Home / Islamic Centers / Al Khobar Islamic Center / சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC…

 

சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான்

“(பெற்றோரை) நோவினை செய்பவன், சூனியத்தை நம்பிக்கைக் கொண்டவன், தொடர்ந்து மது அருந்துபவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அறிவித்தவர்: அபூ தர்தா(ரலி), அஹ்மத் 26212

சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று இச்செய்தி கூறுகிறது. எனவே, சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை தவறானது என்று இந்த ஹதீஸை வைத்து கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்பக் கூடாது என்று சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டிருந்தாலே இது நம்முடைய கருத்துக்கு எதிராக உள்ளது என்று வாதிட முடியும். சூனியத்தை நம்பக்கூடாது என்றே கூறுகிறது.

குர்ஆனும் ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளும் சூனியத்தால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்றே கூறுகின்றன. இதற்கு முரணில்லாமல் இந்த ஹதீஸை புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஹதீஸின் உண்மையான பொருளை அறிவதற்கு முன்னால் இச்செய்தி நம்பகத்தன்மையில் எத்தகைய நிலையில் உள்ளது என்பதை முதலில் அறிந்துகொள்வோம்.

இச்செய்தியில் சுலைமான் இப்னு உத்பா என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் பெரிய அளவில் நினைவாற்றல் உள்ளவரோ பரவலாக அனைவராலும் அறியப்பட்டவரோ அல்ல. இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்று சொன்னாலும் வேறு சிலர் இவரை குறை கூறியும் உள்ளனர். இவரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை என இமாம் அஹ்மது கூறியுள்ளார்கள். இவர் எதற்கும் தகுதியில்லாதவர் என்று இமாம் யஹ்யா இப்னு மயீன் கூறியுள்ளார். இவர் பல தவறான செய்திகளை அறிவித்தவர் என்று சாலிஹ் ஜஸ்ரா என்ற அறிஞர் கூறியுள்ளார். இமாம் அபூ ஹாதிம் அவர்கள் இவர் சுமானரான நிலையில் உள்ளவர் என்று கூறியுள்ளார்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் 4:184

எனவே, இந்த அறிவிப்பாளரை நேர்மையானவர் என்று நாம் ஏற்றுக்கொண்டாலும் இவர் தனித்து அறிவிக்கும் இந்த ஹதீஸை நாம் நம்பும் அளவுக்கு உறுதியான நினைவாற்றல் உள்ளவர் அல்ல. எனவேதான், இமாம் தஹபீ அவர்களும் இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவரை சதூக் என்று குறிப்பிடுகின்றனர். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவரை சதூக் (நேர்மையானவர்) என்று சொல்வதுடன் யாரும் அறிவிக்காத சில ஹதீஸ்களை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

உறுதியான நினைவாற்றல் இல்லாத நாணயமானவருக்கு சதூக் என்று ஹதீஸ் கலையில் குறிப்பிடுவார்கள். இந்நிலையில் உள்ளவர்கள் தனித்து ஹதீஸை அறிவித்தால் அது மற்ற செய்திகளுக்கு முரணில்லாமல் இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம். பிரச்னைக்குரிய கருத்துக்கள் இவர் வழியாக வருமேயானால் அப்போது இவரின் ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவேதான், அறிஞர் ஷுஐப் அர்னாஉத் அவர்கள் இந்த ஹதீஸ பதிவு செய்துவிட்டு இதன் கீழ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இச்செய்தி ஹசன் லிகைரிஹி என்ற தரத்தில் அமைந்தது. இச்செய்தியை சுலைமான் இப்னு உத்பா என்பவர் தனித்து அறிவிக்கிறார். யார் தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அந்த நபர்களில் இவரும் ஒருவர்.
நூல்: முஸ்னது அஹ்மது (பாகம் 6 பக்கம் 441)

ஹசன் என்றாலே நம்பகத்தன்மையில் கிழ்நிலையில் உள்ள செய்திக்கே சொல்லப்படும். பல பலவீனமான அறிவிப்புகள் வந்தால் அப்போது இதற்கு இந்த அந்தஸ்த்தை வழங்குவார்கள். இது போன்ற நிலையில் உள்ள செய்திகள் இதை விட வலுவான ஹதீஸ்களுக்கு முரணில்லாமல் இருந்தாலே ஏற்றுக்கொள்ளப்படும். முரணாக இருந்தால் இருந்தால் எவ்வித சந்தேகமும் இன்றி இவை நிராகரிக்கப்படும்.

எனவே, சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பக்கூடாது என்ற கருத்தைத் தான் இந்த ஹதீஸ் தருகிறது என்று வாதிட்டால் ஹதீஸ் கலை விதியின் அடிப்படையில் இது ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறும் ஹதீஸ் மிக மிக நம்பகமான வலுவான ஆட்கள் வழியாக வந்துள்ளது. ஹதீஸ் துறையில் இமாம்களாக திகழ்ந்தவர்கள் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார். மேலும் அஜ்வா தொடர்பான செய்தியும் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தை தருகிறது. குர்ஆனும் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறது.

இந்த ஆதாரங்களோடு சுலைமான் இப்னு உத்பா அறிவிக்கும் இச்செய்தியை எடைபோட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரலாம். எனவே, சுலைமான் இப்னு உத்பாவின் அறிவிப்பு நிராகரிக்கப்படக்கூடியதாகும். ஆனால், இந்த ஹதீஸை மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாமல் புரிந்துகொள்ள முடியும்.

சூனியத்தில் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினால் சூனியத்தை நம்பிவிட்டார்கள் என்று சொல்லக்கூடாது. சூனியம் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னதையே நம்புகிறோம்.
தஜ்ஜால் பல வகையான அற்புதங்களைச் செய்வான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். இதை நம்பினால் நாம் தஜ்ஜாலை ஈமான் கொண்டுவிட்டோம் என்று யாரும் சொல்லமாட்டோம். தஜ்ஜாலை இறைவனாக ஏற்றுக்கொண்டவனே தஜ்ஜாலை ஈமான் கொண்டவன். தஜ்ஜால் சில காரியங்களை செய்வான் என்று மட்டும் நம்புவதால் தஜ்ஜாலை ஈமான்கொண்டவனாக மாட்டோம். மாறாக இது அல்லாஹ்வின் தூதரை உண்மைப்படுத்தும் நம்பிக்கையாகும்.

இந்த அடிப்படையில் நாம் சிந்தித்தால் சூனியம் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியதை நம்பக்கூடியவன் சூனியத்தை ஈமான் கொள்ளவில்லை. அல்லாஹ்வையே ஈமான் கொள்கிறான். அவனுடைய தூதரையே ஈமான் கொள்கிறான்.

மேலுள்ள ஹதீஸ் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுவதைப் பற்றி பேசவில்லை. அதன் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பக்கூடாது என்றும் கூறவில்லை. எனவே, மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இந்த ஹதீஸை விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
சூனியம் என்ற ஹராமான காரியத்தை மனதளவில் அங்கீகரித்து அதில் ஈடுபடக்கூடியவனும் சூனியக்காரனிடம் சென்று அவன் சொல்வதையெல்லாம் நம்பக்கூடியவனுமே சூனியத்தை ஈமான் கொண்டவன். குறிசொல்வதும் கிரகண சாஸ்திரங்கள் பற்றிய மூடநம்பிக்கையும் சூனியத்தில் ஒரு வகையாகும். இதற்கும் சிஹ்ர் என்று சொல்லப்படும். இந்த ஹதீஸ் இதை நம்பக்கூடாது என்று கூறுவதாக புரிந்துகொள்ளலாம். இந்த ஹதீஸிற்கு இது தான் விளக்கம் என்பதை நாம் சுயமாகக் கூறவில்லை. அறிஞர் முஹம்மது இப்னு ஸாலிஹ் உஸைமீன் அவர்கள் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்கள்.
நூல்: அல்கவ்லுல் முஃபீத் (பாகம்: 2 பக்கம்:  13)

இவ்வாறு விளங்கும்போது நாம் ஓர் ஆதாரத்தை எடுத்து பலமான வேறு ஆதாரங்களை மறுக்கும் நிலை இல்லை. அனைத்து ஹதீஸ்களையும் குர்ஆன் வசனத்தையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனவே, இது ஈமானுக்கு பாதுகாப்பான நிலை.

பலமான ஆதாரங்களுக்கு மாற்றமான விளக்கத்தை இந்த ஹதீஸிற்கு கொடுத்தால் ஸஹீஹ் அல் புகாரீ முஸ்லிமில் உள்ள வலுவான ஹதீஸ்களை மறுத்து நம்பகத்தன்மையில் கீழ்நிலையில் உள்ள இந்த ஹதீஸை மட்டும் ஏற்க வேண்டிய நிலை உள்ளது. மார்க்கத்தை சரியான முறையில் அனுகுபவர்கள் இப்படிப்பட்ட வேலையை ஒருபோதும் செய்யமாட்டார்கள்.

Check Also

உத்தம நபியின் உயரிய பண்புகளை உலகிற்குச் சொல்வோம் | Assheikh Azhar Yousuf Seelani |

உத்தம நபியின் உயரிய பண்புகளை உலகிற்குச் சொல்வோம் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube …

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    எவ்வளவு அற்புதமான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள்.அதாவது சூனிய காரனிடம் நேரடியாக சென்று அவன் சொல்வது நடக்கும் என்று நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான்.மாறாக வீட்டிற்குள் இருந்து கொண்டு அல்லாஹ் நாடினால் அவனால் எல்லாம் முடியும் என்று சொன்னால் அது சொற்கத்திற்குரியது.

    அதாவது நரகத்திற்குரிய ஒரு செயலுக்கு அல்லாஹ்வின் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்ப்பது.விளக்கம் அருமை.

Leave a Reply