குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்
(ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி)
இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம்
‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்” (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் (தமக்குள்) முரண்பட்டுக் கொண்டனர். அதனால் அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர்; மேலும், அவர்களில் நிராகரித்தவர்களும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க மாட்டார்கள். எனினும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்வான். ” (2:253)
இறைத்தூதர்களில் சிலரை சிலரை விட நாம் சிறப்பித்துள்ளோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். சிலருடைய அந்தஸ்தை உயர்த்தி யிருப்பதாகவும் சிலருடன் அல்லாஹ் நேரடியாகப் பேசியிருப்பதாகவும் கூறுகின்றான். மூஸா(ர), முஹம்மத்(ச) ஆகியோர் இந்த சிறப்பிற்குள் அடங்குவர்.
ஏனைய நபிமார்களுக்கு வழங்காத சில சிறப்புக்களை ஈஸா(ர) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். அவர் தந்தை இன்றிப் பிறந்தார். மிகப்பெரும் அற்புதங்களைச் செய்தார். இன்னும் உயிருடன் இருக்கின்றார். மீண்டும் பூமிக்கு வந்து நீதி நெறிமிக்க ஆட்சியை நடாத்துவார். இது ஈஸா(ர) அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பாகும்.
‘யார் நன்மை செய்த நிலையில், அல்லாஹ்வுக்குத் தனது முகத்தை அடிபணியச் செய்து, நேரிய வழி நின்ற இப்றாஹீமின் மார்க்கத்தை பின்பற்றியும் வருகின்றாரோ அவரை விட அழகான மார்க்கத்தையுடையவர் யார்? இன்னும், அல்லாஹ் இப்றாஹீமை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.” (4:125)
இப்றாஹீம் நபியை அல்லாஹ் நண்பராக எடுத்துக் கொண்டதாகக் கூறுகின்றான். இந்த சிறப்பு நபி இப்றாஹீம்(ர) அவர்களுக்கும் முஹம்மத்(ச) அவர்களுக்கும் உரியதாகும்.
‘இப்றாஹீமை அவரது இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த போது, அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (மேலும்) ‘நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்குகிறேன் என்று (அல்லாஹ்) கூறினான்.” அ(தற்க)வர், ‘எனது சந்ததியிலிருந்தும் (ஆக்குவாயாக!)” எனக் கேட்டார். எனது வாக்குறுதி அநியாயக்காரர்களைச் சென்றடையாது என அவன் கூறினான்.” (2:124)
இப்றாஹீம் நபி முழு மனித சமூகத்திற்கும் இமாமாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.
நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா, முஹம்மத் ஆகிய ஐந்து தூதர்களும் ‘உலுல் அஸ்ம்” திட உறுதி பூண்ட தூதர்கள் என்று போற்றப் படுகின்றனர்.
நபி(ச) அவர்கள் ‘மகாமும் மஹ்மூத்” என்று புகழத்தக்க அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளார்கள்.
‘உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதியில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக! உமது இரட்சகன் (புகழப்பட்ட இடமான) ‘மகாமு மஹ்மூத்”தில் உம்மை எழுப்புவான்.” (17:79)
இவ்வாறே முழு மனித சமூகத்திற்குமுரிய இறைத்தூதராக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
‘மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (7:158)
‘அகிலத்தாருக்கு எச்சரிக்கையாக இருப்பதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடிய (இவ்வேதத்)தை தன் அடியார் மீது இறக்கி வைத்தவன் பாக்கியமுடையவனாவான்.”
(25:01)
இப்படி பலரும் பல விதத்தில் சிறப்பிக்கப் பட்டுள்ளனர்.
அல்குர்ஆனின் 2:136, 285, 3:84 ஆகிய வசனங்களில் ‘இறைத்தூதர்களுக்கிடையில் வேற்றுமை பாராட்டமாட்டோம்” என்று குறிப்பிடப்படுகின்றது. ஒரு இறைத்தூதருக்கு அல்லாஹ் கொடுத்துள்ள விஷேட அந்தஸ்தை எடுத்துக் கூறுவது வேற்றுமை பாராட்டுவதாக அமையாது. முஸ்லிம்கள், இறைத்தூதர் களுக்கிடையில் வேற்றுமை பாராட்டாது அனைவரையும் நம்பிக்கை கொள்வதும், மதிப்பதும், கண்ணியப்படுத்துவதும் கட்டாயமாகும். யூதர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரை ஏற்கமாட்டோம் என்று ஒருவர் சொன்னால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. இதையே இந்த வசனம் குறிப்பிடுகின்றது.
இறைத்தூதர்களில் ஒருவரை நிராகரித் தாலும் முழு இறைத்தூதர்களையும் நிராகரித்ததற்கு அது சமமாகும். லூத் நபியின் கூட்டத்தினர் லூத் நபியை நிராகரித்தனர். இது பற்றி அல்குர்ஆன் கூறும் போது,
‘லூத்தின் சமூகத்தாரும் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.” (26:160)
லூத் நபியின் சமூகம் இறைத்தூதர்களை நிராகரித்ததாகக் கூறுகின்றது. எனவே, எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று போல் ஈமான் கொண்டு மதித்து நடக்க வேண்டும்.
அபுல் ஆலியா ருஃபைஉ இப்னு மிஹ்ரான்(ரஹ்) கூறினார். ‘உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ்(வ) இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார;கள் என எனக்கு அறிவித்தார;கள். ‘நான் யு+னுஸ் இப்னு மத்தா அவர;களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.”
(புஹாரி: 4630, 3395, 3416, 4603, 4604)
இங்கே தன்னை யு+னுஸ் நபியை விடச் சிறந்தவர் என்று கூறுவதை நபி(ச) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
‘எனவே, உமது இரட்சகனின் தீர்ப்புக்காக பொறுமையுடன் இருப்பீராக! மீன் உடையவர் (எனும் யு+னுஸ் நபி) போன்று நீர் ஆகிவிட வேண்டாம். அவர் தனது இரட்சகனைக் கவலை நிரம்பியவராக அழைத்ததை (எண்ணிப்பார்ப்பீராக!)” (68:48)
இங்கே யூனுஸ் நபியைப் போன்று நீங்கள் இருக்க வேண்டாம் என்று நபி(ச) அவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்தை வைத்துப் பார்க்கும் போது, நபி(ச) அவர்கள் யூனுஸ் நபியை விட சிறந்தவர் என்பது புரிகின்றது. அப்படியாயின் நபியவர்கள்; என்னை யூனுஸ் நபியை விடச் சிறந்தவர் என்று கூற வேண்டாம் என ஏன் கூறினார்கள் என்ற கேள்விக்கு நபி(ச) அவர்கள் தனது பணிவை வெளிப்படுத்துமுகமாக அப்படி கூறியிருக்கலாம் என சில அறிஞர்கள் பதிலளிக்கின்றனர்.
அபூ ஹுரைரா(வ) அறிவித்தார். ‘ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ச) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி(ச) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர) வையெல்லாம் தெரிவித்தார். நபி(ச) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ச) அவர்கள், ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(ர), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவை யில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.”
(புஹாரி: 2411, 3405, 16517,
முஸ்லிம்: 2373)
இந்த ஹதீஸ் மூஸா நபியை விடத் தன்னை சிறப்பிக் வேண்டாம் எனக் கூறிய நபி(ச) அவர்கள் மூஸா நபிக்கு இருக்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார்கள். நபிமார்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருக் கின்றான் என்ற குர்ஆன் வசனத்துடன் இந்த ஹதீஸை ஒப்பிட்டு சில அறிஞர்கள் அந்த நபி சிறந்தவர், இந்த நபி சிறந்தவர் என்று தர்க்கிக்கக் கூடாது. இது தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும் என பதிலளித்துள்ளனர்,
மற்றும் சில அறிஞர்கள் இந்த குர்ஆன் வசனத்தையும் இது போன்ற ஹதீஸ்களையும் ஒன்றிணைத்து நபிமார்களில் சிலரை விட சிலரை சிற்சில விடயங்களில் அல்லாஹ் சிறப்பித்து வைத்துள்ளான். இருப்பினும் நபி என்கின்ற வகையில் அனைவரும் சமமானவர்கள். ஏற்றத்தாழ்வு கிடையாது. தூதுத்துவ பணியில் அனைவரும் சமமானவர்கள் என்று விளக்கமளித் துள்ளனர். இந்த விளக்கமே மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது.
பரிந்துரை இல்லாத நாள், பரிந்துரை பயனளிக்காது:
‘நம்பிக்கை கொண்டோரே! எவ்வித பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவு செய்யுங்கள். நிராகரிப்பாளர்களே அநியாயக்காரர்களாவர்.”
(2:254)
இந்த வசனத்தில் மறுமை பற்றி பரிந்துரை இல்லாத நாள் என்று கூறப்படுகின்றது. இவ்வாறே பரிந்துரை ஏற்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகின்றது.
‘எந்தவோர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு எப்பயனையும் அளிக்க முடியாத அந்நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந் நாளில்) எந்தப் பரிந்துரையும் எவரிட மிருந்தும் ஏற்கப்படமாட்டாது; எந்தப் பதிலீடும் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. மேலும் அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.”
(2:48)
பரிந்துரை பயனளிக்காது.
‘ஆகவே, பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுக்குப் பயனளிக்காது.”
(74:48)
என்றெல்லாம் ‘ஷபாஅத்” – பரிந்துரை பற்றி கூறப்படுகின்றது. இது போன்ற வசனங்களை ஆதாரமாகக் கொண்டு முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்கள் மறுமையில் யாரும் யாருக்கும் ‘ஷபாஅத்” செய்ய முடியாது என்று கூறுவதுடன் ஷபாஅத் பற்றி வந்துள்ள நபிமொழிகளையும் மறுக்கின்றனர். இது தவறாகும்.
‘அர்ரஹ்மான் யாருக்கு அனுமதியளித்து, அவரின் வார்த்தையைப் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர (மற்றவரின்) பரிந்துரை அந்நாளில் பயனளிக்காது.”
(20:109)
அல்லாஹ்வின் அனுமதியுடன் ‘ஷபாஅத்” உண்டு என்றும் அது பயனளிக்கும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இதே கருத்தை பின்வரும் வசனமும் கூறுகின்றது.
‘அவன் யாருக்கு அனுமதியளித்தானோ அவருக்கேயன்றி அவனிடம் பரிந்துரை பயனளிக்காது.”
(34:23)
யார் யாருக்கு ஷபாஅத் செய்யலாம் என்பதை அல்லாஹ்வே தீர்மானிப்பான். அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்று அல்லாஹ் பொருந்திக் கொண்டவர்களுக்காக ஷபாஅத் செய்யப்பட்டால் அது பயனளிக்கும்.
‘பரிந்துரை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன என (நபியே!) நீர் கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியதாகும். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.” (39:44)
எல்லா ஷபாஅத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. யார் ஷபாஅத் செய்ய வேண்டும் என்பதையும், யாருக்கு ஷபாஅத் செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ்வே தீர்மானிப்பான்.
அப்படியில்லாமல் யாரும் யாருக்கும் ஷபாஅத் செய்யவும் முடியாது, அது பயனளிக்கவும் மாட்டாது. இன்னாரின் ஷபாஅத் எனக்குக் கிடைக்கும் என்று சுயமாக யாரும் தீர்மானிக்கவும் முடியாது.
மறுமையில் பரிந்துரை இல்லை என்பதன் அர்த்தம் அல்லாஹ்வின் அனுமதியும் அங்கீகாரமும் இல்லாமல் ஷபாஅத் இல்லை என்ற அர்த்தத்தையே தரும். பொதுவாக ஷபாஅத்தை இல்லை என மறுப்பதாக அது அமையாது.