Home / கட்டுரை / கட்டுரைகள் / மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்தே வருகின்றது. அறியாமைதான் இந்த நிலைக்குக் காரணம் என்றால் மெத்தப் படித்த மேதாவிகளாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

மேலதிகாரிகளின் அத்துமீறல்கள், பாலியல் இலஞ்சம் என்பன தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆனால், இஸ்லாம் அறியாமைச் சூழலில் வாழ்ந்த மக்களுக்கு மத்தியில் அன்றிருந்த அத்தனை பெண்களுக்கும் எதிரான அடக்குமுறைகளையும் அழித்து சாதித்துக் காட்டியது.

அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. அவர்களுக்கான சமூக அந்தஸ்தை இஸ்லாம் ஈட்டிக் கொடுத்தது. கட்டாயத் திருமணம், கட்டாய பாலியல் தொழில், குடும்ப அடக்குமுறை, கற்பழிப்பு போன்ற அன்றைய சமூகத்தில் அங்கீகாரம் பெற்றிருந்த அநியாயங்களை இஸ்லாம் அடியோடு ஒழித்தது. இதற்கான சரியான காரணம் என்ன என்பதை உலகம் உணரத் தவறிவிட்டது.

பெண்களின் அறியாமைதான் அவர்களுக்கு எதிரான அனைத்து அடக்குமுறைக்கும் காரணம் என நினைத்தனர். நன்றாகப் படித்த பெண்களும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். தடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். சில போது தாங்க முடியாது போகும் போது தற்கொலையே ஒரே தீர்வு என்ற மனநிலைக்கு மாறுகின்றனர்.

வெறுமனே கல்வி மூலம் இந்த கலங்கத்தைக் களைய முடியாது! இஸ்லாம் எதையும் ஆன்மீகத்தின் அடிப்படையிலேயே அணுகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இறையச்சம் ஊட்டப்பட வேண்டும். அதுதான் அனைத்து விதமான அநியாயங்களையும் அழிக்கும் முதன்மையான ஆயுதமாகும். இது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியமாகும்.

அடுத்து, ஆண்-பெண் என ஆண்டவனே வேறுபடுத்தியிருக்கும் போது ஆணையும் பெண்ணையும் ஒன்றுபோல் பார்க்கும் இயல்பு மாற வேண்டும்.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்ற போலிக் கோஷத்தால் பெண்கள் பலிகொடுக்கப்படுகின்றனர். சில உளவியலாளர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில உறுப்புக்கள் மட்டும்தான் வித்தியாசமானது. மற்றப்படி இருவரும் ஒன்றுதான் என்பது போல் சிந்திக்கின்றனர்.

இயல்பு, குணங்கள், நடத்தை, அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம், வேறுபாடு உள்ளது. இதை முதலில் உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பொத்திப் பொத்தி வளர்த்த சமூக அமைப்பால்தான் அவளிடம் அச்சம், நாணம் எல்லாம் ஏற்பட்டுள்ளது. அவளையும் ஆண் பிள்ளை போன்று வளர்த்தால் அவளும் ஆண் மாதிரி வருவாள் எனக் கனவு காணுகின்றனர்.

பசுவையும் காளையையும் ஒன்று போல்தான் வளர்க்கின்றனர். பசுவின் பார்வையில் சாந்தமும், காளையின் பார்வையில் மூர்க்கமும் எப்படி வந்தது? பசுவிடம் அமைதிப் போக்கும் காளையிடம் கடும் போக்கும் எப்படி வந்தன? நடத்தை, அணுகுமுறை, உடல்வாகு, கடும் போக்கு அனைத்திலும் இயல்பாகவே வேறுபாடு உள்ளதல்லவா?

கோழியையும் சேவலையும் ஒன்று போல்தான் ஒன்றாக வளர்க்கின்றனர். சேவலின் கம்பீரமும் கோழியின் தன்மையும் எப்படி வந்தது? எங்குமே கோழி, சேவலை வளைத்துப் போட முனைவதில்லை. சேவல் துரத்தும் போதும், கோழி தள்ளிப் போய் தவிர்க்கத்தான் பார்க்கின்றது. எந்தத் தாய்க்கோழியாவது தனது குஞ்சுக் கோழிக்கு, ’பிள்ளைகளே! கவனமாக இருங்கள். சேவல் பயல் சுற்றிச் சுற்றி வருவான். விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். அவன்பாட்டுக்குக் கொத்திவிட்டுப் போய்விடுவான். பின்னர் முட்டையிடும் போது நாம்தான் கஷ்டப்பட வேண்டும்“ என்று போதனை செய்ததா? இல்லை, இல்லவே இல்லை!

இந்த இயல்புகள் இயல்பானது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இயற்கையான வேறுபாடுகளைக் களைந்து இருவரையும் ஒன்றாக்க முற்பட்டமைதான் உலகம் செய்த முதல் தவறாகும். இந்தத் தவறு களையப்படும் வரை பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது!

எனவே, முதலில் சரியான முறையில் ஆன்மீக சிந்தனை வளர்க்கப்பட வேண்டும். அடுத்து, ஆண் வேறு பெண் வேறு, அவர்களுக்கிடையே இயல்புகள், குணங்கள், நடத்தைகள் அனைத்திலும் வேறுபாடு உள்ளது. இதைப் புரிந்து கொண்டு ஆண்-பெண் கலப்பு நடைமுறை கைவிடப்பட வேண்டும். ஆண்-பெண் தொடர்பாடலில் ஒரு இடை வெளி எதிலும் என்றுமே இருக்க வேண்டும்.
அடுத்து, பெண் சுதந்திரம் என்றால் என்ன என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண் பெண்ணாக வாழ்வதுதான் அவளது சுதந்திரமாகும். பெண் ஆணைப் போன்று வாழ்வது அவளது சுதந்திரமாகாது. இது ஒரு வகையில் அவள் மீது திணிக்கப்படும் வாழ்க்கை முறையாகும். எனவே, பெண் பெண்ணாக வாழ வேண்டும்.

இன்றைய பெண்கள் ஆடைக் குறைப்பையே தமக்கான சுதந்திரத்தின் அடையாளமாகப் பார்க்கின்றனர். இது ஒரு வகையில் பெண் மீது ஆண் வர்க்கம் செலுத்திய ஆக்கிரமிப்பாகும். பெண் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கின்றனர். பெண்களும் அதற்கு இயந்து செல்கின்றனர்.

ஆண் ஆபாசமாகப் பார்க்கும் விதத்தில் பெண் ஆடை அணிகின்றாள். இதனால் உலகில் பாலியல் ரீதியான குற்றச் செயல்கள் குதிரை வேகத்தில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. உடலில் சில இடங்களை திறந்து (பிரீயாக) விடுவதுதான் பெண்ணினத்தின் சுதந்திரம் என்ற சிந்தனை நீங்க வேண்டும். ஆண்களை ஈர்க்கும் வண்ணம் ஆடை அணியும் போக்கு பெண்களிடம் இருந்து ஒழிய வேண்டும். பெண்கள் பெண்மையின் இயல்புக்கு ஏற்ப கற்புக்கு களங்கம் ஏற்படுத்தாத ஆடை அமைப்புக்கு மாற வேண்டும்.

தொழில் செய்வது பெண்களின் உரிமை என்ற சிந்தனை மேலெழுந்துள்ளது. உண்மையில் இது உரிமையல்ல. உரிமை என்ற பெயரில் பெண்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுகின்றனர். கவர்ச்சிக்காக மாத்திரம் அவர்களைப் பாவிக்கின்றனர். நல்ல சம்பளம் என்ற போர்வையை போர்த்திவிடுவதால் கை நிறையக் காசு கிடைக்கின்றது என்ற மோகத்தில் பல பெண்கள் விளம்பரப்படங்கள் போன்ற துறைகளில் தமது மானம், மரியாதை, கற்பு… போன்ற இன்னோரன்ன விடயங்களை முழுமையாகவே இழந்து போகின்றனர்.

அடுத்து தொழில் செய்வதென்பது பெண்கள் மீதுள்ள மேலதிக சுமைதான். ஆனால், இன்று பெண்கள் உலக மோகம் எனும் நாகரிகத்தில் மாத்திரமன்றி முன்னேற்றத்திலும் தவிர்க்க முடியாத பங்காக மாறியுள்ளனர். மாறியுள்ளனர் என்பதை விட மாற்றப்பட்டுள்ளனர் என்பதே பொருத்தமானதாகும்.

உதாரணமாக, இலங்கையில் குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பங்களிப்பில் பெண்களின் சேவை ஆண்களையும் மிகைத்துள்ளது. முன்பள்ளி முதல் பல்கலைத் தேர்வு வரையான பரந்த பரப்பில் அவர்களின் பணி தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்கள் பெண்கள்தான். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் இலங்கை அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டி வருகின்றது. இதில் அதிகம் பங்களிப்புச் செய்வது பெண்கள்தான்.

தேயிலை ஏற்றுமதி மற்றும் ஆடை ஏற்றுமதி மூலமும் அதிகம் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றது. எனவே, இலங்கையில் கல்வி, பொருளாதாரத் துறையில் பெண்கள் அதிகம் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.

ஆனால், பெண்களுக்கான உரிய பாதுகாப்பும் அவர்களின் பெண்மைக்கான உத்தரவாதமும் இல்லாத நிலைதான் நீடிக்கின்றது. ஒன்றில் அவர்கள் அடிமட்ட தொழிலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுகின்றது. ஆனால், அதற்கேற்ற ஊதியம் அற்ற நிலை, அவர்களின் மேலதிகாரிகளின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் நிலை நீடிக்கின்றது.

சில இடங்களில் பெண்களின் திறமையை விட அவர்களின் அழகும், கவர்ச்சியுமே அடிப்படைத் தகுதிகளாகப் பார்க்கப்படுகின்றன. அழகு பொம்மைகளாகக் காட்சியளிப்பதற்கும் குழைந்து குழைந்து பேசுவதற்கும் பல்லிழிப்பதற்குமான தொழில்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலைகளை பெண்களும் சேர்ந்துதான் மாற்ற வேண்டும். அதே நேரத்தில் சட்டம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாமல் சர்வதேச தினங்களில் சில நிகழ்வுகளை நடாத்தி முகப்புத்தகத்தில் பதிவேற்றுவதன் மூலம் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.

அத்துடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டும் என்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும். சட்டம் மற்றும் தண்டனை என்பது ஒரு தவறை மீண்டும் செய்வதிலிருந்தும் அதைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒரு மனிதனை தூரப்படுத்த வேண்டிய அதே நேரம் சட்டங்கள் முழுமையாக சரியான முறையில் அமுல்படுத்தப்படுதலும் வேண்டும்.

கற்பழிப்புக்கு இஸ்லாம் மரண தண்டனை விதிக்கின்றது. பாலியல் பலாத்காரத்திற்கு கடுமையான தண்டனை வழங்காவிட்டால் அவற்றை என்றுமே ஒழிக்க முடியாது. அத்துடன், பெண்களுக்கு எதிரான அத்தனை செயற்பாடுகளின் வளர்ச்சியிலும் பெண்களுக்கும் பங்குள்ளது. ஆண்-பெண் வேறுபாடு இல்லாமல் சர்வசாதாரணமாக ஆண்களுடன் கொஞ்சிக் குழாவுவது, கூத்தடிப்பது, குடிப்பது, சுதந்திரமாக சுற்றித் திரிவது, தனிமையில் சந்திப்பது, ’சோசியல்“ எனும் பெயரில் தொட்டுப் பேசுவது, தமது அவையவங்களை அலங்கரித்து கவர்ச்சியாகக் காட்டுவது, ஆடைகளை குறைத்து உடுத்துவது….. என்றெல்லாம் செய்யக் கூடாத அனைத்தையும் செய்துவிட்டு கடைசியில் என்னை அவன் அப்படிச் செய்துவிட்டான், இப்படிச் செய்துவிட்டான், இப்படி நடந்துவிட்டது… என கத்திக் கதறுவது என்று இவர்களின் கதை நகர்கின்றது.

எனவே, பெண்களுக்கும் இக்குற்றங்களில் பெரும் பங்குள்ளது. பெண் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும். ஆபாசமான ஆடை அமைப்பைத் தவிர்க்க வேண்டும். ஆண்களுடன் அந்நியமாகவே நடந்து கொள்ள வேண்டும். ஆண் வேறு, நான் வேறு என்ற வேறுபாட்டு உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். போகப் பொருளாகவும், மோகப் பொருளாகவும் பார்க்கப்பட்டு திட்டம் தீட்டி ஏமாற்றப்படும் பெண்கள் சமூகம் நின்று நிதானமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளது. இல்லையேல் எண்ணிலடங்காத பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.

இவை அனைத்தையும் மீறி பெண்களின் சம்மதத்துடனும் குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. எனவே, பெண்ணும் குற்றத்தில் ஈடுபடும் போது அவளும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இந்த ஒழுங்குகள் பேணப்படாமல், காமுகக் கயவர்கள் பெண்கள் உரிமை என்ற போர்வையில் செயற்படும் முறைகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறையாது. எனவே, இந்த சர்வதேச தினங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. உண்மையான மாற்றம் நிகழ வேண்டும் என்றால், மங்கையர் வாழ்வு மலர வேண்டும் என்றால் இஸ்லாம் கூறும் போதனைகள் நடைமுறையில் வர வேண்டும். கடுமையான பெண் கொடுமை நடந்து வந்த காலகட்டத்தில் சமூக சூழலில் பெண்களுக்கான சகல உரிமைகளையும், அந்தஸ்துக்களையும் வழங்கி பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் ஒழித்து இஸ்லாம் சாதித்துக் காட்டியுள்ளது.

எனவே, அதுவே இன்றைய மாற்றத்திற்குமான ஒரே வழியாகத் திகழ்கின்றது என்பது திண்ணமாகும்.

Check Also

அஹ்லுஸ்ஸுன்னாக்களின் பார்வையில் ஸஹாபாக்கள்

அஹ்லுஸ்ஸுன்னாக்களின் பார்வையில் ஸஹாபாக்கள் அஷ்ஷைக் இஸ்மாயில் ஸலஃபி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our …

Leave a Reply