Home / கட்டுரை / கட்டுரைகள் / அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து (ஆயத்துல் குர்ஷி 2:255)

அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து (ஆயத்துல் குர்ஷி 2:255)

அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து

‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப் பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது ‘குர்ஸி” வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவ மானவன்.”
(2:255)

அல்குர்ஆனில் உள்ள மகத்துவமிக்க ஆயத்தாக இது அமைந்துள்ளது. காலை, மாலை மற்றும் ஐவேளைத் தொழுகையின் பின்னர் என ஒரு நாளில் பல விடுத்தங்கள் ஓதப்படும் வசனமாகவும் இது அமைந்துள்ளது. கெட்ட ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதற் குரிய வசனமாகவும் இது அமைந்துள்ளது.

இந்த வசனம் அல்லாஹ்வைச் சிறப்பாக அறிமுகம் செய்கின்றது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறிவிட்டு எல்லாம் வல்ல இறைவன் பற்றி சில செய்திகள் கூறுகின்றது.

சில மதங்கள் கடவுள் பற்றிக் கூறும் கற்பனைக் கதைகளைக் கேட்கும் கல்வியலாளர்கள் கடவுளே இல்லை, கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள் என்று கூறியிருக்கின்றனர். கடவுள் என்பவன் பசி, தாகம், பயம், தூக்கம், சோர்வு, துக்கம், இயலாமை, அறியாமை போன்ற குணங்கள் கொண்டவனாகச் சித்தரிக்கப் படுகின்றான். இதனால் கடவுளே இல்லை என்ற முடிவுக்கு சிலர் வந்துவிடுகின்றனர்.

இங்கு அல்லாஹ்வைப் பற்றி அறிமுகம் செய்யும் போது அவன் நித்திய ஜீவன் -அல் ஹைய்யு- என்று கூறப்படுகின்றது. ‘ஹயாத்” எனும் வாழ்வு அவனுக்குண்டு என்னும் இவ்வார்த்தை பார்வை, செவிப்புலன், அறிவு, அனைத்திலும் முழுமை பெற்றவனாக இறைவன் இருப்பதை இது காட்டுகின்றது.

அடுத்து, ‘அல்கையூம்” – நிலைத்திருப்பவன். தனது விருப்பத்தை செய்து முடிக்கும் ஆற்றல்கள் உள்ளவன். அவன் நாடியதை நாடிய நேரத்தில் நாடிய விதத்தில் செய்து முடிப்பான் என்பதை இந்த வார்த்தை உணர்த்துகின்றது. இந்த அடிப்படையில் ‘அல் ஹய்யுல் கையூம்” என்ற இரண்டு வார்த்தைகளும் அல்லாஹ்வுடைய அழகுத் திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கக் கூடிய இரு வார்த்தைகள் என அறிஞர்களால் வர்ணிக்கப் படுகின்றன.

அடுத்து, அல்லாஹ்வுக்குத் தூக்கமோ, தூக்கத்திற்கு முந்திய சிறு தூக்கமோ கிடையாது என்பதால் மனித பலவீனங்களுக்கு கடவுள் அப்பாற்பட்டவன் என்று கூறப்படுகின்றது.

தொடர்ந்து வானம், பூமியில் உள்ள அனைத்துமே அவனுக்குரியன. அவனிடம் யாரும் அவனது அனுமதியின்றி பரிந்துரை செய்ய முடியாது. படைப்பினங்களுக்கு முன்னால் உள்ளது, பின்னால் நடப்பது அனைத்தையும் அறிந்தவன். அவனது மறைவான விடயங்களை அவன் வெளிப்படுத்தினாலே தவிர வேறு யாராலும் அறிய முடியாது! அவனது ‘குர்ஸி” என்பது வானங்கள், பூமிகள் அளவு விசாலமானது! வானம், பூமிகளைப் பாதுகாப்பதும் பரிபாலிப்பதும் அவனுக்குச் சிரமமானது அன்று என அவனது ஆற்றல்கள் விபரிக்கப்படுகின்றன. கடவுளை உரிய முறையில் அறிமுகம் செய்திருந்தால் நாஸ்திக சிந்தனை பரவுவதை ஓரளவு தவிர்த்திருக்கலாம். எல்லாம் வல்ல ஆற்றல் மிக்க இறைவனை மனித பண்புகளுடன் ஒப்பிட்டு அறிமுகம் செய்தமை ஆனமீக வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் தவறும், அநீதியுமாகும் எனலாம்.

மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை:

‘இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்”தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ” (2:256)

‘லா இக்ராஹ பித்தீன்” மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.

‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.” (109:6)

உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.

‘லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:”
‘எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு!” (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.

‘சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக! அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.” (18:29)

விரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

இஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.

வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.

சிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உளத்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்பந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது! இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா? முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா? போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்.

இப்றாஹீம் நபியின் விவாதம்:

‘தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக (கர்வம் கொண்டு) இப்றாஹீமிடம் அவரது இரட்சகன் விடயத்தில் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? இப்றாஹீம், ‘எனது இரட்சகனே உயிர்ப்பிப்பவனும் மரணிக்கச் செய்பவனுமாவான்” என்று கூறியபோது ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்” என்றான். (அதற்கு) இப்றாஹீம் ‘அப்படியானால் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். ஆகவே, அதனை நீ மேற்கிலிருந்து உதிக்கச்செய் (பார்க்கலாம்) என்றார். உடனே நிராகரித்த அவன் வாயடைத்துப் போனான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான்;.” (2:258)

இப்றாஹீம் நபியவர்கள் தனது காலத்தில் வாழ்ந்த அரசனுடன் நடத்திய விவாதம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. நம்ரூத் எனப்படும் இவ்வரசனுக்கு அல்லாஹ் மகத்தான ஆட்சியைக் கொடுத்திருந்தான். ஆணவம் கொண்ட அவன் தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக் கொண்டான். இப்றாஹீம் நபியவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். உனது இறைவன் யார்? என இப்றாஹீம் நபியிடம் அவன் கேட்டான். அல்லாஹ்வின் இரண்டு பண்புகளை அவர் கூறினார். ஆக்கவும், அழிக்கவும் ஆற்றல் பெற்றவன். படைப்புக்களை புதிதாக உருவாக்குபவனும் அவற்றை அழிப்பவனுமாகிய அல்லாஹ்வே என் இறைவன் என்று கூறினார்கள்.
நான்தான் கடவுள் என்று கூறுபவனிடம் கடவுள் ஒருவன் இருக்கின்றான், அவன் ஆக்கவும், அழிக்கவும் ஆற்றல் பெற்றவன் என இப்றாஹீம் நபி கூறிய போது ஆணவம் கொண்ட அவன், ஆக்குபவனும் அழிப்பவனும் நானே என்று வாதிட்டான். அவனது இந்த வாதம் தவறானது. என்றாலும் தொடர்ந்து அதில் வாதித்துக் கொண்டிருக்காமல் அவனால் பதில் கூற முடியாத ‘ரூபூபிய்யத்” – அல்லாஹ்வின் இறைமையுடன் தொடர்புபட்ட ஒரு அம்சத்தை இப்றாஹீம் நபி கையில் எடுத்தார்கள். ‘எனது இறைவன் சூரியனைக் கிழக்கில் இருந்து கொண்டு வருகின்றான். நீ அதை மேற்கில் இருந்து கொண்டு வா பார்க்கலாம்!” என்றார்கள். அல்லாஹ்வின் பண்புகளில் குதர்க்கம் புரிந்த இறை மறுப்பாளனால், இதில் குதர்க்கம் புரிய முடியாமல் போனது. வாயடைத்துப் போனான்.

இந்த நிகழ்ச்சி மூலம் இப்றாஹீம் நபியின் பிரச்சார அணுகுமுறை, துணிச்சல், வாதத் திறமை, வாத முறை, நம்ரூத் மன்னனின் ஆணவம் போன்ற பல அம்சங்களைப் புரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

Check Also

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை

நபி வழி… இன்றைய காலத்தின் தேவை அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி ஜித்தா தஃவா சென்டர் ஹை அஸ்ஸலாமா சவூதி அரேபியா …

Leave a Reply