Home / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் : 01/08

தொகுப்பு : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி

ஹதீஸ்;

துன்யாவுக்காக உழைக்கும் போது தொடர்ந்தும் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொள். மறுமைக்காக உழைக்கும் போது நாளையே மரணிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள்.

விமர்சனம்:

சமீபகாலமாக மக்களிடம் இது பிரபலமாக இருந்தாலும் இதை நபியவர்கள் கூறியதாக எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லை.
ஷைக் அப்துல் கரீம் அல்ஆமிரி அவர்களும் தனது “ஹதீஸல்லாதவற்றை தெளிவுபடுத்தல்” என்ற புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிடவில்லை.

இது நபித்தோழருடைய கூற்றாக இரு வழிகளில் பதியப்பட்டுள்ளது.

  • உபைதுல்லாஹ் இப்னு ஐزஸார் என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக இமாம் இப்னு குதைபா ரஹிமஹுல்லாஹ் தனது கغரீபுல்ஹதீஸ் 1/46/2 இல் பதிந்துள்ளார்.

இந்த உபைதுல்லாஹ்வைப் பற்றிய தகவல்கள் எதையும் நான் ஆரம்பத்தில் அறியவில்லை. பின்னர் மக்காவாசி ஒருவர் இமாம் அப்துர்ரஹ்மான் அல்முஅல்லிமீ அல்யமானீ ரஹிமஹுல்லாஹ் உடைய கூற்றை மேற்கோள் காட்டியதற்கிணங்க இமாம் புகாரியுடைய “தாரீக் 3/394” இலும், இமாம் இப்னு அபீஹாதமுடைய “அல்ஜர்ஹு வத்தஃதீல் 2/2/330” இலும் அவர் பற்றி காணக் கிடைத்தது. ரஹிமஹுமல்லாஹ்

“அவரை இமாம் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் ரஹிமஹுல்லாஹ் ‘நம்பகமானவர்’ என்று கூறியதாகவும், இமாம் ஹஸனுல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் போன்ற தாபியீன்களிடமிருந்து செய்திகளை இவர் அறிவிப்பவர்” என்று இரு கிதாபுகளிலும் பதியப்பட்டுள்ளது.

இமாம் இப்னு ஹிப்பானும் தனது “அஸ்ஸிகாத் : நம்பகமானவர்கள் 7/148” இலும் இவரைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே (இவர் தாபியீன்களிடமிருந்து மாத்திரம் அறிவிப்பவர் என்பதால்) இந்த அறிவிப்பாளர் வரிசை இடையில் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

வேறு அறிவிப்பாளர் வரிசையில் இமாம் ஹைஸமீ “ஸவாயிது முஸ்னதில் ஹாரிஸ் 2/139” இல் பதிந்துள்ள பின்வரும் செய்தியும் இதனை உறுதிப்படுத்துகிறது.
உபைதுல்லாஹ் கூறுகிறார் : ரமல் என்ற இடத்தில் வயதான ஒருவரை சந்தித்தேன். “நபித்தோழர்களில் யாரையாவது சந்தித்ததுண்டா? என்று அவரிடம் கேட்டதற்கு, “அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுவை சந்தித்திருக்கிறேன்” என்று கூறி மேற்கூறிய செய்தியை அறிவித்தார்.
(இதிலிருந்து உபைதுல்லாஹ் பெயர் அறியப்படாத ஒரு தாபியிடமிருந்து தான் இதனை அறிவிக்கிறார் என்பது தெளிவாகிறது)

  • இன்னொரு அறிவிப்பாளர் வரிசையூடாக முஹம்மத் இப்னு அஜ்லான் என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக இமாம் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் உடைய “ஸுஹ்து 2/218” இல் பதியப்பட்டுள்ளது.

இதுவும் இடையில் துண்டிக்கப்பட்டதாகும்.

இது போக, நபியவர்கள் கூறியதாக (வேறு வாசகங்கள் இரு விதங்களில்) அறிவிக்கப்படுகிறது.

1)நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் செய்தியொன்று இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் உடைய “ஸுனன் 3/19” இல் பின்வரும் வாசகத்துடன் பதியப்பட்டுள்ளது :

“நிச்சயமாக இம்மார்க்கம் உறுதியானதாகும். மிருதுவாக அதில் ஈடுபடுங்கள். இரட்சகனை வணங்குவதில் உங்களுக்கு நீங்களே வெறுப்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில் ஒரு விடயத்தில் அளவு கடந்து செயற்படுபவர் எதையும் சாதிக்கப் போவதில்லை.
மறுமைக்காக உழைக்கும் போது நான் மரணிக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொள்.
பாவங்களைத் தவிர்க்கும் போது நாளைக்கு மரணிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள்.”

இந்த செய்தியும் இரு காரணங்களால் பலவீனமானதாகும்.

ஒன்று :
அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுவிடமிருந்து இதை அறிவிக்கும் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் உடைய அடிமை பற்றிய தகவல்கள் இல்லை.

இரண்டு :
ஆறாம் இலக்க செய்தியில் கூறப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் என்ற பலவீனமானவர் இதன் அறிவிப்பாளர் வரிசையிலும் இடம் பெறுகிறார்.

அடுத்ததாக, இந்த செய்தியில் துன்யாவுக்காக உழைப்பதைப் பற்றி கூறப்படவில்லை. மாறாக மறுமைக்காக உழைக்கும் போது நிதானமாக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

“அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமல், குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதாகும்” என்ற புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸுக்கு இது ஒத்துப் போகிறது.

02)நபியவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் செய்தி இமாம் பஸ்ஸார் உடைய முஸ்னதில் இருப்பதாக “கஷ்புல்அஸ்தார் 1/57/74” இலும், அவர் வழியாக இமாம் அபுஷ் ஷைக் இப்னு ஹய்யான் ரஹிமஹுல்லாஹ் உடைய “அல்அம்ஸால் 229” இலும் பின்வரும் வாசகம் மட்டும் இடம் பெற்றுள்ளது.

“நிச்சயமாக இம்மார்க்கம் உறுதியானதாகும். மிருதுவாக அதில் ஈடுபடுங்கள். ஏனெனில் ஒரு விடயத்தில் அளவு கடந்து செயற்படுபவர் எதையும் சாதிக்கப் போவதில்லை.”

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் யஹ்யா இப்னுல் முதவக்கில் என்பவர் ஒரு பொய்யர் என்று இமாம் ஹைஸமீ ரஹிமஹுல்லாஹ் “மஜ்மஉஸ் ஸவாயித் 1/62” இல் கூறுகின்றார்.

இது போன்ற ஒரு செய்தி 847 ஆம் இலக்கத்தில் வரவிருக்கிறது.

இந்த செய்திக்கு மாற்றீடாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள ஸஹீஹுல் புகாரியுடைய பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.

“நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்….”

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Check Also

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட …

Leave a Reply