மாடறுப்பது தடுக்கப்பட்டால்….
(ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி)
களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ஆட்சியில் மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட அவர் இப்படியொரு வார்த்தையை வெளியிடவில்லை. 99மூ முஸ்லிம்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய நல்லாட்சியின் ஜனாதிபதி இப்படியொரு கருத்தை வெளியிட் டிருப்பது பாரிய அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மாட்டிறைச்சி அரசியல் ஆரம்பித்து விட்டதையே இது எடுத்துரைக்கின்றது.
இலங்கையில் உள்ள இனவாதிகள் மட்டுமன்றி நல்ல பல சிங்கள, தமிழ் மக்களும் மாடுகள் அறுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர் என்பது உண்மையே! இருப்பினும் இந்துக் கல்லூரி தைப்பொங்கல் திருவிழாவில் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதன் மூலம், தமிழ், பௌத்த மக்களை மட்டுமன்றி இனவாதிகளையும் திருப்திப்படுத்துவதனூடாக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பலவீனமான மனநிலைக்கு அவர் சென்றிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
உண்மையில் பௌத்த தர்மத்திற்காக மாடுகள் அறுக்கப்படுவதை எதிர்ப்பது மிகக் குறைவு என்றே கூற வேண்டும். கொல்லாமை கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இக்கருத்து முன்வைக்கப்பட்டிருந்தால் மீன் பிடிப்பது, இறைச்சிக்காக கோழிகள் அறுக்கப்படுவது… என அனைத்தையும் சேர்த்தே கண்டிக்க வேண்டும். ஆனால், அப்படி நடப்பதில்லை.
பௌத்த போதனைக்காக மாடுகள் அறுக்கப்படுவது எதிர்க்கப்பட்டால் அதை விட வீரியமாக மது விற்பனைக்கு எதிர்ப்பாக இவர்கள் போராட வேண்டும். எல்லா மதங்களும் எதிர்க்கும் மதுபான சாலைகளைத் தாராளமாகத் திறந்து வைத்துக் கொண்டு மாடறுப்புக்கு எதிராகக் கோஷம் எழுப்புவது வெறும் வேஷமே!
இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவதை இலங்கை மக்கள் விரும்பாவிட்டால் இலங்கை மக்களுக்காக வெளிநாடு ஒன்றில் மாடுகள் அறுக்கப்படுவதை எப்படி சரி காண முடியும்?
இங்கே ஒரு வியாபாரம் நடக்கப் போகின்றது. மாட்டிறைச்சி விற்பனை மூலமாக முஸ்லிம்களே ஆதாயம் தேடி வருகின்றனர். அதைத் தடுத்துவிட்டு யாரோ ஒரு சில பண முதலைகளும், அரசியல் சக்திகளும் மாட்டிறைச்சி இறக்குமதி மூலம் கொள்ளை இலாபம் அடையப் பார்க்கின்றனர். இந்த சுரண்டலுக்குத்தான் மதவாதமும், இனவாதமும், பசு மீதான பாசமும் தூண்டி விடப்படுகின்றன.
இந்தியாவில் மாடுகள் அறுக்கப்படுவதைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள்தான், முஸ்லிம் பெயர்களில் அரபு நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்றனர். இலங்கையிலும் இந்தச் சுரண்டல் ஆரம்பமாகப் போகின்றது.
இது முஸ்லிம்களைக் குறிவைத்துப் பாயும் சட்டம் என்றாலும் நாட்டுக்கு இதனால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. நாட்டுக்கு இதனால் பலத்த பாதிப்பு ஏற்படப் போவது திண்ணம்.
பொருளாதார இழப்பு:
இலங்கையில் சுமார் பத்தாயிரம் (10,000) மாட்டிறைச்சிக் கடைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடை மூலம் குறைந்தது. 75,000 ரூபா நகரசபைக்குக் கிடைக்கின்றது என்றால் கிட்டத்தட்ட குறைந்தது 750,000,000 ரூபாவை அரசு இழக்க நேரிடும். அது மட்டுமன்றி இதனுடன் தொடர்புபட்ட தொழிலாளர்களும் தொழிலை இழக்க நேரிடும்.
மாடுகள் பெருகும்:
ஒரு நாளைக்கு சுமார் 10,000 மாடுகள் அறுக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் மாதாந்தம் சுமார் மூன்று இலட்சம் (300,000) மாடுகள் அறுக்கப்படுவது தவிர்க்கப்படுவதால் மாடுகள் பெருகிவிடும். மாடுகள் பெருகும் போது அவற்றுக்காக உணவு, தண்ணீர், பாராமரிப்பு என பலத்த சவால்களையும் இழப்புக்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
ஆண்மாடுளை என்ன செய்வது?:
பெண் மாடு மூலமாக பால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆண் மாடுகள் மூலமாக முன்னைய காலம் போன்று வண்டி ஓட்டமுடியாது!, விவசாயமும் செய்ய முடியாது. ஆண் மாடுகள் மூலம் மாமிசமும் பெற முடியாது என்றால் அவற்றை என்னதான் செய்வது?
பசுக்கள் பால் தர முடியாத பருவத்தை அடைந்துவிட்டால் என்ன செய்வது? பெற்ற தாய் தந்தையையே கவனிக்காத சமூகம் எந்த இலாபமும் இல்லாமல் மாட்டை வைத்துப் பராமரிக்கும் என்று மூளை உள்ள எவனாவது கூற முன்வருவானா?
ஒரு இனம் அளவுக்கு மீறி அதிகரித்து விட்டால் அந்த இனம் தானாகவே அழிய ஆரம்பிக்கும். மாடுகள் பெருகி ஒரு கட்டத்தில் உணவின்றி இறக்கும் நிலைக்கும் உள்ளாகலாம். இதற்கும் ஒரு மாற்று வழி கூறுவார்கள், இலங்கையில் இருந்து உயிருடன் மாட்டை ஏற்றுமதி செய்து பின்னர் வெளிநாட்டில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டும். மாட்டைக் கொல்வதற்காக ஏற்றுமதி செய்வதை விட அதை எமது நாட்டில் நாமே செய்து கொள்ளலாமே!
மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப் பட்டால்..:
மாடுகளை உயிருடன் ஏற்றுமதி செய்து இறைச்சியை இறக்குமதி செய்வதாக அல்லது இறைச்சியை மட்டும் இறக்குமதி செய்வதாக வைத்துக் கொள்வோம். இதனால் அதிக செலவினத்தையும், நஷ்டத்தையும், தேவையில்லாத விலையுயர்வையுமல்லவா நாம் சந்திக்கப் போகின்றோம்? ஏன் இது புரிவதில்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் இலங்கையில் இப்போது இருக்கும் விலையை விட அதிக விலை கொடுத்தே மாமிசத்தை வாங்கும் நிலை ஏற்படும். உள்நாட்டில் தாராளமான வளம் இருக்கும் போது, வெளிநாட்டிலிருந்து ஒன்றை இறக்குமதி செய்து கூடிய விலைக்கு அதை மக்களுக்கு கொடுப்பது நல்லதொரு அரசின் பணியாக ஒரு போதும் இருக்காது! நாட்டுக்கும், நாட்டு வளத்திற்கும், பொருளாதார வளத்திற்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகமாக அல்லவா அமையும்!
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டால் பழைய பதப்படுத்தப்பட்ட இறைச்சியையே மக்கள் தொடர்ச்சியாக உண்ண நேரிடும். நாட்டிலே இதற்கு நல்ல வளம் இருக்கும் போது பதப்படுத்தப்பட்ட பழைய இறைச்சியை நாட்டு மக்களுக்கு வழங்கி நோய்க்கான பக்கவிளைவுகளையும் நோயையும் உண்டு பண்ணி ஆரோக்கியமற்ற மக்கள் வளத்தை உருவாக்குவது தான் நல்லாட்சியின் இலட்சணமா?
ஒரு வேளை வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் ஹலால் முறையில் அறுக்கப்பட்டதுதானா? என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்படும். இந்த நிலைமை இறைச்சி விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதையும் ஒருபுறம் சிந்திக்க வேண்டும்.
எந்தத் திசையில் நோக்கினாலும் இனவாதிகளை திருப்திப்படுத்துதல், ஏற்றுமதி-இறக்குமதி மூலம் வியாபார வியூகம் அமைத்தல் என்பதைத் தவிர இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் விளையப்போவதில்லை.
சென்ற தேர்தலில் மைத்திரியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் பெரும் பங்காற்றி யுள்ளனர். இனவாதிகளும், ஜனாதிபதியுடன் கூட இருக்கும் சிலரும் முஸ்லிம்களின் வெறுப்பைப் பெறத்தக்க தீர்மானங்களின் பக்கம் அவரை திசை திருப்பி அதன் மூலம் முஸ்லிம்களின் பொறுப்பை அவர் சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்க் கின்றனர். முஸ்லிம்களின் வெறுப்பை அவர் பெற்று விட்டால் அதன் மூலம் மைத்திரியின் அரசியலை அஸ்தமிக்கச் செய்து விட்டு மீண்டும் ஒரு வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். அந்த சதி வலைக்குள் ஜனாதிபதி மைத்திரி கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கப்படுகின்றாரோ என்ற சந்தேகமும் எழுகின்றது.
எனவே, மக்களின் நல்லபிப்பிராயத்தை வென்றெடுத்த நல்லாட்சியில் ஜனாதிபதி அவர்கள் தனது முடிவினை மீள் பரிசீலனை செய்வதோடு இனவாத சிந்தனைகள் தலைதூக்க இடமளிக்காமல் சகல இன மக்களும் சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும், சகவாழ்வுடனும் வாழ ஆவன செய்ய வேண்டும் என்று வேண்டுதல் விடுக்கின்றோம்.
(ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி)