Home / கட்டுரை / பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை..!

பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை..!

மௌலவி யாஸிர் பிர்தொஸி

உணவு, உடை, உறைவிடம் எவ்வாறு மனித வாழ்வின் அடிப்படையாக அமைந்துள்ளதோ, அவ்வாறே பாதுகாப்பும், அச்சமற்ற வாழ்வும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

எந்த நாட்டிலெல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் முஸ்லீம் சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரங்கள் நசுக்கப்படுவதும், அவர்கள் சார்ந்திருக்கின்ற மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாத சூழலும், சொந்த ஊரிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்படுவதும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், தீவிரவாதத்தின் பெயரால் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இதற்கான நிரந்தர தீர்விற்கு மார்க்கத்தின் வழிகாட்டல் என்ன என்பது குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்:

என்றைக்கு இஸ்லாம் இந்த மண்ணில் நபிமார்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டதோ, அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த நபிமார்களும், நபிமார்களை பின்பற்றிய முஸ்லீம்களும் மிகக் கடுமையான துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு குர்ஆன், சுன்னா முழுக்க நிறைய சான்றுகள் உள்ளன.

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன;

“அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்

“நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) {2:214}

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.{3:186}

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.{8:30}

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும், கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.{22:40}

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்
விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான், பொய்யர்களையும் அறிவான்.{29:2,3}

(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.{85:8}

கப்பாப் இப்னு அல்அரத்(ரழியல்லாஹுஅன்ஹு) அறிவித்தார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி “எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?“ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) “ஸன்ஆவிலிருந்து “ஹள்ரமவ்த்“ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்“ என்றார்கள்
{நூல்: புகாரி 6943}

இது போன்ற வசனங்களும், நபிமொழிகளும் இந்த உலகில் உண்மை முஸ்லீம்களாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எதிரிகளின் மூலம் பல்வேறு விதமான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை எடுத்தியம்புகிறது.

கனிகள் நிறைந்த மரம்தான் கல்லடிபடும் என்பதற்கேற்ப இஸ்லாத்தின் அபார வளர்ச்சியை சகித்துக் கொள்ளாதவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மூலம் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் ஒழித்து விடலாம் என எண்ணுகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி முஸ்லீம்களுக்கே!!!
{85:8}

முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.{30:47}

நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.{40:51}

இது போன்ற வசனங்கள் முஸ்லீம்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளன.

பசியிலிருந்து விடுதலை பெற, பயத்திலிருந்து விடுதலை பெற நிரந்தர தீர்வு என்ன?:

ஆட்சி அதிகாரத்தினால் இதற்கான தீர்வை அடைய முடியும் என இஸ்லாமிய இயக்கங்கள் பகல் கனவு காண்கின்றனர்.

இதற்காக தங்களின் முழு உழைப்பையும், பொருளாதாரத்தையும் செலவிடுகின்றனர்.

மார்க்கம் காட்டித்தராத அடிப்படையில் வீதியில் இறங்கி போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதன் மூலம் பெரிதாக எதையும் இவர்களால் சாதிக்க இயலவில்லை என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றாக அமைகின்றது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட எத்தனையோ நாடுகளில் இஸ்லாம் புறந்தள்ளப்பட்டு முஸ்லீம்கள் ஆட்சி செய்கின்றனர்.

அங்கெல்லாம் இன்றளவும் தற்கொலைப்படை தாக்குதல் மூலம் அப்பாவி மக்களின் இரத்தங்கள் ஓட்டப்பட்டு, மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர்.

இந்தியாவை முஸ்லீம்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதில் முகலாயர்களின் ஆட்சி 300 ஆண்டுகாலம்.

ஒரு சிலரைத்தவிர பல ஆட்சியாளர்களால் இஸ்லாத்திற்கோ, முஸ்லீம்களுக்கோ எவ்வித நன்மையையும் ஏற்படவில்லை.

அக்பர் என்ற மன்னன் ‘தீனே இலாஹி’ என்ற புது மதத்தை தோற்றுவித்தான்.
ஷாஜஹான் தனது மனைவிக்கு தாஜ்மஹால் என்ற நினைவுச் சின்னத்தை எழுப்பினான். இன்றும் அங்கு சமாதி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில மன்னர்கள் கோயில்களை கட்டியும், குளங்களை வெட்டியும் கோயில்களுக்கு நிலங்களை மானியமாக வழங்கியும் ஆட்சி செய்தார்கள்.

எல்லாவிதமான வசதி வாய்ப்புகள் இருந்தும் பல மன்னர்கள் ஹஜ் என்ற புனிதக் கடமையை கூட நிறைவேற்றவில்லை.

இஸ்லாமும் இஸ்லாத்தின் அஸ்திவாரமான ஓரிறைக் கொள்கையும் புறந்தள்ளப்பட்டு ஆட்சி செய்த காரணத்தினால் அவர்கள் கட்டிச் சென்ற சில கட்டிடங்களைத் தவிர இஸ்லாத்திற்கோ வருங்கால முஸ்லிம் சமூகத்திற்கோ இவர்களால் எவ்வித நன்மையையும் ஏற்படுத்த இயலவில்லை.

இன்னும் சில நவீன சிந்தனையாளர்கள், இஸ்லாமிய இளைஞர்கள் உயர்கல்விகளை கற்று, அரசுத்துறைகளில் பணியாற்றுவதன் மூலம் இந்த சமூகம் பாதுகாப்பையும், வெற்றியையும் அடைய முடியும் என கருதுகின்றனர்.

இதிலும் எவ்வித உண்மையும் இல்லை. காரணம் கடந்த காலங்களில் குடியரசுத்தலைவர் போன்ற உயர்பதவிகளில் அங்கம் வகித்தவர்கள் தங்களை தான் ஒரு இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்தவே தயங்கியதோடு மட்டுமல்லாமல் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டதோடு பல இடங்களில் பகவத் கீதையை மேற்கோள் காட்டினார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

எனவே எங்கெல்லாம் இஸ்லாமும் இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையும் புறக்கணிக்கப்படுகிறதோ, அதன் மூலம் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பும், நிம்மதியும் ஏற்படப்போவதில்லை என்பதே எதார்த்த உண்மை.

இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையை பின்பற்றுவதிலும், பிரச்சாரம் செய்வதிலுமே இந்த சமூகம் பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெற முடியும்.

உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை – அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்.{6:81}

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழியல்லாஹுஅன்ஹு ) அறிவித்தார்:

“நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்” எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள்,
“எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது,” இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது.
{புகாரி: 4629}

மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.{16:112}

மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில், அவ்வூர்வாசிகள் அல்லாஹ்வை வணங்கி வழிபடாமல், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல், அல்லாஹ்விற்கு இணைவைத்த காரணத்தினால், அல்லாஹ்வின் பாதுகாப்பு அகற்றப்பட்டு, பசியையும், பயத்தையும் அனுபவிக்குமாறு செய்தான்.

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.{24:55}

இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.{106:3}

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.{106:4}

மேலே கூறப்பட்டுள்ள வசனங்களின் மூலம், முஸ்லீம்கள் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டிய முறைப்படி முழுமையாக ஈமான் கொள்வதுடன், அவனை மட்டும் வணங்கி வழிபட்டு (ஷிர்க்) இணைவைப்பு என்ற அசுத்தத்தை தங்களது ஈமானில் கலக்காமல், ஸாலிஹான நற்செயல்கள் செய்பவர்களுக்கே ஆட்சி அதிகாரத்தை வழங்குவதாகவும், மார்கத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதாகவும், பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை அளிப்பதாகவும் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான்.

இது நம்மை படைத்த அல்லாஹ்வின் வாக்குறுதி…அரசியல்வாதிகளின் பொய்யான, போலியான வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும் முஸ்லீம்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைக்க வேண்டாமா?

இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.{30:6}

எனவே படித்தவர்கள்,பாமரர்கள்,
ஏழைகள், பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள்,
ஆட்சியாளர்கள்… என அனைவருக்கும் இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையையும் எத்திவைப்பதன் மூலம் மனித உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

ஆட்சி மாற்றம் தானாகவே ஏற்படும் இன்ஷா அல்லாஹ்…

தொகுப்பு: மௌலவி யாஸிர் பிர்தொஸி
அழைப்பாளர்,
அல்ஜுபைல் தஃவா நிலையம்,
சவூதி அரேபியா

Check Also

நபிமார்கள் வாழ்வு தரும் படிப்பினைகள் | பாகம் – 1 | நபித்துவத்தின் இன்றியமையாமை

நபிமார்கள் வாழ்வு தரும் படிப்பினைகள் | பாகம் – 1 | நபித்துவத்தின் இன்றியமையாமை வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: …

Leave a Reply