முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ?
தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி
அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா
முஸ்லிம்களின் தற்கால வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற வேண்டுமானால் எதை முதன்மையாக கொள்ள வேண்டும் ?
முஸ்லீம்கள் எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் ?
நமது அழைப்பும் உழைப்பும் எதை நோக்கியதாக இருக்க வேண்டும்? என்பதைத்தான் இந்தக் கட்டுரை மூலம் நாம் அறிய இருக்கின்றோம்.
இன்றைய காலத்தில் வாழக்கூடிய முஸ்லீம்களில் பலர் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை ஜாஹிலிய்யா காலத்து முஷ்ரிக்குகள் அறிந்த அளவிற்கு கூட அறியவில்லை. மக்காவில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் ஷிர்க் (இணைவைத்தல்) என்ற நோய்க்கு தவ்ஹீத் என்ற மருந்தை நபியவர்கள் புகட்டினார்கள். இந்த தவ்ஹீதை முஸ்லிம் சமூகம் தங்களது உணர்விலும் உள்ளங்களிலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத வரை எழுச்சி மிக்க சமூகமாக மாற முடியாது .
அன்றையை அரபுகளின் வாழ்க்கையை வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு வரணிக்கின்றனர்
ஒற்மைக்கு ஊறாய், உறவுக்கு கேடாய், பண்புக்கு மாறாய், பகுத்தறிவுக்கு முரணாய், வளமான வளர்ச்சிக்கு தடையாய் மதுவிலும் மாதுவிலும் மூழ்கிக்கிடந்தார்கள்.
இப்படிப்பட்ட சமூகத்தை நபியவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமத்துத் தவ்ஹீதின் மூலம் சிறந்த சமூகமாக உயர்ந்த சமூகமாக மாற்றியமைத்தார்கள் . ஸஹாபாக்களுக்கு எந்த தவ்ஹீத் பாதுகாப்பையும் , நிம்மதியையும், இம்மை மறுமை வெற்றியையும் வழங்கியதோ அந்த தவ்ஹீதால் மட்டுமே இவை அனைத்தையும் நாமும் அடைய முடியும்.
சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதிலேயே தீர்வு இருக்கிறது. நபிமார்கள் சீர்திருத்த பணியை எதிலிருந்து தொடங்கினார்களோ அதிலிருந்து நாமும் தொடங்க வேண்டும் .
ஒரு சாரார் அரசியலில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர் ,இன்னும் சிலர் கல்வியில் முன்னேறுவதில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர் , இன்னும் சிலர் ஆர்பாட்டங்கள் போராட்டங்களில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர். இன்னும் சிலர் சமூகப்பணியில் ஈடுபடுவதின் மூலம் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர்
இஸ்லாமிய சமூகத்தின் அங்கத்தினராக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏகத்துவ கலிமா வை பிரசாரம் செய்வதில் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பதை அறியாமல் உள்ளனர் அல்லது அதில் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர் காரணம் நமது உள்ளங்களில் தவ்ஹீத் உள்வாங்கப்படவில்லை . فاقد الشيء لا يعطيه – ஒன்றை பெறாதவன் அதனை பிறருக்கு கொடுக்க முடியாது .
இறைத்தூதர்களின் பாதையில் பயணிப்போம்
21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம் …
7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
71:5. பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
71:8. “பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
71:9. “அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை – நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
7:73. “ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை
29:16. இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
11:84. மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை
5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம்
நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்
47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக
இவ்வாறு அனைத்து நபிமார்களும் மக்களை அல்லாஹ்வை வணங்குவதின் பக்கம்தான் அழைத்தார்கள் . இந்த மகத்தான பணியை நிறைவேற்றுவதில்தான் முஸ்லீம்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர்களுக்கு அழைப்புவிடுங்கள் …
நூல் :முஸ்லிம் 7372
நானும் இதற்கு முன்னால் அனுப்பபட்ட நபிமார்களும் சொன்ன வார்த்தைகளிலேயே மிகச் சிறந்தது
லா இலாஹ இல்லல்லாஹ் நூல் : முஅத்தா 726 , பைஹக்கி 8391
முஸ்லீம்களில் யார்தான் லா இலாஹ இல்லல்லாஹ்வை மறுத்தார்கள்? அனைவரும் ஏற்றுதானே உள்ளனர். என நம்மிலே பலர் கருதலாம். ஆனால் முஸ்லீம்களில் அதிகமானவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளையும், அதன் நிபந்தனைகளையும் , அதனை முறிக்கும் காரியங்களையும் அறியாதவார்களாக உள்ளனர். இந்த வார்த்தை வெறும் மந்திரச் சொல்லாகவே பார்க்கப்படுகிறது.
லா இலாஹ இல்லல்லாஹ்வில் இரண்டு அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன .
லா இலாஹ – மறுத்தல், நிராகரித்தல் அதாவது இந்த உலகில் மாற்று மதத்தவர்களால் வணங்கப்படக் கூடிய அனைத்து போலி தெய்வங்களையும் ஒரு முஸ்லிம் மறுக்க வேண்டும் நிராகரிக்க வேண்டும்.
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
மேலே உள்ள வசனத்தில் தாகூத்தை நிராகரிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான் . அல்லாஹ் அல்லாமல் இவ்வுலகில் வணங்கப்படும் அனைத்தும் தாகூத்தே .
இல்லல்லாஹ் – உறுதி படுத்துதல் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்குவதற்க்கு தகுதியானவன் என்று உறுதிபடுத்த வேண்டும் .
லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று பொருள் கொள்வது தவறானது பிழையானது. வணங்குவதற்க்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை . என்பதே சரியான பொருள்.
இதுவே மார்க்கத்தின் அடிப்படை, இந்தக் கலிமாவை பிரசாரம் செய்யவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள் , இதனை அளவுகோலாகக் கொண்டே ஒருவனது அமல்கள் அங்கீகரிக்கப்படுமா? நிராகரிக்கபடுமா என்பதையும், ஒருவனது சுவன வாழ்வும் நரக வாழ்வும் தீர்மானிக்கப்படும். எனவே முஸ்லீம்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வை கற்றுக் கொள்பவர்களாகவும் இதன் பக்கம் மக்களை அழைப்பாவார்களாகவும் இதில் அதிக கவனம் செலுத்துபவர்களாகவும் மாறவேண்டும்