறுதியாக ஏற்றுக்கொள்வதாகும்​.

அல்லாஹ் கூறுகின்றான்; “எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்தி னான்.” அல்அன்ஆம் 1ம் வசனம் முதல் அத்தியா யத்தின் இறுதி​ வரை பார்க்கவும்.​

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.” சூரா அல்பாத்திஹா 1.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக. “அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர் களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்.” என்று கூறுவீராக. “குருடனும், பார்வையுள்ளவனும் சமமா வார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா?” என்று கேட்பீராக. “அல்லாஹ் வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக ‘படைத்தது யார்?’ என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன், அவன் தனித்தவன், அடக்கியாள்பவன் என்று கூறுவீராக”. அர் ரஃத் 16.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்).” அர்ரூம் 40.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள். எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழி கேட்டில் உள்ளனர்.” லுக்மான் 11.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப் பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா?

அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில் லை. அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்.” அத்தூர் 35,36.10

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்கு வீராக. அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) சகித்துக் கொள்வீராக. அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?.” மர்யம் 65

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளை யும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும்இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்).” அஷ்ஷூரா 11.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத் தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக! “அல் இஸ்ரா 111.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக் காது; எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப் படுமானால் ‘உங்கள் இறைவன் என்ன கூறினான்?’ என்று கேட்பார்கள். “உண்மை யானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மிகப் பெரியவன்.” என்று கூறுவார்கள்.

அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர் களே அவர்களை அழையுங்கள். வானங் களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை – அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை. இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை).” ஸபா 22.

  • வினா: (தௌஹீத், ருபூபிய்யா எனப்படும் அகிலத்தைப் படைத்துப்) பராமரிப்பவன் என தனிமைப்படுத்து தலின் மறுபுறம் யாது​?

விடை; தவ்ஹீத் ருபூபிய்யாவின் கருத்துக்களான ஆக்கல், அழித்தல், உயிர்ப் பித்தல், மரணிக்கச் செய்தல், நன்மை பயக்குதல், தீமையைத் தடுத்தல், போன்ற இப்பிரபஞ்சத்தைத் திட்டமிட்டு செயலாற் றும் எந்த ஒரு விடயத்திலும் அல்லாஹ் வுடன் வேறு ஒருவன் இருக்கிறான் என நம்புவதோ, அல்லது பெருமை, மகத்துவம், மறைவான விஷயங்களை அறிதல் போன்ற அல்லாஹ்வின் பண்புகள் அல்லது திருநாமங்களின் கருத்துக்களில் ஏதாவ​தொன்றில் அவனுடன் பிரச்சினை படக் கூடிய வேறு ஒருவன்​ இருக்கிறான் என​ நம்புவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்; வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்பு வான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.”

“மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.” பாதிர் 2,3.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப் பவன், நிகரற்ற அன்புடையோன். “ யூனுஸ் 107.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்’ என்று கேட்பீராக. “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக்கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதுமானவன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்தி ருப்பார்கள்.” என்று கூறுவீராக.” அஸ்ஸுமர் 38.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மறைவானவற்றின் திறவு கோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.” அல் அன்ஆம் 59.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப் பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக.”  அன்னம்ல்  65.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “…அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர…”.அல் பகரா 255.

அல்லாஹ் கூறுகியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “கண்ணியம் என்னுடைய கீழாடையும், பெருமை என்னுடைய மேலாடையுமாகும், அவ்விரண்டிலொன்றில் யார் என்னுடன் பிரச்சினைப் படுகின்றாரோ அவரை நான் எனது நரகத்தில் குடிய மர்த்துவேன்.”​ நூல் முஸ்லிம் அபூதாவூத்​​

  • வினா: (தௌஹீத் அல் அஸ்மா வஸ்ஸிபாத் எனும்) திரு நாமங்களிலும் பண்புகளிலும் தனிமைப் படுத்துதல் என்றால் என்ன​?

விடை; அழகிய திருநாமங்களினாலும் பண்பு களினாலும் அல்லாஹ்வே அவனைப்பற்றி தனது திருமறையில் விளக்கியவாறும், மேலும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியவாறும் ஏற்றுக் கொள்வதுடன், அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களிலும் அவைக ளுக்கு வடிவங்க​ளை மறுத்து நிரூபித்திருப் பதைப் போல் உள்ளவாறு ஏற்றுக் கொள்வதுமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான். “அவர்களுக்கு முன்னே உள்ளதையும், அவர்களுக்குப் பின்னே உள்ளதையும் அவன் அறிகிறான். அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்.” தாஹா 110,

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அவனைப்போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன்.” அஷ்ஷூரா 11.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். ”பார்வைகள் அவனை அடையாது அவனோ பார்வைகளை அடைகி றான், அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்.” அல்அன்ஆம் 103..

“இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம், உங்கள் தெய்வத்தின் வழித் தோன்றலை அறியத் தரலாமா? எனக் கேட்டதும் பின்வரும் அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.” ​​நூல் திர்மிதி

  1. (முஹம்மதே) “அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக.
  2. அல்லாஹ் தேவைகளற்றவன்.
  3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
  4. அவனுக்கு நிகராக யாருமில்லை.” இஃக்லாஸ் 1,4 (ஆகவே அவனுக்கு நிகரோ, உவமையோ கிடையாது​ அவனைப் போல் எதுவும் இல்லை. ​​)
  • வினா: (அல்லாஹ்வின்) அழகிய திருநாமங்க ளுக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளி லிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை​? ​

விடை; அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.”அல் அஃராப் 180.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுவீராக.”  அல் இஸ்ரா 110.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.” தாஹா 8.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.” நூல் புகாரி முஸ்லிம்.​

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப் பாய்…”  அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி) நூல் அஹ்மத் இப்னு ஹிப்பான், ஹாக்கிம், – சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள்.ஹதீஸ் எண் – 199

  • வினா: (அல்லாஹ்வின்) அழகிய திருநாமங்க ளுக்கு அல்குர்ஆனிலிருந்து உதாரணங்கள் தருக​! ​

விடை; அல்லாஹ் கூறுகின்றான். “…அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்).” அன்னிஸா 34

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அல்லாஹ் நுணுக்கமானவ னாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.” அல்அஹ்ஸாப் 34.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அவன் அறிந்தவனாகவும், ஆற்றலுடைய வனாகவும் இருக்கி றான்.”  ஃபாத்திர் 44.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கி றான்.” அன்னிஸா 58.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞான மிக்கவனாகவும் இருக்கிறான்.” அன்னிஸா 56.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.” அன்னிஸா 23,106.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “..அவன் அவர்க ளிடம் நிகரற்ற அன்புடையோன், இரக்கமுடை யோன்.” அத்தவ்பா 117.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அல்லாஹ் தேவை யற்றவன், சகிப்புத் தன்மை மிக்கவன்) அல் பகரா 263

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். ”…அவன் புகழுக்குரியவன், மகத்துவம் மிக்கவன்.” ஹூது 73.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்…” ஹூது 57.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…என் இறைவன் அருகில் உள்ளவன், பதிலளிப்பவன்.” ஹூது 61.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “…அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.” அன்னிஸா 1.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறுயாருமில்லை. மறைவானதையும், வெளிப் படையான தையும் அறிபவன்.  அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) பேரரசன், தூயவன். நிம்மதியளிப்பவன், அடைக்கலம் தருபவன், கண்காணிப்பவன், மிகைத்தவன், ஆதிக்கம் செலுத்துபவன், பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்” .அல்ஹஷ்ர் 22,24

  • வினா: (அல்லாஹ்வின்) அழகிய திருநாமங்க ளுக்கு நபிமொழியிலிருந்து உதாரணங்கள் தருக​? ​

விடை; (துன்பங்கள் நேரும் போது) நபி ஸல் அவர்கள் கூறினார்கள்; “கண்ணியமும் பொறுமையும் மிக்க அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை, மகத்துவம் மிக்க அரியாசனத்தின் அதிபதி யாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை  வானங்கள் பூமியின் அதிபதியும் சங்கை மிக்க அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை.” நூல் புகாரி முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “என்றென்றும் உயிருடன் இருப்பவனே, கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனே, வானங்களையும் பூமியையும் முன்னு தாரணம் இன்றிப் படைத்தவனே.”​ நூல் அபூதாவூத், நஸாஈ, இப்னு மாஜா.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (தொடங்குகிறேன்) அவன் எத்தகைய வனெனில் அவனுடைய பெயருடன் ​இந்த பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் தீங்கு இழைத்து விட முடியாது, அவன் எல்லாவற்றையும் கேட்பவன், அறிபவன்.” ​​நூல் அபூதாவூத், நஸாஈ, திர்மிதி.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யா அல்லாஹ்! மறைவான வற்றையும் வெளிப்படையான வற்றையும் அறிபவனே! வானங்களையும் பூமியையும் படைத்த வனே! ஒவ்வொரு பொருளின் இரட்சகனே, உடைமையாளனே! வணக்கத்துக்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன்.” ​​(நூல் அபூதாவூத், திர்மிதி) ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யா அல்லாஹ்!. வானங்கள் மற்றும் பூமியின் இறைவனே! மகத்துவம் மிக்க அரியாசனத்தின் அதிபதியே! எங்களுடைய மற்றும் அனைத்துப் பொருள்களுடைய அதிபதியே! வித்துக்களையும் பேரீச்சங் கொட்டை களையும் விளைவிக்கின்றவனே! தவ்றாத் இன்ஜீல் குர்ஆன் ஆகிய வேதங் களை இறக்கியருளியவனே! அனைத்துப் பொருட்களின் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் முன் உச்சி ரோமம் உன் பிடியிலேயே இருக்கிறது. நீயே முதலாமவன் உனக்கு முன் எதுவுமில்லை, நீ தான் இறுதியானவன் ​உனக்குப் பின் எதுவுமில்லை. நீயே வெளிப்படையானவன் உனக்கு அப்பால் எதுவு மில்லை, நீயே அந்தரங்கமானவன் நீயன்றி எதுவு மில்லை.” நூல் முஸ்லிம், அபூதாவூத், இப்னு மாஜா. ​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யா அல்லாஹ்! உனக்கே புகழ் அனைத்தும், வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே!” நூல் புகாரி முஸ்லிம்.​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யா அல்லாஹ்! நான் உன்னிடம் யாசிக்கிறேன், இதன் அடிப்படையில். அதாவது நீயே ஏக இறைவன் ‘வணக்கத்துக் குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை’ என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். நீ தனித்தவன்​ எவர் பக்கத்திலிருந்தும் தனக்குத் தேவை யில்லாதவன், எவரையும் பெறாதவன், யாராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவருமில்லை.” நூல் அபூதாவூத், நஸாஈ,இப்னு மாஜா.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “இதயங்களைப் புரட்டுபவனே! (யா அல்லாஹ்!)” நூல் திர்மிதி.

  • வினா: (அல்லாஹ்வின்) அழகிய திருநாமங்களின் கருத்துகள் எத்தனை வகைப்படும்? ​

விடை; மூன்று வகைப்படும்அவையாவன.

  • அல்லாஹ்வின் (தாத் எனும்) சுயத்துடன் ஒத்துப் போகும் கருத்துக்களைக்​ குறிப்பவை.
  • திருநாமங்களின் கருத்திலிருந்து பிரித் தெடுக்கப்பட்ட அவனுடைய பண்பு களை​​ குறிக்கக் கூடியவைகள்.
  • திருநாமங்களிலிருந்து பிரித்தெடுக்கப் படாத சில பண்புகளை அவசியத்தின் அடிப்படையில் குறிக்கக் கூடியவைகள்.
  • வினா: அதற்கு உதாரணம் என்ன? ​

விடை; (الرحمن) “இரக்கமுள்ளவன்” என்ற அல்லாஹ்வின் திருநாமத்தைப் போன்றாகும், இத்திருநாமம் அல்லாஹ்வின் (தாத் எனும்) சுயத்துடன் ஒத்துப் போகும் கருத்தைக் குறிக்கின்றது, அத்துடன் அத்திருநாமத்தி (ன்கருத்தி)லிருந்து பிரித்தெ டுக்கப் பட்ட (الرحمة)  ‘இரக்கம்’ என்ற பண்பையும் அது குறிக்கிறது, மேலும் அதே திருநாமத்திலிருந்து பிரித்தெடுக்கப் படாத(الحياة القدرة)  ‘வாழ்வு’, ‘சக்தி’ போன்ற சில பண்புகளையும் அத்தகைய (இரக்கமுள்ள ஒரு)வனுக்கு அவசியம் (இருக்க வேண்டும்) என்ற அடிப்படையில் குறிக்கின்றது. ​அல்லாஹ்வின் ஏனைய திருநாமங்களும் இவ்வாறே தான். ஆனால் இத்தகைய நிலமை படைப்பினங்களுக்கு முற்றிலும் வேறுபட்ட தாகும். ஏனெனில் ‘அறி​ஞன்’ எனப் பெயர் சூட்டப் பட்டவர்  சில சமயம் அறிவீனராகவும், ‘நீதிபதி’ எனப் பெயர் சூட்டப்பட்டவர் அநீதி  இழைப்பவனாகவும் இருக்கலாம். ​

  • வினா: “உற்கருத்துக்கள்” அடிப்படையில் (அல்லாஹ்வின்) அழகிய திருநாமங்கள் எத்தனை வகைப்படும்? ​

விடை; நான்கு வகைப்படும்;

  1. “அல்லாஹ்” எனும் திருநாமம், இது அழகிய திருநாமங்கள் அனைத்தினதும் கருத்துக்களை உள்ளடக்கும், ஆகவே மற்றைய எல்லா திருநாமங்களும் சில சமயம் இத்திருநாமத்தின் பண்புகளாக கூறப்படுவதுண்டு.

அல்லாஹ் கூறுகின்றான். “(அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவம் அமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞான மிக்கவன்.” அல்ஹஷ்ர் 24

அல்லாஹ்வின் (தாத் எனும்) சுயத்தின் பண்புகளை குறிக்கக் கூடிய திருநாமங்களின் உதாரணம்; அந்தரங்கமான மற்றும் வெளிரங்கமான அனைத்து ஓசைகளையும் செவிமடுக்கும் அல்லாஹ்வின் (سمع) “கேள்வி” எனும் பண்பைக் குறிக்கும்(السميع) “கேட்பவன்” எனும் திருநாமம். அவ்வாரே நுட்பமான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் நோட்டமி டும் அல்லாஹ்வின்   (بصر) ”பார்வை” எனும் பண்பைக் குறிக்கும்(البصير)  “பார்ப்பவன்” எனும் திருநாமம், மேலும் வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டும் மறையாது. சகலவற்றையும் சூழ்ந்து அறியும் அல்லாஹ்வின்  (علم)”அறிவு”எனும் பண்பைக் குறிக்கும் (العليم)  “அறிந்தவன்” எனும் திருநாமம்.  அவ்வாரே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல அல்லாஹ்வின் (قدرة)  “சக்தி” எனும் பண்பைக் குறிக்கும்(القدير)  “சக்தியுள்ளவன்” எனும் திருநாமம்.

  1. அல்லாஹ்வின் செயல்களின் பண்பை குறிக்கக்கூடிய திருநாமங்கள்.

அல்லாஹ் கூறுகின்றான். “அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன்,  வடிவமமைப்பவன்.” அல் ஹ்ஷ்ர் 24.

  1. அனைத்துக் குறைகளிலிருந்தும் அல்லாஹ்வை தூய்மைப்படுத்தக் கூடிய திருநாமங்கள். உதாரணமாக “தூயவன்”, “ஈடேற்றமானவன்​” போன்றனவாகும்.

 

  • வினா: அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் கூறப்படுவதை எவ்வாறு வகைப்படுத்தலாம்? ​

விடை; பின்வருமாறு வகைப்படுத்தலாம்;

  1. தனியாகவோ அல்லது வேறு (ஒரு திருநாமம்) ஒன்றுடனோ சேர்த்துக் கூறப்படுபவை, உதாரணத்துக்கு “ஜீவனுள் ளவன்” “நிலைத்திருப்பவன்” இவை பூரணப் பண்புகளை உள்ளடக்கிய திருநாமங்க ளாகும்.
  2. தனியாகக் கூறப்படும் போது அல்லாஹ்வுக்கு குறை ஏற்படாமலிருக்க எதிர்க் கருத்துடன் சேர்த்துக் கூறப்டும் திருநாமங்கள். உதாரணத்துக்கு(الضار النافع) “தீங்கு இழைப்பவன், பயன் அளிப்பவன் ”  (الخافض الرافع)”தாழ்த்துபவன் உயர்த்துபவன்” (المعطي المانع) “கொடுப்பவன் தடுப்பவன்”  (المعز المذل) “கண்ணியப்படுத்துபவன் இழிவாக்குபவன்” போன்ற திருநாமங்க ளாகும். அல்குர்ஆனிலோ அல்லது நபி மொழியிலோ இத்திருநாமங்கள் தனியாக கூறப் படவில்லை. அவ்வாரே “தண்டிப் பவன்” எனும் திரு நாமத்தை குறித்த நபருடன் தொடர்பு படுத்தியோ அல்லது அத்திருநாமத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட பண்புடன் (ذو) “உடைய” என்ற சொல்லை சேர்த்தோ​ கூறப்பட்டுள்ளது.​

அல்லாஹ் கூறுகின்றான். “நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம்.” ஸஜதா 22.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன் (தீயவர்களை) தண்டித்த லுடையவன்..” ஆலு இமரான் 4. அல் மாஇதா 4.

  • வினா; அல்லாஹ்வின் பண்புகள் (ذاتية) சுயம் சார்ந்தவை,(فعلية ) செயல் சார்ந்தவை என முன்னர் இரு ​வகைப் படுத்தப்பட்டன, அவ்வாராயின்(ذاتية) சுயம் சார்ந்த பண்புகளுக்கான ஆதாரங் களை அல்குர்ஆனிலிருந்து தருக?​​    ​

விடை; அல்லாஹ் கூறுகின்றான். “அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன.” அல் மாயிதா 64.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியது.” அல் கஸஸ் 88.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “மகத்துவ மும், கண்ணியமும் மிக்க உமது இறைவ னின் முகமே மிஞ்சும்.”அர்ரஹ்மான் 27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப் படுவதற் காக..” தாஹா 39

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன்.” அல் கஹ்ஃப் 26.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன். தாஹா 46.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவர்களுக்கு முன்னே உள்ளதையும், அவர்களுக்குப் பின்னே உள்ள தையும் அவன் அறிகிறான். அவனை அவர்கள் முழு மையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்.” தாஹா 110.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.” அன்னிஸா 164

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்வீராக! அவர்கள் அஞ்சவேண்டாமா?” என்று உமது இறைவன் மூஸாவை அழைத்தபோது…” அஷ் ஷுஅரா 10.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து “இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா?ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” எனக் கேட்டான்.” அல் அஃராப் 22.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவன் அவர்களை அழைக்கும் நாளில் “தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்? என்றுகேட்பான்.” அல்கஸஸ் 65.

 

  • வினா; (ذاتية) சுயம் சார்ந்த பண்புகளுக்கான ஆதாரங்களை நபிமொழியிலிருந்து தருக?​​

விடை; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒளியே (அவைனப் பார்க்க விடாமல் தடுக்கும்) அவனது திரையாகும் – அத்திரை யை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.” நூல் முஸ்லிம், இப்னு மாஜா.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பி யுள்ளது, வாரி வழங்குவதால் அது வற்றி விடுவதில்லை, அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப் பொழிந்து கொண்டே யிருக்கின்றது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போது வரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல்லுங்கள். அதுவும் கூட அவனுடைய வலக் கரத்தில் இருப்பதைக் குறைத்துவிடவில்லை. (வானங் கள் மற்றும் பூமியைப் படைத்த போது) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனுடைய மற்றொரு கரத்தில் கொடைப் பொழிவு, அல்லது கொடைக் குறைவு உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகிறான் (சிலரைத்) தாழ்த்து கிறான்). நூல் புகாரி, முஸ்லிம், திர்மிதி.

மேலும் (தஜ்ஜால்) பொய்யன் சம்பந்தப்பட்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நிச்சியமாக அல்லாஹ்வை நீங்கள் அறியாமலிருக்க மாட்டீர்கள், நிச்சியமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்).  நூல் புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் கூறியதாவது. “யா அல்லாஹ்! நான் உன்னிடம்  உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கிறேன். மேலும் உனது மகத்தான அருளை யாசிக்கிறேன். ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன். என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதுவும் அறியேன். மேலும் நீ மறைவானவை அனைத்தும் அறிந்தவன்!”​​​​ ​நூல் புகாரி, அபூதாவூத், திர்மிதி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் காது கேட்காதவனையோ,  இங்கில்லாத வனையோ அழைக் கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன் அருகிலிருப்பவன்.” நூல் புகாரி, முஸ்லிம்.

  • வினா; (صفات الأفعال) செயல்கள் சார்ந்த பண்புகளுக்கு அல்குர்ஆனி லிருந்து உதாரணங்கள் தருக?​​ ​

விடை; அல்லாஹ் கூறுகின்றான். “பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான்.” அல் பகரா 29.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “மேகக் கூட்டங்களில் அல்லாஹ்வும், வானவர் களும் வந்து காரியம் முடிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் எதிர் பார்க்கிறார்களா? அல் பகரா 210.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப் படுத்த வில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்.” அஸ்ஸுமர் 67.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ சிரம் பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது?” ஸாத் 75.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம்.” அல் அஃராப் 145

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான்.” அல் அஃராப் 143.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ் நாடியதைச் செய்வான்.” அல் ஹஜ் 18.

  • வினா; (صفات الأفعال)செயல்கள் சார்ந்த பண்புகளுக்கு நபி மொழியிலிருந்து உதாரணங்கள் தருக?​​ ​

விடை; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஒவ்வொரு இரவிலும் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது நம்முடைய இறைவன் கீழ்வானத்திற்கு இறங்குவான். நூல் புகாரி, முஸ்லிம் அபூதாவூத்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “…அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் வந்து, ‘நானே​​ உங்களுடைய இறைவன் எனச் சொல்வான். அப்போது அவர்கள், ‘நீதான் எங்கள் இறைவன்’ எனக் கூறியபடி அவைனப் பின்தொடர்வார்கள்)” நூல் புகாரி, முஸ்லிம்.

இங்கு “வருதல்” என்பது யதார்த்தமானதே அன்றி கற்ப​னை அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியை (கையினால்) பிடித்துக்கொள்வான், ​வானங்கள் அவனது வலக் கரத்திலிருக்கும். பின்னர் நான் தான் அரசன் என்று கூறுவான்.” நூல் புகாரி, முஸ்லிம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் படைப்புகளைப் படைத்த போது தன்னுடைய பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேல் உள்ளது – “என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான்.” நூல் புகாரி, முஸ்லிம்.

மேலும் ஆதம்(அலை) அவர்களும் மூஸா (அலை​) அவர்களும் தர்க்கம் செய்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “.. அதற்கு ஆதம் (அலை) அவர்கள் மூஸவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்தெடுத் தான், அவன் தன் கரத்தால் உமக்காக தவ்ராத் (எனும்வேதத்) தை எழுதினான்.” நூல் புகாரி, முஸ்லிம்.

இங்கு கூறப்பட்ட அல்லாஹ்வின் பேச்சும், கரமும் சுயம் சார்ந்த பண்புகளாகும். அத்துடன் அவனது பேச்சு, சுயம் செயல் அகிய இரண்டும் சேர்ந்த பண்பாகும்.​ தவ்ராத் (எனும் வேதத்)தை எழுதியது செயல் சார்ந்த பண்பாகும்.​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவ மன்னிப்புக் கோருவ தற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான். இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற் காக பகலில் கையை நீட்டுகிறான்.” நூல் முஸ்லிம், அஹ்மத்.

  • வினா; அனைத்து பண்புக்குரிய சொற்களிலிருந்தும் திருநாமங்களைப் பிரித்தெடுக்க முடியமா? அன்றி அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு மாத்திரம் தானா அமையும்?​​

விடை; அல்லாஹ்வின் அனைத்துத் திருநாமங்களும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு  மாத்திரம் தான் அமையும், எனவே அல்லாஹ் தனது திருமறை யிலும், நபி (ஸல்) அவர்களும் சூட்டிய திருநாமங் களைத் தவிர அல்லாஹ்வுக்கு வேறு பெயர்கள் சூட்டலாகாது,

அல்லாஹ் அவனைப்பற்றி விளக்கிய பண்புகள் அனைத்தும் உயர்ந்தவை, பூரணமானவை, புகழுக்குரியவை, எனினும் அவ்வனைத்துப் பண்புகளைக் கொண்டும் அல்லாஹ் தன்னை எவ்வித வரையரையு மின்றி விளக்கவுமில்லை, அவையனைத்தி லிருந்தும் திருநாமங்கள் பிரித்தெடுக்கப் படவும் மாட்டாது. எனவே அவைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  • (எந்த வரையரையுமின்றி) பொதுவாக அல்லாஹ் அவனைப் பற்றி விளக்கிய பண்புகள். உதாரணமாக; ​​ ​

அல்லாஹ் கூறுகின்றான். “அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான்.’ அர்ரூம்  40.

இங்கு படைப்பவன், உணவளிப்பவன், மரணிக்கச் செய்பவன், உயிர்ப்பிப்பவன், திட்டமிடுபவன் என பொதுவான பெயர்களை அல்லாஹ் அவனுக்குச் சூட்டியுள்ளான்.

  • “எதிர் கொள்ளல், கூலி கொடுத்தல்” போன்ற வரையரைகளுடன் அல்லாஹ் அவனைப் பற்றி விளக்கிய பூரணத்துவத்துக்கும் புகழுக்குமுரிய பண்புகள். உதாரணமாக; ​

அல்லாஹ் கூறுகின்றான். “அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.” அல் அன்ஃபால்

‘யாராவது சூழ்ச்சி செய்தால் பதிலுக்கு சூழ்ச்சி செய்தல்’ என்ற நிலையில் வரும் போது அது பூரணத்துவத்தை அடைகிறது. ஏனெனில் சூழ்ச்சி செய்தவனை எதிர் கொள்ள முடியாத அளவு  அல்லாஹ் பலவீனன் அல்ல என்ற கருத்திலேயே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்.” அன்னிஸா 142.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவர்கள் அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான்.” அத்தவ்பா 67

எனினும் அல்குர்ஆன் வசனங்கள் தவிர்ந்த  ஏனைய இடங்களில் அல்லாஹ்வுக்கு சூழ்ச்சி செய்தல், ஏமாற்றுதல், கேலி செய்தல் போன்ற பண்புகளை கூறுவதோ, அன்றேல் சூழ்ச்சிக்காரன், ஏமாற்றுபவன், கேலி செய்பவன் என்று பெயர் சூட்டுவதோ கூடாது. அவ்வாறு ஒரு முஸ்லிமோ அல்லது புத்தியுள்ள மனிதனோ கூறவும் மாட்டான். ஏனெனில் தன் பக்கம் எந்த நியாயமும் இல்லாமல் மேற் கூறியபடி நடந்து கொள்பவனுக்கு (தகுந்த) ​கூலியை வழங்கவே அல்லாஹ் அவ்வாறு நடந்து கொள்வதாக விளக்கு கிறான். படைப்பினங்களுக்கு மத்தியில் இவ்வாறு நீதியாக கூலி வழங்குவது நன்மையான விடயமெனின், படைத்தவனும், ஞானமு டையவனும் அறிஞனும் நீதிவானுமாகிய அல்லாஹ்விடமிருந்து அ(வ்வாறு கூலி கொடுப்ப)து எப்படியிருக்கும்!.​​

  • வினா; ( (العلي الأعلى”மிக உயர்த்தியானவன்” எனும் திருநாமும் அதே கருத்தை ஒத்த (( الظاهر வெளிப் படையானவன், ((القاهر அடக்கி யாள்பவன், ((المتعالي உயர்ந்தவன் எனும் திருநாமங்களும் குறிக்கும் கருத்துக்கள் யாவை?​​

விடை; ( (العلي الأعلى”மிக உயர்த்தியானவன்” எனும் திருநாமத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட (العلو) “உயர்வு” எனும் பண்பு குறிக்கும் கருத்துக்களாவன, அல்லாஹ் அவனுடைய அரியாசனத்தின் மேல் உயர்ந்திருத்தல், அவனது அனைத்துப் படைப்பினங் களுக்கும் மேல் உயர்ந்திருத்தல், அவன் அவர்களை விட்டும் பிரிந்திருத்தல், அவர்களை அவன் அவதானித்துக் கொண்டிருத்தல், அவர்களின் சகலதையும் சூழ்ந்து அறிந்து கொண்டிருத்தல், அவனது படைப்புகளைக் கட்டுப்படுத்தி ​அவனை வணங்கும்படி வேண்டி அவர்களை உயர்த்தியிருத்தல், அவனுடன் சச்சரவு செய்பவனோ, அல்லது அவனை மிகைப் பவனோ, எதிர்ப்பவனோ, தடுப்பவனோ எவருமில்லை, சகலதும் அவனது மகத்துவத்துக்கு கட்டுப்பட்டவை, அவனது கண்ணியத்துக்கு முன் இழிவானவை, அவனது பெருமைக்கு தலை சாய்ப்பவை, அவன் இஷ்டத்துக்கும் கட்டுப் பாட்டுக்கும் கீழ் உள்ளவை, அவன் பிடியிலிருந்து அவைகளுக்கு தப்பிக்க முடியாது, அவனது அந்தஸ்து உயர்வானது, அனைத்துப் பூரணமான பண்புகளும் அவனுக்குரியவை​​, குறைபாடுள்ள அனைத்துப் பண்புகளி லிருந்தும் அவன் பரிசுத்தமானவன்.

மேற் கூறப்பட்ட அனைத்துக் கருத்துக்களும்(العلو) “உயர்வு” எனும் பண்புக்குரியனவாகும்.​

  • வினா; علوالفوقية) ) “மேல் உயர்ந்தி ருத்தல்” எனும் பண்புக்கு அல் குர்ஆனிலிருந்து ஆதாரங்கள் தருக?

விடை; அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன, இங்கு (கூறப்பட்டு)ள்ள  திருநாமங்களும் இவைகளை ஒத்த கருத்துடைய திருநாமங்களும் இதற்கு ஆதாரமாகும்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அளவற்ற அருளாலன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” தாஹா 5.

அல்குர்ஆனின் ஏழு இடங்களில் இவ்வாறு பிரஸ்தா பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா?” முல்க் 16

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின் றனர்.” அந்நஹ்ல் 50.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும்.” ஃபாத்திர் 10.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “வானவர்களும், ஜிப்ரீலும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்”.அல்மஆரிஜ் 4.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில்அவனிடம் மேலேறிச் செல்லும்.” அஸ்ஸஜ்தா 4.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “ஈஸாவே! நான் உம்மைக்  கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப் படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்று வோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக்கிறேன்.” ஆலு இம்ரான் 55

  1. வினா; அதற்கு நபிமொழியிலிருந்து ஆதாரங்கள் தருக?

விடை; அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன, அவைகளில் சில வருமாறு;

நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கு இருக்கிறான்? எனக் கேட்டதும் “அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்” எனப் பதில் கூறினாள். உடனே நபியவர்கள் அப்பெண்ணை விடுதலை செய்யுங்கள் அவள் ஒரு (முஃமின்) விசுவாசி எனக் கூறினார்கள். ​நூல் முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ, அஹ்மத்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட​ (معراج) எனப்படும் விண்ணுலக யாத்திரையுடன் தொடர்பான அனைத்து நபிமொழிகளும்​ இதற்குத் தகுந்த சான்றாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களிடையே இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) வருகின்றனர், அவர்கள் “ஃபஜ்ர்” தொழுகையிலும் “அஸர்” தொழுகையிலும் ஒன்று சேர்கின்றனர், பின்னர் உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றனர் ​அப்போ​து இறைவன் அ(வ்வான)வர்களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?”  என்று (மக்களைப் பற்றி நன்கறிந்த நிலையிலேயே) கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டி ருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.” நூல் புகாரி, முஸ்லிம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யாராவது முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமான வற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலதுகரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதி​ரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்​மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.” நூல் புகாரி, முஸ்லிம்

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் வானத்தில் ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ் வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப்போல் (வானவர்கள் கேட்பார்கள்).” ​நூல் புகாரி, அபூதாவூத், திர்மிதி.

“ஜஹ்மிய்யா” எனும் பிரிவினரைத் தவிர ஏனைய அனைவரும் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.

  1. வினா; ஸாலிஹான முன்னோர்களில் மார்க்கத் தலைவர்கள் (استواء) எனும் “உயர்தல்” தொடர்பாக என்ன கூறினார்கள்?

விடை; அவர்கள் அனைவரும் கூறியதாவது; (استواء) எனும் “உயர்தல்” அறியப்பட்டது, அதன் அமைப்பு புத்திக்கு அப்பாற்பட்டது, அதை விசுவாசம் கொள்வது கட்டாயமாகும், அதைப் பற்றி வினாத்தொடுப்பது புதிதாக உண்டாக்கப் பட்டது, மேலும் தூதுச் செய்தி  அல்லாஹ் விடமிருந்து வந்ததாகும், அதை எத்தி வைப்பது தூதரின் கடமை, அதை ஏற்றுக் கொள்வது எங்களின் கடமை. எனவே ​அல்லாஹ்வின்  திருநாமங்களும் பண்புக ளும் கூறப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்கள் நபிமொழிகள் தொடர்பாகவும் அவர்களின் நிலைப்பாடு இவ்வாறு தான் காணப்பட்டது. ​

இதை நம்பினோம், அனைத்தும் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவையே.” எனக் கூறுவார்கள்.” ஆல இம்ரான் 7.

“அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள். என்றனர்.” ஆல இம்ரான் 52.

  1. வினா; (علو القهر) “(படைப்புக்களை) அடக்கி ஆளும் உயர்வு” என்பதற்கு அல்குர்ஆனிலிருந்து ஆதாரம் தருக?

விடை; அல்லாஹ் கூறுகின்றான். “அவனே தன் அடியார்களுக்கு​ மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆள்பவன்.” அல் அன்ஆம் 18.

இந்த வசனம் “மேலே உயர்ந்திருத்தல்” “அடக்கி ஆளும் உயர்வு” ஆகிய இரு கருத்துக்களையும் சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “(அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.” அஸ்ஸுமர் 4.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “இன்று ஆட்சி யாருக்கு? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ் வுக்கே.” அல் முஃமின் 16

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக.” ஸாத் 65.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “எந்த உயிரின மானாலும் அதன் முன் நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான்.” ஹூது 56.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “மனித, ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள். (அல்லாஹ்வின்) ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.” அர்ரஹ்மான் 33.

69.வினா; அதற்கு நபி மொழியிலி ருந்துஆதாரங்கள் தருக?

விடை; அதற்கு நபிமொழியில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன அவைகளில் சில வருமாறு;

​நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “அனைத்துப் பிராணிகளின் தீங்கிலிருந்தும் உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன், அதன் முன்நெற்றியை நீயே பிடித்துக் கொண்டிருக்கின்றாய்.” நூல்; முஸ்லிம், அபூதாவூத்,

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “யா அல்லாஹ் நான் உன் அடிமை, உன் அடிமைகளான ஒர் ஆண் ஒரு பெண்ணின் மகனாவேன், என்னில் உன் கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உனது தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன்….”  விடை 52 பார்க்கவும். ​​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “…ஏனெனில் நீயே தீர்ப்பளிக்கிறாய். உனக்கு மாற்றமாக தீர்ப்பளிக்கப் படுவதில்லை, நீ யாருக்கு ​நேசனாகி விட்டாயோ அவர் ஒரு போதும் இழிவடைவதில்லை, மேலும் நீ யாரைப் பகைத்தாயோ அவர் ஒரு போதும் கண்ணியம் பெறுவதில்லை.” ​நூல்; அபூதாவூத், நஸாஈ, திர்மிதி.

  1. (علو الشأن) “அந்தஸ்து உயர்ந்திருத்தல்” என்பதற்கான ஆதாரங்கள் எவை?  மேலும் கட்டாயமாக அல்லாஹ்வுக்கு மறுக்கப்பட வேண்டியவை யாவை?

விடை; பூரணத்துவ மிக்க அனைத்துப் பண்புகளையும் கொண்ட, நிம்மதிய ளிப்பவனும், பெரியவனும், உயர்ந்தவ னுமாகிய அல்லாஹ்வின் திருநாமமும், அதை ஒத்த கருத்துக்களும் குறிப்பவை களையே (علو الشأن) “அந்தஸ்து உயர்ந்திருத்தல் ” என்கிறோம். எனவே அல்லாஹ் தனது ஆட்சியில் தனித்து உயர்த்தியானவன், அதில் அவனுடன் வேறு பங்காளிகளோ, ​உதவியாளர்களோ, அல்லது அவனுடைய அனுமதியின்றி சிபார்சு செய்யக் கூடிய வர்களோ கிடையாது. மேலும் அவன் தனது மகத்துவத்திலும், பெருமையிலும், அடக்கி யாளும் திறனிலும், ஆட்சி அதிகாரத்திலும் உயர்த்தியானவன், அவனுடன் பிரச்சி னைப் படுபவரோ, அவனை வெற்றி கொள்பவரோ,​​ இழிவிலிருந்து (காக்க) உதவி செய்பவரோ, அன்றி வேறு உதவியாளர்களோ அவனுக்குக் கிடையாது.​​​ மேலும் இணை, துணை, தந்தை பிள்ளை மனைவி போன்ற தேவைகளை விட்டும் அவன் உயர்த்தியானவன். பூரணமான சீவியம் நிலைத்து நிற்றல் போன்ற பண்புகளிலும், இயலாமை, களைப்பு, தூக்கம், சிறு தூக்கம், மரணம் போன்றவைஅவனுக்கு ஏற்படாதிருக்கவும் சக்தி பெற்றவன். மேலும் மறதி யற்ற பூரணமான அறிவிலும், வானத்திலோ பூமியிலோ அணுவளவேனும் அவன் அறியாமல் இருப்பதை விட்டும் உயர்த்தியானவன். மேலும் ஒருவருக்கு அணுவளவும் அநீதி இழைக்காமலும் அவனுடைய நண்மைகளில் எந்தக் குறைவும் ஏற்படுத்தாத உயர்த்தியான நீதியாளன்.​​ அவனுக்குப் பிறர் உணவு அளிப்பதிலோ அல்லது எந்த ஒரு விடயத்திலும் வேறு ஒருவரிடம் அவன் தேவை காண்பதை விட்டும் உயர்த்தி யானவன், மேலும் அல்லாஹ் தன்னைப் பற்றி விளக்கியதும், நபி (ஸல்) அவர்களும் அவனைப் பற்றி விளக்கிய அனைத்துப் பண்புகளுக்கும் உதாரணம் கூறுதலோ மறுத்தலோ இன்றி உயர்த்தியானவன். அவனைப் புகழ்ந்து தூய்மைப் படுத்து கிறேன். அவன் உயர்தியானவன் கண்ணிய மானவன். உயர்வான அவனுடைய பண்பு களுடனோ, அல்லது அவனுடைய அழகிய திருநாமங் களுடனோ, அல்லது  அவனே படைத்துப் பராமரிப்பவனும், (வணக்கத் துக்குரிய) இறைவனுமாகும் என்பவற்று டனோ முரண்படும் அனைத்தை விட்டும் அவன் தூய்மையும் பரிசுத்தமும் ஆகிவிட்டான்.

“வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத் தவன், ஞானமு டையவன்.” அர்ரூம் 27

குர்ஆன் ஹதீஸ்களில் இதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன.

70.வினா; அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் பற்றிய நபிமொழியில் வந்துள்ள “அவற்றை யார் சரிவர அறிந்து கொள்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார்” என்ற நபியவர்களது கூற்றின் கருத்து யாது?

விடை; அதற்குப் பின்வருமாறு விளக்கங்கள் உள்ளன

  • திருநாமங்கள் அனைத்தையும் மனனம் செய்வ தும், அவைகளைக் கொண்டு அல்லாஹ் விடத்தில் பிரார்த்தனை புரிவதும், மேலும் அவைகளினால் அவனைப் புகழ்வதுமாகும்.
  • அடக்கி ஆள்பவன், மகத்துவமானவன், பெருமைக்குரியவன், போன்ற அல்லாஹ் வுக்கே உரிய (திருநாமங் களின்) பண்புகளை அடியான் ஏற்றுக் கொண்டு அவைகளுக்கு அடிபணிதலும், அதன் பிரகாரம் செயல் படாமலிருத் தலும், இரக்க முள்ளவன் சங்கையா னவன் போன்ற பண்பு களைப் பின்பற்ற முயற்சிப்பதும், மன்னிப்பவன், இறக்க முள்ளவன், தயாளன் போன்ற வாக்குறுதி யளிக்கும் பண்புகளில் ஆசை வைப்பதும், மிகைத்தவன், தண்டிப்ப வன், கடுமையாகத் தண்டிப்பவன் போன்ற எச்சரிக்கைக்குரிய பண்பு களைப் பயப்படுவதுமாகும்.
  • அத்திருநாமங்கள் அல்லாஹ்வுக்கு ரியவை என ஏற்று, அதன் பிரகாரம் செயற்படுவதாகும். உதாரணத்துக்கு “அல்லாஹ் அவனது படைப்புக்களை சூழ்ந்து அறிப்பவனாகவும் அவர்கள் மீது சக்தி பெற்றவனாகவும் அவர் களை விட்டும் பிரிந்து அவனது அரியாசனத்தின்பால் உயர்ந்து விட்டான்” என்றும் ஏற்றுக் கொண்ட ஒருவர் இதன் பிரகாரம் அவரது சொல் செயல் அடங்களாக சகல நடத்தைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும், அவனது அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படும் போது சொல் செயல் ரீதியாக அல்லாஹ்வுக்கு முன் அவனை அவமானப்படுத் தும் செயல்களுக்காக​ வெட்கப்பட வேண்டும், அவ்வாறே அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்த மான பண்புகளான மரணிக்கச் செய்தல், உயிர்ப்பித்தல், உயர்த்து தல், தாழ்த்துதல், கொடுத்தல், தடுத்தல், ஆபத்துக்களை அனுப்பு தல் அவற்றை நீக்குதல், மக்களிடையே காலத்தை சுழல விடுதல் போன்ற கரும மாற்றலுடன் தொடர்பான அனைத்துக் கட்டளைகளையும் எல்லா நேரங்களிலும் இப்பிரபஞ் சத்துக்கு இறங்கிக் கொண்டிருக் கின்றான் என்றும் ஏற்றுக்​கொள்ள வேண்டும்.​  ​ ​​

“வானத்திலிருந்து பூமி வரை காரியங் களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடக் கூடிய ஆயிரம் வருடங்கள் அளவுடையது.” அஸ்ஸஜதா 5.

  1. வினா; “தௌஹீத் அல் அஸ்மா வஸ்ஸிபாத் எனும்” திருநாமங்களிளும் பண்புகளிலும் தனிமைப் படுத்துதலின் மறுபுறம் யாது?

விடை; அதற்கு மறுபுறம் அல்லாஹ்வின் திருநாமங்களையும் பண்புகளையும் மேலும் அவனுடைய அத்தாட்சிகளையும்​ திரித்துக் கூறுவதாகும், அதில் மூன்று பிரிவுகள் உள்ளன.

  • இணைவைப்பாளர்களது திரிவு படுத்தல்; அவர்கள் அல்லாஹ்வின் திருநாமங்க ளில் கூடுதல் குறைவை​​ ஏற்படுத்தி அவர்களுடைய தெய்வங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டார்கள், “அல்லாஹ்” என்பதிலிருந்து “அல் லாத்” என்ற தெய்வத்தின் பெயரையும்​ “அல் அஸீஸ்” கண்ணியமானவன் என்பதிலிருந்து “அல் உஸ்ஸா” என்ற தெய்வத்தின் பெயரை யும், “அல் மன்னான்” தயாளன் என்பதிலிருந்து “மனாத்” என்ற தெய்வத்தின் பெயரையும் பிரித்து எடுத்தார்கள். ​
  • விவரணம் கூறுபவர்களது திரிவு படுத்தல்; அவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை படைப்பு களுடைய பண்புகளுடன் விபரிப்பவர்கள், மேலும் இவர்கள் மேல் கூறப்பட்ட இணைவைப் பாளர் களுக்கு எதிர் கருத்தைக் கொண்ட வர்கள். ஏனெனில் இணைவைப்பா ளர்கள் படைப்புக்களை அல்லாஹ் வோடும், இவர்கள் அல்லாஹ்வை படைப்புகளுடனும் விபரித்தவர்கள். அல்லாஹ்வோ மிகத் தூய்மையானவன்.
  • மறுப்போரின் திரிவு படுத்தல்; இத்தகையோர் இரு பிரிவினர்களாவர்.

ஒரு சாரார் அல்லாஹ்வின் “இரக்க முள்ளவன், அறிஞன், கேட்பவன், பார்ப்பவன்”  போன்ற திருநாமங்களை​ ஏற்றாலும் அவை குறிக்கும் கருணை, அறிவு, கேள்வி, பார்வை போன்ற பூரணமான பண்புகளை மறுக்கக் கூடியவர்கள்.

மற்றுமொரு சாரார் அல்லாஹ்வின் திருநாமங் களையும், பண்புகளையும் மொத்தமாக மறுக்கக் கூடியவர்கள்,  இவர்கள்  அனைவர்களின் கூற்றி லிருந் தும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.​​

“வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்கு வீராக. அவனது வணக்கத்திற் காக (சிரமங்களைச்) சகித்துக் கொள்வீராக அவ னுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?” மர்யம் 65.

“அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன்.” அஷ்ஷூரா 11.

“அவர்களுக்கு முன்னே உள்ளதையும், அவர்களுக்குப் பின்னே உள்ளதையும் அவன் அறிகிறான். அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்.”  தாஹா 110

 

73.வினா; ஏகத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு பட்டவையா? அவ்வாராயின் அதில் ஒன்றை மறுப்பது மற்ற பிரிவுகளையும் மறுப்பதற்குச் சமமாகுமா?

விடை; ஆம் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு பட்டவை, அதாவது அவைகளின் ஒரு பிரிவில் இணைவைத்தவர் மற்றைய பிரிவுகளிலும் இணை வைத்தவராவார், உதாரணத் துக்கு அல்லாஹ் மாத்திரம் சக்தி பெற்ற ஒரு விடயத்தை வேறு ஒருவரிடத்தில் (دعاء) பிரார்த்திப்பதாகும், அதாவது எல்லா வணக்கங் களுக்கும் மூலையான (دعاء) எனும் பிரார்த்தனையை அல்லாஹ்வை அன்றி வேறு ஒருவரிடம் கேட்பது (தௌஹீத் உலூஹிய்யா எனப்படும் வணக்கத்துக் குரிய) இறைவனு டன் வேறு ஒருவரை கூட்டுச் சேர்ப்பதாகும். மேலும் பிராத்தனை புரிபவருக்கு நன்மை ​பயக்கவும் தீமையைத் தடுப்பதற்கும் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருக்குச் சக்தி யிருப்பதாக நம்புவதால் (தௌஹீத் ருபூபிய்யா எனப்படும் அகிலத்தைப் படைத்துப்) பராமரிப்பவனுடன் வேறு ஒருவரை கூட்டுச் சேர்ப்பதாகும். மேலும் பிரார்த்தனை புரிபவருக்கு அன்மையிலும் தூரத்திலும் எல்லா நேரங்களிலும் ​அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவர் பார்த்துக் கொண்டும் செவிமடுத்துக் கொண்டும் இருக்கிறார் என நம்புவதால் (தௌஹீத் அல் அஸ்மா வஸ்ஸிபாத் எனும்) அல்லாஹ்வின்  திருநாமங்களுடனும் பண்புகளுடனும் வேறு ஒருவரை கூட்டுச் சேர்ப்பதாகும். இதன் மூலம் தவ்ஹீதின் மூன்று பிரிவுகளுக்குமிடையில் ​நெருங்கிய தொடர்பு இருப்பதை அவதானிக்கலாம்

74.வினா; மலக்குகளை விசுவாசம் கொள்வதற்கு அல் குர்அனிலிருந்தும் நபி மொழியிலிருந்தும் பெறப் பட்ட ஆதாரங்கள் யாவை​?

விடை; அதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன, அவைகளில் சில வருமாறு;

அல்லாஹ் கூறுகின்றான்; “வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப் புத் தேடுவார்கள்.” அஷ்ஷூரா 5.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனை துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.” அல் அஃராப் 206.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்க ளுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப் போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.” அல் பகரா 98

முன்னர் கூறப்பட்ட ஜிப்ரீல் (அலை) தொடர்பான நபி மொழியும், முஸ்லிம் கிரந்தத்தில் வந்துள்ள (அல்லாஹ் அவர்களை ஒளியினால் படைத்தான் என்ற) நபிமொழியும் மேலும் பல நபி மொழிகளும் இதற்கு ஆதாரமாகும்.

75.வினா; மலக்குகளை விசுவாசம் கொள்வ தென்றால் என்ன​?

விடை; மலக்குகள் இருப்பதையும், அவர்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவர்கள் என்பதை யும், அவர்கள் அல்லாஹ்வை ஏற்று வழிப்படக் கூடியவர்கள் என்றும் உறுதியாக விசுவாசம் கொள்வதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்; மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப் படியே செயல் படுவார்கள்.” அல்  அன்பியா26, 27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.” அத்தஹ்ரீம் 6.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பகலிலும் துதிப்பார்கள். சலிப்படைய மாட்டார்கள்.” அல் அன்பியா19,20.

76.வினா; அல்லாஹ் வழங்கிய பொறுப்புக்களைப் பொறுத்து அவர் களில் சிலரை இனங்காட்டுக​​?

விடை;  அவர்களில் பல பிரிவினர் உள்ளனர்​;

  1. நம்பிக்கைக்குரிய ரூஹ் எனும் ஜிப்ரீல் (அலை) இவர் அல்லாஹ்வின் தூதர்களுக்கு (وحي) வஹீ எனும் தூதுச் செய்தி அறிவிக்க கட்டளையிடப் பட்டவர்
  2. மீகாயீல் (அலை) இவர் மழை பொழிவிக்க கட்டளையிடப்பட்டவர்,
  3. இஸ்ராபீல் (அ​லை)  இவர் ஸூர் ஊதக் கட்டளை யிடப்பட்டவர்,
  4. (ملك الموت  எனும்) உயிர்களைக் கைப்பற்ற​க் கட்டளையிடப் பட்டவரும் அவருடைய உதவியாளர்களும்,
  5. மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் இவர்கள் அடியார்களின் செயல்களை எழுதக் கட்டளையிடப் பட்டவர்கள்,
  6. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வந்து அவனைப் பாதுகாக்க கட்டளையிடப் பட்டவர்கள்,
  7. ரில்வான் (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்பவர்களும். இவர் கள் சுவர்க்கத்தையும் அதன் இன்பங்களைக் கொண்டும் கட்டளை யிடப் பட்டவர்கள்​
  8. மாலிக் (அலை) அவர்களும் அவர்களுடன் இருக்கும் பத்தொன்பது தலைவர்களைக் கொண்ட ஸபானியாக் களும், இவர்கள் நரகத்தையும் அதன் வேதனையையும் கொண்டும் கட்டளை யிடப்பட்டவர்கள்
  9. முன்கர் நகீர் இவர்கள் கப்ரில் வேதனை செய்யக் கட்டளையிடப் பட்டவர்கள்.
  10. அல்லாஹ்வின் அரியாசனத்தை ஏந்தி யிருப்பவர்கள்,
  11. அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான வானவர் தலைவர்கள்
  12. கர்ப்பத்திலுள்ள விந்துத் துளிகளைக் கொண்டு கட்டளையிடப் பட்டவர்கள்,
  13. திரும்பி வராமல் அன்றாடம் “பைத்துல் மஃமூர்’ இல் நுலையும் எழுபதாயிரம் வானவர்கள்,
  14. அல்லாஹ்வை ஞாபகம் செய்யும் அவைகளைத் தேடி பூமியில் சுற்றித்திரிபவர்கள்,
  15. சற்றும் சலைக்காமல் நித்தம் நிலையிலும் ருகூவிலும், ஸுஜூதிலும் அணியாக இருப்ப                              வர்கள், அத்துடன் ஏனைய வானவர்கள். ​

“உமது இறைவனின் படையை அவனைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.” அல் முத்தஸ்ஸிர் 31

இவைகளுக்கான ஆதாரங்கள் குர்ஆனி லும் நபிமொழிகளிலும் வந்துள்ளதை யாவரும் அறிந்ததே.

77.வினா; வேதங்களை விசுவாசம் கொள்ள (அவசியப்படுத்தும்)ஆதாரங்கள் யாவை​?

விடை; அதற்கு நிறைய  ஆதாரங்கள் உள்ளன, அவைகளில் சில வருமாறு​;

அல்லாஹ் கூறுகின்றான். “நம்பிக்கை கொண்டோரே, அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்.” அன்னிஸா 136

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப் பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்ட தையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள், என்று கூறுங்கள்.” அல் பகரா 136.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (முஹம்மதே!) “அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன் என்று கூறுவீராக.” அஷ்ஷூரா 15.

78.வினா; அனைத்து வேதங்களும் அல் குர்ஆனில் கூறிப்பிடப்பட்டுள்ளனவா​​?

விடை;  தவ்ராத், இன்ஜீல், ஸபூர், ஆகிய வேதங்களும், இப்ராஹீம், மூஸா போன்ற நபிமார்களுடைய வேதங்களும் அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. ஏனையவை பற்றி சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப் படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான்.” ஆலு இம்ரான் 2,3,4.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்” அன்னிஸா 163.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப் படவில்லையா?” அந்நஜ்மு 36-39.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தை யும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் இறக்கினோம்.” அல்ஹதீத் 25.

ஆகவே அல்லாஹ் விளக்கமாகக் கூறியவைகளை விளக்கமாகவும், சுருக்கமாக கூறியவைகளை சுருக்கமாக வும் விசுவாசம் கொள்வது கடமையாகும்.​ அது விடயத்தில் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கட்டளையிட்ட பிரகாரமே நாமும் கூறுவோம். “(முஹம்மதே) இதை நோக்கி அழைப்பீராக. உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக.” அஷ்ஷூரா 15.

79.வினா; உயர்த்தியும் கண்ணியமும் உடைய​​ அல்லாஹ்வின் வேதங்களை விசுவாசம் கொள்வ தென்றால் என்ன​?

விடை; அவையனைத்தும் அல்லாஹ்விட மிருந்தே இறக்கப்பட்டன என்றும், உண்மையாகவே அல்லாஹ் அவைகளைக் கொண்டு பேசினான் என்றும், வானவத் தூதுவரின் உதவியின்றி திரைக்கப்பால் இருந்து அல்லாஹ் பேசியவை, வானவத் தூதரின் உதவியுடன் மனிதத் தூதருக்கு அருளியவை, அல்லாஹ் தன் கரத்தால் எழுதியவை என அவைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் எனவும்​​ உறுதியாக உண்மைப் படுத்துவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்; “வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான்  நாடியதை அறிவிப்ப தன் மூலமோ தவிர (வேறுவழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன், ஞானமிக்கவன்.” அஷ்ஷூரா 51.

மேலும் நபி மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்; மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன்.” அல்அஃராப் 144.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.” அன்னிஸா 164.

மேலும் ​தவ்ராத்தைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்; “பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது.” அல்அஃராப் 145.

நபி ஈஸா (அலை) அவர்களை பற்றி அல்லாஹ் கூறும் போது; “அவருக்கு இஞ்சீலையும் வழங்கினோம்.” அல் மாயிதா 46, அல் ஹதீத் 27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “தாவூதுக்கு ஸபூரை வழங்கி னோம்”.அன்னிஸா 163

மேலும் குர்ஆனைப்பற்றி அல்லாஹ் கூறும் போது, ”எனினும் (முஹம்மதே!) அல்லாஹ் உமக்கு அருளியதற்கு அவனே சாட்சியாக இருக்கிறான். தனது விளக்கத்துடன் அதை அவன் அருளினான். வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமான வன்.” அன்னிஸா166.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.” பனூ இஸ்ராயீல் 106.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.” அஷ்ஷுஅரா 192-195

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “நமது வசனங்களை வளைப்போரும், இந்த அறிவுரை தங்களிடம் வந்த போது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்து விடமுடியாது. நரகில் வீசப்படுபவன் சிறந்தவனா? அல்லது கியாமத் நாளில் அச்சமற்றவனாக வருபவனா? நினைத்த தைச் செய்யுங்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன். இது மிகைக்கக் கூடிய வேதம். இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.” ஃபுஸ்ஸிலத்  40-42.

80.வினா; முன்னைய வேதங்களுடன் (ஒப்பிடுகையில்) குர்ஆனின் அந்தஸ்து யாது​?

விடை; அல்லாஹ் கூறுகின்றான்; “உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப் படுத்து வதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது.” அல் மாயிதா 48

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். “இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப் பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப் படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமா கவும் உள்ளது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிட மிருந்து வந்தது.”  யூனுஸ் 37.

அதாவது அதற்கு முன் சென்ற வேதங்களை​ பாதுகாக்கக் கூடியதாகவும், உறுதிப் படுத்தக் கூடியதாகவும், சாட்சி கூறக் கூடியதாகவும், மேலும் அவைகளில் நிகழ்ந்த மாற்றுதல்கள், திருத்தங்கள், திரிவுகள் போன்றவைகளை மறுத்து சரியான தீர்ப்பை வழங்கக் கூடியதாகவும் ​அல்லாஹ் அல் குர்ஆனை இறக்கி வைத்தான் என்று அல் குர்ஆன் வியாக்கியான அறிஞர்கள் தெளிவு படுத்துகிறார்கள். எனவே தான் முன்சென்ற வேதங்களைப் பின்பற்றிய அனைவரும் இதற்கு அடிபணிந்தார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான். “இதற்கு முன் நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்களே இதை நம்புகின்றனர். அவர்களுக்கு ஓதிக்காட்டப் படும்போது ‘இதை நம்பினோம். இது நமது இறைவனிடமிருந்து வந்த உண்மை. இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்.’ என்று கூறுகின்றனர்.” அல் கஸஸ் 52,53.

 

 

81 வினா  (முஸ்லிம்) சமூகம் அல் குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமை யாது​?

விடை.

(முஸ்லிம்) சமூகம் அல் குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாவன, அந்தரங்கமாகவும், பகிரங்கமாகவும், அல் குர்ஆனைப் பின்பற்றுவ தும் அதை உறுதியாகப் பிடித்துக் கொள்வதும், அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதுமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்; (இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்!) அல் அன்ஆம் 155

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப் பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின் பற்றாதீர்கள்!) அல் அஃராப் 3.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலை நாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்). அல் அஃராப் 170.

அல் குர்ஆன் முழுவதற்கும் மேற் கூறப்பட்ட சட்டம் பொருந்தும், அத்துடன் இது தொடர்பாக மேலும் பல வசனங்களும் வந்துள்ளன.

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து அவைகளை எடுத்து நடக்குமாறும், அவற்றை​ பலமாகப் பிடித்துக் கொள்ளுமாறும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

  1. வினா; அல்குர்ஆனை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுதல் என்றால் என்ன?

விடை.

அதை மனனமிடுவதும், ஓதுவதும், இரவு பகலாக (அதை ஓதி) நின்று வணங்குவதும், அதில் வரும் அத்தாட்சிகளைப் பற்றி சிந்திப்பதும், அது அனுமதித்தவைகளை ஏற்று நடப்பதும், விலக்கியவைகளிலிருந்து விலகி யிருப்பதும், அதன் கட்டளைகளைப் பின்பற்று வதும், தடுத்தவைகளிலிருந்து தூரமாகியிருப் பதும், அதில் வரும் உதாரணங்களிலிருந்து படிப்பினையும், கதைகளிலிருந்து உபதேசம் பெறுவதும், அதில் வரும் உறுதி செய்யப்பட்ட வசனங்களுக்கினங்க செயல்படுவதும், இரு கருத்தைத் தருகின்ற வசனங்கங்களை ஏற்றுக்கொள்வதும், அது கோடிட்டுக்காட்டும் எல்லைகளுடன் நின்று கொள்வதும், அதில் மிகைத்துக் கூறுபவர்களின் திரிவு படுத்தல் களையும் பொய்யர்களின்  கருத்துக்களையும் எதிர் கொள்வதும்​, அதற்குரிய கடமைகளைச் செய்வதும், தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு  அதை நோக்கி (மக்களை) ​அழைப்பதுமாகும்.

​​83. “அல்குர்ஆன் படைக்கப்பட்டது” என வாதிடும் ஒருவருக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பு  யாது?

விடை/

உண்மையாகவே அல்குர்ஆனில் உள்ள எழுத்துகள், கருத்துகள் அடங்களாக அனைத் துமே அல்லாஹ்வினுடைய பேச்சாகும். மாற்றுக் கருத்துகளுக்கு  இடமே இல்லை, அதாவது அல்லாஹ் அதை வார்த்தைகளாகவே பேசி, (وحي)​ வஹி எனும் இறைத் தூதின்​ மூலம் அவனுடைய நபிக்கு இறக்கி வைத்தான், பின்னர் ​அது உண்மையென விசுவாசிகளும் ஏற்றுக்கொண்டார்கள். ஆயினும் அல்குர்ஆன் விரல்களால் எழுதப்படுவதாலும், நாவுகளால் ஓதப் படுவதாலும், இதயங்களால் மனனமிடப் படுவதாலும், செவிகளால் கேட்கப் படுவதாலும், கண்களால் பார்க்கப் படுவதாலும் அல்லாஹ்வின் பேச்சாக இருக்க முடியாது எனத் தீர்மானிப்பது தவராகும். காரணம் விரல்களும், எழுத உபயோகிக்கப்படும் சாயமும், பேனை களும், படைக்கப் பட்டவைகள்தாம் ஆனால் அவைகளை உபயோகித்து எழுதப்பட்டது படைக்கப்படாத ஒன்றா கும். அவ்வாரே நாவுகளும், ஓசைகளும் படைக்கப்பட்வைகள்தாம், ஆனால் ​அவைகளை உபயோகித்து வித்தியாச மான முறைகளில் ஓதப்பட்டது படைக் கப்படாத ஒன்றாகும். அவ்வாரே இதயங் கள் படைக்கப்பட்டவை யென்றாலும் அவைகளில் பாதுகாக்கப்பட்டது படைக் கப்படாத ஒன்றாகும். மேலும் செவிகள் படைக்கப்பட்டவை யென்றாலு​​ம், செவி மடுக்கப்பட்டது படைக்கப்படாத ஒன்றாகும். ​

அல்லாஹ் கூறுகின்றான்; (இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்) அல் வாகிஆ 77,78.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங் களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோ ரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்) அல் அன்கபூத் 49.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ((முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்) அல் கஹ்ஃப் 27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக!) அத்தவ்பா 6.

ஆகவே அல் குர்ஆன் முழுவதுமோ அல்லது அதில் சிலதோ​ படைக்கப் பட்டதாக ஒருவர் கூறினால் அவர் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து முற்றாகவே நீங்கி (كافر)​  நிராகரித்தவராக மாறி விடுவார், காரணம் அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும். அல்லாஹ்வின் பேச்சு அவனுடைய பண்பாகும் என்வே  யாராவது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றை படைக்கப்பட்டதாக வாதிட்டால் அவர் நிராகரித்தவரும் மதம் மாறியவருமாவார் ஆகவே  அவரிடத்தில் மீண்டும் இஸ்லாம் மார்க்கத்துக்கு வரும்படி கோரப்படும், மறுக்கும் பச்சத்தில் அவர் (كافر) மறுத்தவராக கொள்ளப்படுவார். முஸ்லிம்க ளுக்குரிய சட்டங்கள் எதுவும் அவருக்கு வழங்கப்படமாட்டாது.

  1. 84. வினா; (அல்லாஹ்வின்) பேச்சு எனும் பண்பு சுயம் சார்ந்ததா அல்லது செயல் சார்ந்ததா?

விடை/

(كلام) “பேச்சு” எனும் பண்பு அல்லாஹ்வின் சுயத்துடன் தொடர்பு பட்டுள்ளதையும், அதற்கேட்ப அவன் பேசக் கூடியவன் என்பதையும் கருத்தில் கொண்டால், அது சுயம் சார்ந்த பண்பு எனப்படும், ஏனெனில் அது அல்லாஹ்வின் அறிவைப் போன்றது, அவனு டைய அறிவினாலே அதை இறக்கினான். அவன் இறக்குக்குவதை அவனே அறிந்தவன். அவ்வாரின்றி​ அல்லாஹ்வின் பேச்சு எனும் பண்பு அவனுடைய விருப்பத்துடனும் நாட்டத்துடனும் தொடர்பு பட்டுள்ளதை கருத்தில் கொண்டால் அது​ செயல் சார்ந்த பண்பு எனப்படும்.​​

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “அல்லாஹ் ஒரு கட்டளையை அறிவிக்க நாடினால் தூதுச் செய்தியைக் கொண்டு பேசுவான்” நூல் அபூதாவூத்

ஆகவே தான் சாலிஹன முன்னோர்கள் அல்லாஹ்வுடைய பேச்சு எனும் பண்பு “சுயம் செயல்” ஆகிய இரண்டும் சார்ந்த பண்பு எனக் கூறியுள்ளார்கள். மேலும் அப்பண்பு எப்போதும் அவனுடன் இருந்து கொண்டே யிருக்கும், எனினும் தான் நாடியவர்களுக்கு மாத்திரம் அவன்  விரும்பிய முறைக்கும், நேரத்துக்கும் ஏற்றவாறு அவனுடைய பேச்சை கேட்கச் செய்வான்​, மேலும் அவனுடைய பேச்சு ஒரு பண்பாகையால் அதற்கு எல்​லையோ முடிவோ கிடையாது.  ​

அல்லாஹ் கூறுகின்றான்; (“எனது இறைவ னின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே” என்று கூறுவீராக!) அல் கஹ்ஃப் 109.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதி முடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.” லுக்மான் 27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தை களை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன், அறிந்தவன்”. அல் அன்ஆம் 115.

  1. வினா; “நிற்பவர்கள்” என்பவர் யாவர்? அவர்களுக்கெதிரான தீர்ப்பு யாது?

விடை/

அல் குர்ஆனை, அல்லாஹ்வின் பேச்சு என்றோ, அல்லது அது படைக்கப்பட்டது என்றோ எதையும் கூறாத (நடு நிலை கருத்து டையவர்களே) “நிற்பவர்கள்” எனப்படுவர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கூறுகிறார்; யாராவது அல்குர்ஆனை அல்லாஹ்வின் பேச்சு எனத் தெரிந்து கொண்டே அவ்வாறு (நடுநிலையில்) இருந்தால் அவர் “ஜஹ்மிய்யா” எனும் பிரிவினரைச் சேர்ந்தவராவார், அன்றேல் அறியாத்தனமாக அவ்வாறிருந்து பின்னர் அவருக்குத் தெ​ளிவான ஆதாரங்களும் அத்தாட்சிகளும் முன்வைக்கப்பட்டதும் அவை களை அவர் ஏற்று மாவமன்னிப்பும் கோரி “அல்குர்ஆனை அல்லாஹ்வின் பேச்சு” என ஒப்புக்கொண்டால் ஏற்கப்படுவார். அன்றி ​​அதற்குப்பின்னரும் மறுப்பாராயின் அவர் “ஜஹ்மிய்யா” எனும் பிரிவினரை விடத் தீயவராவார்.  ​

  1. வினா; ”குர்ஆ​னைப் பற்றிய எனது சொல் படைக்கப்பட்டது / படைக்கப்பட வில்லை ” என கூறியவருக் கெதிரான தீர்ப்பு யாது?

விடை/

குர்ஆன் படைக்கப்பட்டதை நிரூபிக்கவோ அல்லது அதை மறுக்கவோ எவரும் இவ்வாறு கருத்து வெளியிடக்கூடாது, காரணம் (இக்கருத்தினால்) அல்குர்ஆன் படைக்கப் படாத ஒன்றா? அல்லது படைக்கப்பட்ட ஒன்றா? என​ இரண்டு சந்தேகங்கள்  இங்கே நிலவிகின்றன, ஆகவே ஒருவர் அவ்வாறு பொதுவாகக் கூறினால் அவரது கருத்து இரண்டாவது கருத்தாகவே கொள்ளப்பட்டு அவர் ”ஜஹ்மிய்யா” எனும் பிரிவினரின் கூற்றுக்கு ஒத்தவராக மாறி விடுகிறார். அவ்வாறின்றி அவரின் கூற்று முதலாவது கருத்தாக​ கொள்ளப்பட்டால் அவரும் (بدعة) நபி வழிக்கு மாற்றமானதைக் கூறியவராவார். எனவே தான் நல்லோர்களான முன்னோர்கள், ”குர்ஆ​னைப் பற்றிய எனது சொல் படைக்கப்பட்டது” எனக் கூறியவர் “ஜஹ்மிய்யா” எனும் பிரிவை சேர்ந்வராவார் எனவும், “படைக்கப்பட வில்லை” எனக்கூறியவர் (நபி வழிக்கு அப்பால்) மார்க்கத்தில் புதிய ஒன்றைக் கூறியவர் எனவும் தெளிவு படுத்தியுள்ளார்கள். ​

  1. வினா; (அல்லாஹ்வின்) தூதர்களை விசுவாசம் கொள்வதற்கான ஆதாரம் யாது​ ​?

விடை/

பின்வருவன போன்று அல்குர்ஆனிலும் நபி மொழியிலும் அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன;

அல்லாஹ் கூறுகின்றான்;  (அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, “சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்” எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கு மிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்). அன்னிஸா 150-152

மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்; (அல்லாஹ்வையும், அனது தூதரையும் நான் விசுவாசம் கொண்டேன்). நூற்கள் புகாரி, முஸ்லிம்.

  1. வினா; (அல்லாஹ்வின்) ​தூதர்களை விசுவாசம் கொள்வதென்றால் என்ன​?

விடை/

(அல்லாஹ்வின்) “​தூதர்களை விசுவாசம் கொள்வதென்றால், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும்​ நிராகரித்து அவனை மாத்திரம் வணங்குவதின்பால் அழைப்பதற்காக ஒவ்வொரு சமூகத்துக்கும் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பினான் என்றும், அவர்கள்  அனைவரும் உண்​​​மை பேசக்கூடியவர்களும், உண்மைப் படுத்தப்பட்டவர்களுமாவார்கள் என்றும், அல்லாஹ்வுக்கு அடிபணியக் கூடியவர்களும், நேர்வழி பெற்றவர்களு மாவார்கள் என்றும், மரியாதைக்குரிய நல்லோர்களும், உள்ளச்ச முடையவர்களும், நம்பிக்கைக் குறியவர்களும், நேர்வழி பெற்ற வழிகாட்டிகளுமாவார்கள் என்றும், அவர்கள் வெளிரங்கமான அத்தாட்சி களால் தங்களுடைய இறைவனிட மிருந்து பலப்படுத்தப் பட்டவர்கள் என்றும், அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்தனுப்பிய அனைத்தை யும்  மறைக்காமலும், மாற்றாமலும், ஒரு எழுத்தையேனும் கூட்டாமலும், குறைக்காம லும் ​​(மக்களுக்கு) எத்தி வைத்தார்கள் என்றும் விசுவாசம் கொள்வதாகும். அல்லாஹ் கூறுகி றான்; (தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா?” அந்நஹ்ல் 35.  ​

 

இன்னும் அவர்கள் தெளிவான உண்மையில் இருந்தார்கள், அல்லாஹ் அவர்களில் இப்ரா ஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களையும் உற்ற தோழராக்கிக் கொண்டான், மேலும் மூஸாவு டன் உண்மை யாகவே பேசினான், இதரீஸை உயரமான தகுதிக்கு உயர்த்தினான், மேலும் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா (ல் உருவானவருமா) வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். அவர்களில் சிலரை, மற்றும் சிலரை விடச் சிறப்பித்தான். மேலும் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான், என்றும் உறுதியாக உண்மைப்படுத்துவதாகும்.

  1. வினா; எல்லா தூதர்களின் போதனை களும் ​​ஒன்று பட்டவை தானா?

விடை/

அனைத்து தூதர்களின் பிரச்சாரமும் ஆரம்பம் முதல் இறுதி வரை (توحيد)  ஏகத்துவம் எனும் அடிப்படை வணக்கத்தில் ஒன்று பட்டது தான், அதாவது; சொல் செயல் நம்பிக்கை சார்ந்த அனைத்து வணக்கங்களாலும் அல்லாஹ்வை மாத்திரம் தனிமைப்படுத்துவதும், அவனைத் தவிர வணங்கப்படும் எல்லாவற்றையும் நிராகரிப்பதுமாகும். ஆயினும் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளையும், (الحرام والحلال) ஆகுமாக்கப்பட்டவை, தடுக்கப்பட்ட வைகளையும் பொறுத்தமட்டில் சில (சமூகத்தவ)ருக்கு கடமையாக்கியதை வேறு சிலருக்கு கடமையாக்காமலும், சிலருக்கு அனுமதித்தவைகளை வேறு சிலருக்கு அனுமதிக்காமலும் (உங்களில் அழகிய செயல் பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்ப தற்காக) அல்லாஹ் அவ்வாறு செய்தான்.” ஹூது 7.

  1. மேற்கூறப்பட்டவாறு அடிப்படை வணக்கத்தில் (தூதர்களாகிய) அவர்கள் ஒன்று பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் யாது ?

விடை/

அதற்கான ஆதாரங்கள் இரண்டு வகைப்படும்.

  • சுருக்கமான ஆதாரங்கள்
  • விரிவான ஆதாரங்கள்

 

சுருக்கமாகஆதாரங்களாவன;

அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று கூற ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்”. அந்நஹ்ல் 36.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (“என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை; எனவே என்னையே வணங்குங்கள்.” என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை). அல் அன்பியா 25.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (“அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள் களை நாம் ஆக்கியுள்ளோமா?” என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!) அஸ்ஸுக்ருஃப் 45.

விரிவான ஆதாரங்களாவன;

அல்லாஹ் கூறுகின்றான்; (நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?” என்று கேட்டார்). அல் முஃமினூன் 23.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே ! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை… என்று  அவர் கூறினார்.) அல் அஃராப் 73.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ் வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார்.)  அல் அஃராப் 65, ஹூத் 50.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ் வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை… என்று அவர் கூறினார்.” அல் அஃராப் 85, ஹூத் 84.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்கு பவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டு வீராக!) அஸ்ஸுக்ருஃப் 26,27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. ஒவ்வொரு பொருளையும் விரிவாக அவன் அறிந்து வைத்திருக்கிறான்.” தாஹா 98.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்). அல் மாயிதா 72.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (“நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக!) ஸாத் 65.

  1. ஆகுமாக்கப்படவை, தடுக்கப்பட்டவை போன்ற கி​ளை அம்சங்களில் (தூதர்களாகிய) அவர்களுடைய வழிமுறைகள் வித்தியாசப் பட்டிருந்தற்கான ஆதாரம் யாது ?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; “.உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையு ம், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாய மாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிவிட வில்லை…) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்!” அல் மாயிதா 48

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள  “வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும்” என்பது பாதை வழிமுறை என்ற கருத்தைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கியுள்ளார்கள். மேலும் முஜாஹித், இக்ரிமா, ஹஸன் அல் பஸரி, கதாதா, லஹ்ஹாக், ஸுத்தி, ஆபூ இஸ்ஹாக் போன்றோரும் இதே கருத்தையே கூரினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புஹாரி எனும் கிரந்தத்தில் வந்துள்ளதாவது;  (இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகளாவர், அவர்கள் தாய்மார்கள் பலராவர், அவர்களின் மார்க்கம் ஒன்ரே). அதாவது அல்லாஹ் (توحيد) எனும் ஏகத்துவத்தை வலியுருத்தியே அனைத்து தூதர்களையும் அனுப்பி வேதங்களையும் இறக்கினான். ​​ஆனால் ஏவல் விளக்கள்கள் ஆகுமாக்கப்பட்டவை தடைசெய்யப் பட்டவை போன்ற விடயங்கள் (“உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக) வித்தியாசப்பட்டிருந்தன.. ஹூத் 7.

  1. எல்லாத் தூதர்களின் சம்பவங்களையும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளானா?

விடை/

அவர்களுடைய செய்திகளிலிருந்து போதுமான அளவும், உபதேசமும், படிப்பினையும் உள்ளவறு அல்லாஹ் எங்களுக்கு கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்; (முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை).  அன்னிஸா 64.

ஆகவே அவர்கள் அனைவரையும், ​அல்லாஹ் விரிவாக​க் கூறிய இடங்களில் விரிவாகவும், சுருக்கமாகக் கூறிய இடங்களில் சுருக்கமாகவும் விசுவாசம் கொள்வோம்.

அவர்களில் எத்தனை பேர்களின் பெயர்களை (அல்லாஹ்) குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான் ?

விடை/

குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் வருமாறு; ஆதம், நூஹ், இத்ரீஸ், ஹூத், ஸாலிஹ், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், யூஸுஃப், லூத், சுஅய்ப், யூனுஸ், மூஸா, ஹாரூன், இல்யாஸ், ஸகரிய்யா, யஹ்யா, அல்யஸஃ, துல் கிப்ல், தாவூத், ஸுலைமான், ஆய்யூப், வழித்தோன்றல் களை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளான், மேலும் ஈஸா, முஹம்மத், அனைவர் மீதும் அல்லாஹ்வின் கருனையும் ஈடேற்றமும் உண்டாவதாக.

  1. உறுதிமிக்க தூதர்கள் யாவர் ?

விடை/

அவர்கள் ஐந்து பேர்களாவர்; அல்லாஹ் அவர்களுடைய பெயர்களை குர்ஆனில் இரண்டு இடங்களில் தனியாகக் கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்; (நபிமார்களி டம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதி மொழியை நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக!) அல் அஹ்ஸாப் 7.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். முஹம்மதே  உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், “மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!” அஷ்ஷூரா 13.

  1. முதல் தூதர் யார்?

விடை/

நேரான வழி தொடர்பான கருத்து முரண்பாட்டுக்குப் பின்னர் வந்த முதல் தூதர் நபி நூஹ் (அலை) ஆவார்கள். ​

அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம்). அன்னிஸா 163.

 

  1. கருத்து முரண்பாடு எப்போது ஆரம்பித்தது ?

 

விடை/

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்; நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்குமிடையிலான பத்து நூற்றான்டு காலப்பகுதியில் வாழ்ந்த அனைவரும் நேரான  வழிமுறையையே பின்பற்றினார்கள், பின்னர் தான் அவர்கள் கருத்து முரண்பட்டுக் கொண்டார்கள். ஆகவே “எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான்.” பகரா 213.

  1. இறுதி நபி யார் ?

விடை/

இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவார்கள்.

  1. அதற்கு ஆதாரம் என்ன?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.) அல் அஹ்ஸாப் 40.

 

நபி (ஸல்) கூறினார்கள்; எனக்குப்பின்னால் முப்பது பொய்யர்கள் தோன்றி, அவர்களில் ​ஒவ்வொருவரும் தாமே நபியென வாதிடுவார்கள், ஆயினும் நானே இறுதி நபியாவேன் எனக்குப்பின்னால் நபியில்லை.)   நூல்கள்; முஸ்லிம், அபூதாவூத்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களிடம் “மூஸாவிடம் ஹாரூன்  இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும் எனக்குப் பிறகு எந்த இறைத் தூதரும் இல்லை” என்று கூறினார்கள்”.​ நூல்கள் புகாரி முஸ்லிம்.

மேலும் (தஜ்ஜால் எனும்) பொய்யனுடைய செய்தியில்​  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நான் தான் நபிமார்களில் இறுதியானவன், எனக்குப் பின்னால் வேறு நபி இல்லை). நூல்கள் புகாரி முஸ்லிம்.

  1. ஏனைய நபிமார்களை விட எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விஷேடமாக வழங்கியவை யாவை​​?

விடை/

ஏனைய நபிமார்களை விட எங்களுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விஷேடமாக வழங்கியவை நிறையவே உள்ளன. மேலும் அது தொடர்பாக மாத்திரம் எழுதப்பட்ட புத்தகங்களும் உள்ளன, அவைகளில் சிலதை மாத்திரம் நோக்குவோம்.

  • மேல் கூறப்பட்டவாறு அவர்களே இறுதி நபியாவார்கள்.
  • மேலும் பின் வரும் அல்லாஹ்வினுடைய வசனத்தில் விளக்கப் பட்டுள்ளவாறு அவர்களே ஆதமுடைய மக்களின் தலைவரா வார்கள். அல்லாஹ் கூறுகிறான்; “(நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்.” அல் பகரா 253.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நானே ஆதமுடைய மக்களின் தலைவனா வேன், (இதைக் கூறுவது) பெருமைக்காக அல்ல.

  • மேலும் ஜின்கள் அடங்களாக எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரு நபியாக அவர்கள் அனுப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்;  ((நபியே!) நீங்கள் கூறுங்கள்: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்). அல் அஃராஃப் 158.​

மேலும் ​அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே!) நாம் உங்களை (இவ்வுலகத்தில் உள்ள)  எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை  செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம்). ஸபா 28.

 

  • மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளி யிருந்தாலும் ​​அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன், பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது, என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும், போரில் கிடைக்கிற பொருட் கள் எனக்கு ஹலாலாக் கப்பட்டுள்ளன, எனக்கு முன் ஹலாலாக்கப்பட்டதில்லை, (மறுமையில்) சிபார்சு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள் ளேன். ஒவ்வொரு நபியும் தங்கள் சமூகத்துக்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள் ​ஆனால் நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள் ளேன்.    நூற்கள்; புகாரி, முஸ்லிம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (எவன் கையில் எனது ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக இந்த சமூகத்தில் என்னைப்பற்றிக் கேள்வியுற்ற​ ஒரு யூதராவது அல்லது கிரிஸ்தவராவது நான்  எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை விசுவா சம் கொள்ளாது மரணித்தால் கட்டாய மாக அவர் நரக வாசியாகி விடுவார்). நூல் முஸ்லிம். ​​

நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விஷேடமாக வழங்கியவைகள் மேலும் பல உள்ளன குர்ஆன் ஸுன்னாவிலிருந்து அவை களை விளங்கிக்கொள்ளவும்.

  1. நபிமார்களின் “அற்புதங்கள்” யாவை ​​?

விடை/

“அற்புதம்” எனப்படுவது எதிர்க்க முடியாத சவாலுடன் வழமைக்குப் மாற்றமாக நடைபெறும் ஒன்றாகும். ஒன்றில் அது வெற்றுக் கண்களால் பார்க்கமுடியுமானது. உதாரணத்துக்கு; கற்பாறையிலிருந்து பெண் ஒட்டகம் வெளியாகுதல், தடி பாம்பாக மாறுதல், உயிரற்ற பொருட்கள் பேசுதல் போன்றனவாகும். அல்லது வெற்றுக் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் அகப் பார்வையால் விளங்க முடியுமானது. உதார ணத்துக்கு “அல் குர்ஆன்” எனும்  “அற்புபுதம்”  ஆகும்.

 

எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இவ்விரு வகையிலான அற்புதங்களும்​ வழங்கப்பட்டிருந்தன. மேலும் இவ்விரு பிரிவுகளிலிருந்து எந்த ஒரு நபிக்கும் வழங்கப்பட்ட அற்புதங்களை விட மிக மகத்தான அற்புதம் எங்கள் நபிக்கு வழங்கப்பட்டது, அவைகளில் வெற்றுக் கண்களால் காண முடியுமான அற்புதங்களாவன; சந்திரன் இரண்டாகப் பிளந்தது, ஈச்சை மரக் குற்றி முணங்கியது, ​​(நபியவர்களின்) சிறப்பான விரல்களுக்கிடை யிலிருந்து நீர் ஊற்றெடுத்தது, முன்னங்கை பேசியது, ​உணவு தஸ்பீஹ் ​செய்தது, போன்றன சரியான ஆதாரங்களுடன் நிரூபிக் கப்பட்டவைகளாகும். ஆயினும் அவையனைத் தும்​ ஏனைய நபிமார்களின் அற்புதங்கள் போலவே அவர்களுடைய காலத்துடன் முடிவுற்றாலும் இன்றும்  அவை நினைவு கூறப்படுகின்றன. எனினும் காலத்தால் அழியாது இன்று வறை எஞ்சியிருக்கும் நிரந்தரமான அற்புதம் யாதெனில் இந்த திருக்குர்ஆன் ஆகும் அதன் அதிசயங்கள் முடிவடையாதது

அல்லாஹ் கூறுகிறான்; (இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் (திருக்குர்ஆனாகிய) இதனை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது.) புஸ்ஸிலத் 42.

  1. குர்ஆனுடைய அற்புதத்துக்கு ஆதாரம் என்ன​​?

விடை/

அதற்கான ஆதாரம் யாதெனில் (அரபு மொழியில் இறக்கப்பட்ட) அந்த குர்ஆன் படைப்புகளில் அதிக நாவன்மையும், பேச்சுத்திறமையும், எல்லையற்ற சொற் சாதுரியமும், உயர்ந்த விளக்கமும் உடையவர்களிடம் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பின்வருமாறு சவால் விட்டுக்கொண்டு இறங்கியதாகும்.

​அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே! இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்துகொண்டு) இதைப் போன்ற யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வரவும்) அத்தூர் 34.

மேலும் ​அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: இதைப்போன்ற பத்து அத்தியாயங்களை யேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள்). ஹூத் 13.

மேலும் ​அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே!) நீங்கள் கூறுங்கள்: “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை யன்றி உங்களுக்குச் சாத்திய மானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக்கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்) யூனுஸ் 38.

 

குர்ஆனின் எழுத்துக்களும் சொற்களும் அந்த அரேபியர்களுக்கிடையில் பேசும் மொழிக்கு, போட்டிபோட்டுக் கொண்டும் பெருமைய டித்துக் கொண்டும் இருந்த துறைக்கு​ ஒத்ததாகவும் இருந்தது,​ மேலும் இச்சவால் களுக்கு அவர்கள் சகல வழிகளிலும் மறுப்பு வழங்க பேராவல் கொண்டவர்களாக இருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவுமில்லை, நினைத்துப் பார்கவுமில்லை. எனவே அல்லாஹ் அவர்களுடைய இயலாமையும், குர்ஆனின் அற்புதத்தையும் விளக்கி (அவனு டைய திருமறையில்) பின்வருமாறு கூறினான்;

((நபியே!) “நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது.” அல் இஸ்ரா 88.

நபி (ஸல்) கூறினார்கள்; (ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன, அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புத மெல்லாம். அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே நபிமார்களி லேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்).​ நூற்கள் புகாரி முஸ்லிம்.

குர்ஆனின் அற்புதம் அதில் வரும் சொற்களிலா, அல்லது கருத்துக்களிலா உள்ளது? அல்லது அதில் கூறப்படும் இறந்தகால செய்திகளிலா? அல்லது அது எதிர்வு கூறும் எதிர்கால நிகள்வுகளிலா உள்ளன? எனப் பல்வேறு துறைகளில் மக்கள் பல புத்தகங்களை எழுத முயற்சித்தாலும் அவையனைத்தும் ஒரு சிட்டுக் குருவி தனது சொண்டினால் கடலிலிருந்து எடுத்த நீரின் அளவேயன்றி வேறில்லை.​

  1. இறுதி நாளை விசுவாசம் கொள்வதற் கான ஆதாரம் யாது​​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;  “(நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கின்றது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதனைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்க ளும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக் கின்றனரோ அவர்களும், (ஆகிய) இத்தகை யவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) வைகளின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.” யூனுஸ் 7,8.

 

மேலும் ​அல்லாஹ் கூறுகின்றான்; (செயலுக் குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.

நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.) அத்தாரியாத் 5,6.

 

மேலும் ​அல்லாஹ் கூறுகின்றான்;  “விசார ணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவ தில்லை” அல் முஃமின் 59.

 

  1. இறுதி நாளை விசுவாசம் கொள்வ தென் றால் என்ன? அ(ந்த விசுவாசமான)து உள்ள டக்கும் விடயங்கள் யாவை?

விடை/

இறுதி நாளை விசுவாசம் கொள்வதென்றால், சந்தேகமின்றி இறுதி நாள் ஒன்று வரும் என உறுதியாக உண்மைப்படுத்தி அதற்கினங்க அமல் செய்வதாகும். அத்தகைய விசுவாசம் உள்ளடக்கும் விடயங்களாவன; சந்தேகமின்றி இறுதி நாள் வருமுன் நிகழும் அடையாளங் களை நம்புவதும்​, மரணத்தையும் அதற்கு பின்னர் கப்ரில் நிகழும் இன்பங்களையும் வேதனைளையும் நம்புவதும்​, ஸூர் எனும் குழலில் ஊதப்படுவதையும், எல்லாப் படைப்பு களும் மண்ணரையிலிருந்து வெளியேறுவதை நம்புவதும்​, மறுமை நாளில் நிகழும் அமலி துமலிகளை நம்புவதும்​, மஹ்ஷரில் நடக்க விருக்கும் விடயங்களையும், ஏடுகள் விரிக்கப்படுவதையும், (மீஸான் எனும்) நீதியான தராசுகள் நிறுவப்படுவதை நம்பு வதும்​, (ஸிராதுல் முஸ்தகீம் எனும்) பாலம், (ஹவ்ல் எனும்) நீர்த்தடாகம், (ஷபாஅத் எனும்) நபியவர்களின் மன்றாட்டம் போன்றவைகளை யும், உச்சக்கட்ட இன்பமாகிய அல்லாஹ்வின் திரு முகத்தைக் காண்பது அடங்களாக சுவர்க்கத்தின் அனைத்து இன்பங்களையும் நம்புவதுடன், உச்சக்கட்டத் தண்டனையாகிய அல்லாஹ்வின் திருமுகம் மறைக்கப்படுவது அடங்களாக நரகத்தின் அனைத்து தண்டனை களையும் நம்புவதுமாகும். ​​​​​     ​

  1. (உலக முடிவு) காலம் எப்போது வரும் என்பதை யாரும் அறிவாரா?

விடை/

(உலக முடிவு) காலம் உண்டாவது பற்றிய தகவலை அல்லாஹ் மாத்திரமே அறிந்து வைத்திருக்கிறான், அது மறைவான அறிவுடன் தொடர்பு பட்ட ஒன்றாகும். ​

அல்லாஹ் கூறுகின்றான்; ( நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்களில் தரிப்பதையும் அறி வான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறிய மாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறிய மாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவை களை) நன்கறிந்தவனும் தெரிந்தவனு மாக இருக்கிறான்) லுக்மான் 34.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  ((நபியே!) இறுதி நாளைப் பற்றி,  அது எப்பொழுது வரும் என அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங் கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது).  அல் அஃராஃப் 187.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  ((நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வரு மென உங்களிடம் அவர்கள் கேட்கின்றனர். (எப்பொழுது வருமென்று) எதற்காக நீங்கள் கூறவேண்டும்? அதன் முடிவெல்லாம், உங்களது இறைவனிடமே இருக்கின்றது) அன்னாஸிஆத் 42,44.

 

மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாள் எப்போது வரும் எனக் கேட்டதற்கு, அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேள்வி கேற்கிற உம்மை விட மிக்க அறிந்தவ ரல்ல எனக்கூறிவிட்டு அதன் சில அடையாளங் களைக் கூறினார்கள். பிரிதோர் அறிவிப்பில் “ஐந்து விடயங்களை அல்லாஹ் வைத் தவிர வேரு எவரும் அறிய மாட்டார்கள்” என கூறிவிட்டு மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.  ​ ​

 

  1. (உலக முடிவு) காலத்தின் அடையாளங் களுக்கான உதாரணத்தை அல்   குர்ஆனிலி ருந்து தருக?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;  (மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை யாதொரு பலனையும் அளிக்காது. ஆகவே (அவர்களை நோக்கி “அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்) அல் அன்ஆம் 158.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்க ளுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக் கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்) அன்னம்ல் 82.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வடிந்து (உலகின் பல பாகங்களிலும் அதி சீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்.

“(உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது.”  அல் அன்பியா 96,97.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (நபியே!) “தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்.” அத்துகான் 10.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது.” அல் ஹஜ் 1.

  1. (உலக முடிவு) காலத்தின் அடையாளங் களுக்கான உதாரணத்தை நபி மொழியிலிருந்து தருக?

விடை/

மேற்கிலிருந்து சூரியன் உதயமாவது பற்றி வந்துள்ள நபிமொழிகளும், மிருகம் தோன்றுவது பற்றி வந்துள்ள நபி மொழிகளும், யுத்தங்கள், (தஜ்ஜால் எனும்) பொய்யனின் குழப்பங்கள் உண்டாவது பற்றியுள்ள நபி மொழிகளும், நபி ஈஸா (அலை) இறங்குதல், யஃஜூஜ் மஃஜூஜ் தோன்றுதல் போன்ற நபி மொழிகளும், புகை மற்றும் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றும் ​​காற்று, நெறுப்பு தோன்றுதல், கிரகணங்கள் உண்டாகுதல் போன்ற நபி மொழிகளும் இதற்கு தகுந்த ஆதாரங்களாகும்.

  1. மரணத்தை விசுவாசம் கொள்வதற்கான ஆதாரம் யாது ​​​​?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப் பட்டிருக்கும் “மலக்குல் மவ்த்து” (என்ற மலக்குத்) தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்”. ஸஜ்தா 11.  

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;   ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண் டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவ தெல்லாம் மறுமை நாளில்தான்.” ஆல இம்ரான் 185.

 

மேலும் அல்லாஹ் நபியவர்களை நோக்கி கூறுகின்றான்; (நபியே) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக் கூடியவரே. நிச்சயமாக அவர் களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம்). ஸுமுர் 30.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  ( (நபியே!) உங்களுக்கு முன்னரும் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்த வில்லை. ஆகவே, நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இவர்கள் என்றென்றும் வாழப் போகிறார்களா?”   அல் அன்பியா 34.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும்.

மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.” அர்ரஹ்மான் 26,27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “அவனைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே”. அல் கஸஸ்  88. 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (அன்றி) “மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீங்கள் நம்புங்கள்” அல்  ஃபுர்கான் 58.

மேலும் இது தொடர்பாக எண்ணிலடங்காத நபி மொழிகள் உள்ளன. அத்துடன் இவ் விடயம் எல்லோருடைய கண்களுக்கும் புலப்படக்கூடிய ஒன்றென்பதால்,  இதை அறியாதவர் எவரும் இருக்கமாட்டார். மேலும் அ(து நிகழ்வ)தில் எவ்வித சந்தேகமோ, தடுமாற்றமோ கிடையாது.

  1. (“கப்ர்” எனும்) மண்ணறையில், இன்பம் அனுபவித்தல் அல்லது வேதனைப்படுதல் போன்ற குழப்பங்கள் நடைபெறுவதற்கான ஆதாரத்தை அல் குர்ஆனிலிருந்து தருக?

 

விடை/

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (யன்றி வேறில்லை.) அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் அதில் தங்கி விடுவார்கள்.” அல் முஃமினூன் 100.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “ஃபிர்அவ்னு டைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது.

காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படு கின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னு டைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.” முஃமின் 45,46.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மெய்யா கவே எவர்கள் நம்பிக்கை கொள்கி றார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (“கலிமா தையிப்” என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான்.” இப்ராஹீம் 27.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) “உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களையும் பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்” (என்று கூறுவதை நீங்கள் காண்பீர்கள்.)” அல்அன்ஆம் 93.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்.” அத்தவ்பா 101.

 

  1. நபி மொழியிலிருந்து அதற்கான ஆதாரத்தை தருக​​​​?

விடை/

 

பின் வரும் நபிமொழிகளைப் போன்று அதற்கு நிறையவே ஆதாரங்கள் வந்துள்ளன;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (“ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் – பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்பர். அதற்கவர் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு (நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான் என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். – கதாதா கூறினார்: பின்னர் அவருடைய கப்ர் விசாலமாக்கப்படும் என நபியவர்கள் எங்களிடம் கூறினார்கள். தொடர்தும் நபியவர்கள கூறும் போது – நிராகரிப்ப வனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும் “எனக்குத் தெரியாது மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் “நீயாக  எதையும் அறிந்ததுமில்லை, குர்ஆனை ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியலால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள் ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்). நுற்கள் புகாரி, முஸ்லிம்.  

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களில் ஓருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலை யிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்க வாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதா கவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்ப தாகவும் (எடுத்துக் காட்டப் படும்) மேலும் அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும். என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்). நூல்கள் புகாரி, முஸ்லிம்.  

 

மேலும் “இரண்டு கப்ருகள்” நபிமொழியில் கூறப்பட்டுள்ளதாவது: (நிச்சயமாக அவ்விரு வரும் வேதனை செய்யப்படுகிறார்கள்). நூல்கள் புகாரி, முஸ்லிம்.  

 

ஆபூ அய்யூப் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டு விட்டு “யூதர்கள் அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்)” எனக் கூறினார்கள். நூல்கள் புகாரி, முஸ்லிம்.

 

அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறையாற்றும் போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் அச்சத்தால் கதறி விட்டார் கள்.” நூல் புகாரி.

 

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்ததேயில்லை. நுற்கள் புகாரி, முஸ்லிம்.

அவ்வாறே சூரிய கிரகண​ம் தொடர்பான செய்தியில் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத்தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.​ நூல்கள் புகாரி, முஸ்லிம்.

 

மேலும் இது சம்பந்தமாக சுமார் அறுபது ஸஹீஹான ஹதீஸ்களை என்னுடைய (معارج القبول)  மஆரிஜுல் கபூல் எனும் புத்தகத்தில் கூறியுள்ளேன்.​

  1. கப்ருகளிலிருந்து (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதற்கான ஆதாரம் யாது?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;   (மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுப வர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

 

நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர் களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன் என்பதற்கு இதுவே போதுமான (அத்தாட்சியாக இருக்கின்ற)து.

விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியது. அதில் சந்தேகமேயில்லை. (அந்நாளில்) சமாதி களில் (புதைந்து) கிடப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.” அல் ஹஜ் 5-7.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது.” அல் ரூம் 27.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம்.” அல் அன்பியா 104.  

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “(இவ்வாறி ருக்க) மனிதன் ‘நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா? ‘என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.

இதற்கு முன்னர் யாதொரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா?” மர்யம் 66,67.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்க மான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகின்றான்.

மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னை படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று (ஓர் எலும்பை எடுத்து அதனை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான்.

(நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: “முதல் முறையில் அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்). யாஸீன் 77-79.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; வானங்க ளையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன் தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்). அல் அஹ்காப் 33.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீங்கள் காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன்மீது நாம் மழையை பொழியச் செய்தால், அதில் (முளை கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்துபோன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன் மரணித்த வர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) ஆற்றலுடையவன்.” புஸ்ஸிலத் 39.

பெரும்பாலும் அல்லாஹ் காய்ந்து வரட்சியடைந்த பூமியை மழையினால் உயிர்பிப்பதையே அதற்கு  உதாரணமாக எடுத்துக் கூறுவதை இங்கு அவதானிக்கலாம்.

 

அகீதா பற்றிய கேள்வி பதில்

4ம் பாகம்

 

  • (கப்ருகளிருந்து உயிர் கொடுத்து) எழுப்பு வதைப் பொய்யாக்குபவனுக்கு எதிராக    வழங்கப் படும் தீர்ப்பு யாது​​​​?

விடை/

(கப்ருகளிருந்து உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பொய்யாக்குபவன் அல்லாஹ்வையும் அவனு டைய வேதங்களையும் மேலும் அவனுடைய தூதர்களை யும் நிராரித்தவனாவான்.

அல்லாஹ் கூறுகின்றான்; “(மரணித்து) உக்கி மண்ணாகப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப் படுவோமா?” என்று இந்நிராகரிப்ப வர்கள் கேட்கின்றனர்.சூரா அன் நம்ல் 67.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உங்களைப் பொய்யாக்கு வது பற்றி) நீங்கள் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதனை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) “நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?” என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனையே நிராக ரிக்கின்றனர். (ஆகவே மறுமையில்) இவர்களு டைய கழுத்தில் விலங்கிடப் படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்.அர்ரஃத் 5.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “(மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: “அவ்வாறன்று. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப் படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவை களைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே. அத்தகாபுன் 7.

 

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான் ஆனால் அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான் ஆனால், அது அவனுக்குத் (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்க மாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதை விட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்து விட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல) “அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான்” ​​​என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால் நானோ ஏகன் (எவரிடமும்) எந்த தேவையுமற்றவன், நான் யாரையும் பெற்றவனுமல்லன், யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை). நூல் புகாரி.

  • ஸூர் ஊதப்படுவதற்கும், அது எத்தனை முறைகள் ஊதப்படும் என்பதற்கும் ஆதாரம் தருக​​​​​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; “ஸூர் ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்ப வர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்.ஸுமுர் 68.

இத்திரு வசனத்தில் இரண்டு முறைகள் ஸூர் ஊதப்படுவதாகவும், அதில் முதலாம் ஸூர் ஊதப்பட்டதும் அனைவரும் மரணிப்பதாகவும், இரண்டாம் ஸூர் ஊதப்பட்டதும் எல்லோரும் எழுந்திருப்பதாகவும் வந்துள்ளது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஸூர் ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர் களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்). சூரா அன்னம்ல் 87.

 

இங்கு அல்லாஹ் குறிப்பிட்டுள்ள (الفزع) “திடுக்கிட்டு நடுங்குதல்” என்பது “ஸுமுர்” எனும் அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு முதலாவது ஸூர் ஊதப்பட்டதும் அனைவரும் மரணிப்பதைக் குறிப்பதாகும் என சில அறிஞர்கள் விளக்க மளித்துள்ளார்கள்​. இதையே ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில்​ குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் நபிமொழியும்உறுதிப்படுத்துவதாக அமைந்துள் ளது. ​(…பிறகு ஸூர் ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும், மறுபக்கம் உயரும் (அதாவது சுயநினைவிழந்து மூர்ச்சையாகி விடுவார்கள்) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக் கொண்டி ருக்கும்​​ மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து)விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். பிறகு அல்லாஹ் மழையொன்றை அனுப்புவான் அல்லது இறக்குவான். அது “பனித்துளி” அல்லது “நிழலைப்” போன்றிருக்கும். உடனே அதன் மூலம் மனிதர் களின் உடல்கள் மீண்டும் முளைக்கும். பிறகு மறுபடியும் ஒரு முறை ஸூர்  ஊதப்படும். அப்போது அவர்கள் அனைவரும் எழுந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

 

ஆனால் வேறு சில அறிஞர்களோ அதை மேல் குறிப்பிடப்பட்ட இரண்டு ஸூர்களுக்கும் முன்னதாக ஊதப்படும், தனியான வேறு ஒரு ஸூர் ஊதப்படும் எனத் தெளிவு படுத்தியுள் ளார்கள். ஸூர் சம்பந்தமாக வந்துள்ள நீண்ட ஹதீஸ் இக்கருத்தைத் தெளிவுபடுத்துகிறது, அதன் அடிப்படையில் பார்க்கும் போது மொத்தமாக ஊதப்படும் ஸூர்களின் எண்ணிக்கை மூன்றாகும் அவ்வொன் றுக்கிடையிலும் முறையே பின்வரும் நிகழ்வுகள் நடைபெறும்.1- நடுங்குதல் 2- மரணித்தல் 3- அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நிற்றல்.

 

  • (மறுமை நாளில் மனிதர்களை) ஒன்று சேர்க்கும் முறையை அல்குர்ஆனிலிருந்து விளக்குக?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; ((அன்றி, இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) “முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்று மில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள்) (என்று கூறுவான்.) அல் அன்ஆம் 94.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.அல் கஃப் 47.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;இறை அச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளி களைப் போல) கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்,

குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் ஓட்டுவோம்”. மர்யம் 85,86.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ((அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.

(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப் பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள் .)

(இரண்டாவது:)இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப் பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர் களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.) (மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள்) அல்வாகிஆ 7,10.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; அந்நாளில் அனைவரும் (ஸூர் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்கமாட்டீர்கள்.தாஹா 108.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள்தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அத்தகையவர்களுக்கு அவனை யன்றி உதவி செய்பவர்களை நீங்கள் காண மாட்டீர்கள். அன்றி, மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர் களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்). அல் இஸ்ரா 97.

 

இது தொடர்பாக மேலும் பல திருக்குர்ஆன் வசனங்கள் வந்துள்ளன.

  • (மறுமை நாளில் மனிதர்களை ஒன்று சேர்க்கும் முறையை) நபிமொழியிலிருந்து விளக்குக?

 

விடை/

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திறட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும்​ செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக் குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத் தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள் அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவார்.அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நோரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்; (ஒருவர், இறைத்தூதர் அவர்களே! இறை மறுப்பாளர் மருமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா? என்று  ​கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச்செய்திட முடியாதா? என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாத வர்களாக, நிர்வாணமானவர்களாக, காலால் நடந்தவர்களாக, விருத்த சேதனம் செய்யப் படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்; முதன் (முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம்) அல் அன்பியா 104.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மறுமை நாளில் படைப்பினங்களுக்கிடையே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

இது விடயமாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமாக) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்பார்களே எனக் கேட்டதற்கு அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

  • (மறுமை நாளின்) நிலை பற்றி அல் குர்ஆனிலிருந்து விளக்குக?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே!) இவ் வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப் படுத்தி வருவ தெல்லாம், திறந்த கண் திறந்த வாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்!

(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக் கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களு டைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்). இப்ராஹீம் 42,43.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (ஜிப்ரயீலும், மலக்குகளும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து “சரி! பேசும்” எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார். அந் நபஅ 38.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத் தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்). முஃமின் 18.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்”.  அல் மஆரிஜ் 4.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதி சீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன் வருவோம்.அர்ரஹ்மான் 31.

 

  • (மறுமை நாளின்) நிலை பற்றி நபிமொழி யிலிருந்து விளக்குக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக் கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் “(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் எனும் (திருக் குர்ஆன் 83:6  வது) இறைவசனத்தை ஓதிவிட்டு, அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய் விடுவார்” என்று கூறினார்கள்.​​ நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்)​ அவர்களுடைய வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்.”​ நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  • (மறுமை நாளின்) விசாரணை தொடர்பாகவும், அதற்காக நிறுத்தப்படுவது பற்றியும் அல்குர்ஆனிலிருந்து விளக்குக?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; ((மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது). அல் ஹாக்கா 18.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உங்கள் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறப்படுவார்கள்). அல் கஹப் 48.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ((அவர்களில் உள்ள) ஒவ்வொரு வகுப்பாரிலும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த வர்களை நாம் (பிரித்து) அணியணியாகக் கூட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.

 

அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) “நீங்கள் என்னுடைய வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதனைப் பொய் யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லை யாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந் தீர்கள்?” என்று கேட்பான். அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை ஏற்பட்டுவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது). அந் நம்ல் 83-85.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்தி ருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டு கொள்வார்.  (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்). அஸ்ஸில்ஸால் 6-8.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஆகவே) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் (நம்மிடம்) ஒன்று சேர்த்து, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி நிச்சயமாக (அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்போம்). அல் ஹிஜ்ர் 92.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டிய திருக்கின்றது” (என்றும் கூறப்படும்)). அஸ்ஸாப்பாத் 24.

 

  • (மறுமை நாளின்) விசாரணை தொடர்பாகவும், அதற்காக நிறுத்தப்படுவது பற்றியும் நபி மொழியிலிருந்து​ விளக்குக?

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

“(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது​ மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார் என்று அல்லாஹ் (திருக் குர்ஆன் 84:8) கூறவில்லையா? என ஆயிஷா (ரலி) கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும் எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்து விடுவான் என நபியவர்கள் கூறினார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு “உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூல​ம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாயல்லவா? என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் “ஆம்” என்று பதிலளிப்பான். அப்போது இதை விட சுலபமான ஒன்​றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப் பட்டிருந்தது (ஆனால் அதை நீ ஏற்கவில்லை என்று கூறப்படும்). நூல் புகாரி

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமையில்) உங்களில் ஒருவன் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்பான், அவனுக்கும் அல்லாஹ் வுக்குமிடையே திரையேதுமிருக்காது. மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்) நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா? எனக் கேட்க அவன் “ஆம்” என்பான், பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா? எனக் கேட்டதும் அவன் “ஆம்” என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்க வில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது  அந்த நரகத்திலிருந்து உங்களை கார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள். (நூற்கள் புகாரி முஸ்லிம்).

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(மறுமையில்) அல்லாஹூதஆலா முஃமி​னைத் தன் பக்கம் நெருங்கச்செய்து, அவன் மீது தன் திரையைப்போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான் அதற்கு அவன் ஆம், என் இறைவா! என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான். அந்த இறை நம்பிக்கையாளர், இத்தோடு நாம் ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன் இவற்றை யெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  • (மறுமை நாளில்) ஏடுகள் விரிக்கப்படும் விதத்தை அல்குர்ஆனிலிருந்து விளக்குக?

 

விடை/

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியி ருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான்.

(அச்சமயம் அவனை நோக்கி) “இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்” (என்று கூறுவோம்.)அல் இஸ்ரா 13,14.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஏடுகள் விரிக்கப்படும் போது) அத்தக்வீர் 10.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

 “(அவர்களுடைய தினசரிக் குறிப்புப் புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து “எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் வரையப் பட்டிருக் கின்றதே” என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான்). அல் கஹ்ப் 49.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய வலது கையில் கொடுக்கப்படுகின்றானோ அவன் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்) “இதோ! என்னுடைய ஏடு; இதனை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்றும்,

நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்” என்றும் கூறுவான்…) சூரா அல் ஹாக்கா வசனம் 19 முதல் 37 வரை.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ…) அல் இன்ஷிகாக் 7.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப் பட்டதோ…) அல் இன்ஷிகாக் 10.

மேற் கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள் மூலம் வலக்கரத்தால் செயலேட்டை பெற்றுக் கொள்ப வரின் பதிவேடு அவருடைய முன் புறத்தாலும், இடக்கரத்தால் செயலேட்டை பெற்றுக் கொள்பவரின் பதிவேடு அவருடைய முதுகுப் புறமாகவும் வழங்கப்படுவதாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது.    ​

 

  • அதற்குரிய ஆதாரத்தை நபிமொழியிலி ருந்து தருக​?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(மறுமையில்) அல்லாஹூதஆலா முஃமி​னைத் தன் பக்கம் நெருங்கச்செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான் அதற்கு அவன் ஆம், என் இறைவா! என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறை நம்பிக்கை யாளர், இத்தோடு நாம் ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன் இவற்றை யெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான் பிறகு அவரின் நற்செயல்களின் பதிவேடு (அவரிடம் வழங்கப்பட்டுச்) சுருட்டப் படும். “மற்றவர்கள் அல்லது இறைமறுப்பாளர் கள்” சாட்சியங்கள் முன்னிலையில் அழைக்கப் பட்டு (இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்து ரைத்தவர்கள்) (அல் குர்ஆன் 11/18) என்று அறிவிக்கப்படும்​​”. நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  • (மீஸான் எனும்) தராசுக்கும், அதில் நிறுக்கப்படும் முறைக்கும் அல் குர்ஆனிலிருந்து​ ஆதாரம் தருக?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;  மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மா வுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப் படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்த போதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை).அல் அன்பியா 47.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள் நம்முடைய வசனங்களுக்கு மாறு செய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்”. அல் அன்பியா 7,9.

அல்லாஹ் கூறுகின்றான்;(நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்தமாட்டோம்அல்  கஹ்ப் 105.

 

  • (மீஸான் எனும்) தராசுக்கும், அதில் நிறுக்கப்படும் முறைக்கும் நபிமொழியிலிருந்து​ ஆதாரம் தருக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

“இரண்டு சாட்சியங்களும் எழுதப்பட்ட காகித அட்டை தொடர்பாக வந்துள்ள நபிமொழியாகும், அ(க்காகித அட்டையான)து கண்ணுக்கு எட்டிய தூரத்தை ஒத்த தொண்ணுற்றொன்பது  குற்றப் பதிவேடுகளை விட (மீஸான் தராசில்) நிறை கூடியதாகும்”. நூல் திர்மிதி

 

மேலும் இப்னு மஸுத் (ரலி) விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள், “அவருடைய இரண்டு கால்களும் நளிவுற்று இருப்பதை கண்டு இவ்வளவு பிரமிக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவ்விரண்டு கால்களும் மீஸான் தராசில் உஹுத் மலையை விட நி​றை கூடியதாகும்.”​ நூல் முஸ்னத் அஹ்மத்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். என ஆபூ  ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். ​

  • (ஸிராத் எனும்) பாலத்துக்கு அல்குர்ஆனி லிருந்து​ ஆதாரம் தருக?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.

ஆனால், நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.மர்யம் 71,72.

 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும்”. அல் ஹதீத் 12.  

  1. (ஸிராத் எனும்) பாலத்துக்கு நபி மொழியிலிருந்து​ ஆதாரம் தருக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

ஒரு நீண்ட நபிமொழியில் நபியவர்கள்  (“நரகத்தின் மேலே பாலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்படும்​” எனக்கூறியதும் அது என்ன பாலம் என நபித்தோழர்கள் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் அது (கால்கள்) வழுக்குமிடம், சறுக்குமிடம். அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முற்கள் வளைந்திருக்கும். “நஜ்த்” பதுதியில் முளைக்கும் அவை “கருவேல மர முற்கள்”​​ எனப்படும். என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்) இறை நம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை ​கண் சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும்​ (விரைவாகக்) கடந்து செல்வார். எந்தக் காயமுமின்றி தப்பி விடுவோரும் உண்டு, காயத்துடன் தப்புவோரும் உண்டு, மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார்”. நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

அபூ (ஸஈத்) எனும் நபித் தோழர் கூறுகின்றார்; நிச்சயமாக அந்த பாலம் (தலை) மயிரை விட மெல்லியதும், வாளை விட மிகக் கூர்மையானது மாகும் என நான் அறிந்து வைத்திருக்கிறேன். ​

 

  1. (கிஸாஸ் எனும்) பழி வாங்களுக்குரிய ஆதாரத்தை அல் குர்ஆனிலிருந்து தருக?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிக   மான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதனை இரட்டிப்பாக்கித் தன் அருளால் பின்னும் அதற்கு மகத்தான கூலியைக் கொடுக் கின்றான்”. அன்னிஸா 40.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;” இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவைகள் செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப் படும். இன்றைய தினம் யாதொரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன்.

(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டை களை அடைத்துக்கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்.

(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான்.

ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவைகளோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூற முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்). அல் முஃமின் 17-20.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டு விடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீத மாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப் படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்). அஸ்ஸுமுர் 69.  

 

  1. (கிஸாஸ் எனும்) பழி வாங்களுக்குரிய ஆதாரத்தையும், அதன் முறையினையும் நபிமொழியிலிருந்து தருக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பான தாகத்தான் இருக்கும்). ​நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (ஒருவர் தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற் காசு களோ வெள்ளிக்காசுளோ) பயன் தரும் வாய்ப் பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும். ஏனெனில் மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற் செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதி யிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்). நூல் புகாரி​​ ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (இறை நம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும் போது சொர்கத்துக்கும் நரகத்துக்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக் காக சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்துக் கொள்வார் கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகி விடும் போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில்​ உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலுருந்த அவர் களின் இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்).​​ நூல் புகாரி

 

  1. (ஹவ்ல் அல் கவ்ஸர் எனும்) நீர் தடாகத்துக்குரிய ஆதாரத்தை அல் குர்ஆனி லிருந்து தருக?

 

விடை/

அல்லாஹ் அவனுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அவனுடைய திரு மறையில் பின் வருமாறு கூறுகின்றான், (நபியே!)   நிச்சயமாக நாம் உங்களுக்கு “கவ்ஸர்” என்னும் (சுவர்க்கத்தின்) தடாகத்தை கொடுத்திருக்கின் றோம்). சூரா அல் கவ்ஸர் வசனம் 1.

 

 

  1. (ஹவ்ல் அல் கவ்ஸர் எனும்) நீர் தடாகத்துக்கும், அதன் பண்புகளுக்கும் உரிய ஆதாரத்தை நபிமொழியிலிருந்து தருக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (முன் கூட்டியே நான் (அல்கவ்ஸர்) தடாகத்துக்குச் சென்று உங்களுகாக (நீர் புகட்டக்) காத்திருப்பேன்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

​​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நிச்சியமாக நான் உங்களுக்காக காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன்). நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(அல்கவ்ஸர் எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலை தூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கின்னங்கள் விண்மீன்களைப் போன்றவை. யார் அதன் நீரை அருந்து கிறார்களோ அவர்கள் ஒரு போதும் தாகமடைய மாட்டார்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் “ஜிப்ரீலே” இது என்ன? என்று கேட்டேன். இது அல்கவ்ஸர் என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்கள்). நூல் புகாரி.

 

  1. சுவர்க்கம் நரகம் போன்றவைகளை விசுவாசம் கொள்வதற்கான அதாரம் யாது?

 

விடை/

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக் கென தயார் செய்யப்பட்டுள்ளது.

(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல் களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக் கொண்டே யிருக்கும்.” ​சூரா அல் பகரா 24,25.

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகைக்காக விழிக்கும்போது பின்வருமாறு கூறுவார்கள்​; (யா அல்லாஹ்) அனைத்துப் புகழும் உனக்கே, நீயே சத்தியமானவன், உனது வாக்குறுதி சத்திய மானது, உனது சந்திப்பு சத்தியமானது, சுவனம் சத்தியமானது, நரகம் சத்தியமானது, நபிமார்கள் சத்தியமானவர்கள், மறுமை சத்தியமானது.​ நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ‘வணக்கத்துக்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகுக என்னும்) ஒரு வார்த்தை (யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான் என்றும், (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதி மொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத் தில் புகுத்துவான்’. நூற்கள் புகாரி முஸ்லிம்

 

  1. சுவர்க்கம் நரகம் போன்றவைகளை விசுவாசம் கொள்வதென்றால் என்ன ?

 

விடை/

 

சுவர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் இருப்பதையும், தற்பொழுது அவைகள் படைக்கப் பட்டுள்ளதையும், அவ்விரண்டும் அழியாது சுவர்க வாசிகளுக்காக எக்காலமும் நிலைத்திருப்ப தையும், மேலும் சுவர்க்கத்திலுள்ள இன்பங்கள், நரகத்திலுள்ள வேதனைகள் அனைத்தையும் உறுதியாக உண்மைப் படுத்துவதாகும்.

 

  1. தற்போது அவையிரண்டும் (படைக்கப் பட்டு தயார் நிலையில்) இருப்பதற்கான ஆதாரம் யாது?

 

விடை/

அல்லாஹ் தனது திருமரையில் சுவர்க்கத்தைப்பற்றி கூறும் போது; உங்கள் இறைவனின் மன்னிப்புக் கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார் படுத்தப்பட்டுள்ளது.ஆலு இம்ரான் 133. ​

மேலும் நரகத்தைப்பற்றிக் கூறும் போது; (நரக) நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்ப வர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.ஆலு இம்ரான் 131.

 

மேலும் நபி ஆதம் (அலை) அவர்களையும் அவர்களது மனைவியையும் (தடுக்கப்பட்ட) மரத்திலிருந்து புசிப்பதற்கு முன்னால் சுவர்க்கத் தில் ​குடியமர்த்திய செய்தியையும், காலையிலும், மாலையிலும் நிராகரிப்பாளர்களை நரக நெருப்பில்  எடுத்துக் காட்டப்படும் செய்தியையும் அல்லாஹ் எமக்கு திருக்குர்ஆனில் எடுத்துக் கூறியுள்ளான்.   ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நான் (மிஃராஜ்- விண்ணுலகப் பயணத்தின்போது) சுவர்க்கத்தை எட்டிப்பார்த்தேன், அங்கு குடியிருப் போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண் களைக் கண்டேன்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்கு மிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (வெப்பம் கடுமையாகும் போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள், ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்). நூற்கள் புகாரி முஸ்லிம்

 

​மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (இறைவா! என்னுடைய ஒரு பகுதியை, மறுபகுதி சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும், குளிர் காலத்துல் ஒரு மூச்சு விடுவ தற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்). நூற்கள் புகாரி முஸ்லிம் ​​​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோது, ஜிப்ரீல் (அலை) அவர்களை சுவர்கத்துக்கு அனுப்பி அதைப் பார்க்கும்படி கட்டளையிட்டான்.” நூற்கள் அபூதாவூத், திர்மிதி, நஸாஈ.

 

மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு சூரிய கிரகண தினத்தன்று அவ்விரண்டும் எடுத்துக்காட்டப் பட்டது, அவ்வாரே மிஃராஜ் உடைய இரவிலும் எடுத்துக்காட்டப்பட்டது தொடர்பாக எண்ணில டங்காத நபிமொழிகள் வந்துள்ளன. ​

 

  1. அவையிரண்டும் எப்போதும் அழியாது நிலைத்திருப்பதுக்கு ஆதாரம் யாது?

 

 

விடை/

சுவர்க்கத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது;அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார் படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலே யே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இது தான் மகத்தான பெரும் வெற்றியாகும்.சூரா அத் தவ்பா வசனம் 100.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;அதில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப் படவும் மாட்டார்கள்.அல் ஹிஜ்ர் 48.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அந்த சொர்க்கம்) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட் கொடையாகும். ஹூத் 108.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;அதன் கனிகள் (புசிக்க) தடுக்கவும் படாது. (பறிப்பதால்) குறை வடையவும் மாட்டாது. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.அல் வாகிஆ 33.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு அழிவே இல்லை (என்று கூறப்படும்.)ஸாத் 54.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (இறை அச்ச முடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் (இருப்பார்கள்),

அதுவும் சுவனபதி(யின் சோலை)யிலுள்ள ஊற்றுக்களின் சமீபமாக, மெல்லியதும் மொத்த மானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டா டைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.

 

இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). அன்றி, “ஹூருல் ஈன்” (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை) களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.

 

அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.

முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார் கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார் கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றி னான்.அத் துகான் 51-56

 

மேற் குறிப்பிடப்பட்ட வசனங்களில் சுவர்க்கமும் அதிலுள்ளவர்களும் நிரந்தரமானவர்கள் எனவும் அந்த சுவர்க்கத்துக்கு அழிவில்லை என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்.

 

நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது; (நரகத்தின் வழியைத் தவிர வேறு நேரான வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான். அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமே!) அன்னிஸா 169.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான்,

அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கி விடுவார்கள். (அவர்களை) பாதுகாத்துக் கொள்பவர் களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்). அஹ்ஸாப் 64,65.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்.அல் ஜின் 23.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.அல் பகரா 167.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;அவர்களு டைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.அஸ்ஸுக்ருப் 75. 

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;உண்மையா கவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகம் தான் கூலியாகும். அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக் கொண்டு குற்றுயிராகவே கிடப்பான்.தாஹா 74.

 

மேற்கூறப்பட்ட திருவசனங்களில் அந்த நரகத்துக்காகவே நரகவாசிகளையும், நரகவாசி களுக்காகவே நரகத்தையும் அல்லாஹ் படைத்துள் ளான் என்றும், அவர்கள் அந்த நரகத்திலிருந்து மீளவே மாட்டார்கள் என்றும், மேலும் அவர்க ளுடைய தண்டனை ஒரு போதும் குறைக்கப் படாது எனவும், அதில் அவர்கள் சாகவும் மாட்டார்கள் சுகத்துடன் வாழவும் மாட்டார்கள் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நரகவாசிகள் அதில் சாகவும் மாட்டார்கள் சுகத்துடன் வாழவும் மாட்டார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் ஒரு (வானவர் களில்) ஒருவர் “சொர்க்க வாசிகளே” இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள் “ஆம் இது தான் மரணம்” என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரக வாசிகளை நோக்கி; நரக வாசிகளே! என்று அழைப்பார் அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்பார். அவர்கள் ஆம் (அறிவோம்) இது தான் மரணம் என்று பதில் சொல்லுவார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்படும். பிறகு அவர், சொர்க்க வாசிகளே!​ நிரந்தரம் இனி மரணமே இல்லை. நரக வாசிகளே!​​ நிரந்தரம் இனி மரணமே இல்லை. என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள்; “(நபியே) நியாயத் தீர்ப்பளிக்கப் படும் துக்கம் நிறைந்த அந்த நாளைப்பற்றி ​​நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும் (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கின்றனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் எனும் (திருக்குர்ஆன் 19;39 வது) வசனத்தை ஓதினார்கள்.

 

  1. மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைக் காண்பதற்கு ஆதாரம் என்ன?

 

விடை/ ​​​​

அல்லாஹ் கூறுகின்றான்; அந்நாளில் சில (ருடைய) முகங்கள் மிக்க மகிழ்ச்சி யுடையவை யாக இருக்கும்.

(அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.அல் கியாமா 22,23.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;நன்மை செய்த வர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும்.யூனுஸ் 26.  

 

நிராகரிப்பாளர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.  “(விசாரணைக் காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.அல் முதப்பிபீன் 15.  

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(ஓர் இரவில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதிநான்காம் இரவின் முழு நிலவைக் கூர்ந்து நோக்கியபடி, இந்த நிலவை நீங்கள் நெருக்கடி யின்றிக் காண்பது போல் உங்களுடைய இறைவனையும் காண்பீர்கள்.​ எனவே சூரியன் உதிக்கு முன்னரும், சூரியன் மறையு முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு, “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்” எனும் திருக்குர்ஆன் 50;39 வது வசனத்தை ஓதினார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

மேற்கூறப்பட்ட நபிமொழியில் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பது பௌர்னமி நிலவைக் காண்பதுடன் உவமைப்படுத்தப் பட்டுள்ளதே தவிர, அந்த நி​லாவை அல்லாஹ்வுடன் உவமாணத்துக்கு எடுத்துக்​ கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதைப் போன்ற ஒரு கருத்தை பின்வரும் நபிமொழியிலும் அவதானிக்கலாம்.​

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்து விட்டால் வானவர்கள் இறைக்கட்டளைக்குப் பணிந்தவர் களாக தம் சிறகுகளை அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பா​றை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போன்று (வானவர்கள் கேட்பார்கள்). நூல் புகாரி.

இங்கும் செவிசாய்ப்பதை உவமைப் படுத்தப் பட்டுள்ளதே தவிர  செவிசாய்க்கப் பட்டதை அல்ல என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும், அல்லாஹ்வும், அவனுடைய எந்த ஒரு பண்பும் படைப்புகளுக்கு நிகாராக இருப்பதை விட்டும் மிகத் தூய்மையானவன். மேலும் அல்லாஹ்வைப் பற்றி நன்கு அறிந்த நபி (ஸல்) அவர்களுடைய எந்த ஒரு செய்தியும் அவ்வாரான கருத்தை எடுத்துரைக்கவு மில்லை​​.  ​​ ​​​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) “அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்)  தி​ரையை விலக்கி (முஃமின்களுக்கு தரிசனம் தந்தி) டுவான். அப்போது தம் இறைவைனக் (காணும் அவர்களுக்கு அவைனக்) காண்பதை விட மிகவும் விருப்பமானது வேரெதுவும் வழங்கப்பட்டிருக் காது. பிறகு “நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமும் கிடைக்கும். எனும் (10:26ஆவது) வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்”.  நூல் முஸ்லிம்.

 

(அல்லாஹ்வை மறுமையில் காண்பது தொடர்பாக) மேலும்  பல ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளன, அதில் முப்பதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் வாயிலாக கிடைக்கப் பெற்ற சுமார் நாப்பத்தி ஐந்து ஹதீஸ்களை (سلم الوصول) ஸுல்லமுல் வுஸுல் எனும் விளக்க நூலில் எடுத்துக் கூறியுள்ளோம். ஆகவே அதை மறுப்பவர் வேதத்தையும், அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்தவைகளையும் மறுத்தவரா வார். அத்துடன் அல்லாஹ் கூறியது போல்; அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.அல் முதப்பிபீன் 15.

 

  1. (மறுமை நாளின்) மன்றாட்டத்தை விசுவாசம் கொள்வதற்குரிய ஆதாரத்தையும்​, அது யாரால், யாருக்கு, எப்போது நிகழும் என்பதையும் விளக்குக?

 

விடை/

 

​மறுமை நாளில் அசாதாரண வரையரைகளுடன் கூடிய மன்றாட்டம் நிகழும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனின் பல இடங்களில் உறுதிப்படுத்தி யுள்ளதோடு, அவனே அதற்குச் சொந்தக்காரன் எனவும் வேறு எவருக்கும் அதில் எவ்விதப் பங்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளான்.

 

அல்லாஹ் கூறுகின்றான்; (பின்னும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.அஸ்ஸுமுர் 44.

 

அது நிகழும் நேரத்தைப் பொருத்த மட்டில், அல்லாஹ் அனுமதியளித்த பிறகே அது நிகழும் என்பதை அவனது திருமறையில் எங்களுக்கு அறியத் தந்துள்ளான்.​​

 

அல்லாஹ் கூறுகின்றான்; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார் தான் பரிந்து பேசக்கூடும்?”அல் பகரா 255. 

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர்களும் எவருமில்லை.யூனுஸ் 3.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். (எவருக்காகவும்) அவர்கள் பரிந்து பேசுவது யாதொரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தி யடைந்து அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர,” (அவர் பேசுவது பயனளிக்கும்). அந் நுஜ்ம் 26. 

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர (மற்றெந்த மலக்கும்) அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது.ஸபஃ 23. 

 

மறுமை நாளில் மன்றாடுபவர்களைப் பொருத்த மட்டில், அல்லாஹ்வுடைய நேசத்துக்கும் திருப்திக் கும் உரிய நல்லடியார்களுக்கு அவன் அனுமதி யளித்த பின்னரே மன்றாடுவார்கள் என அல்லாஹ் எங்களுக்கு திருக்குர்ஆனில் அறியத் தந்துள்ளான்.

 

அல்லாஹ் கூறுகின்றான்;ஜிப்ரயீலும், மலக்கு களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார் கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து “சரி! பேசும்” எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.அந் நபஃ 38.

 

 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச சக்தி பெற மாட்டார்.மர்யம் 87. 

 

மறுமை நாளின் மன்றாட்டங்களினால் பயன் பெறுபவர்களைப் பொருத்தமட்டில், அல்லாஹ் வின் திருப்தியை பெற்றுக் கொண்டவர்களுக்கே​   அதை அவன் வழங்குவதாக திருக்குர்ஆன் மூலம் எங்களுக்கு அறியத் தந்துள்ளான்,

அல்லாஹ் கூறுகின்றான்; “அவன் விரும்பியவர் களுக்கன்றி மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்.அல் அன்பியா 28. 

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது.தாஹா 109.

 

ஏனெனில் அல்லாஹ் இறை நம்பிக்கையாளர் களுடனும், தூய்மையாளர்களுடனும் மாத்திரமே திருப்தியடைகிறான். ஆனால் அவர்களைத் தவிர்ந்த ஏனையவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை அவனுடைய திருமறை யிலே பின் வருமாறு ​விளக்குகிறான்;

 

அல்லாஹ் கூறுகின்றான்; “அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்.முஃமின் 18.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே! (எங்கள் மீது அனுதாபமுள்ள) யாதொரு உண்மையான நண்பனுமில்லையே!அஷ் ஷுஅரா 100,101.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காது.அல் முத்தஸிர் 48.

 

நபி (ஸல்) அவர்கள் சிபார்சு செய்ய அல்லாஹ் வினால் அனுமதிக்கப் பட்டவர்கள். அவர்களே தன்னைப்பற்றிக் கூறும் போது ‘அவர்கள் அல்லாஹ்வினுடைய அரியாசனத்துக்கு கீழால் ஸஜ்தாவில் விழுவார்கள், பின்னர் இறைவன் அவருக்குக் கற்றுக் கொடுத்த புகழ் மொழிகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வார்கள், பிறகு “எழுங்கள் முஹம்மதே! சொல்லுங்கள் செவியேற் கப்படும்; பரிந்துரை செய்யுங்கள் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்; கேளுங்கள் உங்களுக்குத் தரப்படும் என்று சொல்லப்படும்… அப்போது அவர்கள் பாவம் செய்த இறை நம்பிக்கையா ளர்கள் அனைவருக்கும்  ஒட்டுமொத்தமாக சிபார்சு செய்ய மாட்டார்கள், மாறாக அல்லாஹ் பரிந்துரை செய்ய வரம்பு விதித்தவர்களுக்கு மாத்திரமே சிபார்சு செய்து அவர்களை சுவனத்தில் நுளைவிப்பார்கள். மிண்டும் ஸஜ்தா வில் விழுவார்கள்… (அந்த நபிமொழியின் தொடரச்சியைப்  பார்கவும்.’ நூற்கள் புகாரி முஸ்லிம்.​ ​​​​ ​

 

பிரிதோர் அறிவிப்பில் ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்கள் பரிந்துரைக்கு அதிகம் தகுதி படைத்த மனிதர் யார்? என அபூ ஹுரைரா (ரலி) கேட்ட போது, உள்ளத்திலிருந்து தூய்மையான எண்ணத்துடன் “வணக்கத்துக் குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறுமில்லை என்று சொன்னவர் தாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ நூற்கள் புகாரி, முஸ்னத் அஹ்மத்.

 

  1. (மறுமை நாளின்) மன்றாட்டம் எத்தனை வகைப்படும்​​​? அவைகளில் மிக மகத்தான மன்றாட்டம் யாது?

 

விடை/

அதன் வகைகளைப் பின்வருமாறு நோக்கலாம்.​

 

ஒன்று; கியாமத் நாளில் அல்லாஹுதஆலா அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவ தற்காக வரும்போது நிகழும் மன்றாட்டம். அதுவே (الشفاعة العظمى) மிக மகத்தான மன்றாட்டமாகும். அவ்வாறு மன்றாட எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும், என்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் வாக்களித்துள்ளான்.

 

அல்லாஹ் கூறுகின்றான்; “தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் “மகாமே மஹ்மூத்” என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம்.அல் இஸ்ரா 79.

 

மறுமை நாளில் இறை நம்பிக்கை யாளர்கள் கவலைப் படும் அளவுக்கு நிறுத்தி வைக்கப்படு வார்கள். அப்போது அவர்கள் (பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது நாம் கேட்டுக் கொண்டால் என்ன? என்று பேசிக் கொள்வார்கள் பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடமும், பின்னர் நூஹ் (அலை) அவர்க ளிடமும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்களி டமும், பின்னர் மூஸா (அலை) அவர்களிடமும், பின்னர் ஈஸா (அலை) அவர்களிடமும் சென்று தங்களுக்காக இறைவனிடம் மன்றாடுமாறு கோறு வார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் அவர்களின் கோரிக்கைகளை மறுத்து,​ ஓவ்வொரு வரும் எனது ஆத்மாவே! எனது ஆத்மாவே! என கூறிக் கொண்டிருப்பார்கள். இறுதியாக அவர்கள் அனைவருமாக நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள், உடனே அவர்கள் “ஆம் நான் தான் அதற்குரியவன்” எனக் கூறுவார்கள்…” (அந்த நபிமொழியின் தொடர்ச்சியைப் விரிவாகப் பார்கவும்). நூற்கள் புகாரி முஸ்லிம். ​

​​​​இரண்டு; சுவனத்தின் வாயிலை (அதன் காவலாளியிடம்) திறக்கக் கோறுமிடத்தில் மன்றா டுதல், (சுவர்க்கவாசிகளுக்காக) அதை திறக்கக் கோரி முதலில் மன்றாடுபவர் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். பின்னர் அவ்வாயிலுனூடாக முதலில் சுவர்க்கத்தில் நூழை பவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களாவார்கள்.

 

மூன்று; (அல்லாஹ்வினால்) நரகத்தில் நுழைவிக்க கட்டளையிடப்பட்ட சில நரகவாசிகளை அதில் நூழைய விடாது காப்பாற்றுவதற்காக மன்றாடுதல்.

 

நான்கு; நரகத்தில் நுளைவிக்கப்பட்ட (பாவம் செய்த) இறைநம்பிக்கையாளர்களை வெளி யேற்றுவதற்காக மன்றாடுதல், அவ்வேளை அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே (சொர்க்க வாசலில் உள்ள “மாஉல் ஹயாத்” எனும்) ஜீவ நதியில் அவர்கள் போடப் படுவார்கள். பின்னர் அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரு மறுங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள்.​

 

ஐந்து; சொர்க்கவாசிகள் சிலரின் அந்தஸ்துகளை உயர்த்தும்படி வேண்டி (அல்லாஹ்விடத்தில்) நிகழும் மன்றாட்டம்.

 

இறுதியாகக் கூறப்பட்ட மூன்று வகையான மன்றாட்டங்களும் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரித்துடையது அல்ல. மாறாக அதில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற போதிலும் அவர்களுக்குப் பின்னால் ஏனைய நபிமார்களும், வானவர்களும், (அவ்லியா எனப்படும் அல்லாஹ்வின்) நேசர் களும், மன்றாடுவார்கள், இறுதியாக அல்லாஹ் தன் கருனையினால் எவ்வித மன்றாட்டமும் இல்லாமல் நரகத்திலிருந்து ஒரு தொகையினரை வெளியேற்றி சுவனத்தில் நுழைவிப்பான், அவ்வாறு வெளியேற்றப் படுபவர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள்.      ​​

 

ஆறு; நிராகரிப்பாளர்களில் சில கூட்டத்தினரின் வேதனையைக் குறைக்க வேண்டி அல்லாஹ் விடம் மன்றாடுதல். எங்கள் நபி மஹம்மத் (ஸல்) அவர்களுடைய சிறிய தந்தையாகிய “ஆபூ தாலிப்” அவர்களுகாக மன்றாட நபியவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

 

  1. ஒருவர் செய்த நற்செயல்கள் மூலம் தன்னை நரகிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவோ அல்லது சுவர்க்கத்தில் நுளையவோ முடியுமா?

 

விடை/

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “நடு நிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள். அறிந்து கொள்ளுங்கள்; உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது” என்று சொன்னார்கள். உடனே மக்கள், “தங்கைளயுமா (தங்களின் நற்செயல் காப்பாற்று வதில்லை) அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னையும்தான், அல்லாஹ் தனது தனிக் கரு​ணையாலும் பேரருளாலும் என்னை அரவைணத்துக் கொண்டால் தவிர” என்று சொன்னார்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள்; “நடுநிலையாக (நற்) செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்க மாகச் செயலாற்றுங்கள். நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் யாரையும் அவரது நற்செயல் ஒரு போதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது” என்று கூறினார்கள். உடனே மக்கள் “தங்கைகளையுமா அல்லாஹ்வின் தூதேர?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “என்னையும்தான், அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவைணத்துக் கொண்டால் தவிர. அறிந்து கொள்ளுங்கள்! நற்செயல்களில் அல்லாஹ் வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற் செயலே ஆகும்.” என்று  சொன்னார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  1. மேற்கூறப்பட்ட நபிமொழிக்கும் அல்லாஹ் வின் திருவசனமாகிய “பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப் பட்டுள்ளீர்கள்.என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.?” 7;43 என்பதுக்கு மிடையில் எவ்வாறு ஒற்றுமை காணலாம்?

 

விடை/

 

அவ்விரண்டுக்கு மிடையில் எத்தகைய முரண்பாடு களும் இல்லை​, ஏனெனில் அல்குர்ஆன் வசனத் தில் வந்துள்ள  (باء)“பா” எனும் அரபு எழுத்து இங்கு “காரணத்தைக்” குறிப்பதற் குரிய தாகும். அதாவது நற்செயல்கள் தான் ஒரு மனிதனை சுவர்க்கத்தில் நுழைவிக்க காரணமாக அமையும்​ என்பதைக் குறிக்கும். அதன் அடிப்படையில் நற்செயல்கள் இன்றி எவருக்கும் சுவர்க்கம் நுழைய முடியாது, ஆனால் மேற் கூறப்பட்ட நபிமொழின் வாயிலாக மறுக்கப்பட்டுள்ள விடயம் என்னவெனில் அந்த நற்செயல்களின் பெறுமதியேயாகும். அதாவது ஒரு அடியானுக்கு இந்த உலகத்தின் வயதை ஒத்த ஆயுள் வழங்கப்பட்டு பின்னர் அவ்வாயுள் பூராக அவன் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்கி, தீமைகளை விட்டொழித்து நற்   செயல்கள் புரிந்தாலும் அவையனைத்தும் ​அல்லாஹ் அவனுக்கு அந்தரங்கமாகவும் வெளிரங்கமாகவும் வழங்கிய அருட்கொடைகளில் மிகவும் சிறிய ஒரு அருட் கொடையின் நூற்றில் ஒன்றுக்கேனும் ஈடாகாது. அவ்வாராயின் ஒரு மனிதனுடைய நற்செயல்கள் மாத்திரம் அவனை  சுவனத்தில் நுழைவிப்பதற்கு  எவ்வாறு பெறுமதியுள்ளதாக அமையும்!!?

 

என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கிருபை செய்வாயாக! கிருபை செய்பவர்களி லெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.அல் முஃமினூன் 118. ​ ​​

 

  1. (கத்ர் எனும்) விதியை சுறுக்கமாக விசுவாசம் கொள்வதற்கு ஆதாரம் என்ன?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே தீர்மாணிக்கப்பட்டு விடுகின்றன”. அல் அஹ்ஸாப் 38.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;செய்யப் பட வேண்டிய காரியத்தைச் செய்து முடிப்பதற்காக (இறைவன் இந்நிலையை ஏற்படுத்தினான்)”. அல் அன்பால் 42.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (இது நடை பெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்). அல் அஹ்ஸாப் 37.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ் வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை (சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகின்றான்”. அத்தகாபுன் 11. 

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப் படியே தான் (ஏற் பட்டது.) உண்மை நம்பிக்கையாளர் களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப் பதற்காகவே (இவ்வாறு செய்தான்)ஆல இம்ரான் 166.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; சோதனைக் குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சய மாக நாம் அவனிடமே மீளுவோம்” எனக் கூறுவார்கள்.

இத்தகையவர்கள் மீது தான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள்.”.அல் பகரா 156.157.

 

ஹதீஸ் ஜிப்ரீல் எனும் பிரபல்யமான நபிமொழியில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது;​ (அல்லாஹ்வின் தூதேர!  ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?” என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய  வானவர்களை யும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும் அவனுடைய தூதர்கைளயும்  நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக  அனைவரும்) உயிருடன் எழுப்பப் படுவைத நீங்கள் நம்புவதும், விதியை முழுமை​யாக நம்புவதும் ஆகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்” என்றார்.” நூற்கள் முஸ்லிம், அபூ தாவூத்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “உமக்கு ஏற்பட்ட யாவும் ஒரு போதும் உம்மை விட்டும் விலகிச் சென்றிருக்காது, மேலும் உம்மை விட்டு விலகிச் சென்ற எதுவும்  ஒரு போதும் உமக்கு ஏற்பட்டிருக்காது.” நூற்கள் அபூ தாவூத், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி  தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது,  “நான் (இப்படிச்)  செய்திருந்தால் அப்படி அப்படி ஆகியிருக்குமோ” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்து விட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல்.  நூற்கள் முஸ்லிம், இப்னு மாஜா.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;  “இயலா​மை, புத்திசாலித்தனம் ஆயைவை உட்பட ஒவ்வொ​​ரு  பொருளும் விதியின் படியே (அமைகின்றன).’ நூல் முஸ்லிம்.

 

  1. (கத்ர் எனும்) விதியை விசுவாசம் கொள்வது எத்தனை நிலைகளைக் கொண்டது?

விடை/

(கத்ர் எனும்) விதியை விசுவாசம் கொள்வது நான்கு நிலைகளைக் கொண்டது;

 

முதலாவது நிலை; எல்லாவற்றையும் ஆழமாக அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ்வின் அறிவை விசுவாசம் கொள்வதும், வானங்களிலும், பூமியிலும் அவற்றுக்கிடையில்  உள்ளவற்றிலும் ஓர் அணு வளவும் அவனுடைய அறிவுக்கு அப்பாட்பட்டு விடாது என்றும் எல்லாப் படைப்புகளையும் படைக்கு முன்பே அல்லாஹ் அவைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்றும் அவர்களின் உணவையும், ஆயுளையும், பேச்சுக்களையும், செயல்களையும், அசைவுகளை யும், அசைவற்ற நிலைகளையும், அவர்களின் இரகசியங்களையும், பரகசியங்களையும், அவர் களில் சுவர்கவாசிகள் யார், நரக வாசிகள் யார் போன்ற அனைத்து விபரங்களையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான்​ என்றும் விசுவாசம்  கொள்வதாகும்.  ​

 

இரண்டாவது நிலை; மேலே கூறப்பட்ட படி அல்லாஹ் அறிந்து வைத்திருக்கும் அனைத்தையும் எழுதி வைத்துள்ளான் என்றும், (லவ்ஹுல் மஃபூல், கலம் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகை, எழுதுகோள் போன்றவைகளையும் விசுவாசம் கொள்வதாகும்.

 

மூன்றாவது நிலை; அல்லாஹ்வுடைய நாட்டத்தையும், அவனுடைய சக்தியையும் விசுவாசம் கொள்வதாகும். மேலும் (இது வரைக்கும்) நடந்து முடிந்த அல்லது எதிர்காலத்தில்​ நடக்க விருக்கும் அனைத்து விடயங்களையும் பொருத்த மட்டில் அவனுடைய சக்தியும் நாட்டமும் இணை பிரியாதவை, அதாவது அல்லாஹ் நாடியவை யாவும் சந்தேகமின்றி அவனுடைய வள்ளமையால் நடந்தே தீரும் ஆனால் அவன் நாடாத எந்த ஒன்றும் “அவன் நாடவில்லை”  என்ற ஒரே காரணத்துக்காக​நடைபெறாது, அன்றி அவன் அவ்விடயத்தில் சக்தி யற்றவன் என்பதற்காக அது நடைபெறவில்லை என்று பொருள்கொள்வது முற்றிலும் தவராகும். அத்தகைய கருத்துகளை விட்டும் அவன் உயரத்தியானவன்.

அல்லாஹ் கூறுகின்றான்; (வானத்திலோ, பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ் வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் பெரும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்). பாதிர் 44.

 

நான்காவது நிலை; வானங்களுக்கும் பூமிக்கும் அவையிரண்டுக்கிடையில் உள்ள அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்தான் என்றும், அவைகளு டைய அசைவையும், அசைவற்ற நிலையையும் அவனே அறிந்தவன் என்றும், அவனையன்றி படைப்பவனோ, பராமரிப்பவனோ கிடையாது என்றும் விசுவாசம் கொள்வதாகும்.​​​​

 

  1. “அல்லாஹ்வின் அறிவை விசுவாசம் கொள்ளுதல்” என்ற முதலாவது நிலைக்கு ஆதாரம் என்ன?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படையான தையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்.  நிகரற்ற அன்புடையவன்.அல் ஹஷ்ர் 22.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றான்.) அத் தலாக் 12.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ள வற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவை விட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் “லவ்ஹுல் மஹ்ஃபூள்” என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப் படாமல் இல்லை.சபஃ 3.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;மறைவான வற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார்.அல் அன்ஆம் 59.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ் தான் நன்கறிவான்.அல் அன்ஆம் 124.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன் தான் நன்கறிவான்.அன்னஹ்ல் 125. அல்கலம் 7.​

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?” அல் அன்ஆம் 53.

 

 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?” அல் அன்கபூத் 10.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உனது பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத் தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். அதற்கவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்” எனக் கூறி விட்டான்.அல் பகரா 30.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்;  நீங்கள் அறியமாட்டீர்கள்.அல் பகரா 216

 

நபி (ஸல்) அவர்களிடம் (அல்லாஹ்வின்  தூதேர! ‘சிறிய வயதில் இறந்து விட்டவரின் நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று வினவப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டி ருப்பார்கள் என்பைத அல்லாஹ் நன்கு அறிவான்”  என்று  சொன்னார்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (அல்லாஹ் சிலரை அவர்களின் தந்தைமார்களின் முதுகுத் தண்டுகளில் இருக்கும் போதே சுவர்க்கத் துக்கு உரியவர்கள் என படைத்தான். மேலும் சிலரை அவர்களின் தந்தைமார்களின் முதுகுத் தண்டுகளில் இருக்கும் போதே நரகத்துக்கு உரியவர்கள் என படைத்தான்.) நூல் முஸ்லிம். ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “உங்களில் யாரும்”  பிறந்து விட்ட  எந்த  உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது  நரகத்திலா என்று  அல்லாஹ்வால் எழுதப்படாமல்  இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்து விட மாட்டோமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற் பேறற்றவராக இருப்பாரோ அவர்  நற்பேறற்ற வர்களின் செயலுக்கு மாறுவார்.” என்று கூறினார் கள். மேலும் அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப் பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவர்களுக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய  வகை செய்யப் படும்” என்று கூறினார்கள். பிறகு “யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி,  நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ​ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செ​ய்து, தேவயற்றவராகத்  தன்னைக் கருதி,  நல்லதை நம்ப மறுக்கிறாரோ,  அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம். (92:5-10) எனும் வசனங்களை ஓதிக் காட்டி னார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

அகீதா பற்றிய கேள்வி பதில்

4ம் பாகம்

 

  • (கப்ருகளிருந்து உயிர் கொடுத்து) எழுப்பு வதைப் பொய்யாக்குபவனுக்கு எதிராக    வழங்கப் படும் தீர்ப்பு யாது​​​​?

விடை/

(கப்ருகளிருந்து உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பொய்யாக்குபவன் அல்லாஹ்வையும் அவனு டைய வேதங்களையும் மேலும் அவனுடைய தூதர்களை யும் நிராரித்தவனாவான்.

அல்லாஹ் கூறுகின்றான்; “(மரணித்து) உக்கி மண்ணாகப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப் படுவோமா?” என்று இந்நிராகரிப்ப வர்கள் கேட்கின்றனர்.” சூரா அன் நம்ல் 67.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உங்களைப் பொய்யாக்கு வது பற்றி) நீங்கள் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதனை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) “நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?” என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனையே நிராக ரிக்கின்றனர். (ஆகவே மறுமையில்) இவர்களு டைய கழுத்தில் விலங்கிடப் படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்.” அர்ரஃத் 5.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “(மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: “அவ்வாறன்று. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப் படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவை களைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.” அத்தகாபுன் 7.

 

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான் ஆனால் அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான் ஆனால், அது அவனுக்குத் (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்க மாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதை விட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்து விட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல) “அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான்” ​​​என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால் நானோ ஏகன் (எவரிடமும்) எந்த தேவையுமற்றவன், நான் யாரையும் பெற்றவனுமல்லன், யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை). நூல் புகாரி.

  • ஸூர் ஊதப்படுவதற்கும், அது எத்தனை முறைகள் ஊதப்படும் என்பதற்கும் ஆதாரம் தருக​​​​​?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; “ஸூர் ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்ப வர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்.” ஸுமுர் 68.

இத்திரு வசனத்தில் இரண்டு முறைகள் ஸூர் ஊதப்படுவதாகவும், அதில் முதலாம் ஸூர் ஊதப்பட்டதும் அனைவரும் மரணிப்பதாகவும், இரண்டாம் ஸூர் ஊதப்பட்டதும் எல்லோரும் எழுந்திருப்பதாகவும் வந்துள்ளது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஸூர் ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர் களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்). சூரா அன்னம்ல் 87.

இங்கு அல்லாஹ் குறிப்பிட்டுள்ள (الفزع) “திடுக்கிட்டு நடுங்குதல்” என்பது “ஸுமுர்” எனும் அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு முதலாவது ஸூர் ஊதப்பட்டதும் அனைவரும் மரணிப்பதைக் குறிப்பதாகும் என சில அறிஞர்கள் விளக்க மளித்துள்ளார்கள்​. இதையே ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில்​ குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் நபிமொழியும்உறுதிப்படுத்துவதாக அமைந்துள் ளது. ​(…பிறகு ஸூர் ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும், மறுபக்கம் உயரும் (அதாவது சுயநினைவிழந்து மூர்ச்சையாகி விடுவார்கள்) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக் கொண்டி ருக்கும்​​ மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து)விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். பிறகு அல்லாஹ் மழையொன்றை அனுப்புவான் அல்லது இறக்குவான். அது “பனித்துளி” அல்லது “நிழலைப்” போன்றிருக்கும். உடனே அதன் மூலம் மனிதர் களின் உடல்கள் மீண்டும் முளைக்கும். பிறகு மறுபடியும் ஒரு முறை ஸூர்  ஊதப்படும். அப்போது அவர்கள் அனைவரும் எழுந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் வேறு சில அறிஞர்களோ அதை மேல் குறிப்பிடப்பட்ட இரண்டு ஸூர்களுக்கும் முன்னதாக ஊதப்படும், தனியான வேறு ஒரு ஸூர் ஊதப்படும் எனத் தெளிவு படுத்தியுள் ளார்கள். ஸூர் சம்பந்தமாக வந்துள்ள நீண்ட ஹதீஸ் இக்கருத்தைத் தெளிவுபடுத்துகிறது, அதன் அடிப்படையில் பார்க்கும் போது மொத்தமாக ஊதப்படும் ஸூர்களின் எண்ணிக்கை மூன்றாகும் அவ்வொன் றுக்கிடையிலும் முறையே பின்வரும் நிகழ்வுகள் நடைபெறும்.1- நடுங்குதல் 2- மரணித்தல் 3- அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நிற்றல்.

 

  • (மறுமை நாளில் மனிதர்களை) ஒன்று சேர்க்கும் முறையை அல்குர்ஆனிலிருந்து விளக்குக?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; ((அன்றி, இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) “முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்று மில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள்) (என்று கூறுவான்.) அல் அன்ஆம் 94.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.” அல் கஃப் 47.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “இறை அச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளி களைப் போல) கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில், குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் ஓட்டுவோம்”. மர்யம் 85,86.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ((அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.

(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப் பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள் .)

(இரண்டாவது:)இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப் பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர் களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.) (மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள்) அல்வாகிஆ 7,10.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; அந்நாளில் அனைவரும் (ஸூர் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்கமாட்டீர்கள்.” தாஹா 108.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள்தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அத்தகையவர்களுக்கு அவனை யன்றி உதவி செய்பவர்களை நீங்கள் காண மாட்டீர்கள். அன்றி, மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர் களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்). அல் இஸ்ரா 97.

 

இது தொடர்பாக மேலும் பல திருக்குர்ஆன் வசனங்கள் வந்துள்ளன.

  • (மறுமை நாளில் மனிதர்களை ஒன்று சேர்க்கும் முறையை) நபிமொழியிலிருந்து விளக்குக?

 

விடை/

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திறட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும்​ செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக் குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத் தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள் அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவார்.அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நோரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்; (ஒருவர், இறைத்தூதர் அவர்களே! இறை மறுப்பாளர் மருமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா? என்று  ​கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்த வனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச்செய்திட முடியாதா? என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாத வர்களாக, நிர்வாணமானவர்களாக, காலால் நடந்தவர்களாக, விருத்த சேதனம் செய்யப் படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்; முதன் (முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம்) அல் அன்பியா 104.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மறுமை நாளில் படைப்பினங்களுக்கிடையே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

இது விடயமாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமாக) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்பார்களே எனக் கேட்டதற்கு அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

  • (மறுமை நாளின்) நிலை பற்றி அல் குர்ஆனிலிருந்து விளக்குக?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே!) இவ் வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப் படுத்தி வருவ தெல்லாம், திறந்த கண் திறந்த வாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்!

(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக் கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களு டைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்). இப்ராஹீம் 42,43.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (ஜிப்ரயீலும், மலக்குகளும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து “சரி! பேசும்” எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார். அந் நபஅ 38.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ((நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத் தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்). முஃமின் 18.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்”.  அல் மஆரிஜ் 4.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதி சீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன் வருவோம்.” அர்ரஹ்மான் 31.

 

  • (மறுமை நாளின்) நிலை பற்றி நபிமொழி யிலிருந்து விளக்குக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக் கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் “(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்” எனும் (திருக் குர்ஆன் 83:6  வது) இறைவசனத்தை ஓதிவிட்டு, அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய் விடுவார்” என்று கூறினார்கள்.​​ நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்)​ அவர்களுடைய வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்.”​ நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  • (மறுமை நாளின்) விசாரணை தொடர்பாகவும், அதற்காக நிறுத்தப்படுவது பற்றியும் அல்குர்ஆனிலிருந்து விளக்குக?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; ((மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது). அல் ஹாக்கா 18.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உங்கள் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறப்படுவார்கள்). அல் கஹப் 48.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ((அவர்களில் உள்ள) ஒவ்வொரு வகுப்பாரிலும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த வர்களை நாம் (பிரித்து) அணியணியாகக் கூட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.

 

அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) “நீங்கள் என்னுடைய வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதனைப் பொய் யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லை யாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந் தீர்கள்?” என்று கேட்பான். அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை ஏற்பட்டுவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது). அந் நம்ல் 83-85.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்தி ருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டு கொள்வார்.  (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்). அஸ்ஸில்ஸால் 6-8.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஆகவே) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் (நம்மிடம்) ஒன்று சேர்த்து, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி நிச்சயமாக (அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்போம்). அல் ஹிஜ்ர் 92.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டிய திருக்கின்றது” (என்றும் கூறப்படும்)). அஸ்ஸாப்பாத் 24.

 

  • (மறுமை நாளின்) விசாரணை தொடர்பாகவும், அதற்காக நிறுத்தப்படுவது பற்றியும் நபி மொழியிலிருந்து​ விளக்குக?

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

“(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது​ “மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்” என்று அல்லாஹ் (திருக் குர்ஆன் 84:8) கூறவில்லையா? என ஆயிஷா (ரலி) கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும் எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்து விடுவான் என நபியவர்கள் கூறினார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு “உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூல​ம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாயல்லவா? என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் “ஆம்” என்று பதிலளிப்பான். அப்போது இதை விட சுலபமான ஒன்​றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப் பட்டிருந்தது (ஆனால் அதை நீ ஏற்கவில்லை என்று கூறப்படும்). நூல் புகாரி

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமையில்) உங்களில் ஒருவன் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்பான், அவனுக்கும் அல்லாஹ் வுக்குமிடையே திரையேதுமிருக்காது. மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்) நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா? எனக் கேட்க அவன் “ஆம்” என்பான், பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா? எனக் கேட்டதும் அவன் “ஆம்” என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்க வில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது  அந்த நரகத்திலிருந்து உங்களை கார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள். (நூற்கள் புகாரி முஸ்லிம்).

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(மறுமையில்) அல்லாஹூதஆலா முஃமி​னைத் தன் பக்கம் நெருங்கச்செய்து, அவன் மீது தன் திரையைப்போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான் அதற்கு அவன் ஆம், என் இறைவா! என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான். அந்த இறை நம்பிக்கையாளர், இத்தோடு நாம் ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன் இவற்றை யெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  • (மறுமை நாளில்) ஏடுகள் விரிக்கப்படும் விதத்தை அல்குர்ஆனிலிருந்து விளக்குக?

 

விடை/

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியி ருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான்.

(அச்சமயம் அவனை நோக்கி) “இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்” (என்று கூறுவோம்.)” அல் இஸ்ரா 13,14.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (ஏடுகள் விரிக்கப்படும் போது) அத்தக்வீர் 10.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

 “(அவர்களுடைய தினசரிக் குறிப்புப் புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து “எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் வரையப் பட்டிருக் கின்றதே” என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான்). அல் கஹ்ப் 49.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய வலது கையில் கொடுக்கப்படுகின்றானோ அவன் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்) “இதோ! என்னுடைய ஏடு; இதனை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்றும்,

நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்” என்றும் கூறுவான்…) சூரா அல் ஹாக்கா வசனம் 19 முதல் 37 வரை.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ…) அல் இன்ஷிகாக் 7.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப் பட்டதோ…) அல் இன்ஷிகாக் 10.

மேற் கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள் மூலம் வலக்கரத்தால் செயலேட்டை பெற்றுக் கொள்ப வரின் பதிவேடு அவருடைய முன் புறத்தாலும், இடக்கரத்தால் செயலேட்டை பெற்றுக் கொள்பவரின் பதிவேடு அவருடைய முதுகுப் புறமாகவும் வழங்கப்படுவதாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது.    ​

 

  • அதற்குரிய ஆதாரத்தை நபிமொழியிலி ருந்து தருக​?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(மறுமையில்) அல்லாஹூதஆலா முஃமி​னைத் தன் பக்கம் நெருங்கச்செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான் அதற்கு அவன் ஆம், என் இறைவா! என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறை நம்பிக்கை யாளர், இத்தோடு நாம் ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன் இவற்றை யெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான் பிறகு அவரின் நற்செயல்களின் பதிவேடு (அவரிடம் வழங்கப்பட்டுச்) சுருட்டப் படும். “மற்றவர்கள் அல்லது இறைமறுப்பாளர் கள்” சாட்சியங்கள் முன்னிலையில் அழைக்கப் பட்டு (இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்து ரைத்தவர்கள்) (அல் குர்ஆன் 11/18) என்று அறிவிக்கப்படும்​​”. நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  • (மீஸான் எனும்) தராசுக்கும், அதில் நிறுக்கப்படும் முறைக்கும் அல் குர்ஆனி லிருந்து​ ஆதாரம் தருக?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்;  “மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மா வுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப் படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்த போதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை).” அல் அன்பியா 47.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) “அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள் நம்முடைய வசனங்களுக்கு மாறு செய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்”. அல் அன்பியா 7,9.

அல்லாஹ் கூறுகின்றான்;(நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்தமாட்டோம்” அல்  கஹ்ப் 105.

 

  • (மீஸான் எனும்) தராசுக்கும், அதில் நிறுக்கப்படும் முறைக்கும் நபி மொழியிலி ருந்து​ ஆதாரம் தருக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

“இரண்டு சாட்சியங்களும் எழுதப்பட்ட காகித அட்டை தொடர்பாக வந்துள்ள நபிமொழியாகும், அ(க்காகித அட்டையான)து கண்ணுக்கு எட்டிய தூரத்தை ஒத்த தொண்ணுற்றொன்பது  குற்றப் பதிவேடுகளை விட (மீஸான் தராசில்) நிறை கூடியதாகும்”. நூல் திர்மிதி

 

மேலும் இப்னு மஸுத் (ரலி) விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள், “அவருடைய இரண்டு கால்களும் நளிவுற்று இருப்பதை கண்டு இவ்வளவு பிரமிக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவ்விரண்டு கால்களும் மீஸான் தராசில் உஹுத் மலையை விட நி​றை கூடியதாகும்.”​ நூல் முஸ்னத் அஹ்மத்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். “மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்” எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். என ஆபூ  ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். ​

  • (ஸிராத் எனும்) பாலத்துக்கு அல்குர்ஆனி லிருந்து​ ஆதாரம் தருக?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; “அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.

ஆனால், நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.” மர்யம் 71,72.

 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  (நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும்”. அல் ஹதீத் 12.  

 

  1. (ஸிராத் எனும்) பாலத்துக்கு நபி மொழியிலிருந்து​ ஆதாரம் தருக?

 

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

ஒரு நீண்ட நபிமொழியில் நபியவர்கள்  (“நரகத்தின் மேலே பாலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்படும்​” எனக்கூறியதும் அது என்ன பாலம் என நபித்தோழர்கள் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் அது (கால்கள்) வழுக்குமிடம், சறுக்குமிடம். அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முற்கள் வளைந்திருக்கும். “நஜ்த்” பதுதியில் முளைக்கும் அவை “கருவேல மர முற்கள்”​​ எனப்படும். என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்) இறை நம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை ​கண் சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும்​ (விரைவாகக்) கடந்து செல்வார். எந்தக் காயமுமின்றி தப்பி விடுவோரும் உண்டு, காயத்துடன் தப்புவோரும் உண்டு, மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார்”. நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

அபூ (ஸஈத்) எனும் நபித் தோழர் கூறுகின்றார்; நிச்சயமாக அந்த பாலம் (தலை) மயிரை விட மெல்லியதும், வாளை விட மிகக் கூர்மையானது மாகும் என நான் அறிந்து வைத்திருக்கிறேன். ​

 

  1. (கிஸாஸ் எனும்) பழி வாங்களுக்குரிய ஆதாரத்தை அல் குர்ஆனிலிருந்து தருக?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; “நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிக   மான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதனை இரட்டிப்பாக்கித் தன் அருளால் பின்னும் அதற்கு மகத்தான கூலியைக் கொடுக் கின்றான்”. அன்னிஸா 40.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;” இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவைகள் செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப் படும். இன்றைய தினம் யாதொரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன்.

(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டை களை அடைத்துக்கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்.

(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான்.

ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவைகளோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூற முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்). அல் முஃமின் 17-20.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டு விடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீத மாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப் படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்). அஸ்ஸுமுர் 69.  

 

  1. (கிஸாஸ் எனும்) பழி வாங்களுக்குரிய ஆதாரத்தையும், அதன் முறையினையும் நபி மொழியிலிருந்து தருக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பான தாகத்தான் இருக்கும்). ​நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (ஒருவர் தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற் காசு களோ வெள்ளிக்காசுளோ) பயன் தரும் வாய்ப் பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும். ஏனெனில் மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற் செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதி யிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்). நூல் புகாரி​​ ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (இறை நம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும் போது சொர்கத்துக்கும் நரகத்துக்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக் காக சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்துக் கொள்வார் கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகி விடும் போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில்​ உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலுருந்த அவர் களின் இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்).​​ நூல் புகாரி

 

  1. (ஹவ்ல் அல் கவ்ஸர் எனும்) நீர் தடாகத்துக்குரிய ஆதாரத்தை அல் குர்ஆனி லிருந்து தருக?

 

விடை/

அல்லாஹ் அவனுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அவனுடைய திரு மறையில் பின் வருமாறு கூறுகின்றான், (நபியே!)   நிச்சயமாக நாம் உங்களுக்கு “கவ்ஸர்” என்னும் (சுவர்க்கத்தின்) தடாகத்தை கொடுத்திருக்கின் றோம்). சூரா அல் கவ்ஸர் வசனம் 1.

 

 

  1. (ஹவ்ல் அல் கவ்ஸர் எனும்) நீர் தடாகத்துக்கும், அதன் பண்புகளுக்கும் உரிய ஆதாரத்தை நபிமொழியிலிருந்து தருக?

 

விடை/

அது தொடர்பாக நிறையவே நபிமொழிகள் வந்துள்ளன. உதாரணத்துக்கு;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (முன் கூட்டியே நான் (அல்கவ்ஸர்) தடாகத்துக்குச் சென்று உங்களுகாக (நீர் புகட்டக்) காத்திருப்பேன்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

​​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நிச்சியமாக நான் உங்களுக்காக காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன்). நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(அல்கவ்ஸர் எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலை தூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கின்னங்கள் விண்மீன்களைப் போன்றவை. யார் அதன் நீரை அருந்து கிறார்களோ அவர்கள் ஒரு போதும் தாகமடைய மாட்டார்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் “ஜிப்ரீலே” இது என்ன? என்று கேட்டேன். இது அல்கவ்ஸர் என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்கள்). நூல் புகாரி.

  1. சுவர்க்கம் நரகம் போன்றவைகளை விசுவாசம் கொள்வதற்கான அதாரம் யாது?

 

விடை/

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக் கென தயார் செய்யப்பட்டுள்ளது.

(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல் களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக் கொண்டே யிருக்கும்.” ​சூரா அல் பகரா 24,25.

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகைக்காக விழிக்கும்போது பின்வருமாறு கூறுவார்கள்​; (யா அல்லாஹ்) அனைத்துப் புகழும் உனக்கே, நீயே சத்தியமானவன், உனது வாக்குறுதி சத்திய மானது, உனது சந்திப்பு சத்தியமானது, சுவனம் சத்தியமானது, நரகம் சத்தியமானது, நபிமார்கள் சத்தியமானவர்கள், மறுமை சத்தியமானது.​ நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ‘வணக்கத்துக்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகுக என்னும்) ஒரு வார்த்தை (யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான் என்றும், (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதி மொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத் தில் புகுத்துவான்’. நூற்கள் புகாரி முஸ்லிம்

 

  1. சுவர்க்கம் நரகம் போன்றவைகளை விசுவாசம் கொள்வதென்றால் என்ன ?

 

விடை/

 

சுவர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் இருப்பதையும், தற்பொழுது அவைகள் படைக்கப் பட்டுள்ளதையும், அவ்விரண்டும் அழியாது சுவர்க வாசிகளுக்காக எக்காலமும் நிலைத்திருப்ப தையும், மேலும் சுவர்க்கத்திலுள்ள இன்பங்கள், நரகத்திலுள்ள வேதனைகள் அனைத்தையும் உறுதியாக உண்மைப் படுத்துவதாகும்.

 

  1. தற்போது அவையிரண்டும் (படைக்கப் பட்டு தயார் நிலையில்) இருப்பதற்கான ஆதாரம் யாது?

 

விடை/

அல்லாஹ் தனது திருமரையில் சுவர்க்கத்தைப்பற்றி கூறும் போது; “உங்கள் இறைவனின் மன்னிப்புக் கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார் படுத்தப்பட்டுள்ளது.” ஆலு இம்ரான் 133. ​

மேலும் நரகத்தைப்பற்றிக் கூறும் போது; (நரக) “நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்ப வர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.” ஆலு இம்ரான் 131.

 

மேலும் நபி ஆதம் (அலை) அவர்களையும் அவர்களது மனைவியையும் (தடுக்கப்பட்ட) மரத்திலிருந்து புசிப்பதற்கு முன்னால் சுவர்க்கத் தில் ​குடியமர்த்திய செய்தியையும், காலையிலும், மாலையிலும் நிராகரிப்பாளர்களை நரக நெருப்பில்  எடுத்துக் காட்டப்படும் செய்தியையும் அல்லாஹ் எமக்கு திருக்குர்ஆனில் எடுத்துக் கூறியுள்ளான்.   ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நான் (மிஃராஜ்- விண்ணுலகப் பயணத்தின்போது) சுவர்க்கத்தை எட்டிப்பார்த்தேன், அங்கு குடியிருப் போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண் களைக் கண்டேன்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்கு மிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (வெப்பம் கடுமையாகும் போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள், ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்). நூற்கள் புகாரி முஸ்லிம்

 

​மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (இறைவா! என்னுடைய ஒரு பகுதியை, மறுபகுதி சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும், குளிர் காலத்துல் ஒரு மூச்சு விடுவ தற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்). நூற்கள் புகாரி முஸ்லிம் ​​​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோது, ஜிப்ரீல் (அலை) அவர்களை சுவர்கத்துக்கு அனுப்பி அதைப் பார்க்கும்படி கட்டளையிட்டான்.” நூற்கள் அபூதாவூத், திர்மிதி, நஸாஈ.

 

மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு சூரிய கிரகண தினத்தன்று அவ்விரண்டும் எடுத்துக்காட்டப் பட்டது, அவ்வாரே மிஃராஜ் உடைய இரவிலும் எடுத்துக்காட்டப்பட்டது தொடர்பாக எண்ணில டங்காத நபிமொழிகள் வந்துள்ளன. ​

 

  1. அவையிரண்டும் எப்போதும் அழியாது நிலைத்திருப்பதுக்கு ஆதாரம் யாது?

 

 

விடை/

சுவர்க்கத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது; “அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார் படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலே யே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இது தான் மகத்தான பெரும் வெற்றியாகும்.” சூரா அத் தவ்பா வசனம் 100.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அதில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப் படவும் மாட்டார்கள்.” அல் ஹிஜ்ர் 48.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அந்த சொர்க்கம்) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட் கொடையாகும்.” ஹூத் 108.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அதன் கனிகள் (புசிக்க) தடுக்கவும் படாது. (பறிப்பதால்) குறை வடையவும் மாட்டாது. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.” அல் வாகிஆ 33.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு அழிவே இல்லை (என்று கூறப்படும்.)” ஸாத் 54.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (இறை அச்ச முடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் (இருப்பார்கள்),

அதுவும் சுவனபதி(யின் சோலை)யிலுள்ள ஊற்றுக்களின் சமீபமாக, மெல்லியதும் மொத்த மானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டா டைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.

 

இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). அன்றி, “ஹூருல் ஈன்” (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை) களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.

 

அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.

முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார் கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார் கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றி னான்.” அத் துகான் 51-56

 

மேற் குறிப்பிடப்பட்ட வசனங்களில் சுவர்க்கமும் அதிலுள்ளவர்களும் நிரந்தரமானவர்கள் எனவும் அந்த சுவர்க்கத்துக்கு அழிவில்லை என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்.

 

நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது; (நரகத்தின் வழியைத் தவிர வேறு நேரான வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான். அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமே!) அன்னிஸா 169.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான்,

அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கி விடுவார்கள். (அவர்களை) பாதுகாத்துக் கொள்பவர் களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்). அஹ்ஸாப் 64,65.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்.” அல் ஜின் 23.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.” அல் பகரா 167.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அவர்களு டைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.” அஸ்ஸுக்ருப் 75.  

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “உண்மையா கவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகம் தான் கூலியாகும். அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக் கொண்டு குற்றுயிராகவே கிடப்பான்.” தாஹா 74.

 

மேற்கூறப்பட்ட திருவசனங்களில் அந்த நரகத்துக்காகவே நரகவாசிகளையும், நரகவாசி களுக்காகவே நரகத்தையும் அல்லாஹ் படைத்துள் ளான் என்றும், அவர்கள் அந்த நரகத்திலிருந்து மீளவே மாட்டார்கள் என்றும், மேலும் அவர்க ளுடைய தண்டனை ஒரு போதும் குறைக்கப் படாது எனவும், அதில் அவர்கள் சாகவும் மாட்டார்கள் சுகத்துடன் வாழவும் மாட்டார்கள் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (நரகவாசிகள் அதில் சாகவும் மாட்டார்கள் சுகத்துடன் வாழவும் மாட்டார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் ஒரு (வானவர் களில்) ஒருவர் “சொர்க்க வாசிகளே” இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள் “ஆம் இது தான் மரணம்” என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரக வாசிகளை நோக்கி; நரக வாசிகளே! என்று அழைப்பார் அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்பார். அவர்கள் ஆம் (அறிவோம்) இது தான் மரணம் என்று பதில் சொல்லுவார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்படும். பிறகு அவர், சொர்க்க வாசிகளே!​ நிரந்தரம் இனி மரணமே இல்லை. நரக வாசிகளே!​​ நிரந்தரம் இனி மரணமே இல்லை. என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள்; “(நபியே) நியாயத் தீர்ப்பளிக்கப் படும் துக்கம் நிறைந்த அந்த நாளைப்பற்றி ​​நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும் (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கின்றனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் எனும் (திருக்குர்ஆன் 19;39 வது) வசனத்தை ஓதினார்கள்.

  1. மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைக் காண்பதற்கு ஆதாரம் என்ன?

 

விடை/ ​​​​

அல்லாஹ் கூறுகின்றான்; “அந்நாளில் சில (ருடைய) முகங்கள் மிக்க மகிழ்ச்சி யுடையவை யாக இருக்கும்.

(அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.” அல் கியாமா 22,23.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “நன்மை செய்த வர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும்.” யூனுஸ் 26.  

 

நிராகரிப்பாளர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.  “(விசாரணைக் காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.” அல் முதப்பிபீன் 15.  

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “(ஓர் இரவில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதிநான்காம் இரவின் முழு நிலவைக் கூர்ந்து நோக்கியபடி, இந்த நிலவை நீங்கள் நெருக்கடி யின்றிக் காண்பது போல் உங்களுடைய இறைவனையும் காண்பீர்கள்.​ எனவே சூரியன் உதிக்கு முன்னரும், சூரியன் மறையு முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு, “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்” எனும் திருக்குர்ஆன் 50;39 வது வசனத்தை ஓதினார்கள்). நூற்கள் புகாரி முஸ்லிம்.

மேற்கூறப்பட்ட நபிமொழியில் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பது பௌர்னமி நிலவைக் காண்பதுடன் உவமைப்படுத்தப் பட்டுள்ளதே தவிர, அந்த நி​லாவை அல்லாஹ்வுடன் உவமாணத்துக்கு எடுத்துக்​ கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதைப் போன்ற ஒரு கருத்தை பின்வரும் நபிமொழியிலும் அவதானிக்கலாம்.​

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்து விட்டால் வானவர்கள் இறைக்கட்டளைக்குப் பணிந்தவர் களாக தம் சிறகுகளை அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பா​றை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போன்று (வானவர்கள் கேட்பார்கள்). நூல் புகாரி.

இங்கும் செவிசாய்ப்பதை உவமைப் படுத்தப் பட்டுள்ளதே தவிர  செவிசாய்க்கப் பட்டதை அல்ல என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும், அல்லாஹ்வும், அவனுடைய எந்த ஒரு பண்பும் படைப்புகளுக்கு நிகாராக இருப்பதை விட்டும் மிகத் தூய்மையானவன். மேலும் அல்லாஹ்வைப் பற்றி நன்கு அறிந்த நபி (ஸல்) அவர்களுடைய எந்த ஒரு செய்தியும் அவ்வாரான கருத்தை எடுத்துரைக்கவு மில்லை​​.  ​​ ​​​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) “அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்)  தி​ரையை விலக்கி (முஃமின்களுக்கு தரிசனம் தந்தி) டுவான். அப்போது தம் இறைவைனக் (காணும் அவர்களுக்கு அவைனக்) காண்பதை விட மிகவும் விருப்பமானது வேரெதுவும் வழங்கப்பட்டிருக் காது. பிறகு “நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமும் கிடைக்கும்.” எனும் (10:26ஆவது) வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்”.  நூல் முஸ்லிம்.

 

(அல்லாஹ்வை மறுமையில் காண்பது தொடர்பாக) மேலும்  பல ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளன, அதில் முப்பதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் வாயிலாக கிடைக்கப் பெற்ற சுமார் நாப்பத்தி ஐந்து ஹதீஸ்களை (سلم الوصول) ஸுல்லமுல் வுஸுல் எனும் விளக்க நூலில் எடுத்துக் கூறியுள்ளோம். ஆகவே அதை மறுப்பவர் வேதத்தையும், அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்தவைகளையும் மறுத்தவரா வார். அத்துடன் அல்லாஹ் கூறியது போல்; “அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.” அல் முதப்பிபீன் 15.

 

  1. (மறுமை நாளின்) மன்றாட்டத்தை விசுவாசம் கொள்வதற்குரிய ஆதாரத்தையும்​, அது யாரால், யாருக்கு, எப்போது நிகழும் என்பதையும் விளக்குக?

 

விடை/

 

​மறுமை நாளில் அசாதாரண வரையரைகளுடன் கூடிய மன்றாட்டம் நிகழும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனின் பல இடங்களில் உறுதிப்படுத்தி யுள்ளதோடு, அவனே அதற்குச் சொந்தக்காரன் எனவும் வேறு எவருக்கும் அதில் எவ்விதப் பங்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளான்.

 

அல்லாஹ் கூறுகின்றான்; (பின்னும் (நபியே!) “நீங்கள் கூறுங்கள்: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.“ அஸ்ஸுமுர் 44.

 

அது நிகழும் நேரத்தைப் பொருத்த மட்டில், அல்லாஹ் அனுமதியளித்த பிறகே அது நிகழும் என்பதை அவனது திருமறையில் எங்களுக்கு அறியத் தந்துள்ளான்.​​

 

அல்லாஹ் கூறுகின்றான்; “அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார் தான் பரிந்து பேசக்கூடும்?”அல் பகரா 255. 

  

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர்களும் எவருமில்லை.” யூனுஸ் 3.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். (எவருக்காகவும்) அவர்கள் பரிந்து பேசுவது யாதொரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தி யடைந்து அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர,” (அவர் பேசுவது பயனளிக்கும்). அந் நுஜ்ம் 26.  

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர (மற்றெந்த மலக்கும்) அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது.” ஸபஃ 23.  

 

மறுமை நாளில் மன்றாடுபவர்களைப் பொருத்த மட்டில், அல்லாஹ்வுடைய நேசத்துக்கும் திருப்திக் கும் உரிய நல்லடியார்களுக்கு அவன் அனுமதி யளித்த பின்னரே மன்றாடுவார்கள் என அல்லாஹ் எங்களுக்கு திருக்குர்ஆனில் அறியத் தந்துள்ளான்.

 

அல்லாஹ் கூறுகின்றான்; “ஜிப்ரயீலும், மலக்கு களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார் கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து “சரி! பேசும்” எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.” அந் நபஃ 38.

 

 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச சக்தி பெற மாட்டார்.” மர்யம் 87.  

 

மறுமை நாளின் மன்றாட்டங்களினால் பயன் பெறுபவர்களைப் பொருத்தமட்டில், அல்லாஹ் வின் திருப்தியை பெற்றுக் கொண்டவர்களுக்கே​   அதை அவன் வழங்குவதாக திருக்குர்ஆன் மூலம் எங்களுக்கு அறியத் தந்துள்ளான்,

அல்லாஹ் கூறுகின்றான்; “அவன் விரும்பியவர் களுக்கன்றி மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்.” அல் அன்பியா 28. 

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது.” தாஹா 109.

 

ஏனெனில் அல்லாஹ் இறை நம்பிக்கையாளர் களுடனும், தூய்மையாளர்களுடனும் மாத்திரமே திருப்தியடைகிறான். ஆனால் அவர்களைத் தவிர்ந்த ஏனையவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை அவனுடைய திருமறை யிலே பின் வருமாறு ​விளக்குகிறான்;

 

அல்லாஹ் கூறுகின்றான்; “அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்.” முஃமின் 18.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே! (எங்கள் மீது அனுதாபமுள்ள) யாதொரு உண்மையான நண்பனுமில்லையே!” அஷ் ஷுஅரா 100,101.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காது.” அல் முத்தஸிர் 48.

 

நபி (ஸல்) அவர்கள் சிபார்சு செய்ய அல்லாஹ் வினால் அனுமதிக்கப் பட்டவர்கள். அவர்களே தன்னைப்பற்றிக் கூறும் போது ‘அவர்கள் அல்லாஹ்வினுடைய அரியாசனத்துக்கு கீழால் ஸஜ்தாவில் விழுவார்கள், பின்னர் இறைவன் அவருக்குக் கற்றுக் கொடுத்த புகழ் மொழிகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வார்கள், பிறகு “எழுங்கள் முஹம்மதே! சொல்லுங்கள் செவியேற் கப்படும்; பரிந்துரை செய்யுங்கள் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்; கேளுங்கள் உங்களுக்குத் தரப்படும் என்று சொல்லப்படும்… அப்போது அவர்கள் பாவம் செய்த இறை நம்பிக்கையா ளர்கள் அனைவருக்கும்  ஒட்டுமொத்தமாக சிபார்சு செய்ய மாட்டார்கள், மாறாக அல்லாஹ் பரிந்துரை செய்ய வரம்பு விதித்தவர்களுக்கு மாத்திரமே சிபார்சு செய்து அவர்களை சுவனத்தில் நுளைவிப்பார்கள். மிண்டும் ஸஜ்தா வில் விழுவார்கள்… (அந்த நபிமொழியின் தொடரச்சியைப்  பார்கவும்.’ நூற்கள் புகாரி முஸ்லிம்.​ ​​​​ ​

 

பிரிதோர் அறிவிப்பில் ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்கள் பரிந்துரைக்கு அதிகம் தகுதி படைத்த மனிதர் யார்? என அபூ ஹுரைரா (ரலி) கேட்ட போது, உள்ளத்திலிருந்து தூய்மையான எண்ணத்துடன் “வணக்கத்துக் குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறுமில்லை என்று சொன்னவர் தாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ நூற்கள் புகாரி, முஸ்னத் அஹ்மத்.

  1. (மறுமை நாளின்) மன்றாட்டம் எத்தனை வகைப்படும்​​​? அவைகளில் மிக மகத்தான மன்றாட்டம் யாது?

 

விடை/

அதன் வகைகளைப் பின்வருமாறு நோக்கலாம்.​

 

ஒன்று; கியாமத் நாளில் அல்லாஹுதஆலா அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவ தற்காக வரும்போது நிகழும் மன்றாட்டம். அதுவே (الشفاعة العظمى) மிக மகத்தான மன்றாட்டமாகும். அவ்வாறு மன்றாட எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும், என்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் வாக்களித்துள்ளான்.

 

அல்லாஹ் கூறுகின்றான்; “தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் “மகாமே மஹ்மூத்” என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம்.” அல் இஸ்ரா 79.

 

மறுமை நாளில் இறை நம்பிக்கை யாளர்கள் கவலைப் படும் அளவுக்கு நிறுத்தி வைக்கப்படு வார்கள். அப்போது அவர்கள் (பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது நாம் கேட்டுக் கொண்டால் என்ன? என்று பேசிக் கொள்வார்கள் பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடமும், பின்னர் நூஹ் (அலை) அவர்க ளிடமும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்களி டமும், பின்னர் மூஸா (அலை) அவர்களிடமும், பின்னர் ஈஸா (அலை) அவர்களிடமும் சென்று தங்களுக்காக இறைவனிடம் மன்றாடுமாறு கோறு வார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் அவர்களின் கோரிக்கைகளை மறுத்து,​ ஓவ்வொரு வரும் எனது ஆத்மாவே! எனது ஆத்மாவே! என கூறிக் கொண்டிருப்பார்கள். இறுதியாக அவர்கள் அனைவருமாக நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள், உடனே அவர்கள் “ஆம் நான் தான் அதற்குரியவன்” எனக் கூறுவார்கள்…” (அந்த நபிமொழியின் தொடர்ச்சியைப் விரிவாகப் பார்கவும்). நூற்கள் புகாரி முஸ்லிம். ​

​​​​இரண்டு; சுவனத்தின் வாயிலை (அதன் காவலாளியிடம்) திறக்கக் கோறுமிடத்தில் மன்றா டுதல், (சுவர்க்கவாசிகளுக்காக) அதை திறக்கக் கோரி முதலில் மன்றாடுபவர் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். பின்னர் அவ்வாயிலுனூடாக முதலில் சுவர்க்கத்தில் நூழை பவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களாவார்கள்.

 

மூன்று; (அல்லாஹ்வினால்) நரகத்தில் நுழைவிக்க கட்டளையிடப்பட்ட சில நரகவாசிகளை அதில் நூழைய விடாது காப்பாற்றுவதற்காக மன்றாடுதல்.

 

நான்கு; நரகத்தில் நுளைவிக்கப்பட்ட (பாவம் செய்த) இறைநம்பிக்கையாளர்களை வெளி யேற்றுவதற்காக மன்றாடுதல், அவ்வேளை அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே (சொர்க்க வாசலில் உள்ள “மாஉல் ஹயாத்” எனும்) ஜீவ நதியில் அவர்கள் போடப் படுவார்கள். பின்னர் அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரு மறுங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள்.​

 

ஐந்து; சொர்க்கவாசிகள் சிலரின் அந்தஸ்துகளை உயர்த்தும்படி வேண்டி (அல்லாஹ்விடத்தில்) நிகழும் மன்றாட்டம்.

 

இறுதியாகக் கூறப்பட்ட மூன்று வகையான மன்றாட்டங்களும் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரித்துடையது அல்ல. மாறாக அதில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற போதிலும் அவர்களுக்குப் பின்னால் ஏனைய நபிமார்களும், வானவர்களும், (அவ்லியா எனப்படும் அல்லாஹ்வின்) நேசர் களும், மன்றாடுவார்கள், இறுதியாக அல்லாஹ் தன் கருனையினால் எவ்வித மன்றாட்டமும் இல்லாமல் நரகத்திலிருந்து ஒரு தொகையினரை வெளியேற்றி சுவனத்தில் நுழைவிப்பான், அவ்வாறு வெளியேற்றப் படுபவர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள்.      ​​

 

ஆறு; நிராகரிப்பாளர்களில் சில கூட்டத்தினரின் வேதனையைக் குறைக்க வேண்டி அல்லாஹ் விடம் மன்றாடுதல். எங்கள் நபி மஹம்மத் (ஸல்) அவர்களுடைய சிறிய தந்தையாகிய “ஆபூ தாலிப்” அவர்களுகாக மன்றாட நபியவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

 

  1. ஒருவர் செய்த நற்செயல்கள் மூலம் தன்னை நரகிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவோ அல்லது சுவர்க்கத்தில் நுளையவோ முடியுமா?

 

விடை/

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “நடு நிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள். அறிந்து கொள்ளுங்கள்; உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது” என்று சொன்னார்கள். உடனே மக்கள், “தங்கைளயுமா (தங்களின் நற்செயல் காப்பாற்று வதில்லை) அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னையும்தான், அல்லாஹ் தனது தனிக் கரு​ணையாலும் பேரருளாலும் என்னை அரவைணத்துக் கொண்டால் தவிர” என்று சொன்னார்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள்; “நடுநிலையாக (நற்) செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்க மாகச் செயலாற்றுங்கள். நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் யாரையும் அவரது நற்செயல் ஒரு போதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது” என்று கூறினார்கள். உடனே மக்கள் “தங்கைகளையுமா அல்லாஹ்வின் தூதேர?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “என்னையும்தான், அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவைணத்துக் கொண்டால் தவிர. அறிந்து கொள்ளுங்கள்! நற்செயல்களில் அல்லாஹ் வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற் செயலே ஆகும்.” என்று  சொன்னார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

  1. மேற்கூறப்பட்ட நபிமொழிக்கும் அல்லாஹ் வின் திருவசனமாகிய “பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப் பட்டுள்ளீர்கள்.”என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.?” 7;43 என்பதுக்கு மிடையில் எவ்வாறு ஒற்றுமை காணலாம்?

 

விடை/

 

அவ்விரண்டுக்கு மிடையில் எத்தகைய முரண்பாடு களும் இல்லை​, ஏனெனில் அல்குர்ஆன் வசனத் தில் வந்துள்ள  (باء)“பா” எனும் அரபு எழுத்து இங்கு “காரணத்தைக்” குறிப்பதற் குரிய தாகும். அதாவது நற்செயல்கள் தான் ஒரு மனிதனை சுவர்க்கத்தில் நுழைவிக்க காரணமாக அமையும்​ என்பதைக் குறிக்கும். அதன் அடிப்படையில் நற்செயல்கள் இன்றி எவருக்கும் சுவர்க்கம் நுழைய முடியாது, ஆனால் மேற் கூறப்பட்ட நபிமொழின் வாயிலாக மறுக்கப்பட்டுள்ள விடயம் என்னவெனில் அந்த நற்செயல்களின் பெறுமதியேயாகும். அதாவது ஒரு அடியானுக்கு இந்த உலகத்தின் வயதை ஒத்த ஆயுள் வழங்கப்பட்டு பின்னர் அவ்வாயுள் பூராக அவன் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்கி, தீமைகளை விட்டொழித்து நற்   செயல்கள் புரிந்தாலும் அவையனைத்தும் ​அல்லாஹ் அவனுக்கு அந்தரங்கமாகவும் வெளிரங்கமாகவும் வழங்கிய அருட்கொடைகளில் மிகவும் சிறிய ஒரு அருட் கொடையின் நூற்றில் ஒன்றுக்கேனும் ஈடாகாது. அவ்வாராயின் ஒரு மனிதனுடைய நற்செயல்கள் மாத்திரம் அவனை  சுவனத்தில் நுழைவிப்பதற்கு  எவ்வாறு பெறுமதியுள்ளதாக அமையும்!!?

 

“என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கிருபை செய்வாயாக! கிருபை செய்பவர்களி லெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.” அல் முஃமினூன் 118. ​ ​​

 

  1. (கத்ர் எனும்) விதியை சுறுக்கமாக விசுவாசம் கொள்வதற்கு ஆதாரம் என்ன?

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; “அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே தீர்மாணிக்கப்பட்டு விடுகின்றன”. அல் அஹ்ஸாப் 38.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “செய்யப் பட வேண்டிய காரியத்தைச் செய்து முடிப்பதற்காக (இறைவன் இந்நிலையை ஏற்படுத்தினான்)”. அல் அன்பால் 42.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (இது நடை பெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்). அல் அஹ்ஸாப் 37.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (அல்லாஹ் வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை (சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகின்றான்”. அத்தகாபுன் 11. 

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;  “இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப் படியே தான் (ஏற் பட்டது.) உண்மை நம்பிக்கையாளர் களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப் பதற்காகவே (இவ்வாறு செய்தான்)” ஆல இம்ரான் 166.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “சோதனைக் குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சய மாக நாம் அவனிடமே மீளுவோம்” எனக் கூறுவார்கள்.

இத்தகையவர்கள் மீது தான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள்.”.அல் பகரா 156.157.

 

ஹதீஸ் ஜிப்ரீல் எனும் பிரபல்யமான நபிமொழியில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது;​ (அல்லாஹ்வின் தூதேர!  ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?” என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய  வானவர்களை யும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும் அவனுடைய தூதர்கைளயும்  நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக  அனைவரும்) உயிருடன் எழுப்பப் படுவைத நீங்கள் நம்புவதும், விதியை முழுமை​யாக நம்புவதும் ஆகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்” என்றார்.” நூற்கள் முஸ்லிம், அபூ தாவூத்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “உமக்கு ஏற்பட்ட யாவும் ஒரு போதும் உம்மை விட்டும் விலகிச் சென்றிருக்காது, மேலும் உம்மை விட்டு விலகிச் சென்ற எதுவும்  ஒரு போதும் உமக்கு ஏற்பட்டிருக்காது.” நூற்கள் அபூ தாவூத், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி  தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது,  “நான் (இப்படிச்)  செய்திருந்தால் அப்படி அப்படி ஆகியிருக்குமோ” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்து விட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல்.  நூற்கள் முஸ்லிம், இப்னு மாஜா.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;  “இயலா​மை, புத்திசாலித்தனம் ஆயைவை உட்பட ஒவ்வொ​​ரு  பொருளும் விதியின் படியே (அமைகின்றன).’ நூல் முஸ்லிம்.

 

  1. (கத்ர் எனும்) விதியை விசுவாசம் கொள்வது எத்தனை நிலைகளைக் கொண்டது?

விடை/

(கத்ர் எனும்) விதியை விசுவாசம் கொள்வது நான்கு நிலைகளைக் கொண்டது;

 

முதலாவது நிலை; எல்லாவற்றையும் ஆழமாக அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ்வின் அறிவை விசுவாசம் கொள்வதும், வானங்களிலும், பூமியிலும் அவற்றுக்கிடையில்  உள்ளவற்றிலும் ஓர் அணு வளவும் அவனுடைய அறிவுக்கு அப்பாட்பட்டு விடாது என்றும் எல்லாப் படைப்புகளையும் படைக்கு முன்பே அல்லாஹ் அவைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்றும் அவர்களின் உணவையும், ஆயுளையும், பேச்சுக்களையும், செயல்களையும், அசைவுகளை யும், அசைவற்ற நிலைகளையும், அவர்களின் இரகசியங்களையும், பரகசியங்களையும், அவர் களில் சுவர்கவாசிகள் யார், நரக வாசிகள் யார் போன்ற அனைத்து விபரங்களையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான்​ என்றும் விசுவாசம்  கொள்வதாகும்.  ​

 

இரண்டாவது நிலை; மேலே கூறப்பட்ட படி அல்லாஹ் அறிந்து வைத்திருக்கும் அனைத்தையும் எழுதி வைத்துள்ளான் என்றும், (லவ்ஹுல் மஃபூல், கலம் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகை, எழுதுகோள் போன்றவைகளையும் விசுவாசம் கொள்வதாகும்.

 

மூன்றாவது நிலை; அல்லாஹ்வுடைய நாட்டத்தையும், அவனுடைய சக்தியையும் விசுவாசம் கொள்வதாகும். மேலும் (இது வரைக்கும்) நடந்து முடிந்த அல்லது எதிர்காலத்தில்​ நடக்க விருக்கும் அனைத்து விடயங்களையும் பொருத்த மட்டில் அவனுடைய சக்தியும் நாட்டமும் இணை பிரியாதவை, அதாவது அல்லாஹ் நாடியவை யாவும் சந்தேகமின்றி அவனுடைய வள்ளமையால் நடந்தே தீரும் ஆனால் அவன் நாடாத எந்த ஒன்றும் “அவன் நாடவில்லை”  என்ற ஒரே காரணத்துக்காக​நடைபெறாது, அன்றி அவன் அவ்விடயத்தில் சக்தி யற்றவன் என்பதற்காக அது நடைபெறவில்லை என்று பொருள்கொள்வது முற்றிலும் தவராகும். அத்தகைய கருத்துகளை விட்டும் அவன் உயரத்தியானவன்.

அல்லாஹ் கூறுகின்றான்; (வானத்திலோ, பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ் வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் பெரும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்). பாதிர் 44.

 

நான்காவது நிலை; வானங்களுக்கும் பூமிக்கும் அவையிரண்டுக்கிடையில் உள்ள அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்தான் என்றும், அவைகளு டைய அசைவையும், அசைவற்ற நிலையையும் அவனே அறிந்தவன் என்றும், அவனையன்றி படைப்பவனோ, பராமரிப்பவனோ கிடையாது என்றும் விசுவாசம் கொள்வதாகும்.​​​​

 

  1. “அல்லாஹ்வின் அறிவை விசுவாசம் கொள்ளுதல்” என்ற முதலாவது நிலைக்கு ஆதாரம் என்ன?

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; (அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படையான தையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்.  நிகரற்ற அன்புடையவன்.” அல் ஹஷ்ர் 22.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “நிச்சயமாக “அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றான்.) அத் தலாக் 12.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ள வற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவை விட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் “லவ்ஹுல் மஹ்ஃபூள்” என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப் படாமல் இல்லை.” சபஃ 3.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “மறைவான வற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார்.” அல் அன்ஆம் 59.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ் தான் நன்கறிவான்.”அல் அன்ஆம் 124.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன் தான் நன்கறிவான்.” அன்னஹ்ல் 125. அல்கலம் 7.​

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?” அல் அன்ஆம் 53.

 

 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?” அல் அன்கபூத் 10.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி ‘நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்’ எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உனது பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத் தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். அதற்கவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்” எனக் கூறி விட்டான்.” அல் பகரா 30.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; “ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்;  நீங்கள் அறியமாட்டீர்கள்.” அல் பகரா 216

 

நபி (ஸல்) அவர்களிடம் (அல்லாஹ்வின்  தூதேர! ‘சிறிய வயதில் இறந்து விட்டவரின் நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று வினவப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டி ருப்பார்கள் என்பைத அல்லாஹ் நன்கு அறிவான்”  என்று  சொன்னார்கள்.” நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (அல்லாஹ் சிலரை அவர்களின் தந்தைமார்களின் முதுகுத் தண்டுகளில் இருக்கும் போதே சுவர்க்கத் துக்கு உரியவர்கள் என படைத்தான். மேலும் சிலரை அவர்களின் தந்தைமார்களின் முதுகுத் தண்டுகளில் இருக்கும் போதே நரகத்துக்கு உரியவர்கள் என படைத்தான்.) நூல் முஸ்லிம். ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “உங்களில் யாரும்”  பிறந்து விட்ட  எந்த  உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது  நரகத்திலா என்று  அல்லாஹ்வால் எழுதப்படாமல்  இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்து விட மாட்டோமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற் பேறற்றவராக இருப்பாரோ அவர்  நற்பேறற்ற வர்களின் செயலுக்கு மாறுவார்.” என்று கூறினார் கள். மேலும் அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப் பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவர்களுக்குக் கெட்ட வர்களின் செயலைச் செய்ய  வகை செய்யப் படும்” என்று கூறினார்கள். பிறகு “யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி,  நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ​ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செ​ய்து, தேவயற்றவராகத்  தன்னைக் கருதி,  நல்லதை நம்ப மறுக்கிறாரோ,  அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்.” (92:5-10) எனும் வசனங்களை ஓதிக் காட்டி னார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

(அகீதா) கொள்கை –

200 வினா விடைகள் – 7

201- இறைமறுப்புக்கு​​​​ இட்டுச்செல்லும் (பித்அத்) புதுவழி எது?

 

விடை/

மார்கத்தில் அவசியம் தெறிந்து வைத்திருக்க வேண்டியதும், நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களிட மிருந்து பெறப்பட்டு முடிவு செய்யப்பட்டதுமான ஒரு விவகாரத்தை மறுப்பதே இறைமறுப்புக்கு இட்டுச்செல்லும் (பித்அத்) புதுவழியாகும். காரணம் அவ்வாறு மறுப்பவர் அல்லாஹ்வின் வேதத்தையும் அவன் தூதர் கொண்டு வந்தவை களையும் பொய்யாக்குகிறார். இத்தகைய (பித்அத்கள்) புதுவழிகள் நிறையவே உள்ளன. ஜஹ்மியா எனும் பிரிவினர் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தது, அல்குர்ஆன் படைக்கப் பட்டது என்றோ, அல்லது அல்லாஹ்வுடைய எந்த ​ஒரு பண்பும் படைக்கப் பட்டது என்றோ கூறுவது, நபி இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் தன் உற்ற நண்பனாக் கியதையும், நபி மூஸா (அலை) அவர்களுடன் அவன் பேசியதையும் மறுப்பது, கதரிய்யா எனும் பிரிவினர் அல்லாஹ்வின் அறிவு, அவனுடைய செயல்கள், தீர்ப்பு, விதி போன்றவைகளை மறுத்தது, முஜஸ்ஸிமா எனும் பிரிவினர் அல்லாஹ்வை படைப்புகளுடன் ஒப்பிட்டது போன்றவைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் மேற் கூறப்பட்டவர்களில் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் அடிப்படைகளை தகர்க்கவும், முஸ்லிம்களிடையை சந்தேகத்தை ஏற்படுத்தவும் வேண்டுமென்றே இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள்,  சந்தேகத்துக்கிடமின்றி இறை மறுப்பாளர்கள் ஆவார்கள், அன்றி ஏமாற்றப்பட்டோ அல்லது தெளிவின்மை காரணமாகவோ மறுப்பவர்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் சத்தியத்தை முன்வைக்கப் பட்ட பின்னரே அவர்களது நிலை பற்றி முடிவு எடுக்கப்படும்.

 

202- இறைமறுப்புக்கு​​​​ இட்டுச்செல்லாத (பித்அத்) புதுவழி எது?

 

விடை/

மேல் கூறப்பட்ட விளக்கத்துக்கு மாற்றமானதும், அல்லாஹ்வின் வேதத்தையும் அவன் தூதர் கொணடு வந்தவைகளையும் பொய்யாக்காத விவகாரங்களையே இறைமறுப்புக்கு இட்டுச் செல்லாத புதுவழி என்கிறோம். (உமையா கிலாபத்தில் தோன்றிய) மர்வானிய பித்அத்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். (அக்காலத்தில் வாழ்ந்த) சங்கை மிக்க நபித்தோழர்கள் அவர்களுடைய பித்அத்களை அனுமதிக்காதிருந்தும் அப்புதுவழிகளை தோற்று வித்தவர்களை இறைமறுப் பாளர்கள் என்று கூறவும் இல்லை, அவர்களுடைய (கிலாபத்) ஆட்சியிலிருந்து வெளிநடப்புச் செய்யவும் இல்லை. அவ்வாட்சியாளர்கள் பிழையான விளக்கங்களின் அடிப்படையிலோ, அல்லது சில உலக இலாபங்கள் கருதியோ, அல்லது அவர் களுடைய மன ஆசைகளுக்கு அடிபணிந்தோ​ தொழுகைகளை இறுதி நேரம் வரை பிற்படுத்து வதையும், பெருநாள் தினங்களில் தொழுகைக்கு முன் பிரசங்கம் நிகழ்த்துவதையும், அமர்ந்து கொண்டே ஜும்ஆப் பிரசங்கங்கள் நிகழ்த்து வதையும், மூத்த நபித்தோழர்களை (மிம்பர்) மேடைகளில் தூற்றுவதையும் வழக்கமாகக் கொண்டி ருந்தார்கள்.  ​​   ​​​

 

203-  எவ்வழிகளினூடாக (பித்அத்) புதுவழிகள் தோற்றுவிக்கப்படும்?

 

விடை/

இரண்டு வழிகளினூடாக புதுவழிகள் தோற்று விக்கப்படும்.

  • வணக்க வழிபாடு
  • கொடுக்கல் வாங்கல்

 

204- வணக்க வழிபாடுகளில் தோற்றுவிக்கப்படும் (பித்அத்) புதுவழி எத்தனை  வகைப்படும்?

 

 

விடை/

இரண்டு வகைப்படும்.

 

ஒன்று; அரவே அல்லாஹ் எங்களுக்கு கட்டளை யிடாதவைகளைக் கொண்டு அவனை வணங்குதல். ஸூபிகள் எனப்படும் பிரிவினரில் அறிவீனர்கள் வீண்விளையாட்டுக் கருவிகளைக் கொண்டும், கை தட்டியும், இசைத்தும், பல இசைத் தட்டுகளி னூடாகவும் அல்லாஹ்வை வணங்குவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகையோரை​ அல்லாஹ் தனது திருமறையில் பின் வருமாறு விளக்குகிறான்;

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்க வில்லை.  அல் அன்பால் 35.

 

இரண்டு; (மார்க்கத்தில்) அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வணக்கத்தால் மார்க்கத்தில் குறிப்பிடப்படாத (வேறு ஒரு) சந்தர்ப்பத்தில் வைத்து வழிபடுவதாகும். உதாரணத்துக்கு இஹ்ராம் ஆடை​ அணிந்தவர் தலையைத் திறந்திருப்பது அனுமதிக் கப்பட்ட ஒரு வணக்கமாகும். ஆனால் இஹ்ராம் ஆடை​ அணியாத ஒருவர் நோன்பிலோ, தொழுகை யிலோ அல்லது இதர வணக்கங்களிலோ (அல்லாஹ்வை) வழிப்படுவதாக (நிய்யத் வைத்து) நினைத்துக் கொண்டு தலையைத் திறந்திருப்பது (பித்அத் முஹர்ரமா) தடுக்கப்பட்ட புதுவழியாகும். அனுமதிக்கப்பட்ட ஏனைய வணக்க வழிபாடுகளை வேறு சந்தர்ப்பங்களில் செய்வதும் இவ்வாறு தான். (நபில்) சுன்னத்தான தொழுகைகளை தடுக்கப்பட்ட நோரங்களில் தொழுவதையும், (யவ்முஷ்ஷக்) சந்தேகமான நாளில் நோன்பு வைப்பதையும், இரு பெருநாட்களில் நோன்பு நோட்பதையும் இதற்கு உதாரணமாக்க கூறலாம்.

205- வணக்க வழிபாடுகளில் தோற்றுவிக்கப்படும் (பித்அத்) புதுவழிக்கு எத்தனை நிலைகள் உள்ளன?

 

 

விடை/

அதற்கு இரண்டு நிலைகள் உள்ளன?

 

ஒன்று; அப்புதுவழி (பித்அத்) தோற்றுவிக்கப்பட்ட வணக்கத்தை முற்றாக அழித்துவிடும். வேண்டு மென்றே பஜ்ர், மஃரிப்   தொழுகைகளில் மூன்றாவது நான்காவது ரகஅத்துகளை அதிகரிப்பதையும், அல்லது நான்கு ரஅத்துகள் உள்ள தொழுகைகளை ஐந்தாக கூட்டுவதையும், அல்லது ரகஅத்துகளில் குறைவு ஏற்படுத்து வதையும் இதற்கு உதாரணமாக் கூறலாம்.

 

இரண்டு;  ஒரு வணக்கம் (இபாதத்) அல்லாஹ் வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதில் தோற்றுவிக்கப் பட்ட புதுவழி மாத்திரம் அழிக்கப் படல். வுலூ செய்யும் போது ஒரு உறுப்பை மூன்று விடுத்தங்களுக்கு மேல் கழுவுவதை இதற்கு உதரணமாகக் கூறலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இத்தகைய நிலையில் வுலூ எற்றுக் கொள்ளப் படமாட்டாது என்று கூற வில்லை மாறாக “யார் இதை விட கூடுதலாக செய்கிறாரோ அல்லது இதை விடக் குறைத்து விட்டாரோ அவரும் தீங்கிழைத்து விட்டார்” என்றே கூறினார்கள். நூற்கள் அபூ தாவூத், நஸாஈ, இப்னு மாஜா.

 

​​       ​    ​​

206- வியாபாரத்தில் தோற்றுவிக்கப்படும் (பித்அத்கள்) புதுவழிகள் யாவை?

 

விடை/

கொடுக்கல் வாங்களின் போது குர்ஆனுக்கும் நபி வழிக்கும் அப்பாற்பட்டவைகளை நிபந்தனை யிடுவது அதில் தோற்றுவிக்கப்படும் (பித்அத்கள்) புதுவழி களாகும். பின் வரும் நபி மொழியில் கூறப்பட்டுள்ள வாறு ஒரு அடிமையின் வாரிசுரிமையை (உரிமையிடாத) வேறு ஒருவர் நிபந்தனையிடுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்​    ​

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பரீரா(எனும் அடிமைப் பெண்), தமது விடுதைலப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்கு உதவி கோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் எதை​யும் செலுத்தி யிருக்கவில்லை. நான் அவரிடம், “நீ  உன் உரிமை யாளர்களிடம் திரும்பிச் செ​ல். (நான் உன் சார்பாக) உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்தி விடுகிறேன். (ஆனால்,) உனது வாரிசு ரிமை எனக்கே உரியதாகும். இதற்கு அவர்கள் சம்மதித்தால், நானே அதைச் செலுத்தி விடுகிறேன்” என்று கூறினேன். அவ்வாறே, பரீரா தம் உரிமையாளர்களிடம் கேட்க, அவர்கள் (சம்மதிக்க) மறுத்து, “உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) வாயிலாக, அவர் இறைவனிடம் நன்மையப் பெற விரும்புவாராயின் அவ்வாறே செய்யட்டும்! ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டார்கள். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவரை​​​ விலைக்கு வாங்கி விடுலை செய்துவிடு.  ஏனெனில், விடுதலை  செய்பவ ருக்கே வார​சுரிமை உரியதாகும்” என்று கூறினார் கள். பிறகு, நபி ​(ஸல்) அவர்கள் நின்று (உரையாற்றுகையில்), “சிலருக்கு என்ன ஆயிற்று? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லத் தக்கதன்று;  அவர் நூறு முறை நிபந்தைன விதித்தாலும் சரியே! அல்லாஹ் வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத் தகுந்ததும் உறுதி வாய்ந்ததும் ஆகும்” என்று கூறினார்கள். நூற்கள் புகாரி, முஸ்லிம்.

 

 

207- நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் செய்ய வேண்டிய கடமை யாது?

 

விடை/

அவர்களைப்பற்றி நல்லெண்ணம் கொள்வதும், அவர்களைத் தூற்றாமல் இருப்பதும், அவர்களுடைய நற்குணங்களை போதிப்பதும், அவர்களுக்கிடையில் தோன்றிய கருத்து மோதல் தொடர்பாக மௌனம் காப்பதும், கடமையாகும்  ஏனெனில் அல்லாஹ்வே அவர்களை தவ்ராத் இன்ஜீல் புர்கான் அகிய வேதங்களில் புகழ்ந்து கூறியிருக்கிறான். ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களிலும் அவர்களுடைய சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

 

அல்லாஹ் கூறுகின்றான்; முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூஉ, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ் விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம். இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்து வதற்காக விவசாயி (கள் எனும் நம்பிக்கையு டையவர்) களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பை யும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித் துள்ளான். அல் பதஹ் 29.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. அல் அன்பால் 74.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர் களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்ட னர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அத்தவ்பா 100.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித் தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம்புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர் களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன், இரக்க முடையோன். அத்தவ்பா 117.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட ஹிஜ்ரத் செய்த ஏழை களுக்கும் (உரியது). அவர்கள் அல்லாஹ் விடமிருந்து அருளையும் திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள்.

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோ ருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்க ளுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத் தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். அல் ஹஷ்ர் 8,9.

 

இவை போன்ற இன்னும் பல திருவசனங்கள் அல்குர்ஆனில் வந்துள்ளன. ​​பத்ருப்போரில் கலந்து கொண்ட சுமார் முன்னூற்றி பதினான்கு நபித் தோழர்களை நோக்கி,  அல்லாஹ் “நீங்கள் விரும்பியைதச் செய்யுங்கள். உங்கைள மன்னித்து விட்டேன்’  என்று கூறியிருக்கலாம்” மேலும் “பைஅத்துர் ரிள்வான்’ ஒப்பந்தத்தில் கலந்து கொண்டு, அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்த சுமார் ஆயிரத்து நானூறு அல்லது ஐனூறு நபித்தோழர்களில் எவரும் நரகத்திற்குள் நுழைய மாட்டார்கள்’ என நாங்கள் அறிந்து வைத்திருப்ப துடன் உறுதியும் கொள்கிறோம். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை பொறுந்திக் கொண்டார்கள் அல்லாஹ்வும் அவர்களைப் பொறுந்திக் கொண்டான்.

 

​அல்லாஹ் கூறுகின்றான்; அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அல் பத்ஹ் 18.

 

இந்த சமூகத்தின் மிகச் சிறந்த நூற்றாண்டைச் சேர்ந்த சிறந்த சமூகத்தினர் நபித்தோழர்களாவர் என நாம் சாட்சி கூறுகின்றோம்.  மேலும் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட் டாலும்,  நபித்தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட  இரு கையளவு,  அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது என்றும், அவர்கள் பாவங்களிலிருந்து பாது காக்கப்படாதவர்கள் ஆதலால் அவர்களுக்கும் தவறுகள் நிகழலாம் என்றும் நம்புகிறோம். (மார்க்கப்) பிரச்சினைகளின் போது அவர்கள் (உண்மையைக் கண்டறிய) முயற்சிப்பார்கள், அது சமயம் உண்மையைக் கண்டறிந்தவருக்கு இரண்டு கூலி களையும், அதில் தவறிழைத்த வருக்கு முயற்சிற் குறிய கூலியையும் அல்லாஹ் வழங்குவதுடன் அவருடைய தவறையும் மண்ணித்து விடுகிறான். அரிய சந்தர்ப்பங்களில் அவர்கள் தவறிழைக்க நேர்ந்தாலும் ஒரு சிறிய (நஜீஸ்) அழுக்கு, கடல் நீர் முழுவதையும் மாசுபடுத்த முடியாதது போல்  அவர்கள் செய்த தவறுகளை அழித்துவிடக்கூடிய பல சிறப்பம்சங்களும், நல்லரங்களும், அவர்களிடம்  நிறையவே காணப்பட்டன. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.​​

 

நபியவர்களது தோழர்களில் ஒருவரையோ அல்லது​ அனைவரையுமோ அல்லது அவர்களுடைய குடும்பத் தினரையோ விமர்சிப்பவர்களையும், அவர்களை பற்றி​ தீய எண்ணம் கொண்ட வர்களையும் விட்டு நாம் நீங்கி விடுவோம். நபியவர்களின் வஸிய்யத்தைக் காப்பாற்று முகமாக முடிந்த அளவு நாம் அவர்களை விரும்பவும், உற்ற துணைவர்களாக எடுத்துக் கொள்ளவும் அவர்களுக்காக போராடவும் அல்லாஹ்வை நாம் சாட்சியாக்குவோம்.

 

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; எனது தோழர்களைத் திட்டாதீர்கள் நூல் புகாரி.   ​

 

ஸை​த் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறினார்கள்; ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள “கும்மு’ எனும் நீர் நிலையருகே எங்களிடையே நின்று​ உரையாற்றிக் கொண்டிருந்தார் கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனை யும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, “இறைவாழ்த்துக்குப் பின்! மக்களே!  கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கி விட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடயே கனமான இரண்டு பொருட்கைள விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ் வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகேவ, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள். பிறகு, “(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமை களையும் கண்ணியத்தையும்  பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத் தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தை யும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன் ”  என்று (மூன்று முறை) கூறினார்கள். நூல் முஸ்லிம்.

 

208- நபிதோழர்களில் மிகச்சிறந்தவர்களை சுறுக்கமாகக் குறிப்பிடுக?

 

விடை/

அவர்களில் மிகச் சிறந்தவர்கள் ஹிஜ்ரத் செய்தோரில், முந்திச் சென்றவர்களாகும், அவர்களுக்குப் பிறகு அன்ஸாரிகள், பிறகு பத்ர் புனிதப் போரில் கலந்து கொண்டவர்கள், பிறகு உஹூத் போரில் கலந்து கொண்டவர்கள், பிறகு “​பைஅதுர் ரிழ்வான்” ஒப்பந்தத்தில் கலந்து கொண்டு (அந்த மரத்தின் கீழ்) உறுதிப் பிரமாணம் அளித்தவர்கள். பிறகு அவர்களுக்குப் பின் வந்தவர்கள், அவர்களுக்குப் பிறகு உள்ளவர்களை அல்லாஹ்  பின்வருமாறு விளக்குகிறான்;

 

(உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்ட வருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்ட வர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடைய வர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகிய தையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். அல் ஹதீத் 10.

 

 

209- நபிதோழர்களில் மிகச் சிறந்தவர்களை விளக்கமாகக் குறிப்பிடுக?

 

விடை/

இப்னு உமர் (ரலி) கூறினார்கள்; நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூபக்கர் (ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம். நூல் புகாரி, அபூ தாவூத், திர்மிதி.

 

அபூ பக்கர் (ரலி) அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்த போது அவர்களிடம் “(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு நபியவர்கள், எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவ னாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள். அபூ பக்கரே” என்று கேட்டார்கள். நூற்கள் புகாரி, முஸ்லிம்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பனாக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்கரையே ஏற்றிருப்பேன் என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும் தான் (இஸ்லாத்தில்) உண்டு. நூற்கள் புகாரி, முஸ்லிம். ​​​​

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மக்களே (ஒரு காலத்தில்) நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட் டுள்ளேன் என்று சொன்னேன். அப்போது நீங்கள் “பொய் சொல்கிறீர் என்று கூறினீர்கள். ஆனால் அபூ பக்கர் அவர்களோ நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று கூறினார். நூல் புகாரி.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; கத்தாபின் புதல்வரே! என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டு வேரொரு தெருவில் தான் செல்வான்”. நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

​மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப் பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும். நூற்கள் புகாரி, முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஓநாயும் மாடும் பேசிய சம்பவங்களைக் கூறிவிட்டு “நானும் அபூ பக்கரும், உமர் இப்னு கத்தாபும் இதை ​(இந்த நிகழ்ச்சிகளை) நம்புகிறோம் என்று கூறினார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

“பை​அதுர் ரிழ்வான்” சத்தியப் பிரமான நிகழ்ச்சி யின் போது உஸ்மான்(ரலி) மக்காவுக்குச் சென்றிருந் தார்கள்  அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் வலக்கரத்தைச் சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதைத் தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு இப்போது நான் ​செய்யும் சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்குச் செய்யப் படுவதாகும் என்றார்கள். நூல் புகாரி. ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; யார் “ரூமா” எனும் கிணரை (மக்களுக்காக) அகழ்ந்து விடுவாரோ அவருக்கு சுவர்க்கம் உரித்தாகும் உடனே உஸ்மான் (ரலி) அதை அகழ்ந்தார்கள். நூற்கள் திர்மிதி, நஸாஈ.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “எவரைக் கண்டு வானவர்கள் நாணம்  கொள்கிறார்களோ  அவரைக் கண்டு நான் நாணம்  கொள்ள  வேண்டாமா!”  நூல் முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களை நோக்கி நீங்கள் என்னைச் சேர்ந்தவன் நான் உங்களைச் சேர்ந்தவன் என்று கூறினார்கள். நூல் புகாரி.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (அலி) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரை நேசிக்கிறார்கள். நூல் புகாரி.

மேலும் நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “(நபி) மூசாவிடம் (நபி) ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருக்கிறீர்கள். எனினும், எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை” என்று  சொன்னார்கள். நூற்கள் புகாரி முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; பத்து பேர் சுவனத்தில் இருப்பார்கள். நபி சுவனத்தில் இருப்பார், அபூ பக்கர் சுவனத்தில் இருப்பார், உமர் சுவனத்தில் இருப்பார், உஸ்மான் சுவனத்தில் இருப்பார், அலி சுவனத்தில் இருப்பார், தல்ஹா சுவனத்தில் இருப்பார், சுபைர் இப்னுல் அவ்வாம் சுவனத்தில் இருப்பார், ஸஃத் பின் மாலிக் சுவனத்தில் இருப்பார், அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் சுவனத்தில் இருப்பார், ஸஈத் பின் ஸைத் கூறினார் நான் விரும்பினால் பத்தாவது நபரையும் கூறுவேன். அதாவது அவர்களும் சுவனத்தில் இருப்பார் (அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொறுந்திக் கொள்வானாக). நூற்கள் அபூதாவூத் இப்னு மாஜஃ.​​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; எனது சமூகத்தில் அவர்களுடன் மிகவும் இறக்க முள்ளவர் அபூ பக்கர் ஆவார், அவர்களில் அல்லாஹ்வுடைய மார்க்க (விடய)த்தில்​ மிகவும் கடுமையானவர் உமர் ஆவார், அவர்களில் உண்மையான நாணம் உடையவர் உஸ்மான் ஆவார், அவர்களில் ஹராம் ஹலாலைப் பற்றி மிகவும் அறிந்தவர் முஆத் இப்னு ஜபல் ஆவார், அவர்களில் அல்லாஹ்வின் வேத​த்தை நன்கு ஓதத் தெறிந்தவர் உபைய் ஆவார், அவர்களில் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை மிக அறிந்தவர் ஸைத் பின் தாபித் ஆவார், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கை க் குரிய ஒருவர் உண்டு. இந்த சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களாவார்கள்.  நூற்கள் திர்மிதி, இப்னு மாஜஃ, அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா.     ​

 

மேலும் ஹஸன் ஹூஸைன் (ரலி) அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அவர்கள் இருவரும் சுவர்க வாலிபர்களின் தலைவர்கள், மேலும் அவ்விரு வரும் அதன் இரு மலர்கள். நூற்கள் திர்மிதி, இப்னு மாஜஃ, அஹ்மத்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இறைவா! அவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் அவ்விரு வரையும் நேசிப்பாயாக. நூல் புகாரி.

 

 

மேலும் ஹஸன் (ரலி) அவர்களை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்துக் குறிய) தலைவராவார். முஸ்லிம் களின் இரண்டு பெரும் கூட்டத்தா ரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைப்பான். நூல் புகாரி.

 

நபி அவர்கள் கூறிய பிறகாரமே பிற்காலத்தில் நிகழ்ந்து முடிந்தது​.

 

மேலும் அவர்கள் இருவரின் தாயாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இவர்களது தாயார் சுவர்க்கவாசிகளின் பெண்களின் தலைவியாக இருப்பார்கள். நூல் புகாரி.

 

இதற்கும் மேலாக அநேகமான நபித்தோழர்க ளுக்கு தனியாகவும் பொதுவாகவும் எண்ணிக் கையில் அடங்காத சிறப்புகள் கூறப்பட்டுள்ளன, நான்கு கலீபாக்கள் தவிர்ந்த ஒரு நபித் தோழருக்கு பிரத்தியேகமாக கூறப் பட்ட ஒரு சிறப்பை ஆதாரமாகக் கொண்டு ஏனைய நபித் தோழர்களைவிட அவர் சகல விதத்திலும் சிறந்தவர் எனக் கூறமுடியாது. ஆகவே மேல் கூறப்பட்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மூன்று கலீபாக்களை முற்றிலும் சிறந்தவர்கள் என்றும், முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவை ஆதாரமாகக் கொண்டு அம்மூவருக்கும் பிறகு அலி (ரலி) அவர்களே பூமியில் சிறந்தவர்கள் என்றும் கூறலாம்.  ​     ​

 

 

210- நபி (ஸல்) அவர்களுடைய வபாத்துக்குப் பின் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் எத்தனை வருடங்கள் நீடித்திருந்தன?

 

விடை/

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; (எனக்குப் பிறகு) நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் முப்பது வருடங்களைக் கொண்டிருக்கும், பின்னர் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குவான். நூற்கள் அபூ தாவூத், திர்மிதி, நஸாஈ, அஹ்மத்.

 

குறித்த காலப் பகுதியில் அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி (ரலிய்யல்லாஹு அன்ஹும்) போன்றோர் ஆட்சி புரிந்தார்கள். இதில் அபூ பக்கர் (ரலி) இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும், உமர் (ரலி) பத்து வருடங்களும் ஆறு மாதங்களும், உஸ்மான் (ரலி) பன்னிரண்டு வருடங்களும், அலி (ரலி) நான்கு வருடங்களும் ஒன்பது மாதங்களும், ஆட்சி புரிந்தார்கள் எஞ்சிய ஆறு மாதங்களும் ஹஸன் பின் அலி (ரலி) அவர்களுடைய (பைஅத்) சத்தியப் பிரமானத்துடன் முடிவடைகிறது. அதற்குப் பிறகு வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களில் முதலாமவர் முஆவியா (ரலி) அவர்கள் ஆவார், அவர்களே அவர்களில் மிகச்சிறந்தவரும் நல்ல மனிதரும் ஆவார். அவருக்குப் பிறகு உமர் பின் அப்துல் அஸீஸ் (ரலி) ஆட்சிபீடம் ஏறும் வரை கடும்போக்கு பரம்பரை முடியாட்சி நிலவியது, எனினும் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரலி) அவர்கள் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் போல் நல்லாட்சி புரிந்ததால் மக்கள் அவரை ஐந்தாவது கலீபாவாக் கருதினார்கள்.

211- மொத்தத்தில் இந்நாள் வரும் (நுபுத்துவத்தின் வழிமுறையிலான) கிலாபத் பதவி வகித்தமைக்கு ஆதாரம் என்ன?

 

விடை/

அதற்கு எண்ணிலடங்காத ஆதாரங்கள் உள்ளன, நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் ஆட்சி முப்பது வருடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளதும், குறித்த நான்கு கலீபாக்கலும் ஆட்சிபுரிந்த ஒழுங்கின் பிரகாரம் அவர்கள் ஏனையவர்களை விடவும் சிறப்பு மிக்க வர்கள் என நாம் முன்னர் கூறிய நபிமொழி களும் இதற்கு ஆதாரமாகும். மேலும் இந்நாள்வரும் நுபுத்துவத்தின் வழி முறையிலான கிலாபத் பதவி வகித்தார்கள் என்பதே ​​ஏற்றுக்கொள்ளத்தக்க அறிஞர்களுடைய ஏகோபித்த முடிவுமாகும். வழிகெட்ட (பித்அத்) புதுவழிக்காரர்கள் தவிர்ந்த எவரும் அக்கருத்தை மறுக்கவில்லை.

 

​​​​

212- (அபூ பக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஆகிய) அம்மூவரும் (நுபுத்துவத்தின் வழிமுறையிலான) கிலாபத் பதவி வகித்ததற்குரிய ஆதாரத்தை சுறுக்கமாகக் கூறுக?

 

 

விடை/

அதற்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, நாம் முன்னர் கூறிய நபிமொழிகளையும் அதற்கு ஆதாரமாகக் கூறலாம். மேலும் அபூ பக்ரா (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்த ஒரு நபிமொழியில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களை நோக்கி “உங்களில் எவரும் கனவு கண்டவர் இருக்கின்றாரா?” எனக் கேட்டார்கள் அதற்கு ஒரு மனிதர் ஆம் அல்லாஹ்வின் திருத்தூதரே, வானத்தில் இருந்து இறக்கப்பட்ட ஒரு தராசில் நீங்களும் அபூ பக்கரும் நிறுக்கப்பட்டு அதில் நீங்கள் நிறை கூடியவராக இருப்பதையும், பிறகு அபூ பக்கரும் உமரும் நிறுக்கப்பட்டு அதில் அபூ பக்கர் நிறை கூடியவராக இருப்பதையும், பிறகு உமரும் உஸ்மானும் நிறுக்கப்பட்டு அதில் உமர் நிறை கூடியவராக இருப்பதையும் நான் கணவு கண்டேன், பின்னர் அத்தராசு உயர்த்தப்பட்டு விட்டது என்று கூறினார். அபூ தாவூத், திர்மிதி, ஹாகிம்.

 

213- அபூ பக்கர், உமர், (ரலி) ஆகிய இருவரும் (நுபுத்துவத்தின் வழிமுறையிலான) கிலாபத் பதவி வகித்ததற்குரிய ஆதாரத்தை சுறுக்கமாகக் கூறுக?

 

விடை/

அதற்கும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்துக்கு புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகில் கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு (தண்ணீரை) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் புதல்வர் (அபூபக்கர்) அவர்கள் அதை வாங்கி அதன் மூலம் “ஒரு வாளி நீரை’ அல்லது “இரண்டு வாளிகள் நீரை’ இறைத்தார். அவர் இறைத்தபோது சோர்வு தெரிந்தது. -அல்லாஹ் அவருக்கு மன்னிப்பருள் வானாக. பிறகு அது மிகப் பெரிய வாளியாக மாறியது. அப்போது அதை கத்தாபின் புதல்வர் (உமர்) அவர்கள் வாங்கினார். உமர் பின் அல்கத்தாப் இறைத்ததைப்  போன்று  இறைக்கின்ற (வலிமை மிக்க) அபூர்வத் தலைவர் ஒருவரை நான் மக்களில் பார்க்கவில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர்  இறைத்தார்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

214- அபூ பக்கர் (ரலி) அவர்கள் (நுபுத்துவத்தின் வழிமுறையிலான) முன்னிலை கிலாபத் பதவி வகித்ததற்கு ஆதாரம் தருக?

 

விடை/

அதற்கும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன, நாம் முன்னர் கூறிய நபிமொழிகளையும் அதற்கு ஆதாரமாகக் கூறலாம் மேலும் புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு செய்தியில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம்   எதையோ  கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்தப்  பெண்ணைத் திரும்பவும் தம்மிடம் வரும்படி கட்டைளயிட்டார்கள். அந்தப் பெண், “நான் வந்து தங்கைளக் காண (முடிய) வில்லை யென்றால்…?” என்று கேட்டார். -அறிவிப்பாளர் முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் தந்தை கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல் அப்பெண் கேட்டார்- அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னைக் காண முடியாவிட்டால் அபூ பக்கரிடம் செல்” என்று பதில் சொன்னார்கள்.

 

முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ள பிரிதோர் அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்த  போது, “உன் தந்தை (அபூபக்கர்) அவர்கைளயும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்துவா.  நான் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன்.  ஏனென்றால், (தாமே கலீஃபா வாக ஆக வேண்டுமென) எவரும்  ஆசைப் படவோ, “நானே (அதற்குத்) தகுதியானவன்’ என்று யாரும் சொல்லிவிடவோ கூடும் என நான் அஞ்சுகிறேன். (ஆனாலும், அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப் பட்டாலும்) அபூபக்கரைத் தவிர வேரெவரையும் அல்லாஹ்வும்   இறைநம்பிக்கை யாளர்களும் மறுத்துவிடுவர்” என்று சொன்னார்கள்.

 

இவ்வாரே நபியவர்கள் தனது மரணத் தருவாயில் அபூபக்கர் (ரலி) அவர்களை தொழுகைக்கு இமாமத் செய்ய முற்படுத்துமாறு கட்டளை யிட்டார்கள். எனவே தான் முஹாஜிரீன்கள் அன்ஸாரீன்கள் உட்பட அனைத்து நபித்தோழர் களும் அவர்களுக்குப் பின்வந்த வர்களும் அபூ பக்கர் (ரலி) அவர்களுக்கு பையத் கொடுப்பதில் ஒத்த கருத்தை கொண்டிருந்தார்கள்.  ​​

 

 

215- அபூ பக்கர் (ரலி) அவர்களுக்குப் பிறகு (நுபுத்துவத்தின் வழிமுறையிலான) கிலாபத் பதவியில் உமர் (ரலி) அவர்களை முன்னிலைப் படுத்துவதற்கு ஆதாரம் தருக?

 

விடை/

அதற்கும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன, நாம் முன்னர் கூறிய நபிமொழிகளையும் அதற்கு ஆதாரமாகக் கூறலாம். மேலும் புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் உங்களுடன் இன்னும் எவ்வளவு (காலத்துக்கு) இருப்பேன் என எனக்குத் தெரியாது, எனவே எனக்குப் பின்னால் இருக்கும் இருவரை நீங்கள் பின்பற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு, அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரையும் சுட்டிக் காட்டினார்கள்.

 

மேலும் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள “அலையைப்  போன்று அடுக்கடுக்காகத்  தோன்றும் ஃபித்னாவைபற்றி”  நபியவர்கள் (முன்னறிவிப்பாகக்) கூறிய செய்தியை ஹுதைபா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் அறிவித்து விட்டு நம்பிக்கையாளர் களின் தலைவரே! “உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கும் இடையே மூடிய கதவு ஒன்று உண்டு; அக்கதவு (விரைவில்)  உடைக்கப் படக்​கூடும்” என்று கூறினார்கள். உடேன உமர் (ரலி) அவர்கள், “நீர் தந்தையற்றுப் போவீர்! அது உடைக்கப்படுமா? அது (உடைக்கப் படாமல்) திறக்கப்பட்டாலாவது மீண்டும் அது மூடப்பட இடமுண்டே!” என்று கூறினார்கள். நான், “இல்லை. (அது திறக்கப்படாது.) உடைக்கத்தான் படும்” என்று  சொன்னேன்.

 

அக்கதவு உமர் (ரலி) ஆவார்கள், அது உடைக்கப்படுவது என்பது அவர்கள் கொலை செய்யப்படுவதாகும். ஆகவே கலீபா அபூ பக்கர் (ரலி) அவர்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களே கிலாபத்துக்கு மிகவும் பொறுத்தமானவர் என முஸ்லிம் சமூகம் ஏகோபித்த முடிவெடுத்தது.

 

 

216- (அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி)) அவர்களுக்குப் பிறகு (நுபுத்துவத்தின் வழிமுறையிலான) கிலாபத் பதவியில் உஸ்மான் (ரலி) அவர்களை முன்னிலைப்படுத்துவதற்கு ஆதாரம் என்ன?

 

விடை/

அதற்கும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன, கஃப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் மிகவும் சமீபத்தில் தோன்ற இருக்கும் குழப்பங் களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள், (அவ்விடத்தால்) தலையை மூடிய ஒரு மனிதர் நடந்து சென்றார், உடனே நபியவர்கள்​ அத்தினத்தில் இ(ம்மனித ரான)வர் நேர்வழியில் இருப்பார் என்றார்கள். உடனே நான் பாய்ந்து உஸ்மான் (ரலி) அவர்களின் இரு புஜங்களையும் பிடித்து (அவரை நபியவர்களிடம்) அழைத்து வந்து இவரா (அந்த மனிதர்)? என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் ஆம் இவர் தான் (அந்த மனிதர்) என்று கூறினார்கள். நூற்கள் திர்மிதி, இப்னு மாஜா.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; உஸ்மானே உங்களுக்கு (எப்போதாவது)​அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை தந்து, பின்னர் நயவஞ்சகர்கள் அல்லாஹ் உமக்கு அணிவித்த (ஆட்சி எனும்) ஆடையை கழைய முயற்சித்தால் அதை நீங்கள் கழட்டிவிட வேண்டாம். அவ்வாறு மூன்று முறை கூறினார்கள். நூற்கள் திர்மிதி, இப்னு மாஜா இப்னு ஹிப்பான்.

 

(உமர் (ரலி) அவர்களுக்குப்பின் கலீபாவைத் தெரிவு செய்ய நியமிக்கப்பட்ட) ஆலோசனைக் குழுவினரும், அவர்களுக்குப்பின் வந்த நபித் தோழர்களும், உஸ்மான் (ரலி) அவர்களுக்கே (பைஅத்) சத்தியப்பிரமானம் செய்யப்பட வேண்டு மென ஏகோபித்த முடிவு எடுத்தார்கள். ஆகவே முதன் முதலில் அவர்களுக்கு சத்தியப்பிர​மானம் செய்தவர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) ஆவார், அவர்களுக்குப் பிறகு அலி (ரலி) அவர்கள் ஆவார்கள், பின்னரே பொதுமக்கள் அனைவரும் அவர்களுக்கு பைஅத் செய்தனர்.   ​

​ ​

 

217- (அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி) உஸ்மான் (ரலி)) அவர்களுக்குப் பிறகு அலி (ரலி) அவர்களே (நுபுத்துவத்தின் வழிமுறையிலான) கிலாபத் பதவிக்குறியவர் என்பதற்கு ஆதாரம் என்ன?

 

விடை/

அதற்கும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன, நாம் முன்னர் கூறிய நபிமொழிகளையும் அதற்கு ஆதாரமாகக் கூறலாம் மேலும் புகாரி எனும் கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு செய்தியில் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்; “பாவம் அம்மார்” இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொ​​​லை செய்யும்! இவர் அவர்களை சுவர்க்கத்துக்கு அழைப்பார், அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.” நூல் முஸ்லிம்.

 

நபியவர்கள் முன்னெச்சரிக்கை கூறியது போலவே பிற்காலத்தில் ஷாம் வாசிகள் அவரை கொலை செய்யும் போது, அலி (ரலி) அவர் களின் தரப்பிலிருந்த​ அவர்கள், மக்களை நபி வழியின்பாலும், ஒற்றுமையின்பாலும், உண்மை யான தலைவர் அலி (ரலி) அவர்களுக்கு கீழ்ப்படியுமாறும் அழைப்பு விடுத்துக் கொண்டி ருந்தார்கள். அவர்களுடைய விடயத்தில்,

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக  நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்கைளக் கொன்றொழிப்பார்கள். நூல் முஸ்லிம்.

 

நபியவர்கள் எதிர்வு கூறியபடியே “நஹர்வான்” தினத்தில் கவாரிஜ்கள் எனும் கூட்டத்தினர் பிரிந்து சென்றார்கள், பிறகு அலி (ரலி) அவர்களே அவர்களை கொலை செய்தார்கள் எனவே அனைத்து அஹ்லுஸ் ஸுன்னாக்க ளுடைய கருத்தின் பிரகாரம் அலி (ரலி) அவர்களே சத்தியத்திற்கு மிக  நெருக்கத்தி லிருந்த கூட்டமாகும். ​

 

 

218-  ஆட்சி அதிகாரம் உடையோருக்குச் செய்ய வேண்டிய கடமை யாது?

 

 

விடை/

ஆட்சி அதிகாரம் உடையோருக்குச் செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு  உபதேசம் செய்வதாகும். அதாவது சத்தியத்தில் அவர்களு டன் இதயப்பூர்வமான உறவு வைத்திருப்பதும் அதில் அவர்களுக்குக் கட்டுப்படுவதும், (அவர்கள் சத்தியத்திலிருந்து விலகும் போது) நளினமான முறையில் எடுத்துச்சொல்வதும், அவர்களுக்குப் பின் நின்று தொழுவதும், அவர்களுடன் சேர்ந்து (எதிரிகளுடன்) யுத்தம் புரிவதும், (ஸகாத் போன்ற) தர்மங்களை அவர்களிடம் ஒப்படைப் பதும், அவர்களின் அநியாயங்களுக்கு பொறுமை காப்பதும், பகிரங்கமான இறைமறுப்பை வெளிப் படுத்தினால் அன்றி அவர்களுக்கெதிராக போர் தொடுக்காமிலிருப்பதும், அவர்களை வீணாகப் புகழாமலிருப்பதும், அவர்களின் நன்நடத்தைக்கு உதவி புரியுமாறு அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பதுமாகும்.  ​

 

 

219- அதற்கு ஆதாரம் என்ன?

 

 

விடை/

அதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்துக்கு;

 

அல்லாஹ் கூறுகின்றான்; நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத் தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப் படுங்கள்!. அன்னிஸா 59

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; உங்களுக்கு ஒரு அடிமை தலைவராக நியமிக்கப்பட்டாலும் (அவர் சொற்படி) கேட்டு நடவுங்கள். நூல் முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு  அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைபிடிக்கட்டும்.  ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்து போனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார். நூற்கள் புகாரி, முஸ்லிம்.

 

உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களை  அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்தி ருப்பதாக) உறுதிமொழி அளித்தோம். எங்களுக்கு விருப்பமான விஷயத்திலும் எங்களுக்கு விருப்ப மில்லாத விஷயத்திலும் நாங்கள் சிரமத்திலி ருக்கும் போ​தும் வசதியாயிருக்கும் போதும் எங்களைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும்கூட (தலைமையின் கட்டைளையச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், ஆட்சியதிகாரத்தில் இருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர் பான விஷயத்தில் நாங்கள் சண்டையிட மாட்டோம் என்றும் உறுதிமொழி அளித்தோம். “எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தைகய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர” என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதி மொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். நூற்கள் புகாரி, முஸ்லிம்.

 

உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் “விடைபெறும்’ ஹஜ்ஜின் போது ஆற்றிய  உரை யில், “அல்லாஹ்வின்  வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்கு   தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லை யேற்று அவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறியைத நான் கேட்டேன். நூல் முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டைளயிடப் படாதவரை,  ஒரு முஸ்லிம் தமக்கு விருப்ப மான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டைளையச்) செவியுறுவதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டைளயிடப்பட்டால் (அதைச்) செவியுறுவதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.​ இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூற்கள் புகாரி, முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளை யிடப்படாதவரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். நூற்கள் புகாரி, முஸ்லிம். ​

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார் கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழி முறையை (சுன்னா) கடைபிடிக்க மாட்டார்கள். அவர்களிடையே சிலர்  தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள். “அந்தக் கால கட்டத்தை அடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதேர?” என்று ஹுஃதைபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு “அந்த ஆட்சியாளரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப் பட்டு நடந்து கொள். நீ முதுகில் தாக்கப் பட்டாலும் சரியே! உன் செல்வங்கள் பறிக்கப் பட்டாலும் சரியே​! (அந்த ஆட்சித் தலைவரின் கட்டைளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்து கொள்” என்று கூறினார்கள். நூல் முஸ்லிம்.

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் (தலைமைக்குக்) கட்டுப்படுகின்ற செயலிலிருந்து கையை விலக்கிக் கொள்கிறாறோ அவர், தம(து செயல்பாடுகளு)க்கு(ம் அதற்கான சாக்குப் போக்கு களுக்கும்) எந்தச் சான்றும் இல்லா மலேயே மறுமை நாளில் இறைவனை​ச் சந்திப்பார். மேலும் தமது கழுத்தில் (தம் ஆட்சியாளரிடம் அளித்திருந்த) உறுதிமொழிப் பிரமாணம் இல்லாத நிலையில்  எவர் இறக்கிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுவார்’  நூல் முஸ்லிம்.

 

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (எனக்குப் பிறகு) விரைவில் குழப்பங்களும் பிரச்சினைகளும் தோன்றும். இந்தச் சமுதாயத் தின் (அரசியல்) நிலை (ஒரே தலைமயின் கீழ்) ஒன்று பட்டிருக்கும் போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்புகின்றவரை வாளால் வெட்டிக் கொல்லுங்கள். அவர் யாராக இருந்தாலும் சரியே! நூல் முஸ்லிம்.

 

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்து கொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” என்று கூறினார்கள். மக்கள், “அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; அவர்கள் தொழுகையை நிறை வேற் றும் வரை (வேண்டாம்)” என்று கூறினார்கள்.

 

இது போன்று இன்னும் பல நபிமொழிகளும் வந்துள்ளன.

 

 

 

220- நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் எவர் மீது கடமையாகும்?  மேலும் அதில் எத்தனை நிலைகள் உள்ளன?

 

 

விடை/

அல்லாஹ் கூறுகின்றான்; “நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” ஆலு இம்ரான் 102.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது  இறைநம்பிக்கை யின் பலகீனமா(ன நிலையாகும்.  நூல் முஸ்லிம்.

 

இது தொடர்பாக எண்ணிக்கையில் அடங்காத நபிமொழிகள் வந்துள்ளன, அவையனைத்தும் நன்மையை ஏவுவதும், பிறர் தீமையை தடுக்காதபோது அதைக் கண்ட ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் சக்திக்கும் உற்பட்டவாறு தடுப்பது கடமை என்பதையும் வளியுறுத்து கின்றன. ஏனெனில் ​(அல்லாஹ்விடமிருந்து) பாவிகளுக்குத் தண்டனை இறங்கும் போது தீமையைத் தடுத்தவர்கள் மாத்திரமே தப்பிக்க முடியும். இது தொடர்பாக நாம் ஒரு சிறு நூலையே எழுதியுள்ளோம், சத்தியத்தை தேடுபவர்களுக்கு அதுவே போதுமானது.  ​

 

221- (அவ்லியாக்கள்) அல்லாஹ்வின் நேசர்களின் கராமத்துகள் உண்மையா?

 

விடை/

அவ்லியாக்களின் கராமத்துகள் உண்மைதான், கராமத் என்றால் எத்தகைய சவாலுக்கும் உற்படாது, அவ்வியாக்களின் தலையீடு இல்லாமல் அவர்கள் கையாலே வழமைக்குப் புறம்பான ஒரு விடயத்தை அல்லாஹ் நிகழ்த்திக் காட்டுவதாகும். அவர்கள் அறியாமலும் அவன் அதை நிகழ்த்திக் காட்டலாம். குகை வாசிகள், பாராங்கல் வாசிகள், துறவி ஜுரைஜ் போன்றவர்களின் நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம், இவர்களுடைய கராமத்துகளும் முன்னைய நபிமார்களுடைய அற்புதங்களின் தொடராகவே பார்க்கப்படும். ஆனால் இந்த உம்மத்துடைய கராமத் அவர்களு டைய நபிக்கு கொடுக்கப்பட்ட மகத்தான அற்புதத்தைப் போலவே மிக மகத்தானது, உதாரணத்துக்கு அபூ பக்கர் (ரலி) அவர்களுக்கு மதம் மாறியவர்களுடைய காலத்தில் நிகழ்ந்தது,  மலையில் ஏறுபவரை உமர் (ரலி) அவர்கள் (மிம்பர்) மேடையிலிருந்து அழைத்தது, மேலும் அவர்கள் எகிப்தின் (வற்றிய) நைல் நதிக்கு கடிதம் எழுதி அதன் தண்ணீரை ஓடவைத்தது, பஹரெயின் யுத்தத்தில் அலா அல் கல்ரமி அவர்கள் தமது குதிரையுடன் கடலில் மூழ்கிய நிகழ்வு, அஸ்வதுல் அன்ஸி மூட்டிய நெருப்புக் குண்டத்தில் அபூ முஸ்லிம் அல் கவ்லானி தொழுத நிகழ்வு போன்றவைகளை இதற்கு உதாரணமாக​க் கூறலாம். ​

 

இத்தகைய கராமத்துகள் நபியவர்களுடைய காலத்திலும் அவர்களுக்குப் பின் வந்த நபித் தோழர்கள், தாபிஈன், மேலும் இன்று வரைக்கும் அவர்களுக்குப்பின் வந்தவர்கள் காலங்களிலும் நிறையவே நிகழ்ந்துள்ளன, உண்மையில் இவை யாவும் நபி (ஸல்) அவர்களுடைய அற்புதங்களா கவே பார்க்கப்படும் ஏனெனில் நபியவர்களை பின்பற்றியதால் மட்டுமே இந்தகைய கண்ணியம் அவர்களுக்கு கிடைத்தது. எனவே நபியைப் பின்பற்றாத ஒருவருக்கு இவ்வாறு நிகழ்ந்தல் அதை வெறும் ஏமாற்று வித்தை யாகவே பார்க்கப்படும்.​ இத்தகையோர் அல்லாஹ்வின் நேசர்கள் அன்றி ஷைத்தானின் நேசர்களாவார்கள்.

 

222- (அவ்லியாக்கள்) அல்லாஹ்வின் நேசர்கள் யார்?

 

விடை/

அவர்கள் தான் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு, மேலும் அவனைப் பயந்து, அவனுடையதும் அவனுடைய தூதருடையதும் திருப்தியைப் பெற்றவர்களாகும்.

 

அல்லாஹ் கூறுகின்றான்; கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள். யூனுஸ் 62.

 

அவ்வசனங்களின் தொடரில் அவர்களைப் பற்றி சற்று விளக்கமாகக் கூறும்போது அல்லாஹ் கூறுகின்றான்; அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். யூனுஸ் 63.

 

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு தீய சக்தி களே உதவியாளர்கள். வெளிச்சத்திலி ருந்து இருள்களுக்கு அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர். அல் பகரா 257.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பா ளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். அல் மாஇதா 55,56.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர் என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம். நூற்கள் புகாரி, முஸ்லிம்.

 

ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வை நேசிப்பதாக வாதிட்ட ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் பின்வரும் திரு வசனத்தின் மூலம் சோதித்தான்.

 

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங் களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்ப வன்; நிகரற்ற அன்புடையோன்” என்று (நபியே நீர்) கூறுவீராக! ஆலு இம்ரான் 31.


இமாம் ஷாபீஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; நீங்கள் ஒரு மனிதனை தண்ணீரின் மேல் நடக்கக் கண்டால், அல்லது வானத்தில் பறக்கக் கண்டால், அவர் இறைத்தூதரைப் பின்பற்றுபவர் என அறிந்து கொள்ளும் வரை ​அவரை உண்மைப்படுத்தவோ அல்லது அவரைக் கண்டு ஏமாற்றம் அடைந்து விடவோ வேண்டாம்.

 

223- “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள்  இதே நிலையில் இருக்கும்போதே  இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்”. என்ற செய்தியில் நபி (ஸல்) அவர்கள் எந்தக் குழுவினரை நாடினார்கள்?

 

விடை/

அக்குழுவினர் தான் எழுபத்து மூன்று கூட்டங்களில் விமோசனம் அடைந்தவர்கள், இதை நபி (ஸல்) அவர்கள் மேலும் விளக்கும் போது; அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர மற்றைய அனைவரும் நரகத்துக்குச் செல்வார் கள், அவர்கள் தான் (ஒன்றுபட்ட) கட்டைமப் பாகும், பிரிதோர் அறிவிப்பில் நானும் எனது தோழர்களின் வழியில் செல்பவர்களே அவர்கள் என்று (விளக்கமாகக்) கூறினார்கள். நூல் ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா.

இறைவா! எங்களையும் அவர்களில் ஆக்கி விடு வாயாக, எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். ஆலு இம்ரான் 8.

 

கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.

தூதர்கள் மீது ஸலாம் உண்டாகும்!

அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் (உண்டாவதாக). அஸ்ஸாப்பாத் 180-182.

 

வஸ்ஸாம்…

 

நிறைகளைப் பிறரிடம் கூறுங்கள்!!!

குறைகளை என்னிடம் கூறுங்கள்!!!

 

tamil@islamhouse.com

www.qurankalvi.com

 

 

Check Also

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? | கேள்வி பதில் |

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி முஸ்லிம்க்கு சொர்க்கம், …

Leave a Reply