Home / அறிவுரைகள் / இஸ்லாத்தின் பார்வையில் சினிமா பார்ப்பது கூடுமா?

இஸ்லாத்தின் பார்வையில் சினிமா பார்ப்பது கூடுமா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எம்மையெல்லாம் படைத்த இறைவன் எம்முடைய உடல் உறுப்புகளை தவறான செயல்களை செய்வதை விட்டும் பாதுகாக்குமாறு ஏவியிருக்கிறான். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான்.

அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். இந்த இரண்டும் மனிதனது உள்ளத்தை தவறான பாதையின் பக்கம் அழைத்துச் செல்பவைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வுத்தஆலா அவன் தந்த உறுப்புகளை எப்படி பயன்படுத்தினோம் என்று மறுமையில் விசாரிக்க இருக்கிறான்.

“நிச்சயமாக செவிப்புலன்கள், பார்வைப்புலன்கள் உள்ளங்கள் இவை ஒவ்வொன்றும் அவைகள் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றன”
(ஸுரதுல் இஸ்ரா:36)

என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

இமாம் இப்னுல் கையும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

“உடல் உறுப்புகள் ஏழாகும். அவைகளாவன: கண்கள், காதுகள், வாய், மர்ம உறுப்பு, கைகள், கால்களாகும். இந்த உறுப்புகள் வெற்றிக்கும் கைசேதத்துக்கும் மத்தியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் கவனமில்லாமல் அவைகளை பாதுகாக்கவில்லையோ அவன் கைசேதத்திற்குரியவனாவான் .யார் அவைகளை கண்காணித்து பேணி பாதுகாத்து வருகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அந்த உறுப்புகளை பாதுகாப்பது நலவுகளின் அத்திவாரமாகும். அவைகளை பாதுகாக்காமல் புறக்கணிப்பது எல்லா தீங்குகளுக்குறிய அத்திவாரமாகும். அல்லாஹ் கூறுகிறான்…

“விசுவாசிகள் தங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மர்ம உறுப்புகளை பாதுகாக்குமாறும் (நபியே) நீர் கூறுவீராக….
(ஸூரதுன் நூர்30)”

(இஹாததுன் லிஹான்:1/80)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் சொல்லப்படுகின்ற பார்வையை தாழ்த்துதல், மர்ம உறுப்பைப் பாதுகாத்தல் என்ற விடயங்களை ஒன்று சேர்த்து பார்க்கின்ற போது பார்வையை தாழ்த்துவதானது மர்ம உறுப்பை பாதுகாப்பதற்குரிய காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது. பார்வையை தவறான பாதையில் செலுத்துவது மானக்கேடான காரியங்கள் இடம்பெறுவதற்குரிய காரணியாக அமையும் என்ற செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும். நாவினுடைய விபச்சாரம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாகும். கையினுடைய விபச்சாரம் மோசமானவைகளை தொடுவதாகும். காலினுடைய விபச்சாரம் மோசமானவைகளின் பக்கம் நடந்து செல்வதாகும். உள்ளம் ஆசை கொள்கின்றது. மர்ம உறுப்பு அதனை உண்மையாகவும் பொய்யாகவும் ஆக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி:2643, முஸ்லிம்:2657)

இமாம் அல் அமீன் அஷ்ஷின்கீதீ ரஹிமகுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்

“இந்த ஹதீஸில் சொல்லப்படுகின்ற “கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும்” என்ற செய்தியில் வருகின்ற கண்ணுடைய விபச்சாரம் என்பது ஹலாலாக்கப்படாதவைகளை பார்ப்பைக் குறித்து நிற்கின்றது. எனவேதான் இப்படிப்பட்டவைகளை பார்ப்பது ஹராம் என்பதற்கும் இவைகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குறிய தெளிவான ஆதாரமாக இது இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நபிமொழிகள் இது போன்ற அதிகமான தகவல்களை தருகின்றன.

(மோசமான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய காரணம்தான் என்பது அறியப்பட்ட விடயமாகும். உதாரணத்திற்கு பார்வைகளில் அதிகமானவைகள் அழகான பெண்ணின் பால் செல்கின்றன. அதன் காரணமாக சிலவேளைகளில் அந்தப் பெண்ணை நேசிப்பது அவனுடைய உள்ளத்தில் உருவாகி அது அவனை அழிவின் பக்கம் செல்வதற்கும் காரணமாக அமைகிறது. -அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக- எனவேதான் (தவறான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய ஊடகங்களாகும்.

(அழ்வாஉல் பயான் 5/510)

எனவேதான் இப்படியான ஒவ்வொரு செய்திகளையும் நுணுக்கமாக வசிக்கின்ற போது மனிதனை தவறான நடத்தைகளுக்கு அழைத்து செல்பவைகளாக கண்களும் காதுகளும் காணப்படுகின்றன. அவைகளைக் கொண்டு மனிதன் தவறான ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதானது, கேட்பதானது மனிதனை பாவத்தின் பால் அழைத்து செல்கின்றன.

அந்தடிப்படையில்தான் இன்றைய முஸ்லிம்கள் எந்தவொரு வயது வித்தியாசமுமின்றி திரைப்படங்கள் சினிமாக்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். சினிமாக்கள் ஆபாசம் நிறைந்ததாகவும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடிப்பததனாலும் மனித உள்ளங்களில் ஒரு விதமான தவறான எண்ணங்களை அது தோற்றுவிக்கின்றன.

ஆகவேதான் முஃமினான ஆண்களையும் பெண்களையும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கூறி இருப்பதனால் சினிமாக்கள் பார்ப்பது முஃமின்கள் மீது ஹராமான ஒன்றாக காணப்படுகின்றது.

எப்படி உணவு விடயத்தில், வியாபார நேரத்தில் ஹராத்தை தவிர்ந்து கொள்கிறோமோ அதே போன்று இந்த விடயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக.

தொகுப்பு:மௌலவி பர்ஹான் அஹமட் ஸலபி

Check Also

மக்களின் உள்ளங்களைக் கவர | பாகம் – 02 |

மக்களின் உள்ளங்களைக் கவர | பாகம் – 02 | வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply