Home / அகீதா (ஏனையவைகள்) / அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

بسم الله الرحمن الرحيم

உலகில் படைக்கப்பட்ட எல்லாப் படைப்புக்குறிய படைப்பாளன் அல்லாஹ் ஆவான். அவன் நாடியதைச் செய்யக்கூடிய வல்லவன். மனிதர்களாக பிறந்த எல்லோரும் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதலாவது அல்லாஹ்வை ஈமான் கொள்வதாகும்.

கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே விசுவாசங்கொள்ள வேண்டும். அதில் பகுத்தறிவை வைத்து சிந்திக்கின்ற போது அது வழிகேட்டின் பால் கொண்டுபோய் சேர்த்து விடும்.

அந்தடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற சில வழிகேடர்களுக்கு அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என்ற அடிப்படை கூட தெரியாதவர்களாக இருப்பது வேதனைக்குரிய விடயம்.

ஆதாரங்களே இல்லாமல் சமூகத்தை வழிகேட்டின் பால் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் அல்லாஹ் எங்கும் இருக்கிறான். அவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற அத்வைத சித்தாந்தத்தை மக்களுக்கு முன் சொல்லிக் கொடுக்கின்றனர்.

படைத்த ரப்பு எம்மைப் போன்றவன் என்று சிந்தித்ததன் விளைவு அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட அதிகமான விடயங்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தடிப்படையில் அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் வாசித்துப் பார்க்கின்ற போது அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்ற செய்தியை அழகாகப் புரிந்து கொள்ளலாம்.

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் என்று சொல்லப்படுகின்ற நேரான வழியில் செல்லுகின்ற சாரார் அல்லாஹ் அர்ஷுக்கு அப்பால் அவனுடைய தகுதி ஏற்ப உயர்ந்துவிட்டான் என்று சொல்கின்றனர். இதுதான் அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் சொல்லித் தந்திருக்கும் உண்மையாகும்.

இதற்கான ஆதாரங்கள்:-

அல்லாஹ் எங்கும் நிறைந்தவன் கிடையாது. அவன் அர்ஷுக்கு அப்பால் உயர்ந்து விட்டான் என்பதற்கு அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் அதிகமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. உண்மையாக அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் பின்பற்றக்கூடியவர்களுக்கு ஒரு ஆதாரம் இருந்தாலும் போதுமாகும் என்ற காரணத்தினால் சில ஆதாரங்களை மாத்திரம் முன்வைக்கிறேன்.

முதலாவது ஆதாரம்:

அல்லாஹ் கூறுகிறான்

“அர் ரஹ்மான் (தன் தகுதிக்கேற்ப) அர்ஷுக்கு அப்பால் இருக்கிறான்” (20:05)

இரண்டாவது ஆதாரம்:

அல்லாஹ் கூறுகிறான்

“வானத்தில் உள்ளவன் உங்களை பூமிக்குள் உள்வாங்கி விடமாட்டான் என்று நீங்கள் அச்சமற்று இருக்கின்றீர்களா? அப்போது அது பலமாக அசையும்”

“அல்லது வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கல்மாறியை அனுப்பமாட்டான் என்று அச்சமற்று இருக்கின்றீர்களா? எனது எச்சரிக்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்” (67:16,17)

மூன்றாவது ஆதாரம்:

நிச்சயமாக உங்களது இரட்சகனாகிய அல்லாஹ் தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து பின்னர் அர்ஷுக்கு அப்பால் உயர்ந்து விட்டான்”(7:54)

நான்காவது ஆதாரம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாரியா என்ற அடிமைப் பெண்ணைப் பார்த்து “அல்லாஹ் எங்கே இருக்கிறான்” என்று கேட்ட போது அந்தப் பெண் ” அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்” என்று கூறினார். உடனே நபியவர்கள் எஜமானனைப் பார்த்து “இவரை விடுதலை செய்யுங்கள். இவர் ஒரு முஃமினாவார்” (முஸ்லிம்)
என்று கூறினார்கள்.

இந்நான்கு ஆதாரங்களையும் தவிர இன்னும் அதிகமான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.

இதன் விரிவை அஞ்சியும் சிந்தித்து செயல்படுவர்களுக்கு ஒரு ஆதாரம் இருந்தாலும் போதுமாகும் என்ற காரணத்தினால் இவைகளுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்கிறேன்.

எனவே அல்லாஹ்வை உண்மையாக விசுவாசித்து, அவன் எங்கே இருக்கிறான் என்ற விடயத்தில் மற்றைய வழிகேடர்களை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் இருக்கவும், நரகத்தின் விபரீதத்தை பயந்து கொள்ளவும் அல்லாஹ் எம்மொவ்வோர் மீதும் அருள்புரிவானாக…

ஆக்கம்:ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply